கல்லூரிப் படிப்பை முடித்திருந்த நேரம். வேலைக்கான வேட்டையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தேன். விண்ணப்பப் படிவங்கள் வாங்கக்கூட வீட்டில் பணம் கிடையாது. அதையாவது சுயமாக சம்பாதிப்பது எப்படி என்று அல்லாடிய நேரத்தில்தான் ராமமூர்த்தி “அரிசி பிசினஸ் செய்யலாம்” என்றான்.
“என்னடா சொல்கிறாய்..?”
“சென்னையில் ஒரு கிலோ அரிசி 5 ரூபாய். அரக்கோணத்தில் அதுவே 2 ரூபாய்தான். ஆளுக்கு 20 கிலோ வாங்கி வந்தால் சென்னையில் ரூ.3.50க்கு விற்கலாம். கிலோவுக்கு ரூ.1.50 லாபம். கைமேல் 30 ரூபாய் லாபம்…” என்று ஒரு அல்நாஷர் கனவை விரித்தான், ராமமூர்த்தி.
இரண்டு ஊர்களுமே தமிழ்நாடுதான். ஆயினும், அரிசி விலையில் அன்றைக்கு சென்னைக்கும் அரக்கோணத்துக்கும் அவ்வளவு வேறுபாடு இருந்தது!
ஆனால், அரக்கோணத்தில் இருந்து அரிசி எடுத்து வருவது சட்டப்படி ‘அரிசிக் கடத்தல்’. மாட்டினால் மொத்த அரிசியும் பறிமுதலாகிவிடும்.
“போலீஸ்ல மாட்டாம எப்படிரா அரிசியை எடுத்துட்டு வர்றது..?”
“அதுக்குத்தான் ஒன்னைத் தேடி வந்திருக்கேன்...” என்றான் ராமமூர்த்தி.
யோசித்தேன். ஒரு வழி தோன்றியது. பணத் தேவை அரிசிக் கடத்தலில் இறங்க வைத்தது.
புக் பைண்டிங் செய்து ஈட்டியிருந்த பணம் கொஞ்சம் கையில் இருந்தது. அரக்கோணம் சென்று வருவதற்கான ஒரு மாத சீசன் டிக்கெட்டை வாங்கினோம்.
காலை 9.30-க்கு சென்னையில் இருந்து தாதர் எக்ஸ்பிரஸ் கிளம்பும். பத்தே முக்காலுக்கு அரக்கோணம் போய்விடலாம்.
ஸ்டேஷனுக்கு வெளியே அரிசி மார்க்கெட். வியாபாரிகள் கூவிக் கூவி அரிசி விற்பார்கள். ஆளுக்கு 20 கிலோ அரிசி வாங்குவோம். அப்புறம் ஹோட்டலில் சமோசா, டீ, பன்னிரண்டு மணிக்கு பெங்களூரில் இருந்து ரயில் வரும். அதில் திரும்புவோம்.
சில நாட்களில் வண்டி புறப்படும் நேரத்துக்கு திபு திபுவென்று போலீஸ் காரர்கள் பெட்டியில் ஏறுவார்கள். அரிசி மூட்டைகளோடு உட்கார்ந்திருப்பவர் களை இழுத்து இறக்கிவிடுவார்கள். பேன்ட், ஷர்ட் அணிந்து, ‘ஏ ப்ளஸ் பீ ஹோல் ஸ்கொயர் ஈஸ் ஈக்வல் டு…” என்று பேசிக்கொண்டிருக்கும் எங்களை அவர்கள் சந்தேகப்பட்டதே இல்லை.
ஒன்றரை மணி நேரத்தில், சென்னை. ஆதாம் மார்க்கெட் கடைக்காரர் அரிசியை எடை போட்டு, கை மேல் காசு தருவார்.
ஒரு மாதம் ‘அரிசி பிசினஸ்’ வெற்றிகரமாக இயங்கியது. ஒரு நாளைக்கு ஒருத்தருக்கு 30 ரூபாய் வருமானம். மாதம் 900 ரூபாய்.
வேலைக்கு விண்ணப்பிக்க, சினிமா செல்ல, ஹோட்டலில் சாப்பிட என்று எல்லாவற்றுக்கும் பணம் புரண்டது.
நாங்கள் எப்படி அரிசி கடத்தி னோம் தெரியுமா? ஒரு சூட்கேஸ், ஒரு ஜோல்னாப் பை சகிதம் அரக்கோணத்துக்குச் செல்வோம். சூட்கேஸில் அரிசி வாங்குவோம். ரயிலில் ஏறியவுடன் சூட்கேஸைப் பரணில் வைத்துவிட்டு, அவற்றுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லாதது போல் தள்ளி உட்காருவோம். தோளில் ஜோல்னாப் பை!
ஒரு மாதத்துக்குப் பிறகு ராமமூர்த்தி இன்னொரு தகவல் கொடுத்தான். வாலாஜாபேட்டையில் அரிசி கிலோ ரூ1.25 தான். அங்கே வாங்கி வந்தால், கூடுதல் லாபம்!
காலை கோவை எக்ஸ்பிரஸில் வாலாஜா. அரிசி வாங்கிக்கொண்டு, பகல் 12 மணிக்கு வேறொரு ரயிலில் ஏறி சென்னை வருவோம்.
எங்களை ரயிலில் வாடிக்கையாகப் பார்த்த சக அரிசிக் கடத்தல்காரர்கள் சிலருக்கு, நாங்களும் அரிசிதான் கடத்து கிறோம் என்று சந்தேகம். அவர்கள் இரண்டு முறை மாட்டி மொத்த சரக்கையும் பறிகொடுத்திருந்தார்கள். நாங்கள் எப்படிக் கடத்துகிறோம் என்பது புரியாமல் அவர்களுக்கு எங்கள் மேல் வயிற்றெரிச்சல்.
ஒரு முறை வாலாஜாவில் நாங்கள் சூட்கேஸில் அரிசி வாங்குவதை ரகசியமாக அவர்கள் கவனிப்பது எங்களுக்குத் தெரிந்துவிட்டது.
போலீஸில் மாட்டப் போகிறோம் என்று ராமமூர்த்தி பதறினான்.
“பாத்துக்கலாம். கவலைப்படாதே…” என்று நான்தான் தைரியம் கொடுத்தேன்.
ஹோட்டல் போய் சாப்பிட்டுவிட்டு, சூட்கேஸ் சகிதம் ஸ்டேஷனுக்கு வந் தால், அன்றைக்குப் பார்த்து எக்கச்சக்க மான போலீஸ்காரர்கள்.
சக அரிசிக் கடத்தல்காரர்களின் அரிசி மூட்டைகள் பறிமுதலாயின. அரிசியைப் பறிகொடுத்த ஆத்திரத்தில் அவர்களில் ஒருவன் எங்களைக் காட்டி னான்.
“அவனுங்க சூட்கேஸ்ல அரிசி கடத்திட்டுப் போறாங்க சார். படிச்ச பசங்கன்னு அவனுங்களை விட்டுட்டு எங்களை மாதிரி ஏழைங்களோட வயித்தில அடிக்கிறீங்களே சார்...” என்றான்.
சூட்கேஸில் அரிசி கடத்துவோம் என்று போலீஸ்காரர்கள் எதிர்பார்க்கவே இல்லை.
“தெறங்கடா பெட்டியை…” என்றபடி லத்தியை உயர்த்தினார்கள்.
திறந்தோம். பெட்டிகளில் வாலாஜா டெரிகாட் பேன்ட் பிட்டுகளும், ஷர்ட் பிட்டுகளும் அவர்களைப் பார்த்துச் சிரித்தன.
வாலாஜாவில் மலிவாகக் கிடைக்கும் அந்தத் துணிகளுக்குச் சென்னையில் ஏகப்பட்ட கிராக்கி என்று எனக்கு ஏற்கெனவே தெரிந்து, மாட்டுவோம் என்று புரிந்ததும் அரிசியை விற்றுவிட்டு, அந்தத் துணிகளை வாங்கி பெட்டியில் நிரப்பியது எவ்வளவு நல்லதாகப் போயிற்று!
போலீஸ்காரர்கள் எங்களுடைய 'நேர்மை'யான வியாபாரத்தைப் பாராட்டி விட்டு, கடத்தல் வியாபாரிகளை காவல்நிலையத்துக்குத் தள்ளிச் சென்றார்கள்.
அரிசி பிசினஸை அன்றைக்கே மூட்டை கட்டினோம்.
‘அயன்’ திரைப்படத்தில் தேவா (சூர்யா) வைரம் கடத்தி வருவதாக சுங்க அதிகாரி பொன்வண்ணனுக்குத் தகவல் போய்விடும். அவரும் தேவாவை மடக்கி இன்ச் இன்ச்சாக சோதனை போடுவார். வைரம் கிடைக்காது.
ஒரு மினரல் வாட்டர் பாட்டிலின் வளையக் குழிவுகளில் அந்த வைரங்களை ஒட்டி வைத்து அதை சிட்டி (ஜெகன்) மூலம் தேவா வெளியே அனுப்பி இருப்பான். அதே போல் இறுதிக் காட்சியில் தலையில் விக் ஒன்றில் பதுக்கி வைரங்களைக் கடத்தி வருவான். சுங்க அதிகாரியால் கண்டுபிடிக்கவே முடியாது. அரிசிக் கடத்தல் அனுபவம் வைரக் கடத்தல் காட்சிக்கு வழி வகுத்தது!
- வாசம் வீசும்…
எண்ணங்களைத் தெரிவிக்க: dsuresh.subha@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago