குழந்தைகளுக்கு நடிக்கத் தெரியாது!: இயக்குநர் ஹலிதா ஷமீம் பேட்டி

By திரை பாரதி

பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சை எழுதிவிட்டு படபடப்புடன் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் ஒரு மாணவியைப் போல தோற்றமளிக்கிறார் ஹலிதா ஷமீம். பேச ஆரம்பித்தாலோ சினிமா பற்றிய ஆழமான அறிவு அவரிடம் இருப்பதை முதல் கேள்வியிலேயே புரிந்து கொள்ள முடிகிறது. ஐந்து சிறார்களை வைத்து ‘பூவரசம் பீப்பி’ என்ற குழந்தைகள் படத்தை தனது முதல் படமாக இயக்கியிருக்கும் ஹலிதா, புஷ்கர் காயத்ரி, சமுத்திரக்கனி, மிஷ்கின் என்று பல இயக்குநர்களிடம் பணியாற்றியிருப்பவர். “ எனது முதல் படத்தை குழந்தைகள் படமாக எடுக்கக் காரணம் குழந்தை களின் உலகம் தமிழ் சினிமாவில் காக்காய் கடியாகக்கூட தொட்டுக் கொள்ளப்படாமல் இருக்கிறது” என்று கச்சிதமான சொற்களைக் கூட்டி பேச ஆரம்பிக்கிறார்.

குழந்தைகள் திரைப்படம் நம்மிடம் குறைவாக இருக்கக் காரணம்?

மிகவும் வெளிப்படையாகத் தெரியும் காரணம், குழந்தைகளை வைத்து படமெடுத்தால், அதை பார்க்க யாரும் வரமாட்டார்கள் என்ற எண்ணம். இதை நமது நாயகப் படங்களின் ஆதிக்கம் உருவாக்கிவிட்டது. ஆனால் இந்த எண்ணத்தை பாண்டிராஜின் பசங்க, விஜய் மில்டனின் கோலிசோடா போன்ற படங்கள் தற்போது மாற்றிக்காட்டியிருக்கின்றன. திரைப்பட விழாக்களில் பாருங்கள். நூறு படங்கள் திரையிடப்பட்டால், அதில் 25 விழுக்காடு குழந்தைகளை மையப்படுத்திய படம்தான். குழந்தைகளின் உலகங்களை மறந்துவிட்டு அவர்களை வெறும் மதிப்பெண் இயந்திரங்களாக முதல் வகுப்பிலிருந்தே நாம் பார்க்க ஆரம்பித்ததும் இந்தக் கோளாறுக்குக் காரணம்.

உங்களது படத்துக்கான கதையின் தாக்கம் எங்கிருந்து கிடைத்து?

எந்த தனிப்பட்ட படத்தைப் பார்த்தும் எனது படத்துக்கான கதையை நான் உருவாக்கவில்லை. அப்படிச் செய்தால் கண்டிப்பாக அதில் உண்மை இருக்காது. ஒரு படைப்புக்கு உண்மை என்பது முதல் தேவை. எனது பால்ய காலம், எனது நண்பர்களின் பால்யம் எல்லாவற்றின் தாக்கத்தோடும் கொஞ்சம் கற்பனை கலந்திருக்கிறேன். மிகச் சிறந்த குழந்தைகள் படத்தை கொடுத்துக்கொண்டிருக்கும் ஈரானியப் படங்களின் மீது எனக்கு நல்ல அபிமானம் உண்டு. அங்கே நிலவும் தணிக்கை முறை காரணமாக அங்கே குழந்தைகளின் உலகம் வழியே அவர்கள் பேசும் சமூக அரசியல் மறைமுகமான தாக்கத்தைத் தருவதில் மிகச் சிறந்த படைப்புகளாக அவை இருக்கின்றன.

உங்கள் படத்தின் கதை என்ன?

ஒரு கிராமத்தின் கோடை விடு முறை. கதையின் முதன்மையான பாத்திரமாக இருக்கக்கூடிய ஐந்து பிள்ளைகள், பூவரசு இலையில் பீப்பி செய்து ஊதுவதும், பொன்வண்டு பிடிப்பதும், காத்தாடி விடுவதும், நீச்சல் அடிப்பதுமாக இருக்கிறார்கள். அப்போது எதிர்பாராமல் ஒரு வன்முறையை அவர்கள் பார்க்க நேர்கிறது. அதைப் பார்த்த பிறகு அவர்கள் அதை எப்படி எடுத்துக்கொண்டார்கள், அவர்கள் ஐவிட்னஸ் என்று தெரியவரும்போது குற்றம் இழைத்தவர்களிடம் இருந்து அவர்கள் எப்படி தங்களை காத்துக்கொண்டார்கள் என்பதை குழந்தைகளின் சாகசக் கதையாக அமைத்திருக்கிறேன். இது குழந்தைகளின் இயல்பான குணமாக இருக்கும் மனிதநேயத்தைப் பேசும் கதை.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து படத்தைத் தயாரிக்கவும் செய்திருக்கிறாரே?

ஆமாம். எனது ‘நிசப்த நிலை’ என்ற குறும்படத்துக்கு ஒளிப்பதிவு செய்தபோது இந்தக் கதையைக் கேட்டவர் நானே தயாரிக்கிறேன் என்றார். அவரோடு மதுரையைச் சேர்ந்த சுஜாதா செந்தில்நாதனும் தயாரிக்கிறார். காட்சிமொழியும், இசைமொழியும் படத்தின் பலமாக இருக்கும். அருள்தேவ் இசையமைக்கிறார். பூவரசு இலை பீப்பீயின் ஒலியோடு உலகம் முழுவதுமிருந்து 15 புதிய கருவிகளின் ஒலிகளை பயன்படுத்தியிருக்கிறோம். கவுரவ் காளை, பிரவின் கிஷோர், கபில்தேவ், வர்ஷினி, அகல்யா என்று ஐந்து குழந்தைகள் கதாபாத்திரங்களாக ஆகியிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு எப்போதுமே நடிக்கத் தெரியாது. அதுவாகவே ஆகிவிடுவது அவர்களது உலகம். இதைப் படம் பார்க்கும்போது உணரலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்