பெண் கதாபாத்திரங்களைப் பிரதானப்படுத்தும் போக்கு பாலிவுட்டில் அதிகரித்திருப்பது ஆரோக்கியமான அறிகுறி. இத்தகைய படங்கள் வணிக வெற்றியைப் பெறுவதற்கு, அதீதமான கதாநாயக சினிமாக்களைக் கண்டு களைத்துப்போன ரசிகர்களது ரசனையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
வித்யா பாலன், கங்கணா ரணாவத் வரிசையில் தன்னாலும் ஒரு முழுக் கதையைத் தோளில் சுமக்க முடியும், அதற்காக உழைப்பைக் கொட்ட முடியும் என்பதைக் காட்டிவிட்டார் மீரா கதாபாத்திரத்தில் வரும் அனுஷ்கா சர்மா.
என்.எச்.10 படத்தின் கதை இந்திய சினிமா கண்டிராதது அல்ல. டெல்லிக்கு மிக அருகில் உள்ள ஹரியாணாவின் முக்கியத் தொழில் நகரம் குர்கான். அங்கே மனமொத்த வாழ்வை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் உயர்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த இளம் தம்பதியான மீராவும் (அனுஷ்கா சர்மா) அர்ஜுனும் (நெய்ல் பூபாளம்).
பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் இருவரும் படுக்கையறையில் ஆளுக்கொரு மடிக் கணினி வைத்துக்கொண்டு அலுவலக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அருகருகே இருந்தும் குறும்பாக ‘சாட்’ செய்துகொள்கிறார்கள். புகைப் பழக்கம் கொண்ட மீராவுக்கு விலையுயர்ந்த சிகரெட் பாக்கெட்டை மறக்காமல் வாங்கிவரும் அன்னியோன்யம் மிக்க கணவன்.
லிஃப்ட்டில் கணவன் எதிர்பாராதபோது அவனது இதழ்களைக் கவ்வி முத்தமிடும் அளவுக்கு கணவனுடனான நெருக்கத்தை நேசிக்கும் மனைவி என்று போகும் வாழ்க்கையில் மீராவின் பிறந்தநாள் திருப்புமுனையாகி விடுகிறது.
பிறந்தநாளைக் கொண்டாடச் சிலநூறு கிலோ மீட்டர்கள் தூரத்தில் உள்ள ரிசார்ட் நோக்கி வார விடுமுறையில் புறப்படுகிறார்கள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பொட்டல் வெளியாக நீளும் நிலப்பரப்பில் சாத்தானின் வாலினைப்போல நீள்கிறது நெடுஞ்சாலை. மோட்டல் ஒன்றில் மதிய உணவுக்காகக் காரை நிறுத்துகிறார்கள்.
அங்கே நிகழும் திடீர் சம்பவம் அவர்களது வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது. ஐந்து பேர் கொண்ட கும்பல், காதலர்கள் இருவரை அடித்துத் துவைத்து இழுத்துச் செல்கிறது. அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அந்த அநியாயத்துக்குத் தலைமை தாங்குபவனின் (தர்ஷன்) தோளில் துணிச்சலாகக் கை வைத்துத் தடுக்கிறான் அர்ஜுன்.
ஆனால் அர்ஜுனை ஓங்கி அறைந்துவிட்டுப் புறப்படுகிறான் அந்தச் சாதி வெறியன். மனைவியின் முன்னால் அடிப்பட்ட வேங்கையாகும் அர்ஜுன், மனைவி தடுத்தும் கேளாமல் அவர்களது காரைப் பின்தொடர்ந்து செல்கிறான். மனைவியின் பாதுகாப்புக்காக வாங்கிய கைத்துப்பாக்கியைக் கையில் எடுக்கிறான்.
அதன் பிறகு நடக்கும் சங்கிலித் தொடர் வன்முறைகள் மீராவை அந்த ஆக்ஷன் கதையின் நிஜமான ‘ஹீரோ’ ஆக்குகின்றன. இந்திய நவயுகப் பெண்ணின் கரங்கள் கணினியைத் தட்ட மட்டுமல்ல என்பதை உறையவைக்கும் மெலோ டிராமா ஆக்ஷன் காட்சிகள் நிறுவுகின்றன.
நாயகனின் வேலையை நாயகி கச்சிதமாகவும் அசாதாரணத் துணிச்சலுடனும் செய்யும்போது, தாங்கள் நினைத்தது சரியான வரிசையில் காட்சிகளாய் வந்துகொண்டே இருக்கிறதே என்ற ஆச்சரியம் மேலிட ரசிகர்கள் அமைதி காத்து ரசிக்கிறார்கள். தங்கையையும் அவளது காதலனையும் கவுரவக் கொலை செய்யும் பிரதான வில்லனின் காலை உடைத்துவிட்டு, நாயகியும் சோர்ந்து கீழே விழுகிறாள்.
அவன் ஒற்றைக் காலால் மெல்ல எழுந்து தப்ப முயற்சிக்கிறான். அந்த இடைவெளியில் ஆசுவாசமாக ஒரு சிகரெட் பற்ற வைத்து இழுத்துக்கொண்டே அவனைக் கவனிக்கிறாள். அவன் நகர ஆரம்பிக்கும்போது அலட்டிக்கொள்ளாமல் எழுந்து வந்து அவன் கதையை முடித்துவிட்டு நடக்கிறாள். வழக்கமாக நாயக நடிகர்களுக்காக ஒதுக்கப்பட்ட இதுபோன்ற காட்சிகளில் ஒரு பெண் பிரகாசிப்பது இந்தியத் திரையில் அரிது.
அனுஷ்கா சர்மாவின் நடிப்பு உயர்தரமானது. தொடையில் கத்தியால் குத்து வாங்கிக் கொண்டு நகர முடியாமல் முடங்கிவிடும் கணவன் வலியில் துடித்துக்கொண்டிருக்கும்போது நாயகி அழுத்தமாக முத்தமிடுவது அன்பின் வெளிப்பாடா அல்லது சூழலை மீறிய அபத்தமா என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது. ஆனால் அந்தத் தருணத்தின் தீவிரத்தை இது குறைக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
தணிக்கை என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது காதலர்கள் கொல்லப்படும் காட்சி.
நகரமோ கிராமமோ வில்லன்களுக்கு எப்போதுமே போலீசார் நண்பர்கள்தான் என்ற சித்தரிப்பு இந்தப் படத்திலும் உண்டு; படம் முழுவதும் மலிந்து கிடக்கும் ‘தற்செயல்’ சம்பவங்களைப் போல. பெண்ணை முன்னிலைப்படுத்தும் திரைக்கதையிலும் நாட்டில் நடக்கும் குற்றங்களின் யதார்த்தத்திலும் கவனம் செலுத்திய இயக்குநர் இதுபோன்ற ‘தற்செயல்’ திருப்பங்களில் அதிக நம்பிக்கை வைக்காமல் இருந்திருந்தால் படம் மேலும் நம்பகத் தன்மையோடு விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago