ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஒருசேர ஈர்க்கும் படங்களைத் தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் தயாரிப்பாளர்கள் தற்போது தமிழ் சினிமாவில் பெருகிவிட்டார்கள். அவர்களில் ஒருவர் ஜெ.எஸ்.கே. பிலிம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பட நிறுவனத்தை நடத்திவரும் ஜெ. சதீஷ் குமார்.
இவரது தயாரிப்பில் உருவான படங்கள் தொடர்ந்து தேசிய விருதுகளை பெற்றுவரும் நிலையில், இந்த ஆண்டு ‘குற்றம் கடிதல்’ சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருதை வென்றிருக்கிறது. அந்த மகிழ்ச்சியில் இருந்தவரை சந்தித்தோம்.
கவனமும் விருதும் பெரும் படங்களின் தயாரிப்பாளர் என்ற அடையாளம் நீங்கள் விரும்பி ஏற்றுக்கொண்டதா?
எந்தத் துறையாக இருந்தாலும் செய்யும் வேலைக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும்போது ஏற்படுகிற உற்சாகத்துக்கும் மகிழ்ச்சிக்கும் இணையாக எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். சினிமாவில் இன்னும் ஒருபடி மேலே சென்று ஊரறிய உலகறிய அங்கீகாரம் கிடைக்கிறது. அதனால் படம் தயாரித்தால் நல்ல படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தானாகவே உருவாகிவிட்டது. நல்ல படம் என்றால் அது விருதுக்கான படம்; அது பார்க்கப் போரடிக்கும் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.
எனது பார்வையில் நல்ல படங்கள் என்பவை விறுவிறுப்பானவை, அனைத்து வயதினரும் கொண்டாடக்கூடியவை. இதுபோன்ற படங்களைத் தொடர்ந்து தயாரிக்கும்போது ஒரு கட்டத்தில் எனது நிறுவனத்தின் மீது மரியாதை வந்து சேர்ந்துவிட்டது.
அதை மேலும் வலுப்படுத்திக்கொள்ள எனது நிறுவனத்தின் மீது அனைவரது பார்வையும் பட வேண்டும் என்பதற்காகவே பாலாவின் ‘பரதேசி’ படத்தின் தயாரிப்பாளராக மாறினேன். அதேநேரம் நான் விருதுக்காகப் படம் எடுப்பவன் அல்ல. நான் எடுக்கும் நல்ல படங்களுக்குக் கிடைக்கும் விருதுகள் எனது படங்களுக்கு வியாபார ரீதியான ஊக்கத்தையும் கொடுக்கக்கூடியது, அவ்வளவுதான்.
அகலக் கால் வைக்க அவசியமில்லாத கதைகள்தான் உங்கள் தேர்வா?
கதைத் தேர்வுதான் நாம் எந்த மாதிரியான படத்தை எடுக்கப் போகிறோம் என்பதையும் நம் சரியான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறோமா என்பதையும் நமக்குச் சுட்டி காட்டிக்கொண்டே இருக்கும். நான் தயாரித்த ‘ஆரோகணம்’ படத்தின் கதையை எடுத்துக்கொள்ளுங்கள். அசாதாரண நோய் ஒன்று வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிடும் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் வாழ்க்கைப் போராட்டம்.
அவளது அந்தப் போராட்டத்தைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, கணவனும் அவளது பிள்ளைகளும் அதை எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்பதை இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் சித்தரித்த விதம் நம்மை உலுக்கவும் நெகிழவும் செய்தது. அந்தப் படத்தின் மொத்தப் பட்ஜெட் வெறும் 28 லட்சம்தான். எனது முதலீட்டைப் போல் இரு மடங்கு லாபம் ஈட்டி தந்த படம்.
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் பல மொழிகளில் மறுஆக்கம் செய்யப்பட்டுவிட்டது. அதன் கதையைக் கேட்டபோது இது வெற்றிபெறும் என்று நினைத்தீர்களா?
எல்லா இந்திய மொழிகளிலும் என்பதை அழுத்தமாககச் சொல்ல வேண்டும். மராட்டி, பெங்காலி உட்பட எல்லா இந்திய மொழிகளிலும் எடுத்துவிட்டார்கள். மலையாளத்தில் அத்தனை சீக்கிரம் தமிழ்க் கதைகளை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களே ரீமேக் செய்துவிட்டார்கள்.
அந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டியபோது இதில் கதாநாயகி இரண்டாம் பாதியில்தான் வருகிறார் இந்தப் படம் தேறாது என்றார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையின் தாக்கத்திலிருந்து உருவான கதை, இது தப்பு பண்ணாது என்று நம்பினேன். அப்போது விஜய் சேதுபதி பிரபலமான நடிகர் கிடையாது. ஆனால் கதை, திரைக்கதை, காட்சியமைப்பு, இயக்கம், நடிப்பு ஆகிய அனைத்து அம்சங்களும் கொண்டாடப்பட்டுப் பிளாக்பஸ்டர் ஆகிவிட்டது.
நேரடியாகப் படங்களைத் தயாரிக்கும் அதேநேரம்; எடுத்து முடித்த படங்களை மொத்தமாக வாங்கிக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்?
முழுமையாக ஒரு படம் முடிந்த பிறகு அந்தப் படத்தைத் திரையில் பார்த்துவிட்டு, இந்தப் படம் நன்றாக இருக்கிறது என்று தெரிந்தால் மொத்தமாக நெகட்டிவ் உரிமையை வாங்கிவிடுவது மிகவும் பாதுகாப்பானது. ஒரு நல்ல படத்துக்கான கதையை அவர் கொண்டுவருவார், இவர் கொண்டுவருவார் என்று காத்திருந்து கதை கேட்டு, அதன் பிறகு அந்தக் கதைக்கு அவர் ஒரு பட்ஜெட் கொடுத்து, அந்தப் பட்ஜெட்டை நாம் ஓகே செய்து படப்பிடிப்புக்குப் போக வேண்டும்.
போன பிறகுதான் தெரியும் சொன்ன பட்ஜெட்டை மீறிப் படமெடுத்துக்கொண்டிருப்பார்கள். கண் மூடி திறப்பதற்குள் ஒரு கோடி செலவாகியிருக்கும். செலவான ஒரு கோடியை எடுக்க மேலும் மூன்று கோடி செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்படும். சரி செலவும் செய்தாகிவிட்டது. சொன்ன கதையாவது எடுப்பாரா என்றால் கதையாகக் கேட்ட உணர்வைப் படம் கொடுப்பதில்லை.
ஆனால் எல்லா அறிமுக இயக்குநர்களும் இப்படிச் சொதப்பக்கூடியவர்கள் அல்ல. அதேநேரம் இந்த ரிஸ்கிற்குள் போக வேண்டாம் என்றுதான் எடுத்து முடித்த படத்தைப் பார்த்து அதன் தரத்துக்கு ஏற்ப விலையைப் பேசி வாங்கிக்கொண்டு பிறகு அதை வெளியிடுவதற்கான வேலைகளை ஆரம்பிக்கிறேன்.
தங்க மீன்கள் - இப்போது குற்றம் கடிதல் அடுத்தடுத்துத் தேசிய விருதைப் பெற்றிருக்கும் நிலையில் எப்படி உணர்கிறீர்கள்?
மிகப் பெருமிதமான தருணம் இது. என்னை மென்மேலும் நல்ல படங்களைத் தயாரிக்க இது தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறது. ‘குற்றம் கடிதல்’ திரைப்படத்திற்குக் கிடைத்துவரும் விருதுகளாலும், பாராட்டுகளாலும் மக்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.
இந்த எதிர்பார்ப்பு வியாபார ரீதியிலும், மக்களுக்குப் படத்தைத் திரையரங்குகள் வழியாகவும் இன்ன பிற வழிகளிலும் எடுத்துச் செல்வதையும் எளிதாக்கிவிட்டது. மிக விரைவில் இப்படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடந்துவருகின்றன.
குற்றம் கடிதல் படத்தின் வெளியீட்டைத் தள்ளிக்கொண்டே வந்ததற்குக் காரணம் அதற்குக் கண்டிப்பாக விருது கிடைக்கும் என்ற உங்கள் ஊகமா?
அதுவும் ஒரு காரணம். தவிர ஒரு நல்ல வெளியீட்டு தேதிக்காகக் காத்திருந்தோம். அதற்குள் உலகக் கோப்பை வந்துவிட்டதால் வெளியீட்டை மார்ச்சுக்குப் பிறகு வைத்துக்கொள்ள முடிவு செய்தோம். இப்போது விருது கிடைத்துவிட்டது. இனி நான் கூவிக் கூவி படத்தை விற்கவேண்டியதில்லை.
உங்களது சினிமா ரசனை எங்கே எப்படி உருவானது?
சினிமாவைக் கடந்து வராத வாழ்க்கை என்று இங்கே யாருக்கும் அமைவதில்லை. அப்படித்தான் . எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி ரசிகன் என்று கடந்து பிறகு நட்சத்திரங்கள் சினிமாவுக்குத் தேவைப்பட்டாலும் பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம், பாலா மாதிரியான இயக்குநர்களின் ஊடகம் என்ற ரசனையை நமது திரையங்குகள் வழியாகவே வளர்த்துக்கொண்டேன்.
கல்லூரி படிக்கும்போது சினிமாவின் ஏதாவது ஒரு துறையில் நுழைய வேண்டும் என்று நினைத்தேன். முதலில் சிறிய அளவில் சினிமா விநியோகம் செய்ய ஆரம்பித்தேன். பிறகு தமிழ்நாடு முழுவதும் படங்களை வெளியிட ஆரம்பித்துச் சினிமா விநியோகத் தொழிலை முழுமையாகக் கற்றுக்கொண்டேன். பிறகுதான் சினிமா தயாரிப்புக்கு வந்தேன்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago