வசூல் களம்: ‘லிங்கா’வுக்கு முன்.. ‘லிங்கா’வுக்குப் பின்..!

By கா.இசக்கி முத்து

ரஜினி ஆகட்டும்... தயாரிப்பாளர் ‘ராக்லைன்’ வெங்கடேஷ் ஆகட்டும்... ‘லிங்கா’ திரைப்படம் இப்படியொரு சங்கடத்தில் கொண்டு வந்து நிறுத்தும் என்று கனவிலும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். தமிழ் சினிமா வணிகத்தை ‘லிங்கா’வுக்கு முன் / ‘லிங்கா’ பின் எனக் கோடு கிழித்துப் பார்க்கும் சூழலை உருவாக்கிவிட்டது அந்தப் படத்தின் வர்த்தகச் சிக்கல்!

லிங்கா பட்ஜெட் நிலவரம் என்ன?

இயக்குநர், தயாரிப்பாளர் என முக்கியப் பொறுப்புகள் அனைத்தையும் தீர்மானித்தவர் ரஜினிதான். படம் தொடங்கப்பட்டபோதே, இத்தனை நாட்கள் படப்பிடிப்பு, ரஜினி பிறந்த நாளில் படம் வெளியீடு என்று தீர்மானிக்கப்பட்டது. ஒவ்வொரு வேடத்துக்கும் மூன்று நடிகர்களின் பெயர்களை எழுதிக் கொடுத்தார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். அவற்றில் யாருடைய கால்ஷீட் எளிதாகக் கிடைத்ததோ அவர்களையே ஒப்பந்தம் செய்தார்கள்.

படத்தின் பட்ஜெட் பற்றி நம்மிடம் பேசினார் படக் குழுவைச் சேர்ந்த ஒருவர், “ரஜினி படம் என்பதால் நிறைய பேர் தாங்கள் வாங்கும் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டார்கள். 90 முதல் 100 நாட்கள் வரை படப்பிடிப்பு நடந்தது. ஒரு நாளைக்கான படப்பிடிப்பு செலவு சுமார் 10 லட்சம். இது தவிர நடிகர்கள், நடிகைகள் சம்பளம், தினசரி பேட்டா. அணைக்காகப் போடப்பட்ட செட், கிராபிக்ஸ் செலவு தனி. மொத்தச் செலவு எவ்வளவு ஆகியிருக்கும் என்பது சினிமா துறையில் இருக்கும் அனைவருக்குமே தெரியும். ரஜினிக்குச் சம்பளம் கிடையாது. லாபத்தில் பங்கு மட்டுமே”என்றார்.

ஈராஸ் நிறுவனத் தந்திரம்?

‘லிங்கா' படப்பிடிப்பு முடிந்தவுடன், படத்தின் நெகட்டிவ் உரிமையை (அனைத்து மொழிகளின் இசை உரிமை, தொலைக்காட்சி உரிமை, வெளிநாட்டு வியாபாரம் அடங்கியது) ஈராஸ் நிறுவனம் ரூ. 165 கோடிக்கு வாங்கியது. வியாபாரத்தைப் பொறுத்தவரை ஈராஸ் நிறுவனத்துக்கு நஷ்டம்தான். ஆனாலும், பல்வேறு மொழிகளில் வியாபாரம், இணையவழி வியாபாரம் ஆகியவற்றால் பெரிய அளவுக்கு நஷ்டம் என்றும் சொல்ல முடியாது. மேலும், பன்னாட்டு நிறுவனம் என்பதால் இந்த இழப்பு எல்லாம் ஈராஸுக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதுதான் சினிமா வியாபாரத்தில் கரைகண்ட பல இடைத்தரர்களின் கருத்து.

ரஜினி படங்களைப் பொறுத்தவரை பெரிய அளவிலான திரையரங்க வெளியீட்டு வியாபாரம் தமிழகத்தில் தான். அந்த தமிழக உரிமையை வேந்தர் மூவிஸ் நிறுவனத்திடம் ரூ. 67 கோடிக்குக் கொடுத்தது ஈராஸ். அங்குதான் ஆரம்பித்தது பிரச்சினை. தமிழகத்தில் எந்தவொரு பெரிய நடிகரின் படம்மென்றாலும் மொத்த வசூல் 50 கோடி ரூபாயைத் தாண்டாது. ஆனால், ‘லிங்கா' தமிழக உரிமையை 67 கோடிக்கு விற்றார்கள். சிக்கலே இதுதான். போட்ட பணம் 67 கோடி ரூபாயை வேந்தர் மூவிஸ் எடுக்க வேண்டும் எனில் படம் 90 கோடி ரூபாயை வசூல் செய்திருக்க வேண்டும்.

அனுபவமில்லாத புதிய விநியோகஸ்தர்கள்!

எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் தமிழகத்தில் மட்டும் ரூ. 67 கோடி வசூல் ஆகாது என்று தெரிந்த பழைய விநியோகஸ்தர்கள் ‘லிங்கா' படத்தை வாங்கவில்லை. வழக்கமாக ரஜினி படத்தை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்கள்கூட ‘லிங்கா'வில் பின்வாங்கிவிட்டார்கள். அவர்களின் பக்குவப்பட்ட தொழில் அனுபவம் அப்படி. ஆனால், புதிய விநியோகஸ்தர்களோ ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாவதால் கண்டிப்பாக நிறைய லாபம் கிடைக்கும் என்று தப்புக்கணக்கு போட்டார்கள். பொதுவாகவே டிசம்பர் 15-ம் தேதிக்கு மேல் வெளியாகும் படங்களில் பெரிதாக வசூல் இருக்காது. மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், பொங்கல் பண்டிக்கை மும்முரம் என பிஸியாக இருப்பார்கள். அதேபோலதான் நடந்தது. படம் வெளியான டிசம்பர் 12 மட்டுமே எதிர்பார்த்த வசூல் கிடைத்தது.

ஏமாற்றிய கே.எஸ்.ரவிகுமார்

ரஜினி ரசிகர்கள் பலருக்கும் படம் பிடிக்கவில்லை. வழக்கமான ரஜினி படங்களின் பல அம்சங்களும் இதில் மிஸ்ஸிங் என்றே ரசிகர்கள் பலரும் நினைத்தார்கள். இன்னொரு பின்னடைவு படத்தின் நீளம். முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடனே விநியோகஸ்தர்கள் பலருக்கும் போட்ட பணம் நஷ்டம் என்பது புரிந்துவிட்டது. ஆனால், இவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பள்ளி அரையாண்டுத் தேர்வுகள் முடிந்தவுடன் வியாபாரம் எழுந்து நிற்கும் என்று எதிர்பார்த்தார்கள். அதுவும் நடக்கவில்லை. பெரும் தோல்வி என்பதை நடைமுறையில் உணர்ந்தபோது அவர்களுக்கு மிகப்பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ளத் சக்தியில்லை.

மகளுக்காக அமைதி காத்தாரா ரஜினி?

கோலிவுட்டில் இன்னொரு பேச்சும் ஓடுகிறது. 'கோச்சடையான்' சமயத்தில் அதன் இயக்குநர் செளந்தர்யா, ஈராஸிடம் வாங்கிய கடனுக்காகதான் இப்படத்தை அந்த நிறுவனத்துக்கு கொடுத்தார்கள். அதனால்தான் இந்த விஷயத்தில் ரஜினி வாயைத் திறக்கவில்லை என்கிறார்கள். ரஜினியைப் பொறுத்தவரை ‘லிங்கா’ நஷ்டம் என்பதை முதலில் நம்ப முடியவில்லை. சில நாட்கள் கழித்து தனக்கு நெருங்கிய விநியோகஸ்தர்களிடம் விசாரித்தார். அவர்கள் சொன்ன தகவல்களால் கடும் அதிர்ச்சி அடைந்தார் ரஜினி. அதன் பின்பே பணம் கொடுக்கச் சம்மதித்தார்.

ஆனால், இதர விநியோகஸ்தர்கள் ரஜினிக்கு ஒரு யோசனை சொன் னார்கள். “படத்தை வாங்கியிருக்கும் விநியோகஸ்தர்கள் புதியவர்கள். அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தால், அடுத்தடுத்து அனைவரின் படங்களுக்கும் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இது மொத்த சினிமா தொழிலையே முடக்கிவிடும். நஷ்டஈடு கொடுக்காதீர்கள்” என்றார்கள். ஆனாலும், தன்னால் யாரும் நஷ்டமடையக் கூடாது என்று நினைத்து, படத்தின் தயாரிப்பாளர், ரஜினி இருவருமே இணைந்து ரூ. ரூ.12.5 கோடி கொடுத்தார்கள். 'லிங்கா' திரைப்படத்தின் மொத்த நஷ்டம் என்பது ரூ.33 கோடி.

தீராத பிரச்சினை

ரூ. 12.5 கோடியை தயாரிப்பாளர் சங்கத்தில் கட்டிவிட்டார்கள். ஆனாலும் பணத்தைப் பிரிப்பதில் பிரச்சினை. முதலில் மூன்றரை கோடி ரூபாயை விநியோகஸ்தர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டார்கள். திரையரங்கில் முன்பணம் கொடுத்துப் படம் போட்ட வகையில் ஒன்பது கோடி ரூபாய் நஷ்டஈடு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அவ்வகையில் ஒன்பது கோடியை எப்படிப் பிரிப்பது என்பதில் இழுபறி நீடிக்கிறது. ஒவ்வொரு தரப்பில் இருந்தும் அறிக்கை வெளியிட்டுத் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். மொத்தத்தில் தயாரிப் பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் லிங்கா மிக மோசமான பேலன்ஸ் ஷீட் பாடமாகிவிட்டது.

‘லிங்கா’ தந்த அனுபவம் எதிர்காலத்தில் தமிழ்ப் படங்களுக்கான வணிகத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.

யார் அந்தச் சிங்காரவேலன்?

சிங்காரவேலன் என்ற ஒரு தனிநபர் 'லிங்கா'-வுக்கு கொடுத்த நெருக்கடி கொஞ்சநஞ்சமல்ல. எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும், நஷ்டஈடு கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஒரு கட்டத்தில் இவரது தொடர் அறிக்கைகள், பேட்டிகள் ரஜினிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது என்றார்கள். ஒருமுறை விநியோகஸ்தர்கள் பேச்சுவார்த்தையில், “ ‘உத்தம வில்லன்’ படத்தை ஈராஸ் வெளியிடுகிறது. அந்தப் படத்துக்கு ரெட் போடலாமே” என்றார்கள். ஆனால், சிங்காரவேலன், “நான் வந்தது 'லிங்கா'வுக்காக. ‘உத்தம வில்லன்’ படத்துக்கு ரெட் போடுவது நியாயமில்லை” என்று சொல்லிக் கூட்டத்தை விட்டு வெளியேறினார். இவருடைய துணிச்சலும் நேர்மையும் ரஜினி, கமல் இருவரையுமே கவர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இருவருமே சிங்காரவேலனைச் சந்திக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். இப்போது சிங்காரவேலன் ‘அச்சாரம்’ ‘கங்காரு’ என வரிசையாகப் படங்களை விநியோகம் செய்யத் திட்டமிட்டுக் களம் இறங்கியிருக்கிறார்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்