மே 2: சத்யஜித் ராய் 93-வது பிறந்த தினம்
பல காலமாகச் சுவர்கள்கூட வண்ணமடிக்காமல் உரிந்துவரும் பிரம்மாண்டமான மாளிகை. அந்த மாளிகையை அதிகாரமும், செல்வாக்கும் நிறைந்ததாக வைத்திருந்த நிலங்கள் புதர்கள் முளைத்துத் தரிசாகக் கிடக்கின்றன. ஜமீன் குடும்பத்தின் கடைசி வாரிசான விஷ்வாம்பர் ராய் ஒரு நாள் தனது மாளிகையிலிருந்து வெளியே வந்து சுற்றுப்புறத்தை வெறித்துப் பார்க்கிறார்.
அவர்கள் வாழ்ந்த வளமான வாழ்க்கையின் மகத்துவ அடையாளமாக வளர்த்த யானை வெட்டவெளியில் நின்றுகொண்டிருக்கிறது. ஊருக்குள் புதுப் பணக்காரர் ஒருவரின் டிரக் புழுதியைக் கிளப்பியபடி வந்துசெல்கிறது. அந்தப் புழுதியில் ஜமீன்தாரின் இறுதிப் பெருமையாக நிற்கும் யானை மறைந்துவிடுகிறது.
இந்த ஒரு காட்சியே சத்யஜித் ராயின் புகழ்பெற்ற திரைப்படமான ‘ஜல்சாக’ரின் கதையைச் சொல்லிவிடுகிறது. நிலப்பிரபுத்துவ வாழ்க்கை நிலைகளின் வீழ்ச்சியையும், அந்த மாற்றத்தை ஏற்க முடியாமல் மனிதர்கள் செயலற்று வீழ்ந்துபோவதையும் பதிவு செய்யாத இந்திய மொழிப் படைப்புகளே இல்லை. 20-ம் நூற்றாண்டின் சிறந்த வங்க மொழி எழுத்தாளர்களில் ஒருவரான தாராசங்கர் பானர்ஜியின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு சத்யஜித் ராய், குறைந்தபட்ச வசனங்களுடன் அழுத்தமான காட்சிகள், மௌனங்கள் மற்றும் அற்புதமான இசையால் உருவாக்கிய படைப்புதான் ஜல்சாகர்.
ஜல்சாகரின் முதல் காட்சியே நாயகன் விஷ்வாம்பர் ராய், நிகழ்காலத்திலிருந்து முழுமையாகத் தன்னைத் துண்டித்துக் கொண்டிருப்பதைச் சொல்லிவிடுகிறது. மொட்டைமாடியில் சுழல் நாற்காலியில் இருந்து எழும் அவரது காதுகளுக்குத் தூரத்திலிருந்து வரும் மங்கல இசை கேட்கிறது. அவர் தனது வேலைக்காரனை மேலிருந்தபடி அழைக்கிறார். இன்று என்ன கிழமை, இது என்ன மாதம் என்று கேட்கிறார்.
தொடர்ந்து வந்த வெள்ளப் பெருக்காலும், ஜமீன்தார்களின் அதிகாரம் ஒடுக்கப்பட்ட நிலையிலும் பழைய பெருமைகளையும் மிச்ச சொச்ச ரசனைகளையும் தொடர முடியாத ஜமீன்தார்தான் நாயகன் விஷ்வாம்பர் ராய். பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் போய்விட, மனைவி மற்றும் ஒரே செல்வ மகனையும் வெள்ளத்தில் இழந்து நிற்கும் அவருக்கு இருக்கும் ஒரே உடைமை இரண்டு பணியாளர்கள், ஒரு குதிரை மற்றும் யானைதான். அத்துடன் அவரது தேர்ந்த இசை ரசனையும். அந்த இசை ரசனையின் காரணமாகத்தான் அவர் தனது நிலங்களைக் கவனிக்காமல் விட்டார் என்பது சொல்லாமல் சொல்லப்படுகிறது.
இசை மீதான அவரது ஈடுபாட்டின் அடையாளமான அந்த மாளிகையிலிருக்கும் அலங்காரமான இசை அறை தற்போது மூடிக் கிடக்கிறது. விஷ்வாம்பர் ராய் அந்த இசை அறையின் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்க்கும்போது மிகப் பெருமிதமாக உணர்வார். அங்கேதான் ஊரார் பொறாமைப்படும்படி, மிகப் பெரிய கச்சேரிகளையும் விருந்துகளையும் நடத்துவார். அந்த இசை அறையின் கண்ணாடியை இயக்குநர் சத்யஜித் ராய் பல்வேறு நிலைகளில் காண்பிக்கிறார். அந்த ஆளுயர நிலைக் கண்ணாடி இறந்த காலத்தில் அந்த அறையின் தொடர்ந்த பயன்பாட்டைக் காண்பிக்கிறது. கம்பள விரிப்புகள் அழகாக இடப்பட்ட அறையையும் சரவிளக்குகள் ஒளிர்வதையும் காண்பிக்கிறது.
வெகுகாலம் பூட்டப்பட்டுக் கிடந்த இசை அறை கடைசிக் கச்சேரிக்காகத் திறக்கப்படுகிறது. விஷ்வாம்பர் ராய் தனது செல்வாக்கை நிரூபிக்க ஆடும் கடைசி சூதாட்டம் அது. மீண்டும் அந்த இசை அறை திறக்கப்படும்போது நிலைக்கண்ணாடி அந்த இசை அறையின் கோலத்தைக் காண்பிக்கிறது. கண்ணாடி மீது நூலாம்படை படிந்திருக்கிறது. அதைப் பார்க்கும் விஷ்வாம்பர் ராயின் முகத்தையும் காண்பிக்கிறது.
முதுமை அடைந்து நலிந்து நொறுங்கிப் போயிருக்கும் விஷ்வாம்பர் ராயின் முகம் அது. அந்த அறையில் உள்ள விஷ்வாம்பர் ராயின் மூதாதையரின் ஓவியங்கள் காண்பிக்கப்படுகின்றன. கடைசித் தலைமுறையாக எஞ்சி நிற்கும் விஷ்வாம்பர் தனது பழம்பெருமைகளை எஞ்சியிருக்கும் பணியாளனிடம் குடிபோதையில் பேசுகிறார். தன் உருவ ஓவியத்தில் சிலந்தி அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது அவர் தனது முடிவை உணர்ந்துகொள்கிறார்.
இளம் வயதில், செல்வாக்குடன் இருந்த காலத்தில் சவாரி செய்த தனது குதிரையான டூபான் மீது ஏறி வேகமாக மாளிகையை விட்டுக் கிளம்புகிறார். குதிரையிலிருந்து வீழ்ந்து மரணமடைந்த அவரது சடலத்தைப் பார்த்து பணியாளர்கள் அழுகிறார்கள்.
விஷ்வாம்பர் ராயை வீழ்த்தியது அவரது பழம்பெருமை என்னும் குதிரைதான் என்பதை உணர முடிகிறது.
பழம்பெருமை என்னும் பொறி
ஜல்சாகர் படத்தைப் பார்ப்பவர்கள், சந்தர்ப்பம் இருந்தால் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் எடுத்த எலிப்பத்தாயத்தையும் பார்க்க வேண்டும். எலிப்பத்தாயத்தின் நாயகனும் இறந்த காலத்தின் பெருமையிலிருந்து மீளமுடியாமல் செயலற்றுத் தன் வீட்டையே எலிப்பொறியாக ஆக்கிக்கொண்டு செயலற்று வீழ்ந்துபோகும் கதாபாத்திரம்தான். ஜல்சாகர் நாயகனுக்காவது இசை ரசனை அவனைச் செயலுள்ளவனாகவும் சூதாடுபவனாகவும் மாற்றுகிறது. ஆனால் எலிப்பத்தாயத்தின் உன்னி வாழவே இல்லை. தங்கைகளையும் வாழவிடாமல் அவர்கள் பிரிந்துபோன பிறகு, பூட்டிய வீட்டுக்குள் மூச்சுமுட்ட பைத்தியமாகி இறந்துபோகிறான்.
பழையன கழியும். புதியன வரும் என்பது உலகப் பொது நியதிதான். ஆனால் அந்த மாறுதல்கள் சில மனிதர்களை அலைக்கழிக்கின்றன; சிலருக்கு வலிகளைத் தருகின்றன.
ஜல்சாகரைப் பொறுத்தவரை சுப்ரதா மித்ராவின் ஒளிப்பதிவும், இந்துஸ்தானி இசை வித்தகரான உஸ்தாத் விலாயத் கானின் இசையும் இந்தப் படைப்பை என்றென்றைக்குமான காவியமாக மாற்றுபவை. தோற்றுப்போன ஜமீன்தாராக நடித்த ஜப்பி பிஸ்வாஸின் நடிப்பு குறிப்பிடத்தக்கது. பழைய காலம் மற்றும் பழைய மதிப்பீடுகளின் புதிர்வழியில் மாட்டியுள்ள நாயகனின் மனநிலையை முகபாவங்கள் வழியாகவே காட்டியிருப்பார். இந்தப் படத்தில் வரும் ஒரு கச்சேரிக் காட்சியில் பேகம் அக்தர் நேரடியாகத் தோன்றிப் பாடியுள்ளார்.
சத்யஜித் ராய் எடுத்த அபராஜிதோ மிகப் பெரிய தோல்விப்படமானதால், வெகுஜன பார்வையாளர்களின் ரசனைக்கேற்ப இசையுடன் கூடிய ஒரு படமாக ஜல்சாகர் திரைக்கதையை எழுத நினைத்தார். சத்யஜித் ராயின் முறிந்த காதல் மற்றும் அவரை அலைக்கழித்த இறந்த கால நினைவுகளும் இத்திரைக்கதையை எழுதக் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் திரைக்கதையை எழுதி முடித்தபோது ராய் நினைத்த மாதிரி, பொழுதுபோக்குப் படமாக ஆகவில்லை. அழுத்தமும் தீவிரமுமான கதையாகவே ஜல்சாகர் உருவெடுத்தது. ஜல்சாகர் என்பதின் அர்த்தம் இசை அறை.
இசையும் கதையும் ஒன்றுக்கொன்று முயங்கி அர்த்தம் கொடுக்கும் அரிய அனுபவம் ஜல்சாகர்.
சத்யஜித் ராய்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago