கதைக்காக நடிகர்களா? நடிகர் களுக்காக கதையா என்பது பற்றி என்றைக்குமே பட்டிமன்றம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஒரு படத்தின் கதை தயாரானதும், அடுத்த முக்கிய நகர்வு நடிகர், நடிகைகள் தேர்வுதான். ஓர் இலக்கணமாக சொல்லவேண்டும் என்றால், கதைக்கு நடிகர்களைத் தேர்வு செய்வதுதான் சரியாக இருக்கும். நடிகர்களுக்காகவே கதை உருவாக்கப்பட்டு அவையும் வெற்றிபெற்றிருக்கின்றன. (உ-ம்) ‘முரட்டுக்காளை’, ‘சகலகலா வல்லவன்’.
‘களத்தூர் கண்ணம்மா’ சமூகம் மற்றும் காதலை மையமாகக் கொண்ட களம். காதல் என்றால் ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன்தானே நினைவுக்கு வருவார். அவருக்கு ஜோடி நடிகையர் திலகம் சாவித்திரி.
ஜெமினி கணேசனின் அப்பா ஜமீன்தாரராக டி.எஸ்.பாலையா, சாவித்திரியின் அப்பா விவசாயியாக எஸ்.வி.சுப்பையா, படத்தில் காமெடிக்கு மனோரமா, ‘குலதெய்வம்’ராஜகோபால் என்று கதைக்குப் பொருத்தமானவர் கள் ஒவ்வொருவராக தேர்ந்தெடுக் கப்பட்டார்கள். இவர்களோடு விஷேச மான ஒருவரும் இணைந்தார். அவர்தான், இன்றைக்கு ‘உலக நாயகன்’ என்று கொண்டாடப்படுகிற கமல்ஹாசன்!
‘களத்தூர் கண்ணம்மா’படத்துக்குள் கமல்ஹாசன் வந்த கதை எப்படித் தெரியுமா?
ஒருமுறை செட்டியார் வீட்டுக்கு, ஏவி.எம் குடும்ப டாக்டர் சாரா ராமச்சந்திரன் தன்னுடன் 4 வயது சிறுவன் ஒருவனையும் அழைத்து வந்தார்.
ஏவி.எம் ராஜேஸ்வரி அம்மையாரும், சரவணன் சாரும் டாக்டரிடம், ‘‘யார் இந்தப் பையன்?’’ என்று கேட்டார்கள். ‘‘எனக்கு நடிக்கணும்னு ஆசையா இருக்கு. என்னை ஏவி.எம் ஸ்டுடி யோவுக்குக் கூட்டிட்டு போங்கன்னு கேட்டுட்டே இருந்தான். அதான் கூட்டிட்டு வந்தேன்’’ என்றார் டாக்டர்.
அருகில் இருந்த ராஜேஸ்வரி அம்மா, ‘‘சரவணா, அப்பச்சிகிட்ட இந்தப் பையனைக் கூட்டிட்டுப் போய் காட்டு’’ என்றார். சரவணன் சார் அப்பச்சியிடம் கூட்டிச் சென்று அந்தப் பையனின் நடிப்பு ஆசையைச் சொன்னார். செட்டியார் தன் பின்னால் இருந்த போகஸ் லைட் வெளிச்சத்தை, கமல் முகத் தில் போட்டு ‘எங்கே நடிச்சு காட் டுப்பா’என்றார்.
கமல் பலவிதமாக வசனம் பேசி, ஆடிப் பாடி, நடித்துக் காட்டினார். செட்டியாருக்கு அந்தப் பையனின் நடிப்பு பிடித்துப்போனது. ‘‘சரவணா, பையனை இயக்குநர் பிரகாஷ் ராவ்கிட்ட காட்டு’’ என்றார். அதற்கு சரவணன் சார் ‘‘ ‘களத்தூர் கண்ணம்மா’ சிறுவன் பாத்திரத்துக்கு டெய்சி ராணி என்ற குழந்தையைத் தேர்வு செய்துள்ளோமே’’ என்று சொன்னார். உடனே செட்டியார், ‘‘அந்தக் குழந் தையைவிட இவன் பிரஷ்ஷாக இருக்கிறான். இவனை இயக்குநரிடம் காட்டு’’ என்றார்.
ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு சரவணன் சார், கமலை கூட்டிவந்து விவரம் சொன்னார். அப்போது ஜெமினி கணேசன் அந்தப் பையனை தூக்கி ஒரு சுற்றுச் சுற்றி, ‘‘எனக்கு ஒரு ஜூனியர் வந்துட்டான்’’ என்று மகிழ்ந் தார். சாவித்திரி முத்தம் கொடுத்தார். இயக்குநர் பிரகாஷ் ராவ் அவன் நடிப் பைப் பார்த்துவிட்டு ‘டபுள் ஓ.கே’ சொன்னார். கமல் ‘களத்தூர் கண் ணம்மா’ படத்தில் குட்டி கதாநாயகன் ஆனார். முதன்முதலில் கமல் முகத்தில் செட்டியார் போட்ட வெளிச்சம், இன்னும் உலகநாயகனாக ஒளி வீசிக்கொண்டே இருக்கிறது. ஆம்! அது செட்டியாரின் கைராசி; கமலின் முகராசி!
‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் கலை இயக்குநர் சாந்தாராம். செட் போடுவதில் கைதேர்ந்தவர். அவர் செட்டை ஸ்கெட்ச் போட்டுக் கொடுத் தால் போதும், அதை அப்படியே கார்பெண்டர் பிரிவு பணியாளர்கள் ஆறுமுக ஆசாரி, நாகன் ஆசாரி, மூக்கையா ஆசாரி ஆகியோர் சிறப்பாக அமைத்துவிடுவார்கள். அவர் கள் அத்தனை பேரும் கலை ஆர்வம் கொண்ட செட்டிநாட்டின் காரைக்குடியைச் சேர்ந்தவர்கள். ஏவி.எம் அமைக்கும் செட் என்றால் ‘பிரமாதம்’ என்ற பெயர் ரசிகர்களிடம் என்றும் உண்டு.
‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் பணக்கார வீடு, விவசாய வீடு, அநாதை இல்லம் என்று செட்டுக்கு கதையில் நிறைய இடம் இருந்தது. எது முதல் கட்டப் படப்பிடிப்புக்கு வேண்டும்? எது கடைசி செட்யூலுக்கு வேண் டும் என்று இயக்குநர் பிரித்துக் கொடுத்தப்படி வேலையைத் தொடங் கினோம்.
ஒரு இயக்குநருக்கு ஒளிப்பதி வாளர்தான் கண். இயக்குநர் என்ன நினைக்கிறாரோ, அதை துல்லியமாகக் கணித்து படத்தில் கொண்டுவருவது ஒளிப்பதிவாளருடைய கடமை. ‘களத் தூர் கண்ணம்மா’ படத்துக்கு ஒளிப் பதிவாளர் டி.முத்துச்சாமி. ஏவி.எம் ஸ்டுடியோ தேவகோட்டை ரஸ்தாவில் இருந்த காலகட்டத்தில் வெளிவந்த ‘வேதாள உலகம்’, ‘நாம் இருவர்’ போன்ற வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளர் இவர்.
‘நாம் இருவர்’ படத்தில் ஒரு பாடலில் ஒரே காட்சியில் நான்கு குமாரி கமலா நடனம் ஆடுகிற மாதிரி எடுத்திருப்பார். அது அந்த நாட்களில் ஆச்சரியமான தொழில் நுணுக்கமாக வும், புதுமையாகவும் கருதப்பட்டது. அதைப் போல் ‘வேதாள உலகம்’ படத்தில் தந்திரக் காட்சிகள் அவ்வளவு சிறப்பாக அமைந்திருந்தன. மிக்சல் கேமராவில் மேனுவலாக படம் பிடிக்கக் கூடிய சாதுர்யம் அவரிடம் இருந்தது.
‘களத்தூர் கண்ணம்மா’ படப்பிடிப்பு செட்டில் என்னை பார்த்ததும் ஒளிப் பதிவாளர் முத்துச்சாமி ‘‘என்ன முத்து ராமா, செட்டுக்கு வந்துட்டியா? செட்ல ஒரு படத்தில் வேலை செய்தால் 4 படங்களோட அனுபவம் கிடைக்கும் வா..வா’’ என்று வரவேற்றார்.
ஒரு விபத்தில் சிக்கி அவருக்கு ஒரு கால் கொஞ்சம் பாதிப்படைந்திருந்தது. ஒரு காட்சியில் டாப் ஷாட் வைக்க இயக்குநர் விரும்பினார். கொஞ்சம் கூட யோசிக்காமல் லைட் பாய்ஸ் ஏறும் மர ஏணியில் ஏறி, லைட் பிளாங்கில் டாப் ஆங்கிளில் கேமராவை வைத்தார். என்னை பார்த்து ‘‘ஏன் கீழே நிக்கிறே மேல வா. எப்படி டாப் ஷாட் வைக்கிறோம்னு பார்’’ என்றார். நான் மேலே ஏறிப்போய் பார்த்தேன். எனக்கு கிடைத்த புது அனுபவங்களில் அதுவும் ஒன்று.
இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ஜித்தன் பேனர்ஜி, சரவணன் சாரிடம் கூறியது இந்த விஷயம்: ‘‘நல்ல திடகாத்திரமான ஒருவன் விறகு வெட்டிக்கொண்டிருந்தான். நான் உபயோகப்படுத்தும் பளுவான மிக்சல் கேமராவைத் தூக்கவும் டிராலியில் வைத்துத் தள்ளவும் பலசாலியான ஓர் ஆள் தேவைப்பட்டது.
அந்த விறகுவெட்டியை கூப்பிட்டு என்னோடு வைத்துக்கொண்டேன். அவன் கேமரா சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் என்னிடம் இருந்து கற்றுக்கொண்டான். அவன் யார் தெரியுமா? உங்கள் படங்களில் ஒளிப்பதிவாளராக பணி செய்கிற டி.முத்துச்சாமி’’என்றார். சரவணன் சார் அசந்துபோனார்.
முறையாக ஒரு தொழிலைக் கற்றுக் கொண்டால் விறகுவெட்டியும் சிறந்த ஒளிப்பதிவாளராக முடியும் என்பதற்கு டி.முத்துச்சாமி நல்ல சாட்சி.
- இன்னும் படம் பார்ப்போம்…
முந்தைய அத்தியாயம்: >சினிமா எடுத்துப் பார் 8- திரைக்கதை ஜாம்பவான் டி. பிரகாஷ் ராவ்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago