எங்களை வைத்துத்தான் சினிமா என்று கதாநாயகர்கள் சொல்லிக்கொண்டாலும் கதாநாயகிகள் வரும் காட்சிகளுக்காகவே பொறுத்திருக்கும் ரசிகர்களும் கணிசமாக இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தங்கள் அபிமான நாயகன் ஏன் இன்னும் இந்தக் கதாநாயகியுடன் ஜோடி சேரவில்லை என்று கேட்கவும் ஆரம்பித்துவிடுகிறார்கள். இதனால் முன்னணிக் கதாநாயகிகளைத் தங்களுக்கு ஜோடியாக்கிக் கொள்வதில் கதாநாயகர்கள் மத்தியில் மறைமுகப் போட்டி இருக்கவே செய்கிறது.
இந்தப் போட்டி திறமையும் அழகும் அதிஷ்டமும் கொண்ட கதாநாயகிகளுக்குச் சாதகமாகிவிடுவதால் நம்பர் 1 இடத்தை யார் பிடிப்பது என்ற பந்தயத்தை உருவாகிவிடுகிறது. கதாநாயகிகளுக்கான நம்பர் 1 இடம் என்பது கோலிவுட்டைப் பொறுத்தவரை ஒரு இசை நாற்காலி விளையாட்டு போன்றது.
பத்தாண்டுகளைக் கடந்து கதாநாயகிகளாக நடித்துவரும் த்ரிஷா முதல் ஐந்து இடங்களில் இப்போது இல்லை. மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு அவரது ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கதாநாயகர்களுடன் ஜோடி சேர்வதில் கவனமான தேர்ந்தெடுப்பை ஆரம்பம் முதலே கடைபிடித்து வந்திருக்கும் த்ரிஷா, ஒரு பெரிய ரவுண்டு வந்துவிட்டார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு அவர் திருமணத்துக்குத் தயாராகி வருகிறார்.
ஆனால் த்ரிஷாவுக்குச் சற்று மேலே, ரசிகர்களின் விருப்பம், கையிலிருக்கும் படங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து ஐந்தாவது இடத்தைச் சரிசமமாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் அனுஷ்காவும் ஸ்ருதி ஹாசனும். அனுஷ்காவை வரலாற்றுக் கதைகளின் கதாநாயகியாகக் கொண்டாடிவரும் தெலுங்கு சினிமா, அவரை வணிக சினிமா வாய்ப்புகளிலிருந்து விலக்கி விட்டது. அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் தேன்மொழியாக வந்து வசீகரித்தாலும் ரஜினியுடன் ’லிங்கா’ சறுக்கிவிட்டது அவருக்குத் தற்போது தமிழில் படங்கள் இல்லை.
விஜயுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் ஸ்ருதி ஹாசன் ’ புலி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து ’வீரம்’ பட இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித் ஜோடியாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் தமிழைவிட இந்தியிலும் தெலுங்கிலும் அதிக ஆர்வம் காட்டவே விரும்புகிறார் ஸ்ருதி. தற்போது ‘யாரா’, ‘வெல்கம் பேக்’, ‘மெயின் காப்பர், ‘ராக்கி ஹேண்ட்ஸம்’, என நான்கு இந்திப் படங்களைக் கையில் வைத்திருக்கும் ஸ்ருதி ஹாசன் மீண்டும் மகேஷ் பாபு ஜோடியாக ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தமிழில் மூன்று படங்களைத் தாண்டிவிட்டபோதிலும் ஸ்ருதியின் தமிழ் வசன உச்சரிப்பு இன்னும் தேறி வரவில்லை என்று செல்லமாகக் கடிந்துகொள்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் இளமையும் நடிப்புத் திறனும் புத்துணர்ச்சியுடன் இருப்பதில் ஸ்ருதி எப்போது தமிழுக்குத் திரும்பினாலும் கொண்டாடத் தயாராக இருக்கிறார்கள்.
நான்காவது இடத்தில் இருக்கும் காஜல் அகர்வாலுக்கு “வயதாகி விட்டது” என்று பொறாமையுடன் சில போட்டி நடிகைகள் பேட்டி கொடுத்தாலும் விஜயுடன் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்த பிறகு, தற்போது தனுஷ், விஷால் என்று தன் பட்டியலில் பாக்கியிருக்கும் நாயகர்களை நோக்கித் தன் கவனத்தைக் குவித்துவருகிறார். இரண்டு தமிழ்ப் படங்களைக் கைவசம் வைத்திருக்கும் காஜல், கன்னக்குழி விழக் கண்களால் சிரிப்பதாலும் அவரது உறுத்தாத கிளாமருக்காகவும் அவர் படங்களைத் தவிர்ப்பதில்லை தமிழ் ரசிகர்கள்.
மூன்றாவது இடத்தையும் இரண்டு பேர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த இருவர்
ஸ்ரீ திவ்யாவும் லட்சுமி மேனனும். குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் அறிமுகமாகிக் கவர்ந்த இருவரும் தற்போது கொஞ்சம் கிளாமர் எல்லைக்குள் நுழைந்து கலக்க ஆரம்பித்திருக்கிறார்கள். லட்சுமி மேனன் விஷால், சித்தார்த், கார்த்தி என்று கொஞ்சம் பெரிய ஹீரோக்களை நோக்கிச் சட்டென்று நகர்ந்து விட்டாலும் ஸ்ரீதிவ்யா இன்னும் சிவகார்த்திகேயன் பட்டறையின் செல்லக் கதாநாயகி என்ற எல்லையைக் கடக்கவில்லை. லட்சுமி மேனன் மேக் - அப் விஷயத்தில் அடக்கி வாசித்துக் கதாபாத்திரமாக வெளிப்படத் துடிக்கும் நாயகி. ஸ்ரீதிவ்யா நேர் மாறாக அதிக மே -அப் கறாரான வணிகப் படங்களின் கதாநாயகி என்ற எல்லைக்குள் சிக்கிக் கொள்ளவே விரும்புகிறார் என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.
இரண்டாவது இடத்துக்கும் இரண்டு பேர் மல்லுக்கு நிற்கிறார்கள். அந்த இருவரில் ஒருவர் ஹன்சிகா. இன்னொருவர் நயன்தாரா. நல்ல கதைகளில் பளிச்சென்று ஹன்சிகா பொருந்தி விடுவதால் குறைவான காட்சிகள் வந்தாலும் அவரை ரசிக்க முடிகிறது. முக்கியமாகப் பாடல் காட்சிகளில் அலுக்காமல் கவரும் நாயகி என்று ஹன்சிகாவைச் சொல்லாம் என்கிறார்கள். பாடலின் மெட்டும் காட்சிப்படுத்தலும் மரண மொக்கையாக இருந்தாலும் ஹன்சிகா அணிந்து வரும் ஆடைகளில் அவரை ரசிப்பதற்காகவே அவர் தோன்றும் பாடல் காட்சிகளில் கேண்டீன் பக்கம் போக மாட்டோம் என்கிறார்கள் அவருடைய ரசிகர்கள்.
த்ரிஷாவுக்குப் பிறகு நடிக்க வந்த நயன்தாரா தன்னைவிட வயது குறைவான நடிகர்களுடன் நடிக்க வேண்டி வந்தால் அதற்கான ஊதியமே வேறு என்று அசர வைக்கிறார். தற்போது இவர் 1.5 கோடி ஊதியம் பெறுவதாகக் கூறப்படும் நிலையில், சிம்புவுடன் இவர் நடித்திருக்கும் ‘ இது நம்ம ஆளு’ படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. தற்போது ‘மாயா’, ‘நண்பேண்டா’, ‘தனி ஒருவன்’, ‘மாஸ்’, ‘பாஸ்கர் த ராஸ்கல்’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாராவின் பலம், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது.
நயன்தாராவிடம் உங்களுக்குப் பிடித்தது எது என்று கேட்டால் “அவரது சிரிப்பில் ஒளிந்திருக்கும் ஆயிரம் வாட்ஸ் எனர்ஜி’’ என்கிறார்கள் அவருடைய தீவிர ரசிகர்கள்.
தெலுங்கே கதி என்றிருந்த சமந்தா முதலிடத்தைப் பிடிப்பார் என்று ரசிகர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். டோலிவுட்டில் வாய்ப்புகள் குறையாவிட்டாலும் தெலுங்குப் படங்களைத் தவிர்த்துத் தமிழில் அதிகப் படங்களை ஒப்புக்கொண்டு நடித்துவரும் நடிகர் சித்தார்த்தின் வழியைச் சமந்தாவும் பின்பற்றுகிறார் என்கிறார்கள் ரசிகர்கள். விஜய், சூர்யாவைத் தொடர்ந்து விக்ரம், தனுஷ் என்று தமிழில் பிஸியாகிருக்கும் சமந்தாவின் இடத்தை அசைத்துப் பார்க்க அடுத்த கட்டப் புதுமுகங்கள் என்று இன்னும் யாரும் வரவில்லை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago