கிரேசியைக் கேளுங்கள் 24- கிச்சாவும் கிரிக்கெட்டும்...!

By கிரேசி மோகன்

கிச்சாவும் கிரிக்கெட்டும்… இந்த வாரமும் தொடர்கிறது.

டாஸில் கெலித்த கிச்சா, அசா ருதீன் அறிவுரைப்படி உலக அணி கேப்டன் ஆலன் பார்ட ரிடம் ‘‘மொதல்ல… நீ ஆடுறா மவனே’’ என்று சொல்லிவிட்டு, ‘‘வெவ் வெவ்வே…’’ என்று பரிகாசம் செய்ய ஆலனின் குடல் கலங்கியது.

ஆட்டம் தொடங்கியதும் ஸ்லிப்பில் நிற்க வைக்கப்பட்ட கிச்சா, பாம்புக்கும் கீரிக்கும் சண்டைவிடும் மோடிமஸ்தான் போல ‘‘ஆஸ்மாமி கொண்டி முறுக்கு ஜலோதாஸ்மி சீல்மே ஹடா படாஹை…’’ என்று வாய்க்கு வந்த மந்திரத்தைச் சொல்லிவிட்டு, கிரஹாம் கூச்சின் காதுபட ‘‘மவனே… இத்தை சொன்னா எதிரி முட்டை முட்டையா கக்குவான்’’ என்று கூவ, கூச் பயத்தில் பேச்சுமூச்சானதில் அவர் ஸ்டம்ப் பல்டி அடித்தது.

அடுத்ததாக இயான் போதம் ஆடும்போது ‘‘வல்ல பூதம் வாலாஷ்டிக பூதம் அல்லல்படுத்தும் அடங்காமுனி பூதம்…’’ என்று கந்தர் சஷ்டி கவசத்தின் வரிகளை வாய்க்கு வந்தபடி கிச்சா ஜெபிக்க, அதில் அடிக்கடி வரும் ‘பூதம்’ என்கிற வார்த்தை அவர் காதில் ‘போதம்’ என்று விழ, தனக்கு இந்த இந்திய மந்திரவாதி ஏதோ பிளாக் மேஜிக் செய்து சூனியம் செய்வதாக நினைத்து பயந்ததில், ஒரு நோ பாலுக்கு ஆடாமலேயே நடுக்கத்துடன் ஓடி… ரன் அவுட் ஆனார்.

இப்படி கிச்சாவால் இரண்டு விக்கெட் வீழ்ந்த சந்தோஷத்தில் அசாரு தீன் அன்புப் பரிசாக அவனுக்கு பவுலிங் போட சான்ஸ் தந்தார்.

பந்து போடுவதற்கு முன்பாக அம்பய ரிடம் கிச்சா, தான் போட்டிருந்த ஸ்வெட்டர், ஷர்ட், உள்பனியன், தலையில் இருந்த தொப்பி, கழுத்திலும் கையிலும் போட்டிருந்த செயின், மாலைகள், தாயத்து ரட்சைகள்... ஒவ்வொன்றையும் ஜப்ஜாடாக நிதான மாகக் கழற்றித் தந்து அம்பயரை ‘கோட் ஸ்டாண்ட்’ ஆக்கினான்.

ஒவ்வொரு ஓவரும் தொடங்கும் முன் னால் கழற்றித் தருவதும், ஓவர் முடிந்ததும் திரும்ப வாங்கிப் போட்டு கொள்வதுமாக கிச்சா நீண்ட நேரத்தை எடுத்துக்கொண்டதால் அதை ஈடுகட்ட, ஏற்கெனவே 45 ஓவருக்கு சுருங்கிய மேட்ச் இப்போது 35 ஓவராக முடங்கியது.

விக்கெட் கீப்பர் முதல் எல்லா ஃபீல்டர் களையும் பெவிலியனுக்கு அனுப்பி விட்டு, ஒண்டிக்கு ஒண்டியாக கிச்சா மட்டும் பவுல் செய்ய, இந்த தந்திரத்தின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்ற அநாவசிய கவலையில் டேவிட் பூன், கிச்சா உருட்டிவிட்ட பந்தை காலில் வாங்கிக்கொண்டு எல்.பி.டபுள்யூ ஆகி ‘டேவிட் பஃபூன்’ ஆனார்.

அடுத்து வந்த கேப்டன் ஆலன் பார்டரைக் கறுவியபடி குரோதத்தோடு பந்தை பாக்கெட்டில் ஒளித்துவைத்துக் கொண்டு பஸ், ஆட்டோ பிடித்து வந்து போடுமளவுக்கு வெகுதூரம் நடந்து போய்விட்டு, பிறகு கொஞ்சம் ஓட்டம், கொஞ்சம் நடை, கொஞ்சம் பாப்பாநொண்டி என்ற கணக்கில் அம்பயருக்கு அருகில் வந்ததும், கையில் பந்து இல்லாததைப் பார்த்து ‘‘ஸாரி… அம்பயர் ஸார்…’’ என்று சொல்லிவிட்டு, பாக்கெட்டில் இருந்த பந்தை எடுத்து மறுபடி பழையபடி ‘பெவிலியனை’ நோக்கி ‘காசி யாத்திரை’ போக, அலுப்பில் மப்பாகிப் போன ஆலன் பார்டர், இருபது முறை பிட்சாகி இறுதியில் நத்தை போல் நிதானமாக உருண்டு வந்த கிச்சாவின் ஒரு பந்தை காலில் வாங்கிக் கொண்டு, அம்பயர் அவுட் சொல்வதற்குள் ‘ஆளை விட்டாப் போதும்டா சாமீ…’ என்ற அவஸ்தையில் ஸ்போர்டிவ் ஆக உள்ளே போனார்.

ஏற்கெனவே பச்சிலை, மருதாணி, மூலிகைகளை அரைத்து எச்சுமி பாட்டி தயாரித்த ‘சன் க்ரீம்’ களிம்பை முகத்தில் அப்பிக்கொண்டு, எல்லைப் பிடாரி போல இருந்த கிச்சாவைப் பார்த்து பயந்து போய், புதிய பேட்ஸ்மென் வரலாமா என்று யோசித்து முடிப்பதற்குள், ‘பேய் மழை…’ வந்து ஆட்டம் நின்றது. அதுவரை கழுதையாகத் தேய்ந்த 50 ஓவர்கள், கட்டெறும்பாக 20 ஓவருக்கு சுருங்கியது.

பேட்டிங்கின்போது உலக அணியைக் கிச்சா வேறு விதமாகப் பழிவாங்கினான். காந்த் அடித்துவிட்டு ஒரு ரன் எடுப்பதற்குள், தில்லக்கேணியில் தெருநாய் துரத்தலுக்கு பயந்து பி.டி.உஷா கணக்கில் ஓடி பழக்கம் உடைய கிச்சா ஒன்பது ரன்கள் எடுத்தான். யார் எடுத்த ரன்னை கணக்கில் காட்டுவது என்று தெரியாமல் குழம்பிய ஸ்கோர் போர்டு, சமரசமாக காந்த் எடுத்த ஒரு ரன்னையும், கிச்சா ஓடிய ஒன்பது ரன்களையும் கூட்டி இரண்டால் வகுத்து ஆளுக்கு ஐந்து எனக் காட்டியது.

கடைசியாக இருபது ஓவர்களில் உலக அணி எடுத்த அதே ரன்களை இந்திய அணி எடுத்ததால் முடிவு சொல்ல முடியாத சூழ்நிலை உருவானது. முடி வைச் சொல்வதில் ரோஷக்காரர்களான ‘பென்ஸன் அண்ட் ஹெட்ஜஸ்’ நிறுவனத் தார், இறுதியாக இரண்டு அணியிலும் ஆடிய ஆட்டக்காரர்களின் வயது, எடை, உயரம், ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, அங்க அடையாளம் போன்ற புள்ளிவிவரங்களை பலவந்தமாக கம்ப்யூட்டரில் போட்டுத் திணித்துக் கலக்கியதில்... கிச்சாவுக்கு இருந்த ABC பாஸிட்டிவ் என்கிற அபூர்வமான ரத்த குரூப்பால் (ABC: ஆஸ்திரேலியன் போர்டு ஆஃப் கிரிக்கெட்) இந்திய அணிக்கு எக்ஸ்ட்ரா ஒரு பாயிண்ட் கிடைக்க... இந்திய அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது!

‘ரத்தத்தின் ரத்தமான’ கிச்சாவுக்கு ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ அவார்டும், அவனுக்கு பக்கபலமாக இருந்த எச்சுமி பாட்டிக்கு ‘வுமன் ஆஃப் தி மேட்ச்’ அவார்டும் வழங்கினார்கள். அந்த ஒரு வாரத்தில் கிச்சா ஆஸ்திரேலியாவில் கங்காருவுக்கு அடுத்தபடியாக ரொம்பவும் பிரபலம் ஆனான்.

கிச்சா எனக்குச் சொன்ன இவையெல் லாம் ‘கற்பனையா… இல்லை காட்சிப் பிழையா’ என்பதை நானறியேன். எது எப்படிப் போனால் என்ன, இன்று பிரபல மான 20 - 20 வரப் போவதை, அன்றே 50 - 50ஐ ஹாஸ்யமாகக் குறைத்து ஜோஸ்யம் ஆக்கினான் கிச்சா.

பின் குறிப்பு:

கிச்சா பவுண்ட்ரி அடிக்கும்போது எல்லாம் எச்சுமி பாட்டி டான்ஸ் ஆடி, இன்றைய ‘சியர் லீடர்ஸுக்கும்’ முன்னோடியாக இருந்தது மற்றுமொரு ஜோஸ்யம். இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகவில்லை. தோனி அணியில் கிச்சாவைச் சேர்த்துக்கொண்டால் இந் தியாவுக்கு ‘வேர்ல்டு கப்’ கிடைக் காவிட்டாலும், நிச்சயமாக ‘வேர்ல்டு சாஸராவது’ கிடைப்பது உறுதி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்