அப்போதெல்லாம் திரைப்படக் கொட்டகைக்கு வரும் ரசிகர்கள், கதாநாயகன், கதாநாயகிக்குப் பிறகு படத்தில் ‘டமாஷ்’ நடிகர் யார் என்றுதான் துழாவுவார்கள். அவர்களை ஏமாற்ற விரும்பாமல் நகைச்சுவை நடிகர் - இடமிருந்தால் - நடிகையும் சுவரொட்டியில் இடம்பெறுவார்கள். டைட்டில் போடும்போது கதாநாயகனுக்கு விசிலும் கைதட்டலும் பறக்கும். அதில் பத்தில் ஒரு பங்கு நகைச்சுவை நடிகருக்கும் உண்டு. கதாநாயகிக்குக்கூட சீட்டியோ கைதட்டலோ அதிகம் இருந்ததில்லை. (அந்தக் காலத்திலேயே அவ்வளவு ஆணாதிக்கம், ஹூம்..)
பாலய்யா, எம்.ஆர். ராதா, எஸ்.வி. சகஸ்ரநாமம் போன்ற குணச்சித்திர நடிகர்களுடன் தங்கவேலு, நாகேஷ், சோ, வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா, வி,கே. ராமசாமி, சச்சு போன்றவர்கள் இணைந்து சிரிக்கவைத்த வழங்கிய காலம் 1960கள். நாகேஷின் ஆக்கிரமிப்பு இருந்த பத்தாண்டு இது. நகைச்சுவைக் காட்சிகளைத் தனியாகத் தயாரித்து இணைக்கும் என்.எஸ். கிருஷ்ணன் பாணி சற்றே ஓய்வெடுத்துக்கொண்ட காலம் .
நினைத்து நினைத்துச் சிரிக்க
அடுத்த வீட்டுப் பெண் (1960-61) அறுபதுகளின் நகைச்சுவைப் போக்கைத் தொடங்கிவைத்த படம் என்று சொல்லலாம். கதாநாயகன் ராமாராவ், நாயகி அஞ்சலி தேவி. அடுத்த வீட்டுப் பெண்ணான அஞ்சலி தேவியைக் காதலிக்கவும் கைப்பிடிக்கவும் அவருக்கு உதவுகிறார்கள் ‘காரியம் கைகூடும் சங்கம்’ (‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்துக்கு முன்னோடி!) அமைப்பைச் சேர்ந்த தங்கவேலு, கருணாநிதி, பிரண்ட் ராமசாமி உள்ளிட்ட நால்வர் அணி. இந்தப் படத்தில் பாட்டு வாத்தியார் புலவர் பூவரசன்தான் காமெடி வில்லன். இன்றைக்கும் பார்த்தும் நினைத்தும் சிரிக்க முடிகிற படம்.
தெய்வப் பிறவி திரைப்படத்தின் தங்கவேலு நகைச்சுவை தனி இசைத்தட்டாக வெளிவந்து சக்கைபோடு போட்டது. நாள் முழுக்க நண்பர்களுடன் சீட்டாடுவது, மனைவி பக்கத்து வீட்டுப் பெண்களுடன் ஊர் வம்பு பேசுவது என்று குடும்பம் சீரழிய அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் அம்மா, அப்பா விளையாட்டாகவே அதை நடிப்பதை சிரிக்கச் சிரிக்கச் சொன்னார் தங்கவேலு. ஆபாச வசனங்களைப் பேசாத அற்புதக் கலைஞர் தங்கவேலு. அவருடைய குரலின் ஏற்ற இறக்கமே காட்சிக்கும் வசனத்துக்கும் தனி பலத்தைத் தந்துவிடும்.
முழுமையான நகைச்சுவை
காதலிக்க நேரமில்லை. எவ்வளவுதான் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சி ஒரு நகைச்சுவைப் படத்தை எடுத்துவிட முடியுமா என்று சவால்விடும் நகைச்சுவைக் காவியம். கதை எங்க கிடைக்கும்? அட ஹாலிவுட்டிலோ பாலிவுட்டிலோகூடக் கிடைத்துவிடும். பாலய்யா, நாகேஷுக்கு எங்க சார் போவீங்க? தன்னால் உதாசீனப்படுத்தப்பட்ட அசோகன் என்னும் இளைஞன் பணக்கார வீட்டுப் பிள்ளை என்று தெரிந்ததும், ‘அசோகர் உங்க மகரா?’ என்று புதிய சொல்லாட்சியையே படைத்துவிட்டாரே பாலய்யா!
‘டேய் செல்லப்பா, உன் படத்துடைய கதையைக் கொஞ்சம் சொல்லு பாப்பம்’ என்று வம்பில் போய் மாட்டிக்கொள்ளும்போதும் சரி, பீதியில் ஆழ்ந்து கதை போதும் என்று சொல்லி நிறுத்திய பிறகு பணமும் கிடையாது ஒண்ணும் கிடையாது என்று இயல்பு நிலைக்கு வரும்போதும் சரி, எங்கேயோ கொண்டுபோய்விடுகிறாரே?
‘என் கதை என்னோட மடியட்டும்’ என்று செல்லப்பா (நாகேஷ்) சொன்னபோது சிரித்துத் தொலைத்தோமே, அதனால்தான் இன்னொரு கா.நே. நமக்குக் கிடைக்கவில்லை.
நாயக நடிகர்களின் நகைச்சுவை
நாயகனே நகைச்சுவையிலும் வெளுத்துக் கட்டுவது அப்போது தோன்றிய பழக்கம்தான். சிவாஜி கணேசன் அப்படிப் பல படங்களில் நடித்திருக்கிறார். பலே பாண்டியா அதில் ஒன்று. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க விரும்பும் வில்லனின் கண்ணில் படுகிறான் அப்பாவி பாண்டியன்.
30 நாள் மட்டுமே வாழ்ந்துவிட்டுச் செத்துப்போவதாக வாக்குறுதி கொடுக்கும் அப்பாவி, பணக்காரக் காதலி கிடைத்ததும் வாக்குறுதி தவறுகிறான். வில்லனைப் போலவே தோற்றம் கொண்டவர்தான் காதலியின் தந்தை என்று தெரியாமல் அவர் வீட்டுக்குப் போய், ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ என்று பாடத் தொடங்கி முத்தாய்ப்பாக முகத்தைப் பார்த்து ஓடும் காட்சியை இருக்கையில் உட்கார்ந்து பார்க்க முடியும் என்றா நினைக்கிறீர்கள்?
எங்கும் பரவிய நகைச்சுவை வாசம்
முழு நகைச்சுவைப் படங்கள் ஒருபுறம் வந்தவண்ணம் இருக்க, வேறு வகையான படங்களிலும் அங்கத ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது. 1964-ல் வெளியான நவராத்திரி, சிவாஜியின் நவரச நடிப்பாற்றலையும் சாவித்திரி ஒரு நடிகையர் திலகம் என்பதையும் வெளிப்படுத்தியது.
திருவிளையாடல் படத்தில் தருமிக்குப் பொற்கிழி கொடுக்கவும், ஹேமநாத பாகவதரை மதுரையை விட்டுக் கிளப்பவும் சிவன் செய்த திரு விளையாடல்களை நகைச்சுவை கலந்து சொன்னார் ஏ.பி. நாகராஜன். தருமி – சிவன் உரையாடல் அற்புதமான தமிழ் விருந்து. சுறா மீனை சிவன் வதம் செய்யும் காட்சியும் அதற்குப் பிறகு கடற்கரை மணலில் அவர் டஜிங் டஜிங் என்று நடப்பதும் - எதில்தான் நகைச்சுவை இல்லை போங்கள்!
தேன் நிலவு - ஸ்ரீதரின் அற்புதமான கதை, இயக்கத்தில் உருவான மெலிதான நகைச்சுவைப் படம். நாகேஷும் சோவும் சேர்ந்து நகைச்சுவையை மழையாகப் பெய்த படம்.
ஊட்டிவரை உறவு திரைப்படம் காதல், நகைச்சுவை, குடும்பக்கதை என்று எல்லாமும் சரிவிகித கலவையில் கலந்த படம்.
தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தை நகைச்சுவைப் படமாக வகைப்படுத்த முடியாது. ஆனால் தரமான நகைச்சுவைக்கு உதாரணமான படம். பாலய்யா, சாரங்கபாணி, நாகேஷ், மனோரமா, ராமாராவ், தங்கவேலு, மனோரமா எல்லோரும் ஒரு படத்தில் இருந்தால் வேறு எப்படி இருக்கும்.
நீலகிரி எக்ஸ்பிரஸ் திகிலான நகைச்சுவைப்படம். சோ ஜெய்சங்கருடன் சேர்ந்து கலக்கியிருப்பார்.
அப்படியே விட்டுவிடுங்கள்
இது ரீமேக் யுகம். பல படங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் திரும்ப எடுக்கிறார்கள். குறைந்த பட்சம் தலைப்புகளையாவது தூக்கிவிடுகிறார்கள். ஆனால் அறுபதுகளின் மாசற்ற நகைச்சுவையை இப்போது மீண்டும் திரையில் கட்டமைக்க முடியாது. காரணம், சமூகக் கட்டமைப்பு அடியோடு மாறிவிட்டது.
பாட்டிலைத் திறக்காமல், வாட்ஸ்அப்பில் கடலை போடாமல், யாரையும் கேவலமாகத் திட்டாமல் சிரிக்கவைக்க முடியாது என்று ஆகிவிட்ட காலம் இது. எனவே, அறுபதுகளின் நகைச்சுவைச் சித்திரங்களின் அசல் வடிவங்களையே பார்ப்பதுதான் நல்லது. இதன் மூலம் அந்தக் காலம் எப்படியிருந்தது என்றும் புரிந்துகொள்ளலாம்.
புதிய திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு அன்பு வேண்டுகோள்: துளியும் முகம் சுளிக்காமல் இன்றும் சிரிக்கவைக்கும் இந்தப் படங்களைப் போல் படம் எடுக்கச் சொந்தமாக முயற்சிசெய்து பாருங்கள். இந்தப் படங்களை அப்படியே விட்டுவிடுங்கள். அதுவே தமிழ்த் திரையுலகுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்.
சித்திரை மலரில் (2015) வெளியாகியிருக்கும் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago