காதலைக் கொண்டாடும் இயக்குநர்கள் நிறைந்த கோலிவுட்டில் நட்பைத் தூக்கிப் பிடிப்பவர் ரவிச்சந்திரன். காதலுக்கும் நட்புக்குமான நெருக்கத்தையும் முரண்களையும் நாடகத்தனம் இல்லாமல் படமாக்கியவர். ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படத்தில் தொடங்கி காட்சி மொழிக்கும் இசைக்கும் அதிக முக்கியத்துவம் தந்து படங்களை இயக்கிவரும் இவர், தற்போது ‘நட்பதிகாரம் 79’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அவருடனான பிரத்யேகமான சந்திப்பிலிருந்து...
காதலை யதார்த்தமாகச் சித்தரிப்பதில் உங்களைக் கவர்ந்த இயக்குநர் யாரென்று சொல்வீர்கள்?
ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு இயக்குநரை மதிக்கிறேன். எத்தனை யுகங்கள் ஆனாலும் காதல் உணர்ச்சி மாறப்போவதில்லை. ஆனால் மனிதர்கள் அதைப் பார்க்கும் பார்வைதான் மாறிக்கொண்டே இருக்கும். திரையிலும் அப்படித்தான். அதைச் சித்தரிப்பதில் காலந்தோறும் ஒரு செயல்முறைபோலவே அது மாறிக்கொண்டு வந்திருக்கிறது.
இதில் திரைக்கதையின் பங்கு முக்கியமானது. மணிரத்னம் காதலை நறுக்கென்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். இயக்குநர் கதிர் திரைக்கதையின் முடிவில் காதலின் உன்னதத்தைத் தூக்கிப் பிடிப்பார். நானோ காதலை ஒளித்துவைக்கும் கதாபாத்திரங்களை நம்புவதில்லை. காரணம் எல்லாத் தடைகளையும் உடைத்துக்கொண்டு ஒரு காட்டு நதியைப் போல் பாய்ந்துகொண்டே இருப்பதுதான் காதல்.
மணிரத்னம், ஷங்கர் படங்களுக்குத்தான் வசனம் எழுதுவார் என்று நம்பப்பட்ட சுஜாதாவை, ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படத்துக்கு எப்படி வசனம் எழுத வைத்தீர்கள்?
புதிய திறமைகளை நம்புகிற ஆராதிக்கிற படைப்பாளி சுஜாதா. அவரை சந்திப்பதே சாத்தியமில்லை என்று பயம் காட்டியவர்களை நான் நம்பவில்லை. மிக எளிதாக அவரைச் சந்தித்தேன். “கதை பிடித்தால் எழுதுகிறேன்” என்றார்.
கதையைக் கேட்டு முடித்ததும், “இதில் இடம்பெற்றிருக்கும் பல சம்பவங்களை நானும் அனுபவித்திருக்கிறேன்” என்று ஒரே மூச்சில் உற்சாகமாக எழுதி முடித்தார்.
நீங்கள் இயக்கிய பல படங்களில் நட்பை முக்கியக் கதாபாத்திரமாக்கியது ஏன்?
குடும்பத்துக்கு வெளியே நாம் சந்திக்கும் சக மனிதர்களை அத்தனை சீக்கிரம் உறவுகளாக ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆனால் நண்பர்களாக ஏற்றுக்கொள்வோம். முதல் சந்திப்பிலேயே புன்னகையும் கை குலுக்கலும் நட்பில் மட்டுமே சாத்தியம். அறிமுகத்தில் ஆரம்பிக்கும் நட்பு ஆழமானதாக, ஆத்மார்த்தமாக மாறும்போது அதைப் போன்ற ஓர் அற்புதம், அழுத்தமான அடையாளம் இந்த உலகில் வேறு எதுவுமே இல்லை. ஆனால் பல வேளைகளில் நட்பை அலட்சியமாக் கையாண்டுவிடுகிறோம்.
நட்புக்குத் துரோகம் இழைத்துவிடுகிறோம். தவறான புரிதலால் நட்பை மின்சார நாற்காலியில் அமர வைத்துவிடுகிறோம். சிலருக்குச் சகோதர பாசம், சகோதரி பாசம் ஏன் தாய் தந்தையின் அரவணைப்புகூடக் கிடைக்காமல் போய்விடலாம். ஆனால் இந்த உலகில் நட்பைப் பெறாமல் யாருமே மரிப்பதில்லை. பிச்சைக்காரனாகப் பிறந்து வளர்ந்தால்கூட அவனுக்கு நண்பன் இருப்பான். தனிப்பட்ட முறையில் நட்பின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவன் நான். அதுதான் காரணமாக இருக்க முடியும்.
திருக்குறளின் 79-வது அதிகாரம் நட்பைப் பற்றி மட்டுமே பேசுகிறது. அதையே தலைப்பை வைத்திருப்பதால் இது நட்பின் பெருமை பேசும் படமா?
நட்பை நாம் எவ்வாறு புரிந்துவைத்திருக்கிறோம் என்பதை த்ரில்லர் தன்மையுடன் விவாதிக்கும் கதை இது. நட்பின் வண்ணங்களை ஓரிழையில் இணைத்திருக்கிறேன். மகிழ்ச்சி, பகிர்தல், ஏமாற்றம், விரிசல், சங்கடங்கள், தியாகம் என நட்பின் பல நிலைகள் காட்சிகளாகக் கதையுடன் நகர்ந்து செல்லும்.
ரத்த உறவுகளைவிட நம்மீது அதிக அதிகாரம் செலுத்துவது நட்புதான். அம்மா, அப்பா சொன்னால்கூடக் கேட்காத நாம் நண்பர்கள் சொன்னால் கேட்டுவிடுவோம். நண்பர்கள் மத்தியில் மட்டும்தான் எந்தத் தணிக்கையும் இருக்காது. அப்படிப்பட்ட நட்பில் விழும் விரிசல் காதல் தோல்வியைவிடத் துயரமானது.
நான்கு மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட நண்பர்களின் வாழ்க்கை நிகழ்வுகள்தான் இந்தப் படம். சூழ்நிலைகள் மாறும்போது நட்பு எத்தகைய நெருக்கடிகளைச் சந்திக்கிறது; நெருக்கடிகளைத் தாண்டி நட்பு தனது மகத்துவத்தைத் தக்கவைத்துக் கொண்டதா என்பது கதையின் முக்கிய அம்சமாக இருக்கும். நட்பில் விரிசல் என்பது வெளியே இருப்பவர்களால் வருவதில்லை என்பதை நண்பர்களே உணராமலே போய்விடுவது பெரும் இழப்பு.
திருமணத்துக்கு முன் திருமணத்துக்குப் பின் என்ற இரு வேறு காலகட்டங்களின் நட்பில் இருக்கும் மனச் சிக்கல்களைக் கதாபாத்திரங்கள் சந்திக்கும் தருணங்கள் காட்சிகளாக வரும்போது ரசிகர்கள் தங்களை உணர்ந்து கொள்வார்கள். இதில் எந்த இடத்திலும் சினிமா பார்க்கும் உணர்வு ஏற்படாது. நம் கண் முன்னால் நடக்கிற சம்பவங்களின் யதார்த்தமான தொகுப்பாகவே இந்தப் படம் இருக்கும். அதே நேரம் அடுத்தது என்ன என்று எதிர்பார்க்க வைக்கும் விறுவிறுப்பான திரைக்கதை என்கிற வரையறைக்குள் காட்சிகளை எப்படிக் கோத்திருக்கிறேன் என்பதை எனது பாணியாக ரசிகர்கள் உணர முடியும் என்று நம்புகிறேன்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் வில்லனாக நடித்த ராஜ் பரத்தைக் கதாநாயகன் ஆக்கியிருக்கிறீர்களே?
ராஜ் பரத் இந்தப் படத்தில்தான் நாயகனாக அறிமுகமாக இருந்தார். ‘சவாலே சமாளி’, ‘ரத்த பாசம்’ உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கித் தயாரித்த மல்லியம் ராஜகோபாலின் மகன்தான் இந்த ராஜ் பரத். இந்தப் படத்துக்காக எடுத்த ஒளிப்படங்களைப் பார்த்த மிஷ்கின் ராஜ் பரத்தை அழைத்தார். நான் மறுக்கவில்லை.
அதேபோல வல்லினம் படத்தில் நடித்த அம்ஜத் மற்றொரு நாயகனாக நடித்திருக்கிறார். ராம்கோபால் வர்மாவின் ‘ஐஸ்கிரீம்’ படத்தில் நடித்த தேஜஸ்வி மடிவாடாவும், இனிது இனிது படத்தில் நடித்த ரேஷ்மி மேனனும் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். தேஜஸ்வி ஒரு கதக் நடனப் பள்ளியை நடத்திவரும் டான்ஸர்.
இசைக்காக அதிக நேரம் எடுத்துக்கொள்வார் என்று உங்களைப் பற்றிச் சொல்வது உண்மைதானா?
தனிப்பட்ட முறையில் இசை மீதிருந்த ஆர்வத்தால் அதைப் பயின்றிருக்கிறேன். மேலும் ஒரு படம் வருவதற்கு முன் மக்களைச் சென்றடைவதும் இசைதான். படம் வந்து மக்கள் பார்த்த பிறகு போய்விடும். ஆனால் இசை தலைமுறைகளைக் கடந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
இசைக்கு ஆயுள் அதிகம். அதனால்தான் அதற்கு அதிக சிரத்தை எடுத்துக்கொள்கிறேன். இந்தப் படத்தில் தீபக் நீலாம்பூர் என்ற புதிய திறமையாளரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறேன். மொத்தம் 5 பாடல்கள். எந்தப் பாடலும் கதையை மீறி இசைக்காது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago