சமீபத்தில் வெளியான ஷங்கரின் ‘ஐ’ படத்தில் இடம்பெற்ற கிராஃபிக்ஸ் காட்சிகளின் வடிவமைப்பாளர் ஸ்ரீநிவாஸ் மோகன். ‘ஐ’ படத்தைப் போலவே ‘நான் ஈ’ புகழ் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது படம் ‘பாகுபலி’.
இந்தப் படத்துக்கான கிராஃபிக்ஸ் கலை வண்ணமும் இவருடைய செய்நேர்த்திதான். ‘தி இந்து’ தமிழுக்காக அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...
‘ஐ’ படம் முழுவதும் சிறப்பு ஒப்பனையைப் பின்னணியாகக் கொண்டு வெளிவந்திருக்கிறது. அதில் கிராஃபிக்ஸ் காட்சிகளின் பங்களிப்பு என்ன?
‘எந்திரன்’ படத்தோடு ஒப்பிட்டால், ‘ஐ’யில் கிராபிக்ஸ் காட்சிகள் கம்மிதான். இந்தக் கதையை ஷங்கர் எங்கிட்ட பத்து வருடங்களுக்கு முன்பே கூறினார். அப்போது அதற்கான விஷயங்கள் கைகூடி வரவில்லை. மூன்று வருடங்களுக்கு முன் என்னிடம் மீண்டும் இப்படத்தைத் தொடங்கலாம் என்றார்.
நான் உடனே வீட்டா (WETA) ஸ்டூடியோஸ்தான் சரியாக வரும் என்று தெரிவித்தேன். அதனைத் தொடர்ந்து அவர்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டபின் கிராஃபிக்ஸ் காட்சிகள் வடிவமைத்தேன். இப்படத்தில் ‘மெர்சலாயிட்டேன்’ பாடல் முழுக்க கிராபிக்ஸ் காட்சிகள்தான். அதுவும் எல்லாமே ஒரே ஷாட் காட்சிகள்.
அப்பாடலில் செல்போன் பெண்ணாக மாறுவது, ஜிம்மில் வெயிட் பெண்ணாக மாறுவது, புல்லட் பெண்ணாக மாறுவது இப்படி மிகவும் கஷ்டப்பட்டுப் படமாக்கினோம். நாயகன் பயன்படுத்துற பொருட்களை வைத்து காதலை ரசிகர்களுக்குச் சொல்லுவது மட்டுமன்றி, ரசிகர்களுக்கும் புரிய வேண்டும் என்று ஷங்கர் விரும்பினார்.
அதனால்தான் அப்பாடலில் வரும் ஒவ்வொரு விஷயமும் எங்களுக்கு நுணுக்கமாகவும் ரசிகர்களுக்கு விருந்தாகவும் அமைந்தது.
அறிவியல் புனைகதை, வரலாற்றுக் கதை இரண்டு வகைமையில் எதில் பணியாற்றுவது உங்களுக்குச் சவாலானதாக இருக்கிறது?
எந்த வகைப் படமாக இருந்தாலும் ஒவ்வொரு படமும் ஒரு விதத்தில் சவால்தான். ‘ஐ’யைப் பொறுத்தவரை எல்லாமே ரசிகர்கள் பார்க்கும் பொருட்கள். அதனால் எதுவுமே கிராஃபிக்ஸ் மாதிரி தெரியக் கூடாது என்கிற சவால் இருந்தது. அறிவியல் புனைவுப் படங்களில் எங்களுக்குக் கொஞ்சம் சுதந்திரம் அதிகம்.
ஆனால் ‘ஐ’ அப்படியல்ல. சீனாவில் படமாக்கப்பட்ட சண்டையில் வரும் ஓடுகள், தேனீக்கள் வரும் காட்சி எல்லாமே தத்ரூபமாக வர வேண்டும் என்று உழைத்தோம். அது சரியாக வரவில்லை என்றால் ரசிகர்களுக்கு கிராஃபிக்ஸ் என்று தெரிந்துவிடும். அந்த வகையில் எனக்குச் சவால் இருந்தது.
‘பாகுபலி’ பெரிய பட்ஜெட் படம். பாகம் 1, பாகம் 2 என்று நிறைய பணிகள் இருக்கின்றன. இந்திய சினிமாவில் ‘பாகுபலி’ ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவ்வளவு பணிகள் செய்திருக்கிறோம். இந்தியப் படங்கள் என்றாலே குப்பைகள் என்ற நினைப்பு வெளிநாட்டில் இருக்கிறது. அந்த எண்ணத்தை உடைக்கும் படமாக ‘பாகுபலி’ இருக்கும்.
அந்தக் காலத்து அரண்மனைகள், உடைகள், போர்க் காட்சிகள் என அனைத்துமே யதார்த்தமாக இருக்கும். ரசிகர்கள் அப்படத்தைப் பார்க்கும்போது தத்ரூபமாக இருக்கும். அந்த அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகளை இழைத்திருக்கிறோம். இந்தப் படம் இந்திய சினிமாவின் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் துறைக்கு மைல் கல்லாக அமையப்போவது உறுதி.
ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகளுக்குச் செலவழிக்கக் கூடிய அளவுக்கு இந்திய சினிமா வளர்ந்துவிட்டதா?
தற்போது கொஞ்சம் பின்தங்கித்தான் இருக்கிறோம் என்று சொல்லுவேன். காரணம் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கான பட்ஜெட். ஹாலிவுட்டில் ‘அவதார்’ படத்தின் பட்ஜெட் 1000 கோடி. அதில் கிட்டத்தட்ட 70 சதவீத பட்ஜெட் கிராபிக்ஸ் காட்சிகளுக்குச் செலவழித்திருப்பார்கள்.
ஆனால் இந்தியத் திரையுலகில் மொத்த படத்தின் பட்ஜெட்டில் 10 சதவீதம்தான் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ஒதுக்குகிறார்கள். அதேபோல ஹாலிவுட்டில் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்க ஒதுக்கும் நேரம் என்பது மிகவும் அதிகம். ஆனால், இந்திய சினிமாவில் இது மிகவும் கம்மிதான்.
ரசிகர்களும் நிறைய ஹாலிவுட் படங்கள் பார்த்து மாறிவிட்டார்கள். ஹாலிவுட் படங்கள் அளவுக்கு இந்தியப் படங்களில் கிராபிக்ஸ் காட்சிகள் எதிர்பார்க்கிறார்கள். ஒதுக்கும் பட்ஜெட்டில் இயக்குநர், ரசிகர்கள் என அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது மிகப்பெரிய சவால்தான்.
உங்களது குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?
குடும்ப விஷயத்தில் நான் ரொம்பவும் கொடுத்து வைத்தவன். 5-ம் வகுப்பு படிக்கும் பையன் இருக்கிறான். எனது மனைவியும் கிராபிக்ஸ் துறையில்தான் இருக்கிறார். அவங்களுக்கு என்னுடைய பணிகள் தெரியும் என்பதால் என்னால் நிம்மதியாகப் பணியாற்ற முடிகிறது. சென்னையில் படப்பிடிப்பு என்றால் செட்டில்தான் நடக்கும்.
வீட்டுக்குச் செல்வேன். ‘பாகுபலி’ படம் முழுவதுமே ராமோஜி ராவ் திரைப்பட நகரிலேயே நடப்பதால் ஒன்றரை வருடங்களாக இங்கேதான் இருக்கேன். எனது குடும்பத்தை ரொம்ப மிஸ் பண்றேன். இப்படம் முடிந்த உடன் பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன்.
எதற்காக கிராஃபிக்ஸ் துறையைத் தேர்வு செய்தீர்கள்?
எது பிடிக்குதோ அதைப் பண்றேன். எல்லாப் பணிகளையும் செய்திருக்கிறேன். லாரி க்ளீனர், ரேடியோ மெக்கானிக், கணினி வல்லுநர், கல்யாண வீடுகளில் வீடியோ எடுப்பது என நிறைய பணிகள் செய்திருக்கிறேன். அனைத்திலும் இந்தத் துறையில் இவ்வளவுதான் என்று வரும்போது வேறு துறைக்குச் சென்று விடுவேன்.
இப்போது கிராபிக்ஸ் துறையில் இருக்கிறேன். இது ஒரு கடல், தினமும் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் நின்றுவிட்டால், கண்டிப்பாக அடுத்த துறைக்குச் சென்றுவிடுவேன்.
வரும் காலங்களில் இந்தியத் திரையுலகில் கிராஃபிக்ஸ் பணிகள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
ஹாலிவுட்டில் சாதாரணப் படங்கள் தொலைக்காட்சியில் பார்க்கலாம். பிரம்மாண்டமாகத் தயாராகும் படங்கள் மட்டுமே திரையரங்கில் வெளியாகும். இங்கு ஷங்கர் இயக்கத்தில் வரும் படங்களை எல்லாம் யாருமே டி.வியில் பார்க்க விரும்புவதில்லை.
இந்தியாவில் இப்போதுதான் கிராபிக்ஸ் காட்சிகளைக் கொண்ட படங்கள் நிறைய வர ஆரம்பித்திருக்கிறது. தற்போது ஐந்து வருடங்களில் தயரான படங்களில் கிராஃபிக்ஸ் படங்கள் அதிகமாக இருக்கும். கிராஃபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் படம் இல்லை என்ற சூழல் உருவாகி இருக்கிறது. வரும் காலத்தில் ஹாலிவுட்டில் உள்ளது போன்ற சூழலும் இந்தியாவில் வரலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago