ஒரு நல்ல படத்தில் குறைந்தபட்சம் நாம் எதிர்பார்ப்பது வித்தியாசமான கதையை. அதுவும் சரியாகச் சொல்லப்பட்டுள்ளதா? சரியான கதையில் நாம் அறிந்திராத களம் உள்ளதா? அதிலும் புதிய அர்த்தம் ஏதாவது பிடிபடுகிறதா? என்பன போன்ற கேள்விகளுக்கு அழகான பதில்களைத் தருகிறது ‘அரேபியன் நைட்ஸ்' எனும் லிதுவேனிய நாட்டுத் திரைப்படம். தவிர, புதிய வெளிகளை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது இப்படம்.
முதல் காட்சியின் நிதானமே படத்தின் வேகத்தை முடுக்கிவிட ஏதுவாகிறது. இளம் டிக்கெட் பரிசோதகர் புன்னகையோடு பயணிகளிடம் வருகிறான். சிலர் தயாராக டிக்கெட்டைக் கையில் எடுத்து வைத்திருக்கின்றனர். வேறு சிலரோ, தேடி உடனே எடுத்துத் தந்து விடுகின்றனர். ஒரு இளம்பெண் காலி இருக்கையில் பையைத் தலைக்கு வைத்துச் சாய்ந்து உறங்குகிறாள். இன்முகத்தோடு 'டிக்கெட்' எனத் தோளை உலுக்குகிறான்.
அவளோ திருதிருவென விழிக்கிறாள். உடனே பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட, அதில் டிக்கெட் இல்லாததால் அதிர்கிறாள். பரிசோதகன் புன்னகைத்தபடி நிற்கிறான். அவள் எல்லாப் பாக்கெட்டிலும் கைவிட்டுப் பார்த்துவிட்டு மிரட்சியோடு பார்க்கிறாள். பயணப்பையின் ஜிப்புகளையெல்லாம் திறந்து திறந்து பார்த்துவிட்டு மீண்டும் இவனைப் பார்க்கிறாள்.
அதிக நேரம் எடுத்துக் கொள்பவர்களை மன்னிக்கும் பெரும்பணி தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது போலவும் பார்க்கிறான், தவறாமல் புன்னகையைத் தக்க வைத்தவாறு. பயணப் பையிலிருந்த சிறு பர்ஸை எடுத்துக் கடைசியில் டிக்கெட்டை இவள் காட்டிவிடுகிறாள். அவனும் நன்றி என்று சொல்லிவிட்டு இடம் அகல்கிறான்.
பயணம் செய்பவர்களிடம் ஆதாரங்களைக் கேட்கும் பரிசோதகனின் பெயர் ஜியார்ஜஸ். இவனைப்போலக் கடமையைச் செவ்வனே செய்பவர்கள் நிறைய பேர் உண்டு இவ்வுலகில். ஆனால் ஜியார்ஜஸ்ஸுக்கும் பயணம் செய்ய வேண்டிய நாள் ஒன்று வருகிறது. ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்குப் பயணம் செய்யும்போது எந்த ஆதாரங்களையும் காட்ட முடியாத சூழல் ஏற்படுகிறது. விடுதிகளில் தங்க அனுமதியின்றி விரட்டப்படுகிறான். சிறையில் அடைக்கப்படுகிறான். பாலைவனங்களில் அலைந்து திரிகிறான்.
வேலைக்குச் செல்லாத நாட்களில் தனது ஆற்றங்கரையோர மரக்குடிலில் தங்கி ஓய்வு எடுப்பவன் இவன்.
கால்பந்து விளையாட்டில் நகரத்தின் கோல் கீப்பர்; மாலை வேளைகளில் சாக்ஸப்போன் இசை மாணவன். ரயில்வே துறையில் நிரந்தரவேலை என வாழும் ஒரு சுகவாசி பாலைவனத்தில் அலைந்து திரிந்து செத்து பிழைக்கும் நிலைக்குக் காரணம் யாமினா. முதல் காட்சியில் வரும் டிக்கெட் பரிசோதனையில் திக்குமுக்காடும் அந்த இளம் பெண் பயணிதான். மருத்துவக் கல்லூரி மாணவி என்று சொல்லிக் கொண்டவள்.
ஆபத்து ஒன்றில் சிக்கிய அவளை மீட்டு தனது மர வீட்டுக் காட்டேஜில் தங்கவைத்துக் கவனித்துக் கொள்கிறான். யாமினாவின் அழகு இவனை இம்சித்தாலும் மதிப்பு மிக்க கனவானாகவே நடந்து கொள்கிறான். ஒருநாள் அவள் காணாமல் போய்விடுகிறாள். யாரோ மரவீட்டை தாக்கி உடைத்திருப்பது தெரிகிறது. அவளைத் தேடி எங்கெங்கோ அலைந்து சில உண்மைகளைச் சேகரிக்கிறான். அவளைத் தேடித்தான் தூரதேசம் போகிறான். போகிற இடத்தில் பொல்லாத அனுபவங்கள்.
அல்ஜீரிய இரவுகளில் பாலை வெளிகளில் மைல் கணக்கில் நடந்து, துயரத்தோடு களைத்து விழும் ஜியார்ஜஸ்ஸாக ஜூல்ஸ் வெர்னர் சிறப்பாக நடித்திருக்கிறார். லண்டன் தியேட்டர் ஆர்டிஸ்ட். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடிப்பவர். ஜியார்ஜஸ்ஸை சுற்றிப் பின்னப்பட்டுள்ள அவனது உறவுகளின் உலகம் காருண்யம் மிக்கது. அதைவிட யாமினாவை சுற்றியுள்ள மர்மம் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்வது இயக்குநரின் மேம்பட்ட திறமை.
கடைசியில் அவன் அவளை ஈச்ச மரங்களும் கூடாரங்களும் நிறைந்த பாலைவனத்தில் கண்டுபிடித்து விடுகிறான். என்றாலும் இதை ஒரு காதல் கதை என்ற சிமிழுக்குள் அடக்கிவிட முடியாது. ஒளிப்பதிவாளர் ஜாய் லூயிஸ் சன் ஸோக்னியுடன் இணைந்து, ரயில்வே ஆற்றங்கரை மரக்குடிலின் அழகையும் லக்சம்பர்க்கின் கிறிஸ்துமஸ் இரவின் பேரானந்தத்தையும் அல்ஜீரிய குடிசை வீடுகளில் படியும் மஞ்சள் வெயிலையும் காட்டியுள்ள விதமும், ஏற்கெனவே இவனிடம் அடைக்கலம் இருந்து யாமினா பாடும் பள்ளிக்கூட பாடலை தற்போது இவனுக்கு அடைக்கலம் தந்துள்ள அல்ஜிரிய குடும்பத்தில் பெண் குழந்தைகள் ஹம் செய்வது எனப் படைப்பின் சாத்தியங்களை இயக்குநர் விரிவுபடுத்திக்கொண்டே செல்வதும் சர்வதேசப் படைப்புக்கான தகுதியைக் கொடுத்துவிடுகிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago