சர்வதேச சினிமா: ஜிப்ஸிகளைச் சுற்றிவரும் பூனைகள்- பிளாக் கேட் ஒயிட் கேட்

By பால்நிலவன்

ஒரு புதிய மக்கள் சமுதாயத்தைத் திரையில் காட்டுவதென்றால் போஸ்னிய (பழைய செர்பிய) திரைப்பட இயக்குநரான எமிர் குஸ்தூரிக்காவுக்கு ஒரு நீரூற்றைக் கண்டறிந்த மகிழ்ச்சி. பல்கேரிய எல்லையை ஒட்டிய கிழக்கு செர்பியாவில் உள்ள டன்யூப் நதிக்கரையில் வாழும் ஜிப்ஸிக்களின் பரந்த வாழ்வெளியை, அவர்களுக்கே உண்டான சுக துக்கங்களை, கலாச்சாரத்தைத் திரைக்கு இடம்பெயர்த்துக் காட்டுவதில் குஸ்தூரிகாவின் காட்சி மொழியில் நக்கலும் இயல்பும் கலந்த கொண்டாட்ட மனநிலை வெளிப்படுகிறது.

நதிக்கரை வாழ்வு

வெயிலிலிருந்து தப்பிக்க ஜிப்ஸி பையன்களும் பெண்களும் குழந்தைகளுமாக டன்யூப் நதியில் நீந்தி விளையாடிக்கொண்டிருப்பார்கள். வாத்துக் கூட்டம் அருகே நீந்திச் செல்லும். கரையில் இளைப்பாறுவோர் பலரும் கதைபேசி மகிழ்ந்திருப்பர்.

சுழல் ராட்டினம், ஐஸ்கிரீம் வண்டி, கொட்டகை ஓட்டல். கறுப்புப் பூனையொன்றும், வெள்ளைப் பூனையொன்றும் அங்குமிங்குமாக விளையாடிக்கொண்டிருக்கும். நதியின் அக்கரையில் உள்ள பெரிய மரமொன்றில் அமர்ந்து ஜிப்ஸி இசைக் கலைஞர்கள் சிலர் டிரம்பெட் இசைக்க, அந்த நதியைப்போல் வெதுவெதுப்பான ரம்யத்தை வழிந்தோடச் செய்துகொண்டிருக்கும். அப்பொழுதில் அங்கு ஒரு காதலும் மலரும்.

படத்தின் ஆரம்பத்தில் மர வீடு கட்டி வாழ்ந்துவரும் மாட்கோவைக் காட்டும்போது மிகவும் வித்தியாசமாக இருக்கும். படகுத் துறையில் பரண் போன்ற மரப் பலகைகளால் இணைக்கப்பட்ட மேடையில் கயிற்று ஊஞ்சலில் அவன் படுத்தவாறு 'தனியாள் சீட்டாட்டம்' ஆடிக்கொண்டிருப்பான். அருகிலுள்ள அடுப்பில் வெந்துகொண்டிருக்கும் ஆம்லெட்டை எடுத்துச் சாப்பிட்டவாறே எவ்வாறு குறுக்கு வழிகளில் ரயிலை மறித்துக் கொள்ளையடிப்பது போன்ற திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருப்பான். இதைப் பலரிடமும் பகிர்ந்துகொள்வான்.

மாட்கோ மாபெரும் கொள்ளைக்காரனோ என்றும் நமக்குத் தோன்றும். அந்த ஆற்றின் துறைமுகத்திற்கு ரஷ்யர்களின் சரக்குக் கப்பல்கள் அவ்வப்போது வந்துசெல்லும். அவர்களிடம் சில மார்க்குகள் பணம் கொடுத்து வாங்கும் வாஷிங் மெஷினைத் தண்ணீரில் தவறவிடுவான்.

டீசல் பாரல்களுக்குப் பதிலாகத் தண்ணீர் பாரலைப் பெற்று ஏமாறும்போது அவன் சாமர்த்தியம் நமக்குப் புலப்பட்டுவிடும். தனது தந்தையின் நண்பர் கிர்கோவிடம் பேசிச் சரக்கு ரயிலில் வரும் எரிவாயு வேகன்களைக் கொள்ளையடிக்க ரயில் அதிகாரிகளுக்குக் கொடுக்கப் பணம் வெண்டுமெனக் கூறி நிறைய பணம் வாங்கிக்கொள்வான். வருவது சரக்கு ரயில்தானா என்பதைத் தண்டவாளத்தில் காது வைத்து அறியத் துடிப்பான்.

போருக்குப் பிறக

இப்படிப்பட்ட மாட்கோவை மட்டுமல்ல இன்னும் பலரையும் தனது வலையில் சிக்கவைக்கச் சகல ஆட்டமும் போடும் அப்பகுதியின் தாதாவான டாடன் மற்றொரு பரிதாபகரமான பகீர் கதாபாத்திரம். 34 ஆயிரம் பிராங்குகளுக்கு தன் பேத்தி இடாவை அவள் விருப்பமின்றி டாடனுக்கு மணம் முடிக்கத் தயாராக இருக்கும் ஆற்றங்கரையில் உணவு மற்றும் கேளிக்கை விடுதி நடத்தும் பெண்மணி, தனது பேரனின் விருப்பமில்லாத் திருமணத்தை நிறுத்தச் செத்துவிட்டதாக நடித்துத் திருமண வீட்டைத் துக்க வீடாக மாற்ற முயற்சிக்கும் கிர்கேவின் நண்பர் ஸாரிஜே, மருத்துவமனையில் சிகிச்சைபெறும் தாத்தாவைப் பார்க்க வந்த பேரனிடம் நர்ஸைத் திருமணம் பேசலாமா எனக் கேட்கும் கிர்கா எனச் செர்பிய உள்நாட்டு போருக்குப் பிறகான சமூக உதிரிகளாக இந்தக் கதாபாத்திரங்கள் நமக்கு அறிமுகமாகின்றன.

இந்தக் கதாபாத்திரங்களைச் சுற்றிப் பின்னப்பட்ட தனித் தனிக் கிளைக்கதைகள் வழியே போருக்குப் பிறகு சிதறடிக்கப்பட்ட ஒரு சமூகக் கூட்டத்தின் எல்லாப் பரிமாணங்களையும் இத்திரைப்படம் விரிவாகப் பேச முற்படவில்லை. மாறாக இயக்குநர் எமிர் குஸ்தூரிகா இக்கதைகளின் மேல் வட்டமடிக்கும் ஒரு கழுகைப் போலப் பறந்து செல்கிறார். கதை மாந்தர்களைக் கேலிச் சித்திரமாக்கி நமக்கு வேடிக்கை காட்டுகிறார்.

மேலும், ஒளிப்பதிவாளர் தெயரி ஆர்போகாஸ்டின் கண்களின் வழியே இப்படத்தில் வரும் மனிதர்களோடு உலாவும் அழகிய பிராணிகளையும் ஜிப்ஸி மக்களின் வெவ்வெறு அழகான பொழுதுகளையும் காட்டுவதில் அவர் விருப்பம் லயித்து நின்றுவிடுகிறது. ஆனால் அந்தத் தேக்கமே காட்சி மொழியின் கலையம்சத்தைப் பார்வையாளருக்குப் பருகத் தந்துவிடுகிறது.

மையமான அழகு

வேடிக்கையான மனிதர்களுக்கு மத்தியில் வாத்துகளின் கூட்டமும், நாய்கள், ஆடுகள், கோழிகள், பன்றிகள், பூனைக்குட்டிகள், எலிகள், மஞ்சள் குருவி என மனதை மயக்கும் பிராணிகளின் விளையாட்டுகளும் படத்தை உயிரோட்டமாக வைத்துள்ளன. அதிலும் கருப்புப் பூனையொன்றும் வெள்ளைப் பூனையொன்றும் படம் முழுக்க அங்கிங்கென ஓடித் திரிவது மையமான அழகு.

சாலையில் பயன்பாடின்றி ஓரங்கட்டப்பட்ட ஜெர்மன் காரை பன்றி ஒன்று தின்ன ஆரம்பிக்கும். முதலில் அது காருடைய முகப்பு விளக்கின் மேல் பகுதியைத் தின்னும். படத்தின் வெவ்வேறு தருணங்களில் இக்காட்சி தொடரும். கடைசியில் காரின் பாகங்களை முழுவதுமாக அந்தப் பன்றி சாப்பிட்டு முடித்திருக்கும்.

மேலோட்டமாகப் பார்த்தால் படத்திற்கு சம்பந்தமில்லாததுபோலத் தோன்றும் இது ஒரு சர்ரியலிசக் காட்சி. படம் முழுவதும் இதுபோல் விரவிக் கிடக்கும் காட்சிகள் எளிமையும் நுட்பமும் கலந்த நக்கல்கள்.

வெனிஸ் திரைப் படவிழாவில் வெள்ளிச் சிங்கம் விருது வென்றது இத்திரைப்படம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்