கோடம்பாக்கத்தின் புதிய ஆக்டோபஸ்?

By ஆர்.சி.ஜெயந்தன்

“ஒரு படம் லாபம் தரலாம், நஷ்டமும் தரலாம். சினிமா வியாபாரத்தில் விட்டு கொடுக்கும் மனப்பாங்கு வேண்டும். தமிழ் சினிமாவில், தற்போது தொழில் தர்மம் என்பது துளியும் இல்லை. அதனால்தான் சினிமா, இன்று சீரழிவுப் பாதைக்குச் சென்று கொண்டு இருக்கிறது” இப்படிக் கொதித்துப்போய் பேசியிருப்பவர் நடிகர் ராஜ்கிரண். விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர் ஆகிய துறைகளிலும் அனுபவம் கொண்ட இவர் சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசும்போதுதான் மனம் திறந்து இப்படிக் குமுறியிருக்கிறார்.

அவரது பேச்சில் தயாரிப்பாளர்களையும் ஒரு பிடி பிடித்திருந்தார். “சினிமாவில் கிடைக்கின்ற லாபத்தைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அன்றைக்கு இருந்தது. ஆனால் இன்றைக்கு அப்படியில்லை. முடிந்தவரை அடுத்தவனை ஏய்த்து எப்படிச் சம்பாதிக்கலாம் என்ற நிலைதான் சென்று கொண்டிருக்கிறது.

வீண் செலவுகள் இல்லாமல் எப்படிப் படம் எடுக்கலாம், நடிகருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கலாம் என ஒரு தயாரிப்பாளருக்குத் தெரிந்திருக்க வேண்டும். சினிமாவை நேர்மையான வியாபாரமாக அணுக வேண்டும், ஆனால் இன்று அப்படி யாரும் அதை அணுகுவதில்லை” என்று அவர் பேசியபோது அந்த விழாவுக்கு வந்திருந்த சில தயாரிப்பாளர்களின் முகத்தில் ஈயாடவில்லை.

பட்ஜெட்டில் 40 சதவிகிதம்

“ராஜ்கிரணின் பேச்சு நூற்றுக்கு நூறு உண்மை. இன்று முன்னணிக் கதாநாயகர்களை வைத்து எடுக்கப்படும் படங்களின் பட்ஜெட்டில் கதாநாயகனின் சம்பளம் மட்டுமே 40 சதவீதமாக இருக்கிறது. படம் வெற்றிபெற்றால் சரி. தோல்வியடைந்தால் தயாரிப்பாளரின் நிலை என்ன?” என்ற கேள்வியை எழுப்புகிறார் பாக்ஸ் ஆபீஸ் தகவல்களைத் திரட்டி வெளியிடுவதில் அனுபவம் மிக்கப் பத்திரிகையாளரான ராமானுஜம். “ உதாரணத்துக்கு விஜய் படத்துக்கான பட்ஜெட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

விஜய்க்கு சம்பளம் 36 கோடி என்கிறார்கள். படத்தின் தயாரிப்புச் செலவு 20 கோடி என்று வைத்துக் கொள்ளுங்கள். இயக்குநர், ஹீரோயின், இசை, ஒளிப்பதிவு ஆகிய அனைத்துக்கும் 8 கோடி என்று வைத்துக் கொண்டால் மொத்த பட்ஜெட் 64 கோடி. இந்தப் பணத்தைத் தயாரிப்பாளர் கடனுக்கு வாங்கிப் படம் தயாரித்தால் ஒரு வருடத்துக்கான வட்டி, பட விளம்பரம் மற்றும் வெளியீட்டுச் செலவையும் சேர்த்தால் 80 கோடி வந்துவிடும். இதில் கதாநாயகனின் சம்பளத்தை மட்டும் விகிதாச்சார அடிப்படையில் பிரித்துப் பார்த்தால் 40 சதவிகிதத்துக்குக் குறையாமல் வரும். இப்படி எடுக்கப்படும் படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் விஜய்க்கு 80 கோடி வசூல் மார்க்கெட் இருந்தாலும் தயாரிப்பாளராக எந்தச் சூழ்நிலையிலும் நஷ்டத்தை ஈடுகட்ட முடியாது.

ஆனால் கதாநாயகன் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே ஊதியம் வாங்கிக் கொண்டால் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மாறாகத் தயாரிப்பாளருக்குக் கையைக் கடிக்காத லாபம் இருக்கும். இன்று சிவகார்த்திகேயன் படங்கள் லாபம் கொடுக்கின்றன என்கிறார்கள். தற்போது அவர் நடித்து முடித்திருக்கும் ரஜினி முருகன் படம் உட்பட அவர் குறைவான சம்பளம் வாங்கியிருப்பதால்தான் தயாரிப்பாளரால் விநியோகஸ்தர்கள் வாங்கும் விலையில் அவரது படத்தை விற்பனை செய்ய முடிகிறது.

அனைவருக்கும் லாபம் கிடைக்கிறது. நான் வேகமாக வளர்கிறேனே மம்மி என்று அவரும் பட்ஜெட்டில் 40 சதவீதம் சம்பளம் கேட்டால், அவரது படத்துக்கும் லாபம் குதிரைக் கொம்பாகிவிடும். எங்களால்தான் படம் ஓடுகிறது என்று கதாநாயகர்கள் நினைப்பார்களானால் அவர்கள் தயாரிப்பில் பங்குபெறும்போது உண்மை வெளியே வந்துவிடும்” என்கிறார் ராமானுஜம்.

டிஜிட்டல் வரமல்ல வலை

இதற்கிடையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகக் கலைப்புலி தாணு தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் பொதுக்குழு, கோலிவுட்டில் பல புதிய உண்மைகளைப் போட்டு உடைத்திருக்கிறது.

மார்ச் 8-ம் தேதி நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் வழக்கம்போல் திரைப்படத் துறையின் பல்வேறு பிரச்சினைகள் அலசப்பட்டபோது மன்னன் என்ற தயாரிப்பாளர் டிஜிட்டல் ஃபார்மெட் செய்துதரும் மூன்று முன்னணி நிறுவனங்களைப் பற்றிக் கடுமையாகச் சாடினார். இதுபற்றிப் பெயர் கூற விரும்பாத ஒரு பிரபல தயாரிப்பாளர் நம்மிடம் பேசும்போது “பிலிம் பிரதிகளாக வெளியிட்டு வந்த திரைப்படங்களை டிஜிட்டலில் வெளியிடுங்கள் என்று பத்து ஆண்டுகளுக்கு இந்த நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடமும் திரையரங்க உரிமையாளர்களிடம் காலைப்பிடிக்காத குறையாகக் கெஞ்சின.

நாங்களும் ஒரு பிலிம் பிரதிக்கு இனி 55ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியதில்லை என்ற நிம்மதியோடு டிஜிட்டலுக்கு மாறினோம். ஆனால் டிஜிட்டல் சினிமாவை வெளியிடும் தொழில்நுட்பத்தை ஏகபோகமாக்கிக் கொண்ட இந்த நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் மறைமுக ஒப்பந்தம் செய்து கொண்டு, டிஜிட்டலில் படங்களை வெளியிடுவதற்குத் தயாரிப்பாளர்களாகிய எங்களிடமிருந்து பெரும் தொகையைக் கறந்து வருகின்றன.

படத்தின் பிலிம் பிரதிக்கு மாற்றாக வந்த டிஜிட்டல் சினிமா தொழில்நுட்பத்தைத் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒருமாதிரியும், கேரளா போன்ற மாநிலத்தில் குறைவாகவும் என்று சலுகைகாட்டி மற்ற அனைவரையும் ஆட்டத்தில்விடும் ஆக்டோபஸ் போல எங்களை வளைத்துவிட்டார்கள்” என்கிறார்.

மூன்று மாத தொழில் முடக்கம்?

இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக, மூன்று மாதங்களுக்கு எந்தப் படத்தையும் ரிலீஸ் செய்வதில்லை என்றும், டிஜிட்டல் நிறுவனங்கள் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் யோசனை முன் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் இந்த மூன்றுமாத சினிமா தொழில் முடக்கம் சாத்தியமா என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவைக் கேட்டபோது “ அனைத்து சகோதர சங்கங்களுடன் கலந்துபேசி, அவர்களது கருத்தை அறிந்தே செயல்படுவோம். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கமாட்டோம்” என்றார். அதேபோல “ கதாநாயகர்கள் மீது பழி சுமத்தாதீர்கள். ரஜினி, விஜய், ஆர்யா ” எனப் பலவிதமான வியாபார மதிப்பில் இருக்கும் நாயகர்களும் தங்கள் சம்பளத்தின் ஒருபகுதியை விட்டுக்கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்றார்.

பெப்சிக்கு எதிராக ஒரு முக்கிய தீர்ப்பு

இதற்கிடையில் நடிகர் மன்சூர் அலிகான் படங்களின் படப்பிடிப்பைத் தடுக்க பெப்சி தொழிலாளர் அமைப்புக்கு உரிமை இல்லை; யாரை வேண்டுமானலும் அவர் தனது படங்களின் படப்பிடிப்புக்கு வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று உயர்நீதிமன்றம் இடைக்கால தடையாணை வழங்கி மன்சூர் அலிகானுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கோடம்பாக்கத்தில் இந்தத் தீர்ப்பும் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், டிஜிட்டல் சினிமா நிறுவனங்களைப் போலவே பெப்சிக்கும் புதிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்