நீங்கள் பார்க்கிற ஒரு சினிமா… பல கட்டங்களைத் தாண்டி வந்துதான் உங்கள் விழிகளின் முன்னால் விரி கிறது. அப்படி சினிமாவை அணு அணுவாக செதுக்கும் ஓரிடம்தான் எடிட்டிங் அறை. ஒரு காட்சி அவுட்டோர், மறு காட்சி செட் என்று அடுத்தடுத்த ஜம்ப் கட்டிங் இருப்பதில் அதிகம் விருப்பம் காட்டாத காலகட்டத்தில் வேலை பார்த்தவர்கள், நாங்கள். போட்டோகிராஃபியும், லைட்டிங்கும் கூட ஒரே மூடில் இருக்க வேண்டும். கண்ணுக்கு உறுத்தல் இல்லாமல் காட்சிகள் அப்படியே மெல்ல நகர வேண்டும் என்பதற்காகவே பார்த்துப் பார்த்து கவனித்து செய்வோம்.
‘சதாரம்’ என்று ஒரு கன்னடப் படம். சென்சாருக்கு அனுப்ப நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. ஒரு பாடல் மட்டும் வெளிப்புறக் காட்சியில் படமாக்க வேண்டும். மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது. வேறு வழியே இல்லாமல் செட் போட்டு பாடல் காட்சியைப் படமாக்கி முடித்து, இரவோடு இரவாக எடிட்டிங் வேலை களையும் முடித்து சென்சாருக்கு அனுப்பி வைத்தோம்.
அடுத்தடுத்த காட்சிகளாக ஜம்ப் கட்டிங் இருக்கக் கூடாது என்று நினைக்கும் மெய்யப்ப செட்டியாரிடம், பாதி பாடலையே வேறொரு கலரில் எடுத்தால் எப்படி தப்பிக்க முடியும்? திரும்பவும் படப் பிடிப்பை நடத்தி சென்சாருக்கு அனுப்பினோம். அப்போது சென்சார் அலுவலகத்தில் சாஸ்திரி என்றொரு அலுவலர் இருந்தார். விறுவிறுவென அறைக்குச் சென்று ஒரு குறிப்பேட்டை எடுத்து வந்து காட்டினார்.
‘‘ஏவி.எம்மில் இப்படி ஒரு பாடலைப் படம்பிடித்து வந்து காட்டிவிட்டுப் போகிறார்கள். கண்டிப்பாக இந்தப் பாடலை மீண்டும் படம்பிடித்துக்கொண்டு திரும்பி வருவார்கள்’’ என்று நீங்கள் இந்தப் படத்தோடு வந்த அன்றைக்கே நான் குறித்துவைத்துவிட்டேன்!’’ என்றார். அப்படி ஒரு நம்பிக்கைகள் பதிந் திருந்த காலகட்டத்தில், திறன் படைத்தவர்களிடத்தில் எல்லாம் வேலை பழகியதை இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சி ஒட்டிக்கொள்ளும்.
ஏவி.எம் ஸ்டுடியோ தேவகோட்டை யில் இருந்து சென்னைக்கு மாற்றப் பட்டு எடுக்கப்பட்ட முதல் படம் ‘வாழ்க்கை’. அதற்கு முன் ஏவி.எம் தேவ கோட்டையில்தான் இயங்கியது. ‘நாம் இருவர்’, ‘வேதாள உலகம்’ போன்ற சில படங்களுக்கு அங்கேதான் எடிட்டிங் வேலைகள் நடந்தன. படப்பிடிப்பும் அங்குதான் நடக்கும். நடிகர், நடிகைகள் எல்லோரும் அங்கே உள்ள குடிசையில் தங்கியிருந்து நடிப்பார்களாம்.
ஒருமுறை ‘வேதாள உலகம்’ படத்தின் நெகட்டிவ் பெட்டி இருந்த அறைக்குப் பக்கத்து அறையில் திடீரெனெ தீ பற்றியதாம். அடுத்த அறையில் இருக்கும் நெகட்டிவ் எல்லாம் தீயில் கருகினால், மீண்டும் படப்பிடிப்பு நடத்தி மொத்த படத்தையும் எடுக்க வேண்டும். கொஞ்சமும் யோசிக்காமல் எடிட்டர் சங்கர் அந்த அறைக்குள் புகுந்து, எல்லாப் பெட்டிகளையும் வெளியே எடுத்து, அருகில் நின்ற செட்டியாரின் ஆஸ்டின் காருக்குள் பாதுகாப்பாக வைத்து காரை நண்பர்களோடு சேர்ந்து தள்ளிக்கொண்டே வீட்டுக்குக் கொண்டுபோய் சேர்த்தாராம்.
அப்போதும் ‘ஆள் யாருக்கும் எதுவும் பிரச்சினை இல்லையே?’ என்றுதான் செட்டியார் கேட்டுள்ளார். லைட் பாய் தொடங்கி, செட் அஸிஸ்டெண்ட், தயாரிப்பாளர் வரைக்கும் எல்லோரும் ஒற்றுமையோடு வேலை பார்த்து குடிசையில் தங்கி படம் எடுத்தாலும் வெற்றி பெறும் என்பதற்கு உதாரணம் தான் ‘நாம் இருவர்’ போன்ற படங்கள்.
இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. அந்த நாட்களில் தேவ கோட்டை ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடம்தான் ரயில் நிற்கும். அதற்குள் நெகட்டிவ், பாசிட்டிவ் பெட்டி உள்ளிட்ட அனைத்து படப்பிடிப்பு உபகரணங்களையும் ஏற்றி வைக்க முடியாது. அதற்காகவே ரயில்வே சிக்னல் கொடுக்கும் கார்டுவிடம் சினி மாவைப் பற்றி நிறைய பேச்சுக் கொடுத்து, அவரை ஐந்து நிமிடம் வரைக் கும் ரயிலை நிற்க வைத்து அனைத்து பொருட்களையும் ஏற்றிவிடுவோம்.
பெரும்பாலும் நடன அசைவுகளை விளக்குவதோடு டான்ஸ் மாஸ்டரின் பணி முடிந்துவிடும். நடன கோணங்களையும், சார்ட் மூவ்மெண்ட்ஸையும் இயக்கு நரும் ஒளிப்பதிவாளரும் சேர்ந்து திட்டமிடுவார்கள். இப்போதெல்லாம் மொத்த பாடலையும் படமாக்கி, எடிட்டிங் செய்து வந்து நடன இயக்கு நரே கொடுத்துவிடுகிறார்கள். அப்போது மூவியாலா மெஷின் கொண்டு பாடல்களின் அசைவுகளை இணைப்பது ஒருவித சிறப்பு.
அந்த மெஷின் மூலம் முன், பின் இரண்டு கோணங்களிலும் ஒரு படத்தை ஓட்டி பார்க்க முடியும். உதட்டு அசைவையும் வார்த்தையையும் இணைக்கும் வேலையை இந்த மூவியாலா உதவியோடு செய்வோம். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு காட்சியையும் எடிட்டிங் செய்து மூவியாலாவில் போட்டுப் பார்ப்போம். இன்றைக்கு அந்தத் தொழில்நுட்பம் வேறு ஒரு பரிணாமத்தில் வளர்ந்து விட்டது.
நடன இயக்குநர் ஹீராலால் பாடலில் ஜம்ப் ஷூட் இருப்பதை அதிகம் விரும் புவார். அந்த நேரத்தில் அது புது டிரெண்ட் ஆக இருந்தது. ஆனால், ‘இதெல்லாம் கண்களுக்கு உறுத்தலாக இருக்கிறது’என்று செட்டியார் கூறுவார். எடிட்டர் ஆர்.ஜி.கோப் மட்டும் தைரி யமாக ’இதெல்லாம் புது டிரெண்ட். நாளைய சினிமாவில் இப்படித்தான் ஜம் சார்ட்ஸ் நிறைய காட்சிகளில் பிரதிபலிக்கப் போகிறது’ என்று வாதாடுவார்.
‘என்னமோ போங்கப்பா…’ என்று மனம் ஏற்றுக்கொள்ளாமலேயே ஒரு கட்டத்தில் மாற்றங்களை ஒப்புக் கொள்ளவும் செய்வார் செட்டியார். இன்றைக்கு சவுண்ட் எபெக்ட் என்று புதிய நுட்பங்கள் வடிவம் எடுத்து வருகிறதே, இதை 40 ஆண்டுகளுக்கு முன்பே முயற்சி செய்து பார்த்தவர், எடிட்டர் ஆர்.ஜி.கோப். அதேபோல, இன்றைக்கு எடிட்டிங் துறையில் பல புதிய உத்திகளை செய்து அசத்தி வருகிறாரே எடிட்டர் ஆண்டனி, அவர்கூட ஏவி.எம் பள்ளியில் தயாரான பிள்ளைதான்.
எடிட்டிங் அறையை பூஜை அறையை போல அவ்வளவு சுத்தமாக வைத்திருப்போம். நெகட்டிவில் ஒரு சின்ன கீறலோ, புள்ளியோ விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே வெல்வெட் துணியை விரித்து வைத்துப் பாதுகாத்து பணியாற்றிய அந்தக் காலம், வாழ்க்கைக்கான நெறிமுறைகளையும் நிறைய கற்றுக்கொடுத்தது.
ஒரு படத்துக்கு உயிரான நெகட்டிவ் மூலம் எடிட்டிங் அறையில் பெரும் மாயங்களை எல்லாம் நிகழ்த்திய பருவமாக சினிமாவில் என் தொடக்க காலம் இருந்தது. எடிட்டிங் அறைக்குள் நுழைந்தால் உலகத்தையே மறக்கடிக் கச் செய்துவிடும். அந்த எடிட்டிங் அறைதான் பின்னாளில் நான் சிறகை விரித்துப் பறக்கக் கற்றும் கொடுத்தது.
- இன்னும் பார்ப்போம்…
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago