கிரேசியைக் கேளுங்கள் 26- சிவாஜி கையால் விருது!

By கிரேசி மோகன்

எஸ்.கதிரேசன், துறையூர்.

சிவாஜி கணேசனைச் சந்தித்த அனுபவத்தைப் பற்றி கூறுங்களேன்?

சிறு வயதில் எனக்குப் பிடித்த விளை யாட்டு, எந்தப் பேப்பரைப் பார்த்தாலும் எந்தக் காலி சுவரைப் பார்த்தாலும் முதல் காரியமாக அதில் ‘சிவாஜி வாயிலே ஜிலேபி’ என்கிற சதுரத்தை எழுதுவது தான். இந்த விநோத சதுரத்தை நீளவாக் கில், அகலவாக்கில் என்று எப்படி வாசித்தாலும் ‘சிவாஜி வாயிலே ஜிலேபி’ என்றுதான் வரும்.

பெரியவனானதும் இந்த விளையாட்டு வேறு விதமாக தீவீர மானது. இரண்டு வாரங்கள் அடையார் ஈராஸ் தியேட்டரில் ஓடிய நடிகர் திலகம் சிவாஜியின் ‘நிச்சயத் தாம்பூலம்’படத்தை ‘மோகன் வந்தாச்சா... படம் ஆரம் பிக்கலாமா?’ என்று தியேட்டர் ஆப் பரேட்டர் கேட்கும் அளவுக்கு அத்தனை ஷோக்களையும் பார்த்தேன்.

‘படைத்தானே…’ என்று சிவாஜி சாரின் சோலோ பாடலை சக மாணவர்களு டன் விசிலடித்தபடி கண்டு மகிழ்ந்திருக் கிறேன். ஆமாம்! சிவாஜி சார் வாய் வழி யாக பாட்டோ, வசனமோ… வந்தால் அது ஜிலேபி போலத்தானே இனிக்கும்!

என் நண்பன் என்னை சீண்டுவதற்கா கவே ‘சிவாஜி ரொம்ப Over Acting’ என்பான். அதற்கு நான் ‘சிவாஜிக்குப் பிறகு Actin Over’ என்பேன். இதைப் பின்னாளில் பல இடங்களில் சொல்லி ‘கிளாப்ஸ்’ வாங்கியிருக்கிறேன்.

சிவாஜி பேசினாலும், சிவாஜியைப் பற்றிப் பேசினாலும் கிளாப்ஸ் வரும் என்பதைப் புரிந்துகொண்டேன். அந்த நடிகர் திலகம் கையால் ஒருநாள் நானும் விருது வாங்குவேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை. எப்போதுமே நினைக்காத கனவுதானே பலிக்கும்!

கமல் சாரின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் வெள்ளி விழா வள்ளுவர் கோட்டத்தில் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. எதையும் வித்தியாசமாக செய்யும் கமல் சார், தெலுங்கில் இருந்து நாகேஸ்வர ராவ், மலையாளத்தில் இருந்து மது, தமிழில் இருந்து சிவாஜி என்ற மூவர் அணியை மேடையில் கவுரவ விருந்தினர்களாக உட்கார வைத் தார். தோட்டாதரணி, பி.சி.ராம், பி.லெனின், வசனம் எழுதிய அடியேன்… இப்படி எல்லோருக்கும், சிறப்பு விருந்தினர்கள் தலா 6 பேர் என்கிற கணக்கில் விருது வழங்கினார்கள்.

‘நிச்சயத் தாம்பூலம்’ சிவாஜி சார் கையால் விருது வாங்க மனசுக்குள் திடமாக ‘நிச்சயித்து’ வாயில் போட்டிருந்த ‘தாம்பூலத்தை’ துப்பாமல் முழுங்கி டென்ஷனாக அமர்ந்திருந்தேன். கமல் சார் ‘குள்ள’ அப்புவாக வந்து கலைஞரிடம் தனக் கான விருதை வாங்கிச் சென்றார். பிறகு, நிகழ்ச்சியைத் தொகுத்தவர் படத்தில் பணியாற்றியவர்களின் பெயர்களைத் தொடர்ந்து படிக்க, ஒவ்வொருவராக மேடையேறி அந்த மூவரில் ஒருவரிடம் விருதினை வாங்கிச் சென்றார்கள்.

‘கைக்கு எட்டிய சிவாஜி, ஜிலேபியாக விருது வழங்கி என் வாய்க்கு எட்டுவாரா?’ என்ற கனவில் வசனகர்த்தாவான அடியேன் விசனகர்த்தாவானேன். எந்த தெய்வத்தை வேண்டினால் என்னுடைய நேயர் விருப்பம் நிறைவேறும் என்று எண்ணியபடி மேடையில் அமர்ந்த கலைஞரைப் பார்த்ததும், ‘பராசக்தி’ நினைவுக்கு வந்தாள். அவளிடம் வேண்டிக்கொண்டேன். அப்புறமென்ன சிவாஜியை அறிமுகப்படுத்திய ‘பராசக்தி’ சிவாஜிக்கு என்னை அறிமுகப் படுத்தினாள். அந்த சிங்கத்தின் கையால் அன்று விருது வாங்கியது என் அதிர்ஷ்டம்!

பிறகு சிவாஜியின் மைந்தர் பிரபுவுக்காக ‘சின்ன மாப்ளே’, ‘சின்ன வாத்யார்’, ‘வியட்னாம் காலனி’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதியபோது சிவாஜி சாரின் போக் ரோடு அன்னை இல்லத்துக்குச் செல்லும் பாக்யம் கிடைத்தது. அப்போது சிவாஜியை சந்தித்து சகஜமாக உரையாடு வேன். ஒவ்வொருமுறையும் பேச்சு முடியும்போது மறக்காமல் ‘தம்பி… நாடகத்தை விட்டுறாதீங்க!’ என்பார் நடிகர் திலகம். ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... இந்துவே இந்துவே… தமிழ் இந்துவே..!’

பா.பிரபு, கிருஷ்ணகிரி.

‘இது சத்தியம்’ என்று ஒரு சினிமா வந்தது. இதனால் எனக்கு ஒரு கேள்வி வந்தது. எது சத்தியம்..?

சத்தியம் ஒன்றுதான். அது ‘பல’ அல்ல. உதாரணத்துக்கு பசி ஒன்றுதான். அதைப் போக்கிக் கொள்வதில் ‘பல’வாகிறோம் (ஃபைவ் ஸ்டார் ஹோட்டல், கையேந்தி பவன், பிச்சை என்று) சத்தியம், சச்சின் டெண்டுல்கர் கைகளில் கிரிக்கெட்டாக, இளையராஜா கைகளில் சங்கீதமாக, ‘ஹிண்டு’ கேசவ் கைகளில் ஓவியமாக, சுஜாதா சார் கைகளில் எழுத்தாக.

இப்படி ஒரே உண்மை (சத்தியம்) பன்மையாகிறது. இந்தியாவுக்கு பகல்; அமெரிக்காவுக்கு இரவு. சத்தியமும் சூரியனும் ஒன்றுதான். ஹண்ட்ரட் வாட்ஸ் பல்ப், ஏசி, வாஷிங் மெஷின், ஃபிரிஜ் என்று பல உபகரணங்கள் இருந்தாலும், அவற்றை இயக்கும் மின்சாரம் என்ற சத்தியம் ஒன்றுதான். அந்த ஒன்றோடு ஒன்றியிருத்தலே ‘இயற்கையோடு இணைந்து’ வாழ்தல் ஆகும்!

சி.சாருகேசி, மதுரை-3.

‘கன்னத்தில் குழி விழுந்தால்’, ‘முது கில் மச்சம் இருந்தால்’ அதிர்ஷ்டம் அடிக் கும் என்கிறார்களே மெய்யாலுமா சார்?

பள்ளியில் படிக்கும்போது என் வகுப்பில் பெருமாள் என்று ஒரு சக மாணவன் இருந்தான். அவன் கன்னத்தில் ‘இவ்விடம் ஆட்கள் வேலை செய்கிறார்கள்…’ என்று போர்டு வைக்கும் அளவுக்கு குழி விழும். மழை பெய்தால் தண்ணி தேங்கும் அளவுக்கு பெருமாளின் கன்னத்தில் அரண்மனை அகழி சைஸுக்கு குழி.

ஆனால், பாவம் வகுப்பில் யார் எந்தத் தப்பு செய்தாலும் தமிழ் வாத்தியார் கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் பெருமாளின் கன்னத்தில்தான் பேயாழ்வார் அறை ஸாரி... பேயறை அறைவார். தமிழ் வாத்தியார் பெயர் லக்குமணன். பெருமாளுக்கு இப்படியாக அதிர்ஷ்டம் (Luck குமணன்) அடிக்கும். இளமையில் கன்னத்தில் குழி விழுந்தால் பெருமாளின் ‘லக்கு’. அதுவே கிழமான பின்பு விழுந்தால் ‘டொக்கு’.

சமீபத்தில் பள்ளி நண்பன் பெரு மாளை மாம்பலத்தில் பார்த்தேன். கன்னத்தில் குழி ‘மாம் பள்ளமாக’ இருந்தது. கோயில் வாசலில் பாது (கைக்)காக்கிறான். கூட அவன் பையன் நவநீதன். சொக்காய் போட்டுக்கொள்ளாமல் அப்பனுக்கு உதவியாக செப்பல் எடுத்து வைக் கிறான். நவநீதன் முதுகில் ‘மச்சம்’ போக கொஞ்சம் முதுகும் இருந்தது!

- இன்னும் கேட்கலாம்…

எம்.ரமேஷ், சேலம்.

செல் வெண்பா ஒன்று ப்ளீஸ்..?

‘கற்றோர்க்கு சென்ற இடம்மட்டுமேசிறப்பு

மற்றோர்க்கு வீட்டில் மதிப்புசெல் - உற்றோர்க்கோ

ரோமிங் கிலும்பகல் ராத்திரியும் ஈரேழு

பூமிங்க சுற்றிவரும் பார்’

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்