காட்சிகளை தியானித்த இளைஞன்! - ஆடுகளம் கிஷோர் அஞ்சலி

By செழியன்

ஆடுகளம் படத்தின் இடைவேளைக்கு முந்திய காட்சிகளைப் பார்த்து வியந்து போய் எடிட்டர் யார் என்று தேடினேன். அப்போதுதான் கிஷோர் என்கிற பெயர் எனக்கு அறிமுகம். பரதேசி படத்தில் நேரில் அறிமுகமானோம். அவரது எளிமையும் யாரிடமும் தயக்கமின்றிப் பழகும் தன்மையும், யாருக்கும் உதவுகிற அன்பும், நல்ல சினிமா குறித்த தொடர்ந்த அவரது தேடலும், எந்தப் படம் குறித்தும் தனக்குத் தோன்றுகிற விஷயம் பற்றி வெளிப்படையாகப் பேசுகிற தன்மையும், எனக்குப் பிடிக்கும்..

“எடிட்டிங் எனக்குப் பிடிச்ச விஷயம் கிஷோர்” என்று சொன்னேன். “உங்ககிட்ட மேக் புக் இருக்குல்ல சார்” என்று கேட்டவர், மறுநாள் வரும்போது எஃ.சி.பி (Final Cut Pro) எனும் மென்பொருளுடன் வந்தார். எனது லேப்டாப்பில் அதை உள்ளிட்டுக் கொடுத்து அடிப்படையான சில விஷயங்களை உடனே சொல்லிக்கொடுத்தார்.

பணிவும் அன்பும்தான் ஒரு உண்மையான கலைஞனின் அடிப்படையான குணமாக இருக்கமுடியும். தனக்குத் தெரிந்தது குறித்து எந்தப் பிரலாபமும் இல்லாமல் “அது ஒண்ணும் இல்ல சார்..ரொம்ப ஈஸி.. உங்க லேப்டாப் கூட வேணாம் இந்த மெஷின்லயே பண்ணிப்பாருங்க..” என்று அலுவலகத்தில் அவர் நிறுவியிருந்த மேக் கணினியில் ஒரு படத்தொகுப்பைச் செய்தும் காண்பித்தார். எங்கள் இருவருக்கும் ஒருவாரப் பழக்கம் கூட இல்லை அப்போது. இரண்டாவது நாளிலேயே அவரது செயல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு நல்ல ஆசிரியரின் பண்பும் அதுதான். தனக்குத் தெரிந்ததைப் பிறருக்கு எளிமையாகக் கற்றுத்தருவது. நான் பரதேசி படத்தின் ஒளிப்பதிவாளன் என்பதால் அவர் இதைச் செய்யவில்லை. எனது உதவியாளர்கள், உதவி இயக்குநர்களுக்கும் அவர் அதையே செய்தார்.

செய்கிற வேலையை அவர் நேசிக்கிற விதம் அவர்மேல் எனக்குப் பெரிய மரியாதையைக் கொடுத்தது. சில நாள் நள்ளிரவு வரை படத்தொகுப்பு செய்வார். சில சமயம் கண்களை மூடி தியானிப்பதைப்போல அமர்ந்திருப்பார். ஒருநாள் அதிகாலை அலுவலகத்துப் போனபோது தனியாகப் படத்தொகுப்பு செய்துகொண்டிருந்தார்.

“என்ன கிஷோர்..?”

“ஒண்ணுமில்ல சார்...அந்த சீன்ல ரிதம் செட் ஆகல அதான்..”

எனக்குப் படத்தொகுப்பின் ரிதம் குறித்து அவரிடம் பேச விருப்பமாக இருந்தது. வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். “அது என்ன கிஷோர்..மானிட்டருக்கு முன்னால் அமைதியா இருக்கீங்களே.. அது என்ன தியானமா..யோசிப்பா...?” '

சார்.. சில சீன் அப்படியே வந்துரும்..சில சீன்.. ரிதம் செட்டே ஆகாது” என்று பேசத் தொடங்கினார். வி.டி.விஜயனிடம் அவர் உதவியாளராக இருந்தபோது கற்றுக்கொண்ட நுட்பங்களைப் போகிறபோக்கில் எளிமையாக விளக்கினார். ஒரு காட்சியில் இடம்பெறும் இரண்டு ஷாட்களை எப்படிக் கண்ணுக்குத் தெரியாமல் இணைப்பது, ஒரு காட்சியின் அசைவும் அடுத்த காட்சியின் அசைவும் எப்படி இணையும், ஒரு காட்சியின் அசைவில் எந்த பிரேமில் கட் செய்து அதை அடுத்த காட்சியின் எந்த பிரேமுடன் இணைத்தால் அந்த கட் தெரியாது, ஒரு வைட் ஷாட்டும் ஒரு குளோஸ் -அப்பும் எப்படி இணையும், எப்படி இணையாது என்று சொல்லிக்கொண்டே போனார். இந்தச் சிறிய வயதில் அவருக்குப் படத்தொகுப்பில் இருந்த ஞானமும் தேடலும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

பொதுவாகவே காட்சியின் வீரியம் பயங்கரமானது. அது நல்ல காட்சியாக இருந்தாலும் கெட்ட காட்சியாக இருந்தாலும் காட்சி நம் மனதையும் உடலையும் பாதிக்கும் விதம் எழுத்தில் சொல்ல முடியாத அளவுக்குத் தீவிரமானது. கெவின் கார்ட்டர் என்ற புலிட்சர் விருது பெற்ற புகைப்படக் கலைஞர் ஏன் தற்கொலை செய்துகொண்டார்? ஜான் ஐசக் கருணாகரன் என்கிற புகைப்படக் கலைஞர் போர் காட்சிகளைத் தொடர்ந்து எடுத்து எப்படி மன நலம் பாதிக்கப்பட்டார்? காட்சி மனதைப் பாதிக்கும் விதம் பயங்கரமானது.



நான் பணிபுரிந்த ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பும் திட்டமிட்ட ஒரு நாளில் முடிந்துவிடும். ஆனால் அந்தப் படத்தின் காட்சிகள் திரும்பத் திரும்ப மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். படப்பிடிப்பு முடிந்து ஒரு மாதம்வரை அந்தக் காட்சிகள் தூக்கத்திலும் கனவிலும் துரத்திக்கொண்டே இருக்கும். இது ஒருவிதமான பைத்திய நிலைதான். காட்சிகளுடன் தீவிரமாக இயங்கும் யாரும் இதை உணரமுடியும்.

பரதேசி படத்தில் ஊர் மக்கள் புலம் பெயர்ந்து செல்கிற காட்சி இன்னும் என் கனவில் வந்துகொண்டே இருக்கிறது. அந்த நேரத்தில்தான் கூட்டம் கூட்டமாக ஈழ மக்கள் புலம்பெயர்கிற, கொல்லப்படுகிற காட்சிகள் ஊடங்களில் வந்துகொண்டே இருந்தன. இரண்டு காட்சிகளும் ஆழ்மனதில் இணைந்துவிட்டன. தூசி பறக்கிற காய்ந்த செம்மண் வெளியில் அவர்கள் நடந்து செல்கிற காட்சி இன்னும் தூக்கத்தில் துரத்திக்கொண்டே இருக்கிறது. தற்கொலை செய்துகொண்ட ஓவியர்கள், மனநிலை பிறழ்ந்த கலைஞர்கள், ஏன் வரலாற்றில் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்? காட்சிகள் அவர்களைத் துரத்தும். கனவில், நனவில் மனதை மூளையைப் பாதித்துக்கொண்டே இருக்கும்.

ஒரு படம் முடித்து அதில் இருந்து வெளியில் வர ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என்றால் கிஷோர் ஒரே நேரத்தில் ஐந்து படங்களுக்கு மேல் பணி புரிந்துகொண்டிருந்தார். எல்லாம் ஒரு டைம்லைனில் மாறாத துண்டுக் காட்சிகள். ஒரு காட்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தனக்குள்ளாகப் பெற்றுக்கொள்கிறது. இதைத்தான் தார்க்கோவ்ஸ்கி Sculpting in Time என்று நூலாகவே எழுதினார்.

அந்த நேரத்தை ஒரு காட்சிக்குள் இயல்பாகப் பொருத்துவது என்பது சாதாரண வேலையல்ல. அதுவும் சினிமா குறித்த உயர்ந்த கனவுகளும் நோக்கங்களும் தேடல்களும் கொண்ட ஒருவர் தனது உயர்ந்த நோக்கங்களோடு வணிக ரீதியான படங்களுடன் அதன் காட்சிகளுடன் தொடர்ந்து வேலை செய்வது என்பது சாதாரணமான விஷயமல்ல. அது அவர் மூளைக்குள் ஒவ்வொரு நாளும் நடக்கிற துரத்தல்.

நமது படங்களில் சராசரியாகக் குறைந்தபட்சம் 2000 ஷாட்கள் இருக்கின்றன. அதுவும் டிஜிட்டல் வந்த பிறகு இந்த ஒவ்வொரு காட்சியும் சராசரியாக ஐந்து டேக்குகள் வரை எடுக்கப்படுகின்றன. இந்தப் பத்தாயிரத்தில் இருந்து சரியான

2000-ஐ தேர்வு செய்யவேண்டும். அதை வரிசையாக்கிப் பார்க்க வேண்டும். அதற்குள் ஒரு லயத்தை உருவாக்க வேண்டும். இதேபோல ஒரே நேரத்தில் ஐந்து படங்கள். ஒன்று ஆக்‌ஷன், இன்னொரு த்ரில்லர், இன்னொன்று ரொமான்ஸ், மற்றொன்று நியோ நார் எனப் பலவகை பட்ட காட்சிகளோடு ஒரு இளைஞன் பணிபுரிய வேண்டும்.

இதில் ஒரு படத்தை உரிய நேரத்தில் தயார் செய்து கொடுக்க வேண்டிய காலக்கெடுவுகுள் பணிபுரிய வேண்டும். அந்த மன அழுத்தமும் காட்சிகளின் இயல்பான துரத்தலும் கிஷோரின் மூளையைப் பாதித்திருக்கின்றன. உடலை நாம் ஓய்வு இல்லாமல் அளவுக்கு அதிகமாக வருத்தும்போது உடல் தானாகவே ஓய்வெடுத்துக்கொள்ளும். அப்படி ஒரு ஓய்வை எடுத்துக் கொண்டுவிட்டார் கிஷோர். தன் துறையில் தேசத்திலேயே சிறந்தவர் என்ற உயரிய அங்கீகாரத்தை இத்தனை இள வயதிலேயே பெற்றுக்கொண்டதும் இந்த ஓய்வுக்குத்தானா என்று எண்ணும்போது நெஞ்சம் கனத்துவிடுகிறது.

தொடர்புக்கு: chezhian6@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்