ஃப்ளாஷ் பேக் - இயக்குநர் பாண்டிராஜ் எழுதும் தொடர்: ஒரு சொல்லில்... ஒரு உலகம்

By செய்திப்பிரிவு

தொப்புள் கொடி உறவு தந்து, தசைகளை தளிர்க்க வைத்து, இரத்தத்தை பாலாக்கி, நம்மை ஆளாக்கும் அம்மாக்களுக்கு ஈடான உறவு, உலகில் இல்லவே இல்லை.

ஒரு படத்திலாவது உதவி இயக்குநர் பட்டியலில் பெயர் வந்துவிடாதா என்று வெறியோடு அலைந்த நாட்களில், அது நிறைவேறினால் சபரிமலைக்கு வருவதாக வேண்டிக்கொண்டேன். ஒரு நீண்ட இரவுக்கு பின் வரும், விடியலாய் எனக்கு அமைந்த படம் தான், ‘பாண்டவர் பூமி’. அந்த பூமியில்தான் எனது பெயரும் உதவி இயக்குநராய் முதன்முதலாக விதைக்கப்பட்டது. வேண்டுதலை நிறைவேற்ற நண்பர்கள் தாஸ், விஜயசங்கர் என ஐந்தாறு பேர் ஒன்றாக சபரிமலைக்கு போயிருந்தோம்.

ஐயப்பனை தரிசித்து முடித்துவிட்டு, அண்ணனின் சைக்கிள் கடைக்கு போன் செய்கிறேன். தொடர்ந்து ரிங் போகிறது, ஒருவரும் எடுக்கவேயில்லை. மலைக்கு கிளம்பும்போதே அம்மாவுக்கு உடல்நிலை மோசமாயிருந்தது. என்னவாக இருக்குமோ என்ற பதட்டத்தில், சேரன் சார் அலுவலகத்துக்கு அழைத்தால், “உங்க அம்மா இறந்துட்டாங்க” என்று தகவல் சொல்கிறார்கள். ஒரு நிமிடம் என் உலகமே நின்று போனது. மலையில் இருந்து உடனே இறங்கலாம் என்றால் கடுமையாய் இருட்டிவிட்டது. நண்பர்களோ, “நடந்தது நடந்திடுச்சு, படுத்து கிடந்துட்டு காலைல இறங்குவோம்.. இப்போ போனா பின் பாதையிலதான் இறங்கணும், அது அவ்வளவு பாதுகாப்பில்லை, குழந்தைகள் வேற இருக்கு” என்று ஆறுதல் சொல்லி, என்னை அங்கேயே படுக்க வைத்துவிட்டார்கள். உயிரற்ற உடலாய் ஊரில் என் அம்மா, உயிருள்ள பிணமாய் சபரிமலையில் நான்.

முட்டியை கட்டிக்கொண்டு, கண்களை கண்ணீருக்குள் புதைத்துவிட்டு அழுகிறேன். எனது அம்மா மீனாட்சி பற்றிய நினைவுகள் வந்து வந்து போகிறது. எனது பெற்றோர் சின்னையா - மீனாட்சி தம்பதிக்கு நான் மூன்றாவது குழந்தை. முதலில் அண்ணன் வெள்ளைச்சாமி, இரண்டாவது அக்கா மீனாள். அன்றைய வானம் பார்த்த புதுக்கோட்டையின் கந்தக பூமியில், எங்களை போன்ற குடும்பத்திற்கு மூன்றாவது குழந்தையெல்லாம் கூடுதல் சுமை. எனது அம்மாவுக்கோ, ‘உசுரு ஒண்ணு உருவாகிருச்சு.. அதுவும் வந்து கஷ்டத்தை பங்கு போட்டுக்கட்டுமே... எதுக்கு கலைக்கணும்’ என்ற எண்ணம். ஆனால் இருக்கும் இரண்டு குழந்தைகளுக்கே தேவையானதை செய்ய முடியாமல் தவிக்கும், தடுமாறிய அப்பாவுக்கோ கருவை கலைத்துவிடலாம் என்ற எண்ணம்.

மனசே இல்லாமல், மற்றவர்களின் வற்புறுத்தலால் அம்மா ஊர் மருத்துவச்சியிடம் சென்று கருவை கலைக்க மருந்தை வாங்கி குடித்தார்கள். ஆனால் அந்த கரு கலையாமல், மருந்தையே உணவாய் ஏற்று தொடர்ந்து வளர்ந்தது. பிரசவ மாதம் நெருங்க நெருங்க, ‘உள்ளுக்குள்ள குழந்தை கை கால் இல்லாம ஊனமாவோ, வெறும் பிண்டமாவோ ஏதோ ஒண்ணு பிறக்கப்போகிறது’ என்று எல்லோரும் பேசியிருந்திருக்கிறார்கள். பத்தாவது மாதம், பிரசவ வலியெடுக்க ஊர் மருத்துவச்சியிடம் கூட்டி போனால், கையை விரித்துவிட, நற்சாந்துபட்டிக்கு அழைத்து போயிருக்கிறார்கள். அம்மாவை பரிசோதித்த நர்ஸ், “குழந்தை உள்ளயே செத்திடுச்சு, இனிமேல தாயை காப்பாத்துறதுதான் முக்கியம் உடனே புதுக்கோட்டை பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க” என சொல்ல, அம்மாவை மாட்டு வண்டியில் தூக்கி போட்டுக்கொண்டு போயிருக்கிறார்கள்.

ஒருவழியாக ஆபரேஷன் செய்வதென முடிவெடுத்து ‘தாய்க்கும், சேய்க்கும் என்ன ஆனாலும் மருத்துவமனை பொறுப்பல்ல’ என்று அப்பாவிடம் ஒப்புதல் கையெழுத்து வாங்கிக்கொண்டு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். கத்தியால் கருப்பையை கீறி கறுப்பாய் ஒரு குழந்தையை, மீனாட்சிக்கு வலப்பக்கம் தூக்கிப் போட்டார்கள். ஆஸ்பத்திரியே அதிர அதிர அந்த குழந்தை வீறிட்டு அழுது கொண்டிருந்தது. அந்த நாள்தான், நான் அழுது என் தாய் சிரித்த ஒரே நாளாய் இருக்க முடியும்.

என் அம்மானா, எனக்கு உயிர். சுண்டினா சிவக்கும் அப்படி ஒரு சிவப்பு. நான் என்னுடைய அப்பா மாதிரி கருப்பு. கருவாய் என்னை கலைக்க கொடுத்த மருந்தின் காரணமாக நான் இயல்பாய் இருப்பேன் என்று யாரும் நம்பவே இல்லை. ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை வளர வளர நாம பண்ணப்போற, சேட்டை தான் அவங்களுக்கு பிரச்சினையாக இருக்கப் போகுது, மத்தபடி நமக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையென்று.

கூடபடிக்கும் பசங்களை, அடித்து, கிள்ளி வைத்துவிடுவேன். அப்பப்போ நான் கூட்டும் எழரைகளுக்கு பஞ்சாயம் செய்வதே அம்மாவுக்கு பெரிய வேலையாய் இருக்கும். என்னுடைய முரட்டு சுபாவம் பார்த்து பயந்துபோன அம்மா என்னிடம் அறிவுரையாக சொல்ல நினைப்பதையெல்லாம் நேரடியாக சொல்லாமல், கதை போல சொல்வார்கள். ‘உன் அப்பாவோட முரட்டு சுபாவம் அப்படியே வந்திருக்கு, வேண்டாம் ராசா’ என அம்மா அன்பாய் சொன்ன ஒவ்வொரு கதையும் இன்றும் மனப்பாடம். அம்மா கதை சொல்லும்போது விவரிக்கும் காட்சிகள் கண்முன் விரியும், அம்புலி மாமா படிப்பது போல, சுகானுபவம்.

அதேபோல அம்மா அப்படி ஒரு ரோஷக்காரி. அம்மா மேல் பாண்டிக்கோயில், பாண்டி சாமி வரும். அதனால், அசைவம் தொடாது. ஆனால் எங்களுக்கு சமைத்து தரும். அம்மா அசைவம் சமைத்தால் தெருவே மணக்கும். உப்பு, உறைப்பு, புளிப்பு பார்க்காமல் அது சமைக்கும் சமையலில் எல்லாம் சரியாய் இருக்கும். அப்படி ஒரு கைப்பக்குவம். மற்றவர்களை சாப்பிட வைத்து பார்ப்பதில் அம்மாவுக்கு அலாதியான சந்தோஷம். அதே போல, வீட்டை அப்படி சுத்தமாய் வைத்திருக்கும். ரெண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, விளக்குமாறால் குப்பையே சேராத வீட்டை கூட்டிக்கொண்டே இருக்கும்.

நான் அம்மாவோடு எப்போது மல்லுக்கட்டினாலும், “தாய்ப்பால் இல்லையேனு பட்டினி போட்டுடாம ஆட்டுப்பால் கொடுத்து உன்னை காப்பாத்துனேன் பாரு.. நீ இதுவும் பேசுவ... இன்னமும் பேசுவ” என்று புலம்பும். அதோடு நிறுத்தாமல், என்னை ஆபரேஷன் செய்து எடுத்த தழும்பை காட்டி, “பொறக்கும்போதே, என்னை கிழிச்சிகிட்டு வந்தவன் தானே நீ... இந்த தையல் போட்டதுல இருந்துதான் உடம்பு தெம்பு குறைஞ்சு போச்சு... குனிய முடியல, சுமை தூக்க முடியல... சரியா ஒழைக்க முடியல... என் வலி உனக்கு எங்க புரியப்போகுது” என்று சொல்லிக்கொண்டே சளைக்காமல் உழைக்கும்.

ஒரு முறை எனக்கு கூவ வீக்கம் (பொன்னுக்கு வீங்கி)வந்து கழுத்து பலூன் போல ஊதிவிட்டது. அப்போது, அம்மாவின் கழுத்தில் இருந்த செயினை தாலியோடு எனது கழுத்தில் கழற்றி மாட்டி விட்டது. ஒரு வாரம் போல கழுத்தில் அம்மாவுடைய தாலியை போட்டுகொண்டு திரிந்தேன். அதை பார்த்து மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள், எனக்கோ கெட்ட கோபம் வரும். ‘மத்தவங்க கிண்டல் செஞ்சாதான் வீக்கம் வடியும், விடு ராசா’ என்று அம்மா சமாதானம் செய்யும். உலோகம் பட்டதும் தானாகவே பொன்னுக்கு வீங்கி குணமாகிவிடும். அப்படி அம்மா கழுத்திலும், என் கழுத்திலுமாய் கிடந்த அந்த தாலியை உருக்கி செய்த மாங்கல்யம் தான் இப்போது என் மனைவி கழுத்தில் இருக்கிறது.

விடியற்காலை மூன்று மணி இருக்கும், நண்பர்களை எழுப்பினேன். ‘என் அம்மாவின் முகத்தை கடைசியா நான் பார்க்க முடியுமோ, முடியாதோ?’ என்ற பதைபதைப்பிலேயே, மலையில் இருந்து இறங்க ஆரம்பிக்கிறேன். அம்மாவைப் பற்றி கூற ஒரு வாரம் பத்தாது... அடுத்த வாரமும் தொடர்கிறேன். குழந்தைகளின் உலகமாய், குழந்தைகளே உலகமாய் வாழும் / வாழ்ந்த எல்லா அம்மாக்களுக்கும் உலக அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்