டிசம்பர் 19 , 2013 திரையிடப்படும் CIFF படங்களின் முன்னோட்டம்

By ரூபேந்தர்

தேதி : 19TH DEC 2013

திரையரங்கம் : WOODLANDS

11:00 AM : SIX ACTS

ஜானதன் கர்ஃபின்கல் என்கிற இஸ்ரேல் நாட்டு இயக்குனரின் படம். கிலி எனும் இளம் பெண்தான் படத்தின் நாயகி. அவளுக்கு ஒரு பிரச்சினை. தான் இப்போது படிக்கும் பள்ளி அவளுக்கு பிடிக்கவில்லை. அதனால் வேறு பள்ளிக்கு செல்கிறாள். பாய்ஃபிரண்ட்களின் எண்ணிக்கைதான் பள்ளியில் ஒரு பெண்ணின் அந்தஸ்தை தீர்மானிக்கும். கிலி தன் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள தீர்மானிக்கிறாள். இந்த முடிவு அவளைக் கொண்டு சேர்க்கும் இடம்?

2:00 PM : HARMONY LESSONS

பாராட்டை ரசிப்போம். பரிகாசம் செய்தால்?. அதுவும் சிறுவர்களை?. பள்ளியில் அஸ்லாம் அனைவருக்கும் ஒரு கேலிப் பொருள். உடைந்து போகிறான். அடிபடும் ஒவ்வொரு முறையும் வலிக்கிறது. அழ வைப்பவர்கள் அழவேண்டும். தன் அபாய விளையாட்டை ஆர்மபிக்கிறான் அஸ்லான். பிஞ்சு நஞ்சாக வேண்டாமே.. எமிர் பைகசர் எனும் கசக் நாட்டு இயக்குனரின் படம்.

********************

திரையரங்கம் : WOODLANS SYMPHONY

10:45 AM : FEROX

இந்த வருடம் ஐஸ்லாந்தில் வெளியான படங்கள் மூன்று. அதில் ஒன்று இது. அன்று பள்ளி முடிந்து வீடு திரும்புகிற 16 வயது அர்மால்தூருக்கு குளியலறையில் அதிர்ச்சி காத்திருக்கிறது. அவன் அண்ணன் செத்துக் கிடக்கிறான். அது தற்கொலை. தற்கொலைக்கான காரணம். அண்ணனின் பள்ளி ஆசிரியர் அவனை பாலியல் தொல்லை செய்தது. ஆசிரியனா அவன்.. கேடுகெட்டவன். அவனுக்கு ஒரு பாடம் புகட்ட தம்பி புறப்படுகிறான். இயக்கம்: போர் ஒமார் ஜான்சன்.

1:45 PM : HOUSE WITH A TURRET

பெய்யும் மழை.. ஏசி அறையின் கண்ணாடி ஜன்னல் வழியே பார்க்க மிகவும் எழிலானது. அதே மழை.. அடுப்பு மூட்டும் பிளாட்பாரவாசிக்கு?. தாத்தா வீடு புறப்பட்ட 8 வயதுச் சிறுவனின் பயண வழியெங்கும் எழில் கொஞ்சும் காட்சிகள். ஆனால் வறுமை பிடுங்கித் தின்ன.. வழியில் அம்மாவையும் பறிகொடுத்து அடைக்கலம் தேடிப் புறப்பட்ட அந்தச் சிறுவனுக்கு அந்த காட்சிகள் எப்படி இருந்திருக்கும்?. ஃபிரெட்ரிச் கொரன்ஸ்டைனின் இளம் பருவ வாழ்க்கை இந்த படம். இவர் தார்க்கோவ்ஸ்கியின் 'சொலாரிஸ்' படத்தை எழுதியர். இயக்கம்: ஈவா நேய்மன்.

***************

திரையரங்கம் : SWARNA SAKTHI ABIRAAMI

11:00 AM : THE PRIEST'S CHILDREN

ஃபாதர் ஃபாபியன் கட்டை பிரம்மச்சாரி.. கண்ணியமாணவர்.. ஒழுக்கசீலர். ஆனால் அவருக்கு ஓராயிரம் குழந்தைகள். எப்படி?. ஃபாதர் திடீரென பணிமாறுதலில் ஒரு தீவுக்கு வருகிறார். அந்த தீவு அவரின் பொறுப்பு. தீவில் ஒரு குறை. அங்கு குழந்தை பிறப்பு மிகக் குறைவு. வருஷத்துக்கு ஒன்று இரண்டுதான் தேறும். யானை குட்டி போடுவது போல என்பார்கள். யானைக்கு சரி.. ஆனால் தீவுக்கு?. இப்படியே போனால் வளர்ச்சிக்கு சங்கு ஊத வேண்டியது தான்.. தீவு அப்பறம் 'ஊ ஊ.. 'ஆகிவிடும்! அதனால் ஃபாதர் ஒரு முடிவெடுத்தார். அடுத்த வருடம் வதவதவென தீவு முழுக்க குழந்தைகள். தீவுப்பிதா. கொண்டாட்டமான திரைப்படம்.

2:00 PM : NORTHWEST

கோபன்ஹேகன் குற்ற பூமி. மாஃபியா, கொலைகாரர்கள், புரோக்கர்கள் திரியும் அந்த அழுக்கு சாம்ராஜ்யத்தின் இளவரசன் 18 வயது கேஸ்பர். கொலை, கொள்ளை என கலவரக் கலவையாகக் கழியும் வாழ்க்கை. ஒரு நாள் கதை மாறுகிறது. சாம்ராஜ்யத்தின் துப்பாக்கி இளவரசன் தம்பியை குறி வைக்கிறது. இது வரை மற்றவர்களை துரத்திய கேஸ்பர். இப்போது ஓட ஆரம்பிக்கிறான். துடிப்பான திரில்லர் படம்.

**********************

திரையரங்கம் : ROBOT BALA ABIRAAMI

10:45 AM : TRICKED

ரெம்கோ அலட்டிக் கொள்ளாதவன். வாழ்வில் அசால்ட்டாய் வெற்றிக் கொடி நட்டவன். பணம், புகழ், அழகான மனைவி. அவன் 50வது பிறந்த நாளுக்கு மனைவி அட்டகாசமான பார்ட்டி ஏற்பாடு செய்கிறாள். கொண்டாட்டப் பார்ட்டியை கெடுக்க வந்து சேர்கிறாள் நாட்ஜா. அவள் ரெம்கோவின் முதல் மனைவி. 'உன்னால் நான் இப்போது கர்ப்பம்' என்கிறாள் நாட்ஜா. ரெம்கோவுக்கு இப்போது திண்டாட்டம். 'இந்த விஷயத்தை வெளியே சொல்லிவிடுவேன்.. உன் கம்பனியை எனக்கு அடிமாட்டு ரேட்டுக்கு விற்று விடு'- இப்படி ஒரு பிளாக்மெய்லர். நாட்ஜா நிஜமாலுமே கர்ப்பமா? இல்லை வயிற்றில் தலகாணியா?.

1:45 PM : FLOATING SKYSCRAPERS

கூபா ஒரு நீச்சல் வீரன். சில்வியா அவன் காதலி. எவ்வித சிக்கலும் இன்றி வானவில்லாய் கழியும் வாழ்க்கை. ஒரு ஓவியக் கண்காட்சியில் சிக்கல் வருகிறது, மிக்கேல் உருவில். மிக்கேலுக்கும் கூபா வயது அழகன். கூபா - மிக்கேல் நண்பர்கள் ஆகின்றனர். கொஞ்ச நாளில் அவர்கள் நட்பு அதையும் தாண்டி அபுனிதமாகிறது. இது சில்வியாவுக்கு தெரிய வருகிறது. இது முக்கோண காதல் கதையில் சேருமா? பார்த்துவிட்டு முடிவு சொல்லுங்கள்.

***********************

திரையரங்கம் : INOX 2

10:45 AM : THE GREEN UMBRELLA

பத்து வயது மெஹ்ரானுக்கு வீடு பிடிக்கவில்லை. வசிக்கும் ஊர் பிடிக்கவில்லை. ஒரே வெறுப்பாக இருக்கிறது. காரணம் அவன் பெற்றோர்.அவர்கள் பிரிய முடிவெடுத்துவிட்டனர். யாரைப் பார்த்தாலும் எதைப் பாத்தாலும் மெஹ்ரானுக்கு கோபம்..கோபம். வீட்டை விட்டு, ஊரை விட்டே ஓடிப்போகிறான். அவன் ஓடிப்போனது அடர்ந்த ஒரு காட்டுக்குள். பெற்றோருக்கு இப்போதுதான் உறைக்கிறது. புத்தி வருகிறது. பையனைத் தேடி காட்டுக்குள் போகின்றனர். சிறுவன் காட்டில் கண்டதோ ஒரு வினோத உலகம். வியக்க வைக்கும் உலகம். மனிதர்கள் ஒரு காலத்தில் காட்டில் வாழ்ந்தவர்கள். அந்தக் காடு இன்னும் நமக்குள் இருக்கிறது. நாசர் ரேபா'ய் இயக்கிய ஈரான் நாட்டுத் திரைப்படம்.

1:45 PM : INERTIA

நீங்கள் உங்கள் காதலியை, துணையை எவ்வளவு நேசிப்பீர்கள்? கடலளவு? கடவுள் அளவு?. ஆனால் நிச்சயமாக சொல்ல முடியும்.. லூசியா அளவு முடியாது. இத்தனைக்கும் பிலிப் அவளை ஏமாற்றி கைவிட்டு ஓடிச் சென்றவன். அந்த பிலிப் இப்போது கிட்னி செயலிழந்து சாகக் கிடக்கிறான். ஒழிந்தான் துரோகி என லூசியா போய்விடவில்லை. நேசிப்பின் இலக்கணம் லூசியா. இசபெல் முனோஸ் என்கிற ஸ்பானிய பெண் இயக்குனரின் படம்.

***********************

திரையரங்கம் : INOX 3

11:00 AM : CLUB SANDWICH

பணமும் சரி, பாசமும் சரி.. பங்குக்கு யாரும் வந்துவிடக்கூடாது. முழுமையாக நமக்கே வேண்டும். அதுதான் மனித மனம். 35 வயது பலோமாவுக்கு தன் 15 வயது மகன் ஹெக்டர் மீது அளவில்லாப் பாசம். அம்மாவுக்கு மகன்.. மகனுக்கு அம்மா. இடையில் முளைக்கிறாள் ஜாஸ்மின். ஹெக்டர் வயதுப் பெண். ஹெக்டர் இப்போது அம்மாவை விட்டுவிட்டு அம்மணி பின்னால் ஓடுகிறான். பாவம் அம்மா.. உலகெங்கும் இந்த அம்மாக்களே இப்படித்தான். ஃபெர்னாண்டோ எம்பெகே இயக்கிய மெக்சிகோ நாட்டுத் திரைப்படம்.

2:00 PM : EL MUDO

டேனியல் மற்றும் டியாகோ விகா எனும் சகோதரர்கள் இயக்கியது. நேர்மை நற்பண்பு. ஆனால் நேர்மையாளர்கள்?. நிர்வாண ஊரில் கோவணம் கட்டினால்?. செரேகா கோவணம் கட்டியே தீர்வேன் என்கிறான். இதில் அவன் லாயர் வேறு. விடுவார்களா? அவன் லாயர் லைசன்ஸ் ரத்தாகிறது. கார் கண்ணாடி உடைகிறது. தோட்டா தோள்பட்டையை உரசிச் செல்கிறது. இப்பொழுதும் செரேகா திருந்த மறுக்கிறான். அந்த லாயர்.. லையர் ஆகவே கூடாது. ஆவானா? மாட்டானா?

4:30 PM : MIDWINTER'S NIGHT DREAM

லசார் ஒரு போர்க் கைதி. 10 வருட சிறைத் தண்டனை முடிந்து வீடு திரும்புகிறான். பூட்டிக் கிடக்க வேண்டிய வீடு திறந்து கிடக்கிறது. போஸ்னியாவை சேர்ந்த ஒரு தாயும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட அவளுடைய மகளும் அங்கு குடியிருக்கின்றனர். அவர்களை வேறு எங்கும் விரட்ட முடியாத நிலை. அவர்களையும் அந்த வீட்டிலேயே இருக்க அனுமதியளிக்கிறான் லசார். லசாரின் பத்தாண்டு கைதி வாழ்கை அவனை இறுகிய கல்லாய் மாற்றியிருக்கிறது. 12 வயது ஆட்டிசச் சிறுமியால் அந்தக் கல்லுக்குள்ளும் ஈரம் சுரக்கிறது. நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான படம்.

*********************

திரையரங்கம் : CASINO

11:00 AM : FYNBOS

மெரிலும் ரிச்சர்டும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள். ஆனால்.. அது ஒரு கனாக் காலம். கல்யாணத்துக்குப் பின் ரிச்சர்ட் ரியல் எஸ்டேட் தொழிலில் கோடிகளைத் துரத்த ஆரம்பித்து விட்டான். ரிச்சர்டுக்கு இப்போது ஒரு பெரிய ஆஃபர். கொஹேல்பெர்கில் உள்ள ஃபின்போஸ் மாளிகையை விற்றுத் தர வேண்டும். ஃபின்போஸ் ஒரு அழகான கண்ணாடி மாளிகை. சுலபத்தில் வேலை முடிந்துவிடும் என்கிற ரிச்சர்டின் எண்ணத்தில் மண். இழுத்தடிகிறது வியாபாரம். ஏனென்றால் கண்ணாடி மாளிகைக்குள் ஒரு மர்மம். அது என்ன மர்மம்? தியேட்டரில் தெரியும்.

2:00 PM : ROA

கொலம்பிய அரசியல் பின்னணியில் ஒரு விறுவிறு கதைப்படம். கதையின் நாயகன் ரோவா ஒரு வேலையில்லாப் பட்டதாரி. கைடான் அவனுடைய அபிமான அரசியல் தலைவர். அவன் கைடானின் ரசிகன், பக்தன். ஆனால் கைடானுக்கோ ரோவா எவனோ ஒரு தொண்டன். கைடான் இவனைக் கண்டுகொள்ளாததால் ரோவாவுக்கு கோபம் பொங்குகிறது. கலகக்காரர்கள் இதைப் பயன்படுத்தி கைடானைக் கொல்ல ரோவாவை ஏவுகின்றனர். ஒரு கட்டத்தில் ரோவா பின்வாங்குகிறான். ஆனால் காலம் கடந்து விடுகிறது. கலகக்காரர்களின் பிடியில் அவனது குடும்பம். 'கைடானைக் கொல்.. இல்லை உன் குடும்பத்தைக் கொல்வோம்'. ரோவா என்ன செய்வான்?.

**************************

திரையரங்கம் : RANI SEETHAI HALL

11:00 AM : BUDAPEST TALES

சர்ரியலிசப் படம். வழக்கமான கதை சொல்லும் பாணியிலிருந்து வேறுபட்டு வேறு திசையில் படத்தின் பயணம். இன்னும் சொல்லப் போனால் ஒரு பயணத்தில் குறிக்கிடும் வேறு வேறு மனிதர்களின் காதல், மன உணர்வுகள், அவர்களின் வெற்றி தோல்விகள் பற்றிய பல்வேறு சிறுகதைகளின் ஒட்டுமொத்த கலவை. மிக அதிகமான குறியீடுகளை கொண்ட வித்தியாசமான் திரைமொழியில் ஒரு கலைப்படம். இயக்கம்: இஷ்த்வான் சாவ்போ.

2:00 PM : CHOAS, DISORDER

நடக்கப் போவது ஒரு கால்பந்து போட்டி. ஒரு அணியில் சாகி. எதிரணியில் மௌனி. இருவரும் ஆருயிர் நண்பர்கள். மற்றவர்களுக்கு எப்படியோ.. இவர்களுக்கு தங்கள் அணியே ஜெயிக்க வேண்டும். இது வெறும் விளையாட்டல்ல..யுத்தம். வாழ்க்கை யுத்தம். ஜெயிப்பவருக்கே மணாள். மணாள் அழகு தேவதை. இருவரின் கனவுக் கன்னி. ஒரு முக்கோணக் காதல் கதை வழியே.. எகிப்தின் கலாச்சாரமும்,விளிம்புநிலை மனிதர்கள் வாழ்வும். இயக்குனர் நாடீன் கான்.

4:30 PM : ORZ BOYS

'உங்கள் டீச்சர் பெயர் என்ன?'..'இன்னும் வைக்கல'. டீச்சருக்கு மட்டும் அல்ல.. கூடப் படிப்பனுக்கும் பெயர் வைப்பார்கள். அப்படி வைத்த பெயர் லையர் 1, லையர் 2. இந்த லையர்கள் எப்போதும் ஏதாவது பிரச்சனை செய்பவர்கள்.. அடுத்தவர்களை வம்பிழுப்பது, சிறுமிகளை ஈவ்டீசிங் செய்வது, அடிதடி சண்டை ரகளை செய்வது..இது இல்லாவிட்டால். தூக்கமே வராது. ரசனையான ரகளையான சிறுவர்கள் உலகம். பேய்களுக்கும், வேற்றுகிரகவாசிகளுக்கும் இந்த உலகில் ஸ்பெஷல் மரியாதை. இயக்கம்: தைவான் நாட்டு யா சே யாங்.

***********************************

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்