தமிழ்த் திரையுலகை முடக்கும் விதத்தில் நடந்துகொள்வதாக டிஜிட்டல் சினிமா திரையிடல் நிறுவனங்கள் மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.
தயாரிப்பாளர் தரப்பில் சுட்டிக்காட்டப்படும் டிஜிட்டல் சினிமா நிறுவனங்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது ‘க்யூப் சினிமா’ நிறுவனம். அதை நிறுவியவர்களில் ஒருவரான செந்தில் குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்...
க்யூப் நிறுவனம் டிஜிட்டல் சினிமாவுக்காகவே தொடங்கப்பட்டதா?
முதலில் படத்தொகுப்பு மற்றும் ஒலியமைப்பு சாதனங்களை விற்பனை செய்வதற்காகத் தொடங்கினோம். 1993-ல் ஆவிட் எடிட்டிங் மென்பொருளையும் டி.டி.எஸ் ஒலியமைப்பையும் விற்பனை செய்து வந்தோம். இவை இரண்டுமே வெளிநாட்டுத் தொழில்நுட்பங்கள். பிறகு டிஜிட்டல் சினிமா வரப்போகிறது என்று தெரிந்தது. நமது உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு சர்வதேசத் தரத்தில் ஏன் இங்கேயே குறைந்த விலையில் அதை உருவாக்கக் கூடாது என்று க்யூப் புரஜெக்டரைக் கண்டறிந்து காப்புரிமை பெற்றோம்.
ஒரு கம்ப்யூட்டர் ஆபரேடிங் சிஸ்டத்தை எப்படி அவரவர் மொழியில் பயன்படுத்தலாமோ அதேபோலத் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கொரியன், சைனிஷ், போர்ச்சுகீஸ் ஆகிய மொழிகளில் பயன்படுத்தும் விதமாக க்யூப் சினிமாவை வடிவமைத்திருக்கிறோம்.
டிஜிட்டல் சினிமாவுக்கான டி.சி.ஐ. அமைப்பின் தரச் சான்று பெற்ற ஒரே இந்தியத் தொழில்நுட்பம் என்றால் க்யூப் மட்டும்தான். இன்று தமிழ்நாடு, இந்தியா தாண்டி 43 நாடுகளில் க்யூப் தொழில்நுட்பத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. பத்து ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட நிறுவனம் இன்று ஆயிரம் ஊழியர்களுடன் தமிழ் சினிமாவுக்குச் சேவை வழங்கிவருகிறது.
டிஜிட்டல் சினிமாவை எளிமையாகக் கையாள முடியும் என்பதைத் தாண்டி அதனால் தயாரிப்பாளர்கள் அடைந்த முக்கியமான நன்மை என்று எதைக் குறிப்பிட்டுச் சொல்வீர்கள்?
அதன் மிக உயர்ந்த தரமும் அதற்கு நேர் எதிர்நிலையில் இருக்கும் அதன் மிகக் குறைந்த விலையும். தயாரிப்பாளர்கள் பார்வையாளர்கள் ஆகிய இரண்டு தரப்புக்குமே கடந்த 20 ஆண்டுகளைக் கடந்து இது பயன்பட்டுவருகிறது. டிஜிட்டல் சினிமாவின் வெற்றிக்கு முக்கியக் காரணமும் இந்தத் தரமும் விலையும்தான்.
திரையுலகைச் சேர்ந்த அனைவரும் உணர்ந்திருக்கும் அனுபவபூர்வமான உண்மை இது. இதைத் தாண்டிப் பல நன்மைகளை அடுக்க முடியும். அதில் முக்கியமானது திரையரங்கிலிருந்து திருட்டு வீடியோ எடுக்க முடியாத ‘வாட்டர் மார்க்’ முறை. அடுத்து டிஜிட்டல் சினிமாவை சாட்டிலைட் மூலம் கையாள முடிவதால் வெளிநாட்டில் தமிழ்ப் படங்களை உடனடியாக வெளியிடுவதில் தயாரிப்பாளர்களுக்கு இருந்த தயக்கத்தையும் டிஜிட்டல் சினிமா உடைத்தெறிந்தது.
டிஜிட்டல் சினிமா முழு வீச்சில் செயல்படத் தொடங்கிய கடந்த இருபது ஆண்டுகளில் அது எத்தனை முறை விலை ஏறியிருக்கிறது?
சேவை வரி அதிகரித்ததால் விலையில் சில மாற்றங்கள் தவிர்க்க முடியாததாக இருந்தது. ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக அடிப்படையான விலையை நாங்கள் ஏற்றவில்லை. அதேநேரம் படத்துக்குத் திரையரங்கில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து விலையைக் குறைத்துக்கொள்ளும் முறையைக் கொண்டுவந்தோம். அதாவது முதல் வாரத்துக்கு ஒன்பதாயிரம், இரண்டாம் வாரத்துக்கு ஏழாயிரம் என்று விலை குறைந்துகொண்டே போகும்.
ஒரு திரைப்படத்தை ஒரு காட்சி திரையிடுவதற்கான கட்டணம் 325 ரூபாய் மற்றும் வரிகள்தான். இதுதான் தற்போது நாங்கள் வசூலிக்கும் அடிப்படை விலை. ஒரு காட்சிக்கு இவ்வளவு என்ற அடிப்படையிலான இந்தக் கட்டணம் சின்ன படங்களுக்குச் சகாயமானது இல்லை என்று சிறு தயாரிப்பாளர்கள் தங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும்.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது நீங்கள் வசூலிக்கும் கட்டணம் அதிகம் என்று கூறியிருக்கிறார்களே?
இல்லவே இல்லை. தென்மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் ஒரு காட்சி திரையிட 425 ரூபாய் மற்றும் வரிகள். அமெரிக்காவில் ஒரு காட்சிக்கு 850 டாலர்கள் வசூலிக்கிறார்கள். தனது படங்களை அமெரிக்காவில் வெளியிடும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு சாருக்கும் இது நன்றாகத் தெரியும். அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மாஸ்டரிங் செய்துதரக் கணிசமாகக் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
ஆனால் நாங்கள் அதை இலவசமாகச் செய்து கொடுக்கிறோம். திரையிடல் சாதனங்கள் மற்றும் உதிரி பாகங்களை இறக்குமதி செய்யும்போது செலுத்தும் 30 சதவீத வரியையும் கணக்கிட்டால் நாங்கள் வசூலிக்க வேண்டிய கட்டணமே வேறு. ஆனால் எங்கள் சுமையைத் தயாரிப்பாளர்கள் மீது நாங்கள் ஏற்றவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி எங்கள் நிறுவனத்தின் வரவு செலவுக் கணக்கை வாங்கி அவர்களே பார்க்கட்டும். எங்களது லாபம் 5 சதவீதம் மட்டும்தான் என்பதை அவர்களே தெரிந்துகொள்வார்கள்.
பிறகு ஏன் நீங்கள் விலையைத் தாறுமாறாக உயர்த்திவிட்டதாகக் கூற வேண்டும்?
அதுதான் எங்களுக்கும் புரியாத புதிராக இருக்கிறது. டிஜிட்டல் சினிமா அறிமுகமானபோது திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்ய இயலாத நிலையில் இருந்தபோது க்யூப் சினிமா மிகப் பெரிய முயற்சியை மேற்கொண்டது. நான்கு பன்னாட்டு நிறுவனங்களை இணைத்துக்கொண்டு பெரும் முதலீட்டை வைத்தோம். அது திரையரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்குப் பெரும் விடுதலையாக இருந்தது. டிஜிட்டல் சினிமாவின் தரத்தைப் பார்த்து வியந்த பார்வையாளர்களும் தொலைக்காட்சியின் பிடியிலிருந்து மீண்டு திரையரங்குகளுக்குத் திரும்பினார்கள்.
இன்று திரையரங்குகளில் நாங்கள் நிறுவியிருக்கும் சாதனங்களின் விலை, அவற்றின் பராமரிப்புச் செலவு, படங்களை எடுத்துச் சென்று விநியோகிக்கும் சேவை ஆகிய மூன்றுக்கும் சேர்த்தே நாங்கள் டிஜிட்டல் சினிமாவுக்கான விலையை நிர்ணயித்திருக்கிறோம். இவற்றைக் கணக்கிட்டால், தற்போது நாங்கள் வசூலித்துவரும் கட்டணங்களுக்குக் கீழே போனால் எங்கள் நிறுவனத்தை மூடிவிட வேண்டியிருக்கும்.
தாணு
டிஜிட்டல் நிறுவனங்கள் திரையரங்குகள் மூலம் ஈட்டும் விளம்பர வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்குப் பங்கு வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அதைப் பரிசீலிப்பீர்களா?
அவர்கள் கேட்பதில் லாஜிக்கோ, நியாயமோ இல்லை. திரைப்படங்களைப் பார்க்கத்தான் பார்வையாளர்கள் வருகிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், திரையரங்கம் என்பது தனிப்பட்ட மனிதர்களின் உடமை. அதன் மூலம் கிடைக்கும் விளம்பர வரு மானம் என்பது திரையரங்க உரிமை யாளரையே சேரும்.
விளம்பரங் கள் திரையரங்குகளின் உரிமையல்ல என்று தயாரிப்பாளர்கள் நினைத்தால் அதைத் திரை யரங்குகளுடன் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர எங்களிடம் அல்ல. நாங்கள் எங்களது காப்புரிமை பெற்ற விளம்பரப் பிரிவு மூலம் பல திரையரங்குகளுடன் சட்ட ரீதியான ஒப்பந்தம் மூலம் விளம்பரங்களைச் சந்தைப்படுத்திவருகிறோம். சத்தியம், ஐநாக்ஸ் போன்ற பல திரையரங்குகள் தங்கள் விளம்பர நிர்வாகத்தை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள்.
வெளிநாட்டு டிஜிட்டல் சினிமா நிறுவனங்கள் உள்ளே நுழைய இருப்பதாக அரசல் புரசலான செய்தி வெளியாகியிருக்கிறதே?
ஆமாம். இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் குறைந்த விலையில் டிஜிட்டல் சினிமா தரத் தயார் என்று தன்னிடம் கூறியதாக தாணு சாரே என்னிடம் கூறினார். அதைப் பற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை. ஆனால், கடந்த 2005லிருந்து எங்களது ஊழியர்களின் சம்பளம், சாட்டிலைட் கட்டணம், போக்குவரத்து செலவு, அந்நியச் செலாவணி என அனைத்தும் உயர்ந்தாலும் நாங்கள் அதைத் தயாரிப்பாளர்கள் மீது திணிக்கவில்லை என்றபோதும் நியாயமான பேச்சுவார்த்தைக்கு எப்போதும் நாங்கள் தயார்தான்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
50 mins ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago