கிரேசியைக் கேளுங்கள் 20- பாரதியாரும், பாதிரியாரும்!

By கிரேசி மோகன்

லாவண்யா, லண்டன்.

உங்களுக்கு பாரதியார் விருது கிடைத்ததாமே? உங்களுக்கும் பாரதிக்கும் என்ன சார் சம்பந்தம்?

ஸ்ரீராம் குழுமம் நடத்திய பாரதி 133-வது பிறந்த நாள் விழாவையொட்டி, இயக்குநர் ஞானராஜசேகரன், தமிழறிஞர் வத்சலா விஜயகுமார் ஆகியோருடன் அடியேனுக்கும் பாரதி விருது கிடைத்தது. ஸ்ரீராம் நிறுவன சுந்தரேசனும், எனது ஆசான் அவ்வை நடராசனும் என்னை 6 மணிக்கு வரச் சொல்லியிருந்தனர்.

லேட்டாக சென்றால் விருது தர மாட்டேன் என்று இந்த ‘தருமி’க்கு சொல்லிவிடப் போகிறார்கள் என்று, நான் 4 மணிக்கே சென்று விட்டேன்.

அதுவும் தவிர, கிளம்பும்போது என் தந்தையார் ‘‘மோகன்... உனக்கும் பாரதிக்கும் குளியல் பிராப்தி கிடையாது. எப்படிடா உனக்கு பாரதி விருது? உனக்கு அது ஞாபகம் இருக்கா?’’ என்றார். அவர் சொன்ன ‘அது’… என் பால்யத்தில் நடந்தது.

அப்போது ஆல் இந்தியா ரேடியோ வில் வந்துகொண்டிருந்த ‘பாப்பா மலர்’ ஆடிஷனுக்காக, வானொலி அண்ணா கூத்தபிரானைப் பார்க்க எங்கள் குழு கோபியுடன் சென்றேன். கூத்தபிரான் பல தடவை திருத்தியும், ‘பாரதியார்’ என்பதை ‘பாதிரியார்’ என்றே நான் தொடர்ந்து உச்சரித்தேன். கூத்தபிரான் அந்த வாய்ப்பை கோபிக்குக் கொடுத்து விட்டார்.

அன்றைக்கு ‘பாரதியார் விருது’ எப்படியும் வாங்கியே தீருவேன் என்று ‘பாஞ்சாலி சபதம்’போல் எனக்குள் சபதம் செய்து கொண்டேன். ‘வானவில் பண்பாட்டுமையம் ’ வக்கீல் ரவி, வருடந்தோறும் பார்த்தசாரதி கோயில் வாசலில் இருந்து பாரதி திருவுருவத்தை ஜதிப் பல்லக்கில் ஏற்றி, அவர் வீடு வரைக்கும் ஊர்வலமாக எடுத்துச் செல்வார்.

இது தவிர ‘ஹிண்டு’ கார்ட்டூனிஸ்ட் கேசவ் அவ்வப்போது வரைந்து அனுப்புகிற பாரதியின் தோழன் கண்ணனுக்கு ‘வெண்பா’ எழுதியும் வருகிறேன்.

கண்ணனின் தோழன் பாரதியின் பல்லக்குக் குத் தோள் கொடுத்த தொண்டன் எனக்கு… பாரதியின் தோழன் கண்ணன் ‘பாரதி’ விருதை வாங்கித் தந்திருக்கிறான் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

ஜதிப் பல்லக்கின்போது கிரேசி எழுதிய வெண்பா:

‘அல்லிக் குளக்கரையில் ஆண்டவன் வாயிலில்

வெள்ளிக்கு முன்னே வியாழனில் - பல்லக்கு

ஏந்திவர்றோம் பாரதி ஏறியமர் வீடடைவோம்

தாந்திமித்தோம் தாளஜ திக்கு’



திருமலை, பஹரைன்.

உலகில் நஷ்டம் இல்லாத பிஸினஸ் எது?

நஷ்டம் இல்லாத பிஸினஸ் ‘மைண்ட் யுவர் பிளினஸ்’தான்!

இதைத்தான் கண்ணன் கீதையில் கூறினார் ‘உனக்கு விதிக்கப்பட்ட ஸ்வதர்மத்தை மட்டும் செய்…’ என்று. சரி, அந்த ஸ்வதர்மம் எதுவென்று எப்படித் தெரிந்துகொள்வது? இதற்கும் பதில் பாரதியிடமே இருக்கிறது.

‘தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு

நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்

நின்னைச் சரணடைந்தேன்’ - என்கிறார் மகாகவி.

‘நான்’என்கிற அகந்தை பிளஸ் அறியாமையை விட்டுவிட்டு, அசாத் தியமான ‘நின்னை’ச் சரணடைந்தால் பிஸினஸில் தோல்வி ஏற்பட்டாலும், அது நஷ்டத்தில் லாபமாகத்தான் இருக்கும்!

வி.கிரிஜா, விழுப்புரம்.

‘அன்று போல் இன்று இல்லையே’ என்ற ஏக்கம் பலருக்கு உள்ளது. இந்த ஏக்கம் சரிதானா?

இதைப் படியுங்கள்... சரியா, தவறா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சென்னை வந்திருந்த மகாத்மாவை அணுகி, தான் நடத்தப் போகும் கடற்கரைப் பொதுக் கூட்டத்துக்கு தலைமை தாங்குவதற்காக அழைக்க, மகாகவி அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பிளந்துகொண்டு சென்றாராம்.

பாரதிக்கு இருந்த அந்த நெஞ்சுரமும் நேர்மைத் திறனும் இன்று எவருக்குமே இல்லையே!

தனக்கு அன்று வேறொரு கூட்டம் இருப்பதால், தன்னால் வர இயலாது என்று பதிலளித்தாராம் காந்திஜி. எல்லா இடங்களிலும் தலையை நீட்டி புகழ் சம்பாதிக்கும் குணம் இல்லாத காந்திஜியை போன்ற ஒரு தலைவர் இன்று இல்லையே!

பாரதி வந்து சென்றப் பிறகு காந்திஜி ‘இவர் யார்?’ என்று அங்கிருந்த ராஜாஜியிடம் கேட்டுள்ளார். அதற்கு ராஜாஜி ‘இவர்தான் இந்தியாவின் தேசியக் கவி’ என்றாராம். இன்னொரு வரைப் பற்றி அவர் இல்லாத சமயத்தில் உயர்வாகக் கூற ராஜாஜி போன்ற பெரிய மனிதர்கள் இன்று இல் லையே!

‘இந்த தேசியக் கவியை போஷியுங்கள்’ என்று ராஜாஜியிடம் காந்திஜி சொன்னாராம். காந்திஜியின் அந்தப் பெருந்தன்மை இன்று இல்லையே!

‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?’ இன்று.

‘எத்தனை கோடி பண்பை வைத்தாய் இறைவா?’ அன்று.

எம்.சாந்தி, அம்பத்தூர்.

VSP (வெற்றிலை+சீவல்+புகையிலை) போடாத நேரத்தில் நீங்கள் மெல்லுவது சூயிங் கம்மா... பபிள் கம்மா?

நாட‘கம்’!

குமார், ஆவடி.

நடிகர் சந்தானத்தைப் பற்றி ஒரே வரியில் கூறுங்களேன்?

நகைச்சுவை நண்பேண்டா!

கோகிலா, திருச்சி

முதல் பிரசவத்தில் ஆண் குழந்தைப் பிறப்பது நல்லதா? பெண் குழந்தைப் பிறப்பது நல்லதா?

எனக்கென்னமோ ‘பெண் குழந்தை’ பிறப்பதே பெட்டர் என்று தோன்றுகிறது. ‘பெண் குழந்தை’ முதலில் பிறந்தால் வீட்டுக்கு ‘மகாலட்சுமி’ வந்துவிட்டதாகவே சொல்வார்கள். முதலில் ‘மகாலட்சுமி’ பிறந்தால்… பின்னாலேயே ‘மகா விஷ்ணு’ (ஆண் குழந்தை) பிறக்கலாம்.

ஆனால், முதலில் ‘மகா விஷ்ணு’ (ஆண் குழந்தை) பிறந்தால் பின்னால் ‘மகாலட்சுமி’ (பெண் குழந்தை) அடுத்து பிறக்கும் என்று சொல்ல முடியாது.

‘மகா விஷ்ணு’வுக்கு பின்னால் ‘பாமா, ருக்மணி, ஆண்டாள், ராதை, மீரா’ என்று ஒரு பெண் ‘மழலைப் பட்டாளமே’ வர வாய்ப்பு உண்டு.

‘யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’என்பது போல் ‘ஆணை (ஆண் குழந்தை) வரும் பின்னே பெண் ‘மணி’ஓசை வரும் முன்னே’!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்