இயக்குநர்கள் கிருஷ்ணன்- பஞ்சு இருவருமே நான் எடிட்டிங் பிரிவில் பணிக்கு வந்த காலத்தில் புகழுடன் இருந்தார்கள். இவர்களில் பஞ்சு முதலில் எடிட்டர் ஆனவர். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. பிற்காலத்தில் ‘தெய்வப் பிறவி’, ‘அன்னை’, ‘சர்வர் சுந்தரம்’, ‘குழந்தையும் தெய்வமும்’ என்று திரைப்படங்களை இயக்குவதில் அவர்கள் பரபரப்பானார்கள்.
அந்தக் காலகட்டத்தில் அவர்களுடன் நான் வெவ்வேறு சூழலில் பணிபுரிந்தாலும், அவர்கள் இயக்கிய படங்கள் சென்சாருக்குப் போகும் நேரத்தில் என்னை அழைத்து எடிட்டிங் வேலைகளைக் கவனித்துக்கொள்ள சொல்வார்கள். அப்படி ஓர் ஒற்றுமை உணர்வும், புரிதல் மனமும் மலர்ந்திருந்த காலம் அது.
எடிட்டர் பஞ்சுவுக்கு உதவியாளர் விட்டல். இவரிடம்தான் நான், எடிட்டிங் குறித்த பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அவருடன் இருந்த நல்ல புரிதலால்தான் பிற்காலத்தில் நான் இயக்கிய 70 படங்களுக்கும் ஒரே எடிட்டருடன் என்னால் பணிபுரிய முடிந்தது. தமிழ் பட உலகில் இது ஒரு சாதனை என்பதை பெருமையாக தெரிவித்துக்கொள்கிறேன்!
எடிட்டிங் பிரிவில் பணியாற்றிய போதுதான் சங்குண்ணி எனக்கு அறிமுகமானார். எடிட்டிங் துறையில் அவர் பணியாளராக வேலை பார்த்தார். யார் எந்த வேலை, உதவி என்றாலும் முகம் சுளிக்காமல் செய்து முடிக்கும் கடுமையான உழைப்பாளி. மாதந்தோறும் சம்பளம் வாங்கியதும் என்னிடம் வந்து மணியார்டர் விண்ணப்பத்தை பூர்த்திசெய்யச் சொல்லி, ஊரில் இருக்கும் குடும்பத்தினருக்கு பணத்தை அனுப்பி வைத்துவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பார்.
அப்படி ஒரு பொறுப்பாளர். ‘உன் செலவுக்குப் பணம் வேண்டாமா?’ என்று கேட்டால் ‘எனக்கு என்னப் பெரிதாக செலவு ஆகப் போகிறது. வேலை முடிந்ததும் சாப்பிட்டுவிட்டு, நான்தான் அலுவலகத்திலேயே படுத்துக் கொள்கிறேனே’ என்பார்.
பிற்காலத்தில் மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற எடிட்டராக வலம் வந்தார் சங்குண்ணி. அங்கே ஐ.வி.சசி இயக்கிய பெரும்பாலான படங் களுக்கு இவர்தான் எடிட்டர். எடிட்டிங் துறையில் பணியாளராக இருந்த ஒருவர், தனது மதிநுட்பத்தால் பின்னாளில் மிகச்சிறந்த எடிட்டராக முடியும் என்பதற்கு சங்குண்ணி நல்ல சாட்சி!
ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்து பிக்சர் நெகட்டிவ், சவுண்ட் நெகட்டிவ் இரண்டும் டெவலப் ஆகி எடிட்டிங் அறைக்கு வரும். எந்தக் காட்சி, எந்த ஷாட், எந்த டேக்? அதில் சரியான (ஓ.கே) டேக் எது? இதையெல்லாம் கிளாப் போர்டில் எழுதி காட்டுவார்கள். அதில் சரியான டேக்கை எடுத்து பிரிப்போம். இதைத் தொடர்ந்து இன்னும் பல நிலைகளில் பணிகள் தொடரும்.
காட்சிகள் படம்பிடித்து வரவர அதை ஒரு ஆர்டராக சேர்த்து ரீல்களாக ஆக்குவோம். அந்த ரீல்களில் டப்பிங், ரீ- ரெக்கார்டிங், மிக்ஸிங் எல்லாம் செய்து முதல் பிரதி எடுப்போம். அதுதான் சென்சாருக்குப் போகும். சென்சாரில் சொல்கிற காட்சியை எல்லாம் தவிர்த்த பிறகு, எடுக்கப்படுவதுதான் ஃபைனல் பிரின்ட். இதற்கு அந்தப் படத்தின் இயக்குநர், உதவி இயக்குநர்கள், எடிட்டர், உதவி எடிட்டர்கள் எல்லோருமே இரவு, பகலாக உழைக்க வேண்டியிருக்கும்.
டப்பிங் பணியும் படத்தின் முக்கியமான துறையாகும். ஒரு படத்தில் நடிப்பவர்கள் டப்பிங் பேசும்போது அது சிறப்பாக அமைந்துவிடுவது இயல்பு. மற்ற மொழி நடிகர், நடிகைகள் நடிக்கும்போது அதற்கு நம் டப்பிங் கலைஞர் சரியான உதட்டு அசைவு கொடுத்து அதன் பாவனை, உச்சரிப்பு போன்ற உணர்ச்சிகளை முறையே வெளிப்படுத்த வேண்டும். அப்படி குரல் கொடுப்பதில்தான் உரிய நடிகர், நடிகையின் நடிப்பு மேன்மை பெறுவதும், சிறப்பு பெறுவதும் இருக்கிறது. டப்பிங் பேசுவதை முறையே இணைக்கும் பொறுப்பு எடிட்டருக்கும் உண்டு.
டப்பிங் முறையை முதன்முதலில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தது மெய்யப்ப செட்டியார்தான். அவர் கன்னடத்தில் எடுத்த ‘சத்ய ஹரிச்சந்திரா’ படம்தான் தமிழில் ‘ஹரிச்சந்திரா’ என்ற பெயரில் வெளிவந்த முதல் டப்பிங் படம். இதற்கு மரியாதை செய்யும் விதமாகத்தான் ஒவ்வொரு புத்தாண்டின் முதல் நாள் சென்னை ஏவி.எம் - ஆவிச்சி பள்ளியில் உள்ள ஏவி.மெய்யப்ப செட்டியாரின் சிலைக்கு டப்பிங் யூனியன் சார்பில் மாலை அணிவித்து சிறப்பும், நன்றியும் அளிக்கப்பட்டு வருகிறது.
‘நாகுல சாவிதி’ (Nagula Chavithi) ஏவி.எம் தயாரித்த தெலுங்குப் படம். இது ஒரு புராணக் கதை. அந்தக் காலகட்டத்தில் அதே மாதிரி கதைக் களத்தோடு ‘நாக பஞ்சமி’ என்ற பெயரில் ஜெமினி நிறுவனம் ஒரு படத்தைத் தமிழில் வெளியிடும் பணியில் தீவிரமாக இருந்தது. அதை அறிந்த மெய்யப்ப செட்டியார், உடனடியாக ஏவி.எம் தயாரித்த ‘நாகுல சாவிதி’ படத்தைத் தமிழில் ‘நாக தேவதை’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்தார். அதன் வேலைகள் விரைவுபடுத்தப்பட்டு 15 நாட்களுக்குள் டப்பிங், எடிட்டிங் பணிகள் எல்லாம் முடிக்கப்பட்டன.
படம் நாளை ரிலீஸ் என்றால் இன்று மாலை வரை சென்சார் சான்றிதழ் கைக்கு வரவில்லை. படத்தின் பிரிண்ட்கள் அந் தந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. சென்சார் சான்றிதழ் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்வது குற்றம். முடி வில் படம் வெளியாக வேண்டிய அன்று காலை சென்சார் சான்றிதழ் கைக்கு கிடைத் தது. உடனடியாக குறித்த நேரத்தில் படத்தை வெளியிட்டாக வேண்டுமே என்று முடிவெடுத்த செட்டியார், சென்சார் சான்றிதழை ஷூட் செய்து பிரதியெடுத்து படத்தைத் திரையிட உள்ள ஒவ்வோர் இடத்துக்கும் 15 அடியாக கட் செய்து, பணியாளர்களின் அருகிலேயே இருந்து அதை காய வைத்துக் கொடுத்தார்.
அந்தச் சான்றிதழ் உடனடியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள திரை அரங்கு களுக்குச் சென்றாக வேண்டுமே? சற்றும் யோசிக்காமல் தனி விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களுக்கு குறித்த நேரத்துக்குள் சென்சார் சான்றிதழ் பிரதி எடுத்துச்செல்லப்பட்டது. அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வேலைகள் நடந்த காலம் அது.
- இன்னும் படம் பார்ப்போம்…
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago