சினிமா எடுத்துப் பார் 2 - எடிட்டிங் அறிவு

By எஸ்.பி.முத்துராமன்

எவ்வளவு நுட்பமான காட்சி யையும் சரியான எடிட்டிங் அறிவால் இலகுவாக அணுகி, காட்சியின் தேவையை ஒரு நேர்க்கோட்டில் பிரதி பலிக்கச் செய்துவிட முடியும். சினிமாவில் சாதித்த இயக்குநர் ஒவ்வொரு வருமே எடிட்டிங் துறையில் திறம்பட்ட வர்களாகவே இருந்தனர். அந்த எடிட்டிங் அறிவு இளமைப் பருவத்திலேயே எனக்குக் கிடைக்கச் செய்த இடம் ஏவி.எம் ஸ்டுடியோ.

சினிமாவில் தொழில்நுட்பரீதியாக மார்க்கெட்டில் ஒரு கருவி வந்திருக்கிறது என்றால், அன்று மாலையே அதை தன்னுடைய ஸ்டுடியோவுக்குக் கொண்டு வந்து சேர்த்துவிடுவார் மெய்யப்ப செட்டியார். அதனால்தான் எல்லா வகையிலும் அந்த இடம் பல்கலைக் கழகம் போன்றுள்ளது என்பேன்.

அப்போது இருந்த விஜயா - வாஹினி ஸ்டுடியோவைப் போல இரவு, நண்பகல், பண்டிகை நாட்கள் என்று எல்லாப் பொழுதுகளும் பரபரப்பான சூழலுக்கு ஏவி.எம் ஸ்டுடியோவும் மாறியது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ராம ராவ், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார் என்று தென்னிந்திய சினிமாவில் பரபரப்பாக இருந்த நாயகர்கள் எல் லோரும் ஸ்டுடியோவில் எதிர் எதிரே சந்தித்துக்கொள்வார்கள்.

எடிட்டிங் வேலையைப் பொறுத்தவரைக்கும் இத்தனை மணி நேரம் என்று பார்த்துப் பார்த்து வேலை செய்ய முடியாது. சாப்பாடு, காபி, டீ எல்லாம் சரியான நேரத்துக்கு டேபிள் மீது இருக்கும். ஆனால், சாப்பிடத்தான் நேரமே இருக்காது. இருந்தாலும் அந்த ஆரம்ப நாட்களில் நான் பெற்ற மாதம் 60 ரூபாய் சம்பளமும், நேரத்துக்கு இல்லையென்றாலும், வேலைச் சூழலுக்கு இடையே சுவையாக இருந் தும், ருசி பார்க்க முடியாமல் சாப்பிட்டுக் கழித்த காலமும் வாழ்க்கையை நிறைவாகவே நகர்த்திச் சென்றது.

அசிஸ்டெண்ட் எடிட்டராக வேலைக் குச் சேர்ந்த நாட்களில் சீனிவாசன், கணேசன், வி.ஆர்.ராமசாமி நாங்கள் நால்வரும்தான் அறை நண்பர்கள். பேச்சுலர்ஸ் ஆக சுற்றித் திரிந்த அப்போது வடபழனியில் அறை எடுத்துத் தங்கினோம். திருமணத்துக்குப் பிறகு எங்கள் நட்பில் விரிசல் விழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அப்போது ‘ஸ்டோர் வீடு’என்று சொல்லப் பட்ட நாலைந்து வீடுகள் கொண்ட, ஒரு அடுக்கக வீட்டில் குடியமர்ந்தோம். அந்த நாட்களில் கிடைத்த நல்ல நண்பர்களின் உறவு கனவு பாதையை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க ஒரு பாலமாகவே இருந்தது.

‘ஜகதலப் பிராதபன்’ உள்ளிட்ட முக்கிய படங்களில் எடிட்டராக பணியாற்றியவர், சூர்யா. அப்போது அவர் ஜூபிடர் பிக்சர்ஸில் பணியாற்றி வந்தார். ஏவி.எம். ஸ்டுடியோவில் பணியாற்றிய எடிட்டர் கே.ஷங்கர், ஏவி.எம் நிறுவனப் படங்களின் முக்கியமான தொழில்நுட்ப வேலைக்காக எடிட்டர் சூர்யாவை சந்திக்கச் செல்வார். ஒரு கட்டத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

எடிட்டர் கே.ஷங்கர், பின்னாளில் இயக்குநராக மாறியதும் எடிட்டர் சூர்யாவை ஏவி.எம் ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்து, இங்கே எடிட்டிங் பிரிவுக்குத் தலை வராக்கினார். அந்த நாட்களில்தான் நான் அவர்களின் குழுவுக்குள் நுழைகிறேன். அங்கேதான் நாராயணன், பாஸ்கர், பின்னாளில் நான் இயக்கிய எல்லாப் படங்களுக்கும் எடிட்டிங் செய்த விட்டல் ஆகியோரின் நட்பும் கிடைத்தது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என்று பரபரப்பாக எடிட்டிங் அறையில் பட வேலைகள் நடந்துகொண்டிருக்கும். அப்படித்தான் ஒருமுறை படத்தை சென்சாருக்கு அனுப்புவதற்காக தீவிர இரவுப் பணியில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தோம். அதிகாலை 3 மணி வரைக்கும் எடிட்டிங் அறையில் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. ‘இப்போதே மணி 3 ஆச்சு. திரும்பவும் நீங்க 7 மணிக்கு எப்படி வர முடியும்? மயிலாப்பூர், சாந்தோம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்துக்குச் சென்றுத் திரும்ப வேண்டுமே…’ என்று யோசித்தார் ஏவி.எம்.செட்டியார்.

இனிமேல் ஒரு படத்தின் இறுதிகட்ட எடிட்டிங் வேலைகள் முடியும் நாட்களில் அங்கேயே தங்கிக்கொள்ளும்படி ஒரு விசாலமான அறையை ஏற்பாடு செய்து அமைத்து கொடுத்தார். உழைப்பவர்களுக்கு எந்தப் புள்ளியிலும் இடையூறு இருக்கக்கூடாது என்பதை உணர்ந்தவராக அவர் இருந்தார் என்பதனால் இங்கே இதை நினைவூட்டுகிறேன்.

எடிட்டிங் துறையில் சேர்ந்தபோது ‘பாய் பாய்’ என்ற ஹிந்திப் படத்தின் பணிகள் ஸ்டுடியோவில் நடந்துகொண்டி ருந்தன. இது தமிழில் ‘ரத்த பாசம்’ என்ற பெயரில் வெளியான படம். தமிழில் ஒரு படம் வெற்றி அடைந்தால் அதை தெலுங்கு, ஹிந்தியில் டப்பிங் செய்வதையும், சமயத்தில் ரீமேக் படமாக்குவதிலும் அதிக கவனத்தை செலுத்துவார், செட்டியார். அந்தக் கால கட்டத்தில் ஸ்டுடியோவை வாட கைக்குக் கொடுத்ததே இல்லை. இரவும், பகலும் ஏவி.எம் படங்களே தொடர்ந்து வேலைகள் நடந்துகொண்டிருக்கும்.

தமிழில் ‘அன்பே வா’, ‘உயர்ந்த மனிதன்’, ஹிந்தியில் ‘சாயா’, ‘ஜோரி ஜோரி’ என்று பல படங்களின் எடிட்டிங் வேலைகளில் நான் பணியாற்றி யிருக்கிறேன். நான் அங்கே பணியாற்றிய நாட்களில் ‘சகோதரி’ படம் எடிட்டிங் வேலைகள் நடந்துகொண்டிருந்தது. அந்தப் படத்தில் நடித்த முத்துராமன் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு போய் இரவு உணவை முடித்துவிட்டு, மீண்டும் ஸ்டுடியோவுக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்துவிடுவார்.

‘‘நடித்த காட்சி எல்லாம் சிறப்பாக வந்திருக்கிறதா? நன்றாக நடித்திருக் கிறேனா?’’ அவ்வளவு ஈடுபாட்டோடு கேட்பார். வேலையின் மீது அப்படி ஒரு பற்று. அந்த ஈடுபாடு இன்றைக்கு எப்படி இருக்கிறது என்கிற விவாதத்துக்குள் நாம் செல்ல வேண்டாம்.

மெய்யப்ப செட்டியாருக்கு காட்சி கொஞ்சம் சுமாராக இருக்கிறது என்று மனதில் பட்டால் உடனே ரீடேக் எடுத்தே தீர வேண்டும். நானெல்லாம் படித்து இயக்குநர் ஆனவன் இல்லை. மீண்டும் மீண்டும் காட்சிகளை எடுத்து எடுத்து இயக்குநர் ஆனவன். அந்த அனுபவத்தை கொடுத்ததில் செட்டியாரின் பங்கு அதிகம். அவருக்கு எண்ணிக்கை முக்கியம் அல்ல; தரம்தான் முக்கியம்!

‘உயர்ந்த மனிதன்’ படத்தில் இடம்பெற் றுள்ள ‘அந்த நாள் ஞாபகம் வந்ததே…’ பாடல் சற்று வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டிருக்கும். அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடியிருப்பார். ஒரு பாடலைப் பாடுவதற்கு முன் அது இடம்பெறும் சூழலின் தன்மையை உள்வாங்கிக்கொண்டு வெளிப்படுத்து வதில் டி.எம்.எஸ் பெரிய திறமைசாலி.

அவருடைய குரல் பதிவை படத்தில் சிவாஜிகணேசன் உச்சரிக்கும் உதடு களின் அசைவோடு இணைப்பது எடிட்டிங்கில் அந்த நாட்களில் சுவாரஸ் யமான அனுபவமாக இருந்தது. அன்று அந்த எடிட்டிங் அறையில் இருந்தபோதுதான், எம்.ஜி.ஆருக்கும். சிவாஜிக்கும் குரலை மாற்றி மாற்றிக் குரல் கொடுக்கும் டி.எம்.எஸ்ஸின் அபார திறமையை உணர முடிந்தது.

இப்படி பல அனுபவங்களோடு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் எடிட்டிங் துறையில் இருந்த நான், உதவி இயக்குநராக ஆன பிறகும் எடிட்டிங் துறையின் மீது கவனத்தை கொஞ்சமும் குறைத்துக்கொண்டதில்லை.

- படம் பார்ப்போம்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்