ஒரு படம் எடுக்க தயாரிப்பாளரும், கதையும்தான் இரண்டு கண்கள். தயாரிப்பாளர் பணம் போடா விட்டால் படம் எடுப்பது எப்படி? அடுத்து முக்கியமானது கதை. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.
முதலில் கதை தேர்ந்தெடுக்கப்படும். அந்தக் கதையைத் திரைக்கதை ஆசிரியர் திரைக் கதையாக எழுதி காட்சியாகப் பிரிப்பார். ஒரு படத்துக்கு சுமார் 95 காட்சிகள் இருக்கும். 95 காட்சிகளுக்கும் வசனங்கள் எழுதப்படும். இதில், வசனக் காட்சிகள், பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் உள்ளிட்ட பல காட்சிகளும் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும். இப்படி எழுதப்பட்ட முழு ஸ்கிரிப்ட்டில் இருந்து ஒவ்வொரு காட்சியும் ஒரு வரியில் கதைச் சுருக்கமாக எடுத்து எழுதி, அந்த பக்கங்களை சுருக்கு முடிச்சு போடக்கூடிய கயிறால் கோக்கப்பட்ட ஒரு கோப்பில் (ஃபைல்) கோத்து வைப்போம்.
அவசரத்துக்குப் பார்க்கும்போது அந்த முழு ஸ்கிரிப்ட்டையும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த கோப்பினைப் பார்த்தாலே போதும். செட்டியார், ஓய்வு நேரத்தில் அந்த கோப்பினை வைத்து ஆர்டரை பார்ப்பார். பாடல்கள் பக்கத்து, பக்கத்தில் வருகிறது.
ஒரு பாட்டு 5 காட்சிகளுக்கு முன்னும், இன்னொரு பாட்டு 7 காட்சிகளுக்குப் பின்னாலும் வந்தால் இரண்டு பாடல்களும் ரசிக்கப்படும், என்று அந்த கோப்பில் இரண்டு பாடல் காட்சியின் பேப்பரையும் உருவி, முதல் பாடல் காட்சியை 5 காட்சிகளுக்கு முன்னால் மாற்றி, இரண்டாவது பாடல் காட்சியை 7 காட்சிக்குப் பின்னால் மாற்றி, எடிட்டரை கூப்பிட்டு ‘இதுபோல மாற்றியிருக்கிறேன்.
அதை ஃபிலிம்மில் மாற்றி எனக்கும் இயக்குநருக்கும் போட்டுக் காட்டுங்கள். எங்களுக்கு பிடித்திருந்தால், பாடல்களை இந்தப் புது ஆர்டரிலேயே வைத்துக்கொள்ளலாம்’ என்பார். அதன்படி ஃபிலிமில் ஆர்டர் செய்து போட்டுக் காண்பிப்போம். இந்த மாதிரி ஒவ்வொரு விஷயத்திலும் எடிட்டிங்கில் படம் செதுக்கப்படும்.
எடிட்டிங் அறையில் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடக்கும்போது எல்லோரிடமும் அந்தப் பரபரப்பு பற்றிக்கொள்ளும். நாங்கள் கொடுக்கும் நெகடிவ்வை உடனுக்குடன் பிரின்ட் பண்ணிக் கொடுப்பதும், சவுண்ட் பிரின்ட் போன்றவற்றை சரியாக எடுத்துக் கொடுப்பதும் லேபரட்டரியின் வேலை. அப்போது அந்தத் துறைக்குத் தலைவர் சதூர் சிங் சேத்தி. அவருடன் அப்போது வள்ளிநாயகம், ராமசாமி ஐயங்கார், பரமசிவம், கண்ணப்பன் போன்றோரும் பணியாற்றினார்கள்.
சில நேரங்களில் வேலை பளு அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் ராமசாமி ஐயங்காரை பிடித்து, ‘அண்ணே, உங்க சுறுசுறுப்பு டானிக் ஆன கும்பகோணம் கொழுந்து வெத்தல, பாக்கு, புகையிலயெல்லாம் டிராயர்ல வெச்சிருக்கோம்’ என்று சொல்வோம். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் எல்லாப் பிரின்ட்டும் வந்து சேர்ந்துவிடும்.
சதூர் சிங் சேத்தி சேவை மனம் கொண்டவர். உடன் வேலை செய்பவர் களின் நல்லது, கெட்டது எல்லாவற்றுக் கும் போய் நிற்பார். ஒரு முறை ஸ்டுடியோ வில் வேலை குறைந்து போனதால், ஒவ்வொரு துறையிலும் 5 நபர்களை ஆள் குறைப்பு செய்யவேண்டியிருந்தது. லேபரட்டரி துறையில் ஆள் குறைப்பு செய்ய வேண்டிய 5 பேரின் பெயர்கள் சதூர் சிங் சேத்தி கைக்கு போனது.
‘இந்த 5 பேரையும் வேலையை விட்டு நீக்கிவிட்டால் இவர்களுக்கு வேறு வாழ்க்கை இல்லை. நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் என் சம்பளத்தில் இருந்து இந்த 5 பேருக்கும் ஊதியம் கொடுத்து வைத்துக் கொள்கிறேன்’ என்று செட்டியாரிடம் கூற, அதற்கு அவர் ‘சரி சரி போய் வேலையைக் கவனிங்கப்பா… அவங்கள நீக்கல’ என்றார். அப்படி ஒரு உள்ளம் கொண்ட சதூர் சிங் சேத்தி, பணி ஓய்வுக்குப் பின் பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்.
ஒரு நாள் காவல்துறையினர் ஏவிஎம் சரவணன் சாரை பார்க்க வந்தார்கள். ’’ராயப்பேட்டையில் ஒருத்தர் லாரியில் அடிபட்டு இறந்துவிட்டார். அவரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், அவர் சட்டை பையில் உங்கள் விசிட்டிங் கார்டு இருந்தது’’ என்றனர். போய் பார்த்தால் இறந்தவர், சதூர் சிங் சேத்தி. சரவணன் சாருடைய விசிட்டிங் கார்டு மட்டும் இல்லாமல் போயிருந்தால், அவரை அநாதை உடல் என்று முடிவெடுத்திருப்பார்கள். மனிதநேயமிக்க ஒரு மனிதருக்கு ஏன் இந்த முடிவு? இந்தக் கேள்வி இப்போதும் என் நெஞ்சை உறுத்திக்கொண்டே இருக்கிறது!
எடிட்டிங் பிரிவில் சூர்யா, கே.சங்கர், நாராயணன், ஆர்.ஜி.கோப், பாஸ்கர், விட்டல், ராமலிங்கம், முத்து, நரசிம்மன், சங்குண்ணி, துரை போன்ற பலரோடும் பணியாற்றி எடிட்டிங் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். ‘சினிமா எடுத்துப் பார்’ என்ற இந்தக் கட்டுரையில் ‘எடிட்டிங் பண்ணிப் பார்’ என்று உங்களோடு பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். இதற்கு ஒரு திருப்பம் வேண்டுமல்லவா?
ஏவி.எம் அவர்களின் மகன் குமரன் சாரும் எடிட்டிங் பிரிவில் பயிற்சி பெற எடிட்டிங் துறைக்கு வந்தார். செட்டியார் நினைத்திருந்தால் தன் மகனை நேரடியாக இயக்குநர் ஆக்கி யிருக்கலாம். அடிப்படை வேலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எங்களோடு சக ஊழியராக பணியாற்ற அனுப்பி வைத்தார். இதெல்லாம் முதலாளி, தொழிலாளி என்ற வேற்றுமை எதுவும் இல்லை என்பதற்காக இங்கே சொல்ல விரும்புகிறேன். அந்த நாட்களில் குமரன் சாரிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
அப்போது செட்டியாரின் மகன்கள் முருகன், குமரன், சரவணன் மற்றும் அவரது மாப்பிள்ளை வீரப்பன் ஆகிய நால்வரின் நிர்வாகத்தில் ஒரு படம் தயாரிக்க திட்டமிடப்பட்டது. பட வேலைகள் ஆரம்பித்த சமயத்தில் குமரன் சார் என்னை உதவி இயக்குநராக பணிபுரிய அழைத்தார். அதற்கு எடிட்டர் சூர்யா, ‘முத்துராமன் ரொம்ப மென்மையானவர். ஷூட்டிங் செட் பரபரப்பு அவருக்கு செட் ஆகாது. இங்கே எடிட்டிங்லயே இருக்கட்டும்’ என்றார்.
குமரன் அவர்களுக்கு என்னை விட மனமில்லை. ஆகவே, அப்பச்சியிடம் சொன்னார். அப்போது எடிட்டர் சூர்யா அவர்களை அப்பச்சி அழைத்து ‘முத்துராமன் எடிட்டிங்லேயும் வேலை செய்யட்டும். செட்லேயும் போய் வேலை செய்யட்டும்’என்று கூறினார். அதற்கு பிறகுதான் நான் உதவி இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைக்கு நான் இயக்குநராக பணியாற்றுகிறேன் என்றால், அதற்கு ‘முதல்படி’ அமைத்துக் கொடுத்தவர், குமரன் சார்தான் என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் உதவி இயக்குநராக பணியாற்றத் தொடங்கிய படம் எது தெரியுமா? அதை இப்போதே சொன்னால் சுவை போய்விடும். அடுத்த வாரம் சொல்கிறேனே!
- இன்னும் படம் பார்க்கலாம்…
படம் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago