1960களின் அற்புதங்கள்: திலகங்களின் பொற்காலம்!

By களந்தை பீர் முகம்மது

நம்முடைய மலரும் நினைவுகளைப் பகிரும்போது நாம் அரசியல் உலக நடப்புகளோடு கலையுலகச் சாதனைகளையும் அசைபோட்டுப் பார்க்கிறோம். நீண்ட காலத்தின்பின் கோயிலிலோ வேறு ஏதோ ஒரு நிகழ்ச்சியிலோ சந்திக்க நேர்ந்த தன் பள்ளிக்கூடத் தோழன் அல்லது தோழியைச் சந்திக்கும் தருணங்களில், அதனோடு உறைந்துபோயிருந்த காலம் ஒரு திரைப்படத்தோடு சம்பந்தம் உடையதாக இருக்கும்; மனம் மயக்கும் ஒரு திரைப்படப் பாடலை நினைவுறுத்தித் தம் பழைய காலங்களை அழகு செய்துகொள்வதும் உண்டு; பழைய காதலில் கசிந்துருகிக் கண்ணீர் உகுத்ததும் அதில் இருக்கக்கூடும். தமிழர்களின் மன உலகம் தவிர்க்க முடியாத அளவில் வாழ்க்கையின் ஒவ்வோர் இழையிலும் கலையுலகத்தோடு சஞ்சாரம் செய்வது ஏன்?

இந்தக் கேள்வியைக் கேள்வியாக நிறுத்துவது ஒவ்வொருவருக்கும் நல்லது. அனுபவத் திரள்களைப் பதிலில்லாமல் சுவைப்பது அதிகமான மகிழ்ச்சியைத் தரும். அதனால்தான் கலைஞர்களை நம் வீட்டுப் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு நம் காலங்கள் நம் குழந்தைகளிடம் வந்து முடிந்துள்ளன.

எம். ஜி. ஆரை நம்பியார் நீளமான சவுக்கைக் கொண்டு விளாசுகிறார்; ‘கோழை’ எம்.ஜி.ஆர். ‘அம்மா அம்மா’ என்று அலறித் துடிக்கிறார். திரையரங்கில் படம் பார்க்கும் தாய்க்குலங்கள் அதைப் படம் என்பதை மறந்து தன்னுடைய மகன்தான் இப்படி அடிபட்டு அலறுகிறான் என்கிற பதைபதைப்பில் ஓவென்று கதறிய கதை உண்டு நெல்லை லட்சுமி திரையரங்கில்.

எம்.ஜி. ஆரை உடனே கட்டியணைத்து மடியில் போட்டுக் காயங்களுக்கு மருந்திட்டு அப்படியே தன் மடியில் தூங்கப்போட வேண்டும் என்று தாய் மனசுகள் பரிதவித்தன. திரையிலிருந்த நிழலை நிஜ உருவமாக மீட்டெடுக்க முடியாமல் எம். ஜி. ஆரை அடிக்கிற நம்பியார்மீது சாபங்களை வாரி வீசுகின்றன எம்.ஜி. ஆருக்காக நம்பியார் வாங்கிக் குவித்துக்கொண்ட வசைகளுக்கும் தனி இடமுண்டு.

‘எங்க வீட்டுப் பிள்ளை’ தமிழ்நாட்டின் கோலாகலமான திரைப்படம். ஆன்மிக மனங்களுக்கு ராமாயணமும் மகாபாரதமும் என்பதுமாதிரி ரசிக மனங்களுக்கு எங்க வீட்டுப் பிள்ளையும் திருவிளையாடலும். புராணக் கதையை நவீன பாணியில் ஏ.பி. நாகராஜன் ‘திருவிளையாடல்’ படமாக இயக்கியபோது, அதைப் பார்க்கத் திரண்டிருந்த கூட்டத்தில் முண்டியடித்த ரசிகப் பெருமக்களில் முத்தையாவும் முஸ்தபாவும் பேதமில்லாமல் திரண்டிருந்தார்கள்.

அவையெல்லாம் அறுபதுகளின் கொண்டாட்டங்கள். அறுபதுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு மணிமகுடம்? எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் ஐம்பதுகளில் கலையுலகப் பயணத்தைத் தொடங்கினார்கள். ஆனால் அறுபதுகள் அவர்கள் இருவரும் நிலையூன்றிய ஆண்டுகள். கதைகளைத் தேடி அவர்கள் சிரமம் எடுத்ததைவிட, அவர்களுக்காகக் கதைகளை உண்டாக்க வேண்டிய நெருக்கடி.

சில இயக்குநர்களும் படத் தயாரிப்பாளர்களும் இருவருக்குமான படங்களைத் தயாரித்தபோது அவரவர் பாணிக்கு வளைந்துகொடுத்து வந்தனர். 1965 பொங்கல் நாளில் வெளிவந்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’யும் சிவாஜி நடித்த ‘பழநி’யும் இவற்றுக்குத் தக்க உதாரணங்கள். வசூல் ரீதியான கணிப்புகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஒன்றைவிட்டு ஒன்று மேல், கீழ் என்று அமையவில்லை. கலைத் தேடல்களை அவை நிறைவு செய்தன.

எம்.ஜி.ஆரின் படங்கள் அனைத்தும் அரசியல் முழக்கங்களோடு, கொள்கைகளை நினைவுறுத்தும் பாடல்களோடு வெளிவந்தன. இப்போதும் சாலையோரங்களில் உள்ள பழைய புத்தகக் கடைகளில் எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடல்கள் என்ற பழைய பாட்டுப் புத்தகத்தைக் காணலாம். தன் படத்தின் பாடல்கள் உருவாகும்போது அவை எம்.ஜி. ஆரின் மேற்பார்வையில்லாமல் உருவானதில்லை என்கிறார் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன். அதேபோல பாடல்களின் உருவாக்கத்தில் சிவாஜி கணேசன் எவ்விதப் பங்களிப்பையும் செய்ததில்லை என்றும் அவரே கூறுகிறார்.

இரண்டு திலகங்களின் இருவேறு திசைகளாலும் ரசிக மனம் தறிகெட்டு அலைய முடியாமல் இசையமைப்பாளர்கள் தங்களின் பேராற்றலால் அவர்களைக் கட்டிப்போட்டு வைத்தார்கள். நமக்கு இரு திலகங்களின் மூலமாகவும் கிடைத்த இந்த அரிய பேறு நம் இளமையை மங்காமல் இன்றளவும் தக்கவைத்து வருகிறது.

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் வரிசையில் ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர் ஆகியோரும் உண்டு. ஒருவரின் படங்களில் இன்னொருவர் நடித்தும் இருக்கிறார்கள். ஆனால் கூண்டுக்கிளியைத் தவிர எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த படங்கள் வேறில்லை. ஜெமினி கணேசனும் ‘முகராசி’ தவிர்த்து வேறு படங்களில் எம்.ஜி.ஆருடன் நடித்ததில்லை.

எம்.ஜி.ஆர். தவிர்த்த மற்ற மூவரும் அனேகமான படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதற்கான முக்கியக் காரணங்கள் அவை குடும்பப் பாங்கான படங்கள் என்பதாகும். ஏனெனில் குடும்பம் ஒரே நபரின் ஆதிக்கம் கொண்டதல்ல; அங்கு பல விதமான பின்னல்கள், ஆளுமைகள் உண்டு. அதனால் ஒருவரோடொருவர் இணைந்து நடிப்பது இயல்பானதாக இருந்தது.

காதல் கதைகளில் எம்.ஜி.ஆருக்கு எதிர் பிரதிபலிப்பாக ஜெமினி கணேசன் இருந்தார். அவருடைய மவுனம் சார்ந்த காதல் உரையாடலும் பெண்மையின் நளினம் கலந்த பார்வை வீச்சும் மலருக்கும் நோகாத காதல் தொடுகைகளும் தனி ரகமானவை. எம்.ஜி.ஆரின் காதல் அதிரடியான, பெண்மையின் அங்கங்களில் காதல் லீலைகளைக் கையாள்வதின் மூலம் ஒரே ரகமாய் உருவானவை. ‘படகோட்டி’ படம் உடனடி உதாரணம். அவர் நாயகியை நோக்கி ஒரு மீனை எடுத்துக் குறிபார்த்து வீசும் காட்சி முக்கியமானது. இந்தக் காதல் விவகாரத்தில் சிவாஜியை எம்.ஜி.ஆருடன் ஒப்புநோக்கிக் கொண்டுவரும் வாய்ப்பை ஜெமினி கணேசன் தடுத்துவிட்டார்.

இருவரின் பொற்காலமும் தங்கு தடையில்லாமல் அறுபதுகள் முழுவதும் தொடர்ந்தது. 1964-ம் ஆண்டில் வெளியான இரவும் பகலும், காதலிக்க நேரமில்லை படங்களின் மூலம் ஜெய்சங்கரும் ரவிச்சந்திரனும் நுழைந்தனர். ரவிச்சந்திரன் எம்.ஜி.ஆர் பாணியில் நடித்த படங்கள் பெரும் வெற்றியை ஈட்டின.

வெள்ளி விழாக்கள் என்றும் நூறு நாள் என்றும் தாராளமாக ஓடி வசூலையும் வாரிக் கொடுத்தன. அவருடைய வாலிபத் துடிப்பு கூடுதல் கவர்ச்சியானது. புதிய நடிகர்கள் அனைவருமே எம்.ஜி.ஆர். பாணிப் படங்களில் கவனம் செலுத்தினார்கள். எம்.ஜி.ஆர் படங்கள் அதனால் மவுசு குறையவுமில்லை.

சிவாஜியின் பாணிக்கு எந்த நடிகரும் முயலவில்லை. அவர் தனிக்காட்டு ராஜாவாகவே தன் பயணத்தைத் தொடர்ந்தார். வருங்காலத்தில் தமிழகம் ஏன் இப்படி சினிமா பித்துப் பிடித்துக் கிடந்தது என்று ஆராய்வார்கள். அந்த நிலை தமிழக அரசியல் களத்தை விசித்திரமான நிலைக்கு ஏன் கொண்டு சென்றது என்பதை ஆராய்வார்கள். அப்படியான நிலையில் அறுபதாம் ஆண்டுகள் முக்கியத்துவம் பெறும்; பெற வேண்டும்.

தொடர்புக்கு: kalanthaipeermohamed@gmail.com

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்