மனது, காலம், நினைவு, நிலப்பரப்பு, உணர்வு என்று பல அடுக்குகளில் படிந்துகிடக்கின்றன இசையின் கூறுகள். குறிப்பிட்ட ஓர் இசையை மீண்டும் கேட்கும்போது, நீரின் மேல் மிதக்கும் மெல்லிய பூக்களாக மனதுக்குள் அவை மலர்வதை உணரமுடியும். நம் வாழ்வின் தருணங்களைத் தேக்கிவைத்திருக்கும் ஒரு பாடல், எங்கும் சுமந்துசெல்லக்கூடிய நிழல்படத் தொகுப்பாக நம்மைத் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
மழை ஓய்ந்த மதியப் பொழுதில் கேட்ட ‘அடி பெண்ணே’ பாடலை, சுட்டெரிக்கும் வெயிலின் தார்ச்சாலையில் நின்று கேட்டாலும் மனம் குளிர்ந்து சிலிர்ப்பதை உணரலாம். இரவின் தனிமையில் மொட்டை மாடியில் அமர்ந்து கேட்ட ‘பொன் மானைத் தேடி’ பாடல், எங்கோ ஒரு கிராமத்தில் வாழ்வைத் தொலைத்த காதலர்களை நினைவுபடுத்தலாம்.
வானொலி, தொலைக்காட்சி, ஒலிபெருக்கிகள் போன்ற சாதனங்கள் மூலம் நம் வாழ்வின் வெவ்வேறு தருணங்களுக்குப் பின்னணி இசை போல ஒலித்து, நம் மனதுடன் தங்கிவிட்டவை திரையிசைப் பாடல்கள். அந்தப் பாடல்களுடனான நமது உறவைப் பற்றிப் பேசும் தொடர் இது.
இளையராஜாவின் தொடக்ககாலப் பாடல்கள் வெவ்வேறு நிலப்பரப்புகளின் கூறுகளைத் தம்முள் புதைத்து வைத்திருப்பவை. சாலையின் இரு புறமும் விரியும் வெவ்வேறு நிலப்பரப்புகள் அவரது பாடல்களின் நிரவல் இசைக்கோவையாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதை, நீண்ட பயணங்களின்போது ஆத்மார்த்தமாக உணர முடியும். வீடுகளின் நிழல்கள் விழுந்து கிடக்கும் மாலை நேரத் தெருக்கள், சாலையின் பரபரப்புக்கிடையில் ஒதுங்கிக் கிடக்கும் பூங்காக்களைக்கூடத் தனது இசைக் குறிப்புகளால் காட்சிப்படுத்தியவர் இளையராஜா.
அவரது மிகச் சிறந்த ஆல்பங்களில் ஒன்றாக, சுமன், சுமலதா, பானுச்சந்தர் நடித்த ‘எனக்காகக் காத்திரு’ (1981) திரைப்படப் பாடல்களின் தொகுப்பைச் சொல்லலாம்.
பனிமலைகள் நிறைந்த அருணாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவுக்குப் பேர்போன நிவாஸ். சுமனும் பானுச்சந்தரும் நெருங்கிய நண்பர்கள். மர்மமான கதாபாத்திரமாக வரும் சுமன், காதலிப்பதாகக் கூறிப் பல பெண்களை ஏமாற்றுவார். அவரால் வீழ்த்தப்படும் பட்டியலில் பானுச்சந்தரின் தங்கையும் இருப்பாள். ஆத்திரமடையும் பானுச்சந்தர், சுமனைக் கொல்வதற்குத் தேடியலைவார். இலக்கற்ற திரைக்கதையுடன் அலைபாயும் இந்தப் படம், ஒளிப்பதிவு, திபெத்திய இசைக் கருவிகள் ஒலிக்கும் பாடல்கள், மர்மத்தைப் பிரதியெடுக்கும் பின்னணி இசை மூலம் தொலைதூரப் பனிப் பிரதேசத்தின் கனவைக் காண்பதுபோன்ற வித்தியாசமான உணர்வைத் தரும்.
படத்தில் நான்கே பாடல்கள். காதலில் உருகும் பெண்களின் படம் என்பதால், டூயட் பாடல்களின் பல்லவியைப் பெண்கள்தான் தொடங்குகிறார்கள். ‘ஓ நெஞ்சமே’ பாடல் தொடங்குவதற்கு முன்னதாக, ஜானகியின் ஆலாபனையும், வயலின்களின் சேர்ந்திசையும் ஒரு மயக்க நிலைக்கு நம்மை இட்டுச்செல்லும். பாலத்தின் மீது கடைகள் படர்ந்திருக்கும் அந்தப் பாதையில் காதலனைத் தேடி ஓடுவாள் நாயகி. நினைவில் மங்கலாக உறைந்திருக்கும் படிமம் மாதிரியான காட்சியமைப்பு.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago