கோணங்கள் 21 - கோடம்பாக்கத்துக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாதா?

By கேபிள் சங்கர்

சார்.. நான் ஈரோட்லேர்ந்து பேசுறேன். நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து கடுமையா உழைச்சு ஒரு நல்ல கதை தயார் செஞ்சோம். படத்தைத் தயாரிக்கிறேன்னு விருப்பமா ஒருத்தர் வந்தாரு. ஷூட்டிங் போலாங்கிறப்போ எஸ்ஸாயிட்டாரு. எங்க கதைய அநாதையா விட மனசில்ல. அதைப் படமாக்க ஒரு தயாரிப்பாளர் தேவை உதவ முடியுமா?” என்று கேட்டுத் தொலைபேசினார்கள்.

“என்ன பட்ஜெட்?”

“அறுபது லட்சம்”

“ அறுபதா?” என்றதும், “வேணும்னா குறைச்சிக்கலாம் சார்” என்றார். இவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் “சரி படம் எடுத்திட்டு அப்புறம் என்ன பண்ணுவீங்க?” என்றேன். “அது ஒண்ணும் பிரச்சினையில்ல சார்... படம் முடிஞ்சதும் என் உறவினர் ஒருத்தர் பிரபலத் தயாரிப்பாளர், விநியோகஸ்தரா இருக்காரு.” அவரின் பெயரைச் சொல்லி, “நல்லாத்தெரியும் அவர்கிட்ட வித்துருவோம்” என்றார்கள்.

எனக்குச் சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. இவர்களைப் போல் தமிழகம் முழுவதும் சென்னைக்கே வராத பல சினிமா கம்பெனிகள் தமிழகம் எங்கும் புற்றீசலாய் வளர்ந்து, சேலம், மதுரை, தேனி, கோவை, ஈரோடு எனச் சுமார் 400 படங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன என்று சொன்னால் நம்புவீர்களா?

டிஜிட்டல் ஒளிப்பதிவு வந்த பிறகு, தமிழகம் எங்கும் உள்ளூர் சேனல்கள் பெருகி, கேனான் 5டி, 7டி, பிடி 170 கேமராக்களில் ஆரம்பித்து இன்றைய ரெட் எம்.எக்ஸ், ப்ளா மேஜிக் கேமராக்கள் வரை மிகச் சுலபமாய் வலம் வர ஆரம்பிக்க, கிரேன், ஜிம்மிஜி உபகரணங்கள் கூட இன்றைக்குப் பாண்டி, மதுரை போன்ற இடங்களில் வாடகைக்குக் கிடைக்கும் அளவுக்கு உள்ளூர் சினிமா தயாரிப்பு முன்னேறிக் கிடக்கிறது.

மஞ்சள் பையோடு ஊரிலேர்ந்து கிளம்பி வந்த தயாரிப்பாளர் என்பது போய்த் தற்போது ஊரிலிருந்து கிளம்பாமலேயே உள்ளூரில் தயாரிப்பாளராய் வலம் வரத் தயாராகிவிட்டவர்கள் அதிகம். ரியல் எஸ்டேட் மூலமாகவோ, அல்லது ஏதாவது ஒரு அரசியல் பின்புலம் உள்ளவராகவோ இருந்துவிட்டால் அடுத்த தன் நிலை உயர்வுக்கான விஷயம் சினிமாதான் என்று ஊரெல்லாம் ப்ளெக்ஸ் பேனர் கட்டித் தயாரிப்பாளர் ஆகிவிடும் ஆட்களுக்கு, சினிமா பற்றிய ஆர்வம் மட்டுமே அடிப்படையாய்க் கொண்டிருக்கும் பல இளைஞர்கள்தான் கிரியா ஊக்கி.

இப்படி ஆரம்பிக்கப்படும் பல படங்களுக்குச் சரியான கதையோ, அல்லது, தொழில்நுட்ப விஷயங்களோ தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல், லோக்கல் சேனலில் வீடியோ எடுத்தவர், எடிட் செய்தவர் எல்லாம் டெக்னீஷியன்களாய் தெரிவு செய்யப்படுகிறார்கள். அடுத்துக் கதாநாயகன், நாயகி மற்ற நடிகர்கள். இதில் கண்டிப்பாய்த் தயாரிப்பாளர் ஒரு முக்கிய கேரக்டரிலோ அல்லது கிராமத்துக் கதையாய் இருந்தால் சமயங்களில் நாயகனாகவோ நடிப்பார். ஹீரோயினி (இப்படித்தான் இவர்கள் அழைக்கிறார்கள்) என்பவர் சமயங்களில் சென்னையிலிருந்தோ, அல்லது உள்ளூர் கேபிள் டிவியில் காம்பையரிங் செய்பவரிலிருந்தோ, இரண்டாவது கதாநாயகியாகக் கூட வலம் வர முடியாத ‘ரிச் கேர்ள்’ என்று அழைக்கப்படும் ஜூனியர் ஆர்டிஸ்ட் பெண்களிலிருந்தோ தேர்வு செய்துகொள்கிறார்கள்.

அடுத்த நிலை நடிகர்கள் தேர்வு என்று வரும்போது நிறைய விஷயங்கள் அவர்களின் ‘பங்களிப்பை’ப் பொறுத்தே முடிவு செய்யப்படுகிறது. பங்களிப்பு என்பது ஆளுக்கு ஆள், கேரக்டருக்குக் கேரக்டர் மாறிக்கொண்டேயிருக்கும். சமயங்களில் பங்களிப்பு அதிகம் ஆகும்போது வேடமே மாறும்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ஊருக்குப் போயிருக்கும் சமயம் இப்படியாகப் படம் தயாரிக்கும் குழுவினரோடு சந்திப்பு நிகழ, எப்படியாச்சும் பத்து லட்சம் இருந்தா ஷூட்டிங் முடிச்சிருவேன் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் ஒரு அம்பாசிடர் காரிலிருந்து ஹீரோயினை இறக்கி, “பாருங்க.. ஹீரோ, ஹீரோயினி, கேமராமேன், எல்லாரும் ரெடி.

இப்ப நீங்க பணம் போட்டீங்கன்னா.. நம்மூர்ல போய் எங்க வேணா ஷூட்டிங் வச்சிருவேன்.” என்றிருக்கிறார். நண்பர் பின்னங்கால் பிடறியில் பட ஓடி வந்துவிட்டார். “என்னாங்க இவங்க.. சினிமான்னா என்னா நினைச்சிட்டிருக்காங்க. நல்ல வேளை உங்களையெல்லாம் எனக்குத் தெரியும்ங்கிறதுனால புரியுது. இல்லாட்டி நானும் ஒரு ரெண்டு லட்சத்தையாவது விட்டுட்டுத்தான் வந்திருப்பேன்” என்றார்.

ஒரு குழுவில் ‘பங்களிப்பு’ தருகிறேன் என்று உறுதியளித்தவரை வேறொரு குழு அலேக்காய் கடத்தி போய் அப்பா கேரக்டரிலிருந்து அண்ணன் கேரக்டர் ஆக்கிய கதையும், பின்பு அதற்காக வெட்டு குத்து நடந்த கதையும் உண்டு. ஆனால் இப்படித் தயாரிக்கப்படும் படங்கள் எங்கே திரையிடப்படுகின்றன, அதற்கான வியாபாரம் என்ன என்று கேட்டீர்களானால் யாருக்கும் தெரியாது. ஊர்த் திருவிழாவில்கூட ஒளிபரப்பப்படாத படங்களாகக் கடைசியில் அவை உருமாறுகின்றன. ‘

ஆனால் அதையும் மீறிப் படம் எடுத்தாயிற்று, அடுத்த கட்டமாய் அதை வெள்ளித்திரையில் வெளியிட்டே தீருவேன் என்ற சபதம் கொண்டவர்கள் மேற்கொண்டு சென்னை வந்து அதை டிஜிட்டல் பிரதியாய் மாற்றி, சொந்த ஊரில் ஏதாவது ஒரு லோக்கல் தியேட்டரில் ஒரு நாள் காலைக் காட்சியாவது ஓட்டிய பிறகே ஓய்கிறார்கள்.

இம்மாதிரித் தயாராகும் படங்களில் இருந்து திறமையான ஆட்கள் வரக் கூடாதா? கோடம்பாக்கத்தில் மட்டுமே சினிமா தயாராக வேண்டுமென்று என்ன கட்டாயம்? ஏதோ ஒரு ஊரிலிருந்து கிளம்பி வந்தவர்கள்தான் இன்றைய சாதனையாளர்கள் என்று சொன்னீர்களானால் அது உண்மைதான். ஆனால் சரியான பயிற்சி, வியாபாரம் குறித்த அறிவு, துறை சார்ந்த அறிவு இவையெல்லாம் இல்லாமல் வெறும் ஆர்வத்தை மட்டுமே அடிப்படையாய்க் கொண்டு உருவாகும் விஷயம் எப்படித் தரமானதாய் இருக்கும்?

ஆனால் ஓரளவு தரமாய்ச் சேலத்தில் தயாரான ஒரு படத்துக்கு நேர்ந்த கதியை அடுத்த வாரம் பார்ப்போம்.

மினி ரிவ்யூ- தி கிங்ஸ்மேன்

தி சீக்ரெட் டிவைஸ் எனும் காமிக் புத்தக வரிசையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான் இந்த கிங்ஸ்மென். ஜேம்ஸ்பாண்ட் வரிசை போல, பிரிட்டிஷ் உளவுத்துறை போலவே செயல்படும் கிங்ஸ்மென் குழுவில் பணியாற்றி தன் ஆட்களைக் காப்பாற்றத் தன் உயிரைத் துறந்த ஒருவரின் மகன் தத்தாரியாய் திரிகிறான். அவனை கிங்ஸ்மென் குழுவில் பயிற்சியளித்து எப்படி அவன் சிறந்த ரகசிய ஏஜெண்டாகி உலகைக் காப்பாற்றுகிறான் என்பதே கதை. ரிச்சான விஷுவல்கள். ட்ரையினிங் புரோக்ராம்கள், அசத்தலான படத்தொகுப்பு.

ஆங்காங்கே வரும் சுவாரஸ்ய ஒன்லைனர்கள் என முதல் பாதி முழுவதும் அதகளப்படுத்தியவர்கள் இண்டாவது பாதியில் கொலைகார வில்லன் சாமுவேல் ஜாக்ஸனை வைத்து ஆடும் க்ளைமேக்ஸ் எபிசோட் எல்லாம் தெலுங்கு படங்களுக்கு ஈடாகப் போய் விடுகிறது. இருந்தாலும் ஒருமுறை பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்