கிரேசியைக் கேளுங்கள் 29 - ‘சரஸ்வதி மைந்தன்’: ஜெயகாந்தன்!

By கிரேசி மோகன்

எம்.ரகுநாதன், சென்னை.

உங்கள் பார்வையில் ஜெயகாந்தன்?

‘விஸ்வரூபம் காட்டப்படுவதன்று; காணப்படுவது’ என்று புதுமையான வியாக்கியானம் அளித்தவர் ஜே.கே. கல்லூரி மேடையொன்றில் ‘மாணவர் களே… நீங்கள் எல்லோரும் மாடு மேய்க் கப் போகலாம்!’ என்று கூறிவிட்டு, சில நொடிகளுக்குப் பிறகு ‘மாடு மேய்த்தவன்தான் கீதை சொன்னான்’ என்று சொல்லி கலக்கியவர்.

எங்கள் கிரேஸி குழு நண்பன் பார்த்தி மூலமாக ஜே.கே எனக்குப் பழக்கம். ஒரு விருது வாங்க ஜெயகாந்தன் டெல்லிக்குச் சென்றபோது, இவரது எழுத்தை ஒரு அட்சரம் கூட படித்திராத சாமானியன் பார்த்தியும் இவரோடு துணைக்குச் சென்றான். ஜே.கேவுக்கு அவ்வளவு ஆத்மார்த்தத் தோழன் பார்த்தி.

என்னுடைய மகன் திருமணத்துக்கு வந்தது ஜே.கே என்னும் ‘ஞானரதம்’! என்னை அருகே கூப்பிட்டார். என்ன சொல்லப் போகிறாரோ என்று பயத்துடன் சென்றேன். என்னிடம் அவர் சொன்னது: ‘மோகன்... பார்த்தியைப் பார்த்துக் கொள்ளுங்கள்’. எப்பேர்ப்பட்ட மனிதாபிமானம்!

ஜே.கே விரசம் இல்லாமல் சமூக அவலங்களைச் சொல்லவல்ல ‘சரஸ்வதி மைந்தன்’! இவர் உள்ளங்கையில் நெல்லிக்கனியாக எப்போதும் மகா கவி யின் கவிதைப் புத்தகம் இருக்கும். ‘பாரீ ஸுக்குப் போ’, ‘விழுதுகள்’, ‘நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ’, ‘நந்தவனத் தில் ஓர் ஆண்டி’ இப்படி பல சகாப்தங்கள் படைத்த இவர்… தோழர்களுக்கு ‘சக ஆப்தனாக’ இருந்தார்!

கே.எம்.கோபால், கல்பாக்கம்.

திக்குத் தெரியாத நிலைக்கும் திக்கித் திணரும் நிலைக்கும் என்ன ஒற்றுமை... வேற்றுமை?

‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற தர்மத்தை நிலைநாட்ட ராமர் திரிந்தார் திக்குத் தெரியாத காட்டில். பூமியின் பாரத்தைப் போக்கி, தர்மத்தை நிலைநாட்ட கிருஷ்ணர் திக்கித் திணறினார் நாட்டில்!

இராமுருகன். சென்னை.

இறைவன் பூலோக வாழ்க்கையில் உதாசீனமாக இருப்பவனை உச்சிக்குக் கொண்டுபோவதும், ஒழுங்காக இருப்பவனை ஒதுக்குவதும் ஏன்..?

எனக்கும் வெகு நாட்களாக இந்த ஆன்மிக ‘ஏன்’ உண்டு. ஆயிரம் பக்தர்கள் இருக்க, வேசி வீடே கதியென்று கிடந்து தற்கொலைக்கு கோபுரம் ஏறிய அருணகிரிநாதரை தடுத்தாட்கொண்டு, அவருக்கு சந்தத் தமிழை சண்முகர் அளித்தது ஏன்?

பத்தினியை நீங்கி பரத்தையின் வீட்டுக்கு நள்ளிரவில், கொட்டும் மழையில் மிதவை என எண்ணிப் பிணத்தின் மீதேறி, பொங்கும் நதியைக் கடந்து, காமம் கண்களை மூட, கயிறு என்றெண்ணிப் பாம்பைப் பிடித்து கரையேறி, சிந்தாமணி வீடு செல்ல... ‘என் மீது கொண்ட ஆசையின் ஒரு துளியைக் கண்ணன் மீது காட்டினால் தாங்கள் எங்கேயோ போய்விடுவீர்கள்’ என்ற சிந்தாமணியின் உபன்யாசத்தால் உளம் மாறி, ‘பில்வமங்களன்’ கிருஷ்ண கர்ணாமிர்தம் எழுதி ‘லீலா சுகரானான். எவ்வளவோ பக்தர்கள் இருக்க, கண்ணன் ஏன் கஷ்டப்பட்டு பில்வமங்களனை லீலா சுகராக்கினார்?

வேசிக்காக ஆயிரங்கால் மண்டபத் தில் காத்திருந்து அவள் வராமல் போக, தூங்கிய மடப்பள்ளி வரதன் வாயில் அன்னை அகிலாண்டேஸ்வரி தாம்பூ லத்தை உமிழ்ந்து வரதனை ‘வெண்பா காளமேகமாக’ ஆக்கியது ஏன்?

இந்த மூன்று ‘ஏன்’களுக்கான விடை ஒரு நண்பர் மூலம் கிடைத்தது. அவர் சொல்லில் இருந்து அடியேன் புரிந்துகொண்டது: தெய்வம் ஆய கலைகளில் ஏதேனும் ஒன்றை ஒருவருக்கு அளிக்க எதிர்பார்ப்பது ‘புத்தி போட்டுக் கொள்ளுதலோ’, ‘போற்றிப் பாடுதலோ’ அல்ல; ‘கல் மிஷம்’ இல்லாத அகல்மிஷ உள்ளத்தைத் தான்.

அருணகிரிக்கு இருந்தது ‘அகல்மிஷ’ உள்ளம். பில்வமங்களர் தாசி மீது கொண்ட ‘ஏகாக்ரத்தை’தாமோதரன் மீது காட்ட லீலா சுகரானார். வரதன் காளமேகம் ஆனது பூர்வஜென்ம பிராப்தமாக இருக்கலாம். எது எப்படியோ, அபார புலமைக்குத் தேவை ஆண்டவன் அருள். அருளுக்குத் தேவை அகல்மிஷ சித்தம்!

மா.மதிவதனி, பழங்காநத்தம்.

டுபாக்கூர் என்பதற்கு பொருள் தருக?

ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே என்பார்கள். சிலரது பேரே அந்த ஊரின் பெயராக இருக்கக்கூடும். உதாரணம் ‘பண்டரிநாதன்’ என்ற பக்தனின் பெயரால் அந்த ஊர் ‘பண்டரிபூர்’ ஆனது. அதைப் போல ‘டுபா’ என்கிற ஆகாச - அண்டப் புளுகனால் ‘டுபாக்கூர்’ என்ற ஊர் வந்தது. இது என்னுடைய ‘டுபாக்கூர்’!

சாண்டில்யன், மயிலாடுதுறை.

யானையை பிச்சை எடுக்க வைப்பது பற்றி..?

யானை பிச்சை எடுக்காது. மதம் கொண்டால் ‘பிச்சி’எடுக்கும். ‘அம்மா தாயே’ என்று சொல்லி பிச்சை எடுப்பவன் Begger. யானையைக் காட்டி பிச்சை எடுத்தால் அவன் Bigger. அதாவது பெரிய லெவல் பிச்சை!

சுஜாதா மூர்த்தி, திருச்சி-2.

சைக்கிள் பெல், ஸ்கூல் பெல், காலிங் பெல் என்ன வித்தியாசம் என்பதை உங்கள் பாணியில் சொல்லுங்களேன்?

சைக்கிள் பெல் அடித்தால் ‘ஹிண்டு வந்தாச்சு’ என்பார் என் அப்பா. ஸ்கூல் பெல் அடித்தால் ‘மண்டு வந்தாச்சு’என்பார் வாத்தியார். காலிங் பெல் அடிச்சால் ‘ஃப்ரெண்டு வந்தாச்சு’ என்பேன் நான்!

சி.சண்முகம், திருப்பனந்தாள்.

கண்ணாடியைப் பார்க்கும்போதெல் லாம் என்ன நினைத்துக்கொள்வீர்கள்?

வழக்கமாக கண்ணாடி முன்னாடி நிற்கும்போது முகம் மங்கலாகத் தெரிந்தால், ‘என் கண்ணாடியை (மூக்குக் கண்ணாடியை) எங்கே வெச்சித் தொலைச்சேன்?’ என்று யோசிப்பேன். பின்னாடி டிரெஸ்ஸிங் டேபிளில் உள்ள மூக்குக் கண்ணாடியை முகம் பார்க்கும் கண்ணாடியே முன்னாடி காட்டிக் கொடுக்கும்!

ரா.பரசுராமன், செங்கல்பட்டு.

பகவான் ரமணரைப் பற்றிச் சொல்லுங்களேன்?

ஒருமுறை ரமண மகரிஷியிடம் ஒரு பக்தர் கேட்டார் ‘பகவானே உடம்பு எப்படி யிருக்கு?’ என்று. அதற்கு ரமணர் ‘நாலு பேர் சுமக்க வேண்டியதை நான் ஒருத் தனே சுமக்கறேனே!’ என்றாராம். இது உடம்பின் நிலையாமையை விளக்கும் உன்னதமான புதுக்கவிதை.

இன்னொரு சமயம் ரமணரிடம் அவருடைய பள்ளி ஆசிரியர் வந்து ‘பகவானே உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்’ என் றாராம். அதற்கு ரமணர் ‘உம்ம கேள்வி களுக்கு பயந்துதான் நான் திருவண்ணா மலைக்கே ஓடி வந்தேன்’ என்றாராம். இது யதார்த்தமான புதுக்கவிதை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்