கிரேசியைக் கேளுங்கள் 23 - ஜோஸ்யம் ஹாஸ்யம் ஆவது எப்போது..?

By கிரேசி மோகன்

ஜோஸ்யம் ஹாஸ்யம் ஆகுமா என்கிற ஜோஸ்யம் எனக்குத் தெரியாது. ஆனால், அடியேன் எழுதிய கிரிக்கெட் கற்பனை ஹாஸ்யம், எனக்கே ஆச்சரிய ஜோஸ்யமாக பலித்துள்ளதைப் பகிர்ந்துகொள்கிறேன்.

பகிர்வதற்கு முன் உங்களிடம்… எனது கற்பனைக் கதாநாயகன் தில்லக்கேணி (திருவல்லிக்கேணி தாதா பரிபாஷையில்) கிச்சாவையும், அவனுடைய எச்சுமி பாட்டியையும் அறிமுகப்படுத்துகிறேன். எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியின் ‘அப்புசாமி - சீதா பாட்டி’, சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ இந்த இரண்டின் கலவை பாதிப்புதான் ‘கிச்சா - எச்சுமி பாட்டி’.

‘பென்ஸன் அண்ட் ஹெட்ஜஸ்’ கிரிக்கெட் உலகக் கோப்பை ஆட்டம் தொடங்கும் முன்பு, ஆட்ட விதிகளைத் தீர்மானிக்க, அசாருதீன் தலைமையிலான இந்திய அணிக்கும், ஆலன் பார்டர் தலைமையிலான உலக அணிக்கும் இடையே, ஒரு ‘டே அண்ட் நைட்’ 50-50 மேட்ச் சிட்னி மைதானத்தில் நடந்தது.

அந்த மேட்சில் இந்திய அணியில் விளையாடி, ஆல் ரவுண்டராக ஜமாய்த்து, மேன் ஆஃப் தி மேட்ச் அவார்டாக டோனி கிரெய்க்கிடம் வாங்கிய கோப்பையில், எச்சுமி பாட்டியின் ‘கண்ட திப்பிலி சாத்தமுது’வை (ரசம்) ஊற்றிக் குடித்துக்கொண்டே ‘‘பாட்டி ரசத்துல ஸால்ட் கம்மி’’ என்று அசால்ட்டாக கூறி என்னை அசத்தினான் கிச்சா.

அலாவுதீன் எலெக்ட்ரிகல் கடையில் பல்பு வாங்கிய கிச்சாவுக்கு குலுக்கல் முறை பரிசுப் போட்டியில், எச்சுமி பாட்டியுடன் சிட்னி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சிட்னி ஹோட்டலில் எச்சுமி பாட்டியைத் தேடி… கிச்சா ஒவ்வொரு அறையாக திறந்துப் பார்க்க... அங்கே தான் கும்பிடப் போன கிரிக்கெட் தெய்வங்கள் அசாருதீன், காந்த், சச்சின் டெண்டுல்கர் இருப்பதைப் பார்த்து சந்தோஷம் பொங்கி… அடிக்கடி தில்லகேணி பார்த்தசாரதி பெருமாளை சேவிக்க வரும் ஸ்ரீகாந்துடன் புளியோதரை எண்ணெய் பிசுபிசுப்பாக ஈஷிக்கொண்டு, அவர் மூலம் மற்ற வீரர்களுக்கு நண்பனானான்.

அன்று இரவு ஹோட்டல் மொட்டை மாடியில், இந்திய கிரிக்கெட் வீரர்களின் நடுவில் அமர்ந்த எச்சுமி பாட்டி ‘ பலாப் பழ பருப்புருண்டை வத்தக் குழம்பு’ சாதத்தைப் பிசைந்து உருட்டி காந்த், காம்ப்ளி, கிரன்மோரே என்று பேர் சொல்லி ‘கேட்ச் பிராக்டீஸ்’ போல வீசி எறிய... நம் வீரர்கள் பாட்டி எறிந்த சோத்து உருண்டையை கேட்ச் பிடித்து உண்டார்கள்.

மறுநாள் மேட்ச். ஹாங்காங்கில் தங்கிவிட்டதால் கபில்தேவால் ஆட முடியவில்லை. ரவி சாஸ்திரிக்கு உடம்பெல்லாம் பிளாஸ்திரி. எச்சுமி பாட்டியின் காரக் குழம்பை சாப்பிட்டதால் சச்சின் டெண்டுல்கருக்கு சுமாரான பேதி என்றால், சஞ்சய் மஞ்சரேக்கருக்கு பெரிய அளவில் பிஷன் சிங் பேதி… ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற மனோபாவத்தில் இருந்த அசாருதீனும், அப்பாஸ்அலி பெய்க்கும் ‘பத்தோடு சேர்த்து பதினொன்றாக… விட்டேத்தியான விரக்தியில், கிச்சாவை டீமில் சேர்த்துக் கொண்டார்கள்.

அன்று இரவோடு இரவாக புது பிளேயர் கிச்சாவுக்கு, நீல கலர் பேண்டும் ஷர்ட்டும் தைக்கப்பட்டது. சிட்னி மைதானத்தின் ஓரத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து பிராணாயாமம் செய்ய ஆரம்பித்த, கிச்சாவின் இரண்டு நாசி துவாரங்களும் ‘சிக்ஸராய்’ விரிந்து ‘சிங்கிளாய்’ சுருங்குவதை, உலக அணியினர் முதலில் நக்கலாகப் பார்த்தார்கள்.

அடுத்து கிச்சா, சிட்னி மைதானத்தை ஆறு தபா சுற்றிவிட்டு, கையோடு கையாக இரண்டு தபா அங்கப் பிரதட்ஷணம் செய்துவிட்டு வேர்த்தல், விறுவிறுத்தல் இல்லாமல் சர்வ சாதாரணமாக அடிப் பிரதட்ஷணம் செய்வதைப் பார்த்த உலக அணியினர், தங்களையும் அறியாமல் வியப்பில் மூக்கில் விரல் வைத்து பிராணாயாம போஸ் கொடுத்தார்கள். எச்சுமி பாட்டி தந்த திராவகம் போல் கொப்பளித்துக் கொண்டிருந்த மோரை, கிச்சா இரண்டு சொம்பு குடித்துவிட்டு ‘சிட்னி’ சட்னி ஆகும் அளவுக்கு விட்ட ‘டால்பி டிஜிட்டல்’ ஏப்பத்தால் டி.வி கவரேஜுக்காக கொடுக்கப்பட்ட சேட்டிலைட் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தனது ஆள்காட்டி விரலிலும், கட்டை விரலிலும் பிளாஸ்திரி போட்டிருந்ததால் ‘டாஸ்’ கூட போட முடியாமல் இந்திய அணியின் கேப்டன் அசாருதீன் தவித்தபோது, மக்கு பிளாஸ்த்திரி கிச்சா.... டாஸ் போடக் கொடுத்த நாணயத்தை ஒத்தை விரலில் பேலன்ஸ் செய்துவிட்டு சுண்டி எறிய, அது மேகக் கூட்டத்தில் மறைந்து 15 நிமிடங்களுக்குப் பின் ‘டாஸ்மார்க்’ ஆசாமி போல தள்ளாடி வந்தது.

இதனால் தாமதத்தை ஈடுகட்ட விதிமுறைப்படி 50 ஓவர் மேட்ச் 48 ஓவர் மேட்ச் ஆகக் குறைக்கப்பட்டது. வரவே வராது என்று அம்பயர் நினைத்த ‘ஹெட் ஆர் டெயில்’ நாணயம், ஆடி அசைந்து வருவதைக் கண்டு ஆலன் பார்டர் அவசரஅவசரமாக ‘ஹெட்டா டெயிலா’ என்றுகேட்க, ‘பூவா தலையா’ பழக்கதோஷ கிச்சா… பூவை ஆங்கிலத்தில் ‘ஃப்ளவர்’ என்று உளற, அதனால் நிகழ்ந்த களேபரத்தில் ‘டாஸ்’ இரண்டாம் முறை போட, இதனால் ஏற்பட்ட தாமதத்தை ஈடுகட்ட விதிமுறைப்படி அம்பயர் மூணு ஓவரைக் குறைக்க, ஆட்டம் தொடங்கும் முன்பே 50 - 50 மேட்ச் 45 - 45 மேட்ச்சாக சிறுத்தது.

- அடுத்த வாரம்... கிச்சாவின் ‘ஸாரி கொஞ்சம் ஓவர்’ ஹாஸ்யம் கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்