சினிமா எடுத்துப் பார் 1 - திட்டமிடல் அறிவு

By எஸ்.பி.முத்துராமன்

நான் பார்த்து, ரசித்து, பாராட்டி, விமர்சித்த சினிமாவுக்குப் பின்பக்கம் இருந்த முயற்சி, உழைப்பு, மகிழ்ச்சி இப்படி பலவிதமான அனுபவங்களை… என் மூலம் இந்தத் தொடர் வழியே நீங்களும் பெறப் போகிறீர்கள். வாருங்கள் ‘தொடர்’வோம்…

என் இளமைப் பருவத்திலேயே சினிமாவின் மீது ஒரு விதமான பாசம் படர ஆரம்பித்துவிட்டது. பள்ளியிறுதி வகுப்புத் தேர்வெழுதி முடித்தேன். மேற்கொண்டு என்னை வீட்டினர் பி.ஏ படிக்க வைக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டார்கள்.

அவர்கள் தங்கள் ஆசையை என்னிடம் சொல்லும்போதெல்லாம் ‘அந்தப் பட்டப் படிப்பெல்லாம் ரெண்டே ரெண்டு எழுத்து தான். இப்போ நான் படிச்சிருக்கிறது எஸ்.எஸ்.எல்.சி. இது நாலு எழுத்து. நான் சினிமா எடுத்து அப்புறமா ஏகப்பட்ட பட்டம் வாங்கிக்கிறேன்… அதுதான் என்னோட ஆசை’ என்று கூறிவிட்டு ஓடிவிடுவேன்.

‘‘டேய் ஒவ்வொருத்தரும் என்ன ஆக ணும்னு ஆசைப்படறீங்கன்னு வகுப் பறையில் வாத்தியார் கேட்கும்போது, சக மாணவர்கள் ஒவ்வொருத்தரும் ‘மருத்துவர், கலெக்டர், இன்ஜினீயர்…’ என்று தங்களின் எதிர்கால ஆசையை சொல்வார்கள். நான் எழுந்து ‘சினிமா எடுக்கப் போகிறேன்…’ என்று உரக்கக் கத்துவேன். வாத்தியாரும் சக மாணவர் களும் என்னை வித்தியாசமாக பார்ப் பார்கள்.

சினிமா உலகத்துக்குள் நுழைய வேண்டும் என்கிற ஆசை விதையை, என் மனசைக் கீறி ஊன்றியது… அந்த நாட்களில் எங்கள் ஊரில் நடைபெற்ற நாடகங்கள்தான். காரைக்குடி பகுதி களில் அப்போது தொடர்ச்சியாக நாடகங் கள் நடந்துகொண்டே இருக்கும். குறிப் பாக, டி.கே.எஸ். சகோதரர்கள் எங்கள் பகுதியில் மூன்று, நான்கு மாதங்கள் தங்கியிருந்து பிரமாதமான நாடகங்களை நடத்துவார்கள். நாடகம் என்றால் சாப்பாடு கூட எனக்குத் தேவைப்படாது.

திசையெங்கும் புராண நாடகங்கள் மட்டுமே கொடிகட்டிப் பறந்த அந்தக் காலகட்டத்தில், டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடக கம்பெனி சமூக நாடகங்களை நடத்தினார்கள். ‘பில்ஹனன், ‘மனிதன்’ இன்னும் பெயர் நினைவில்லாத பல நாடகங்களை அந்த நாட்களில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

என்னைப் போன்ற பல இளைஞர் களை அந்த நேரத்தில் சினிமா மீது மோகம் ஏற்பட வைத்த படம் ‘பராசக்தி’. கருணாநிதியின் வசனமும், சிவாஜிகணே சனின் நடிப்பும் வெள்ளித்திரை மீதான என் கனவுக்கு வண்ணமடித்து மேலும் மேலும் சிறகடிக்க வைத்தது.

‘பையனுக்கு மேல்படிப்பு மீது ஆர்வம் இல்லை. சினிமா ஆசையோடு திரிகிறான்…’ என்று என் தந்தை, கவியரசு கண்ணதாசனிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்த அந்த நாள்… இன்றைக்கும் என் மனதில் பச்சை யத்தை இழக்காமல் பசுமையாக நிற்கிறது. ‘என்னடா இவன் சினிமா கினிமா என்று சுத்துகிட்டிருக்கானே’ என்று, அருகில் இருந்த அழகப்பா கல்லூரியில் படிக்கச் சொல்லி சேர்த்து விட்டுவிடுவாரோ என்று பதற்றத்தோடு நான் திரிந்த நேரத்தில், கண்ணதாசனிடம் அழைத்துப் போய் இப்படி ஒரு வார்த்தையை சொன்னால் உள்ளுக்குள் கொஞ்சமா மகிழ்ச்சி இருக்கும்!

என் தந்தையும் கண்ணதாசனும் நண்பர்களாக அறிமுகமாகி நட்புடன் பழகிவந்தாலும், ஒரு காலகட்டத்தில் இன் பம், துன்பம், குடும்பம் என்று எல்லா வற்றையும் பகிர்ந்துகொள்கிற மிக நெருங்கிய உறவினர்களாகவே மாறியவர்கள்.

‘‘இப்போதானே படிப்பை முடிச்சிருக் கான். நான் ‘தென்றல்’னு ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப் போறேன். அதில் கொஞ்ச நாள் வேலை செய்யட்டும். போகப் போக மத்ததையெல்லாம் பார்த்துக்கலாம்’ என்று கவிஞர் சொன்னபோது, அப்பா எதுவும் மறுத்துப் பேசவில்லை.

வீட்டிலேயே சாப்பாடு போட்டு, தங்க இடமும் கொடுத்து, வேலையும் கொடுத்தார் கண்ணதாசன். சினிமா பற்றிய மத்தாப்பூ கனவுகளை சுமந்த அந்த வயதில் அழகான ஓர் அனுபவம் அது.

1954-ம் ஆண்டுவாக்கில் ‘தென்றல்’ பத்திரிகை வேலைக்காகத்தான் முதன் முதலில் சென்னைக்கு வந்தேன். ‘எல்லா வேலைகளையும் கற்றுக்கொள்..’ என்று கண்ணதாசன் பல பொறுப்புகளை என்னிடம் தந்து ‘தென்றல்’ பத்திரிகை யின் ‘ஆல் இன் ஒன்’ மனிதனாகவே என்னை மாற்றினார். போகும் எல்லா இடங்களிலும் ‘இவன் என்னோட தம்பி. அலுவலகத்தைக் கவனிச்சிக்கிறான்’ என்று அன்பு ததும்பக் கூறுவார்.

இரண்டு ஆண்டுகள் அங்கே வேலை பார்த்தேன். எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்வேன். பொது வாக என்னிடம் ஒரு வேலை கொடுத்து விட்டால், அதை சரியாக இவன் முடித்துவிடுவான் என்கிற நம்பிக்கை கவியரசருக்கு வந்துவிட்டது. அவருக்கு என்னை ரொம்பவும் பிடித்துப்போயிற்று. தமிழும், கவிதையுமாகவே வாழ்ந்த கவியரசரின் ஆலோசனைகளைக் கேட்டு வளர்ந்த பிள்ளை என்பதில் எனக்கு எப்போதும் பெருமை!

இருந்தபோதிலும் எனக்குள் இருந்த சினிமா ஆர்வம் என்னை மற்ற வேலை களைத் தொடர்ந்து செய்யவிடுவதாக இல்லை. ‘சினிமாவுக்குப் போகிறேன்’ என்று ஒருநாள் கவியரசரிடம் சொன்ன போது என்னுடைய சுறுசுறுப்பு, உழைப்பு, என் மீதான பாசம் இவையெல்லாம், என்னை வெளியே அனுப்ப அவருக்கு விருப்பமில்லாமல் ஆக்கியது.

‘ஓர் இரவு’ நாடகம் சினிமாவாக உருமாறியது ஒரே இரவில். ‘கணக்குபிள்ளை வைத்து எழுதும் ஒரு சிறிய மேஜை, பேப்பர், வெத்திலை- பாக்குப் பெட்டி… இது போதும். காலையில் வாங்க…’ என்று சொல்லி ஏவிஎம் ஸ்டுடியோவில் இருந்த ஒரு குடிசை அறையில் அமர்ந்து, ஒரே இரவில் அந்தப் படத்துக்கு திரைக்கதையும், வசனமும் எழுதி முடித்தார் அண்ணா.

இது நடப்பதற்கு முன் ‘ஓர் இரவு’ நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க ஏவி.மெய்யப்ப செட்டியார், அறிஞர் அண்ணாவைச் சந்திக்கத் திட்ட மிட்டிருந்தார். அது தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் சந்திப்புகளில் என் தந்தை இராம.சுப்பையா, ஏவி.மெய்யப்ப செட்டியாருடன் நெருங்கி பழகும் வாய்ப்பைப் பெற்றார்.

‘சினிமா எடுக்க ஆசைப்படுறான். கண்ணதாசனிடம் ரெண்டு வருஷம் அவரோட பத்திரிகையில வேலை பார்த் திருக்கான்…’ என்று என்னுடைய அப்பா, மெய்யப்ப செட்டியாரிடம் கூறியபோது, ‘அடடே, பத்திரிகை அனுபவம் எல்லாம் இருக்கா. சினிமாவில் அடிப்படை விஷயமே எடிட்டிங்தான். பத்திரிகையில் எழுதும்போது, வடிவமைக்கும்போது எது தேவையோ, அதை மட்டும் வைத்து மற்ற வரிகளை எல்லாம் எடிட் செய்த அனுபவம் இருந்திருக்குமே. அந்த வேலை மாதிரி, இங்கே சினிமாவிலும் படம் பிடிக்கும் காட்சிகளை எல்லாம் கொண்டுவந்து ஒரு மேஜையின் மீது வைத்து… தேவையானதை எடுத்துக் கோக்கும் வேலையை செய்வார்கள். அந்த அறையில் அமர்ந்து மேற்கொள்ளும் திட்டமிடல் அறிவு ஒரு நல்ல சினிமாக்காரனை உருவாக்கும். முதலில் நீ அதை கற்றுக்கொள்’ என்று எடிட்டிங் துறையைச் சேர்ந்தவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார் ஏவி.மெய்யப்பச் செட்டியார்.

- படம் பார்ப்போம்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்