அப்பாவின் அநியாயமான கொலை, தீயவர்களுக்கு எதிராகத் துப்பாக்கி தூக்கும் வெறியை ஏற்படுத்துகிறது சத்யதேவ் என்ற அந்த சிறுவனுக்குள். அந்த வெறியோடே வளரும் அஜீத், ஆபத்தை வலியத் தேடிப் போவதுதான் தனக்குப் பிடித்த போதை என்று ‘தன்னை அறிந்து’, தீய செயல்களில் ஈடுபடும் எல்லோருக்கும் எதிராகப் போர் தொடுக்கிறார்.
நிழல் உலக வலைப்பின்னலை அறுக்க தாதா உருவில் சிறை செல்லும் அஜீத், அங்கே நிஜ தாதா விக்டரை (அருண் விஜய்) சந்தித்து நட்புக் கொள் கிறார். இருவரும் சிறையிலிருந்து தப்பிக்கிறார்கள். அஜீத்தின் உண்மையான முகம் தெரிந்ததும் அருண் அவர் மீது கொலை வெறி கொள்கிறார்.
இதற்கிடையில் ஹேமானிகா (த்ரிஷா) என்னும் பரத நாட்டியக் கலைஞரைச் சந்திக்கும் அஜீத், அவர் மீது காதல் வயப்படுகிறார். தன் குழந்தையுடன் தனித்து வசித்து வரும் ஹேமானிகா முதலில் தயங்கினாலும் பிறகு அந்தக் காதலை ஏற்றுக்கொள்கிறாள். அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் சமயத்தில் ஹேமானிகா கொல்லப்பட, குழந்தை மீது ஒரு அப்பாவாகவே பாசம் காட்டி வளர்க்கிறார்.
வில்லன் வேட்டையிலிருந்து ஒதுங்கி இருக்கும் அவரை தீய சக்திகள் மீண்டும் களமிறங்க வைக்கின்றன. தேன்மொழி (அனுஷ்கா) என்னும் அப்பாவிப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் சேர்ந்துகொள்கிறது.
கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கும் அருணுக்கும் இந்தப் பக்கம் இருக்கும் அஜீத்துக்கும் இடையே நடக்கும் பரமபத ஆட்டத்தில் அஜீத் எப்படி ஜெயிக்கிறார்?
கௌதம் என்றால் அழுத்தமான, உணர்வுபூர்வமான கதை இருக்கும். யதார்த்தமான பெண் கதாபாத்திரச் சித்தரிப்பு இருக்கும். ஒரு அழகான காதல் இருக்கும். புத்திசாலித்தனமான வசனங்கள் இருக்கும் என நம்பிக்கையுடன் வருபவர்களுக்கு... அதெல்லாம் இருக்கிறது - கொஞ்சமாக! ‘வாரணம் ஆயிரம்’, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ என முன்பே பார்த்த சில பாத்திரங்கள், அவற்றின் ஆசாபாசங்கள், ஆத்திர செயல்பாடுகள் கலந்த மாக்டெய்ல் இந்தப் படம்.
தந்தை மகன் உறவு, ‘சுயத்தை அறிய உதவும்’ பயணங்கள், ஏற்கெனவே திருமணமான பெண் மீது உண்டாகும் கண்ணியமான காதல், குற்றவாளிகளுக்கு எதிராக கூட்டம் கூட்டமாகப் பாயும் போலீஸ், கதாநாயகனின் பாசத்துக்குரிய பெண்ணைப் பணயக் கைதி ஆக்கி - ‘இப்ப நேரா வந்து மோது’ என்று ஆவேசக் கூச்சலிடும் வில்லன்... எல்லாம் கௌதமின் அதே முத்திரையுடன் அடி பிறழாமல் மீண்டும் அரங்கேறுகின்றன.
சில காட்சிகளும் சில பாத்திர வார்ப்புகளும் நன்றாக அமைந்துள்ளன. த்ரிஷாவிடம் அஜீத் தன் காதலைச் சொல்லும் விதம் அழகு. அருண் விஜயின் பாத்திரம் வலுவாக உள்ளது. பயணக் காட்சிகள் கண்களுக்கு விருந்து. ஒரு பெண்ணின் மறுமணத்தை மிக இயல்பாக சித்தரிக்கும் விதம் ஈர்க்கிறது.
கிளைமாக்ஸ் சண்டை விறுவிறுப்பு. ஆனால், அதற்குமுன் வருகிற சவால் வசனங்கள் ரொம்ப நீளம். கடைசியாக அடித்து வீழ்த்துவதற்கு முன் அருண் விஜய்யிடம் அஜீத்தே சொல்கிறார் - “ரொம்ப பேசிட்டோம்’’ என்று!
வில்லன் கூட்டத்துக்குத் தேவையான ‘சரக்கு’ நடைபாதையிலேயே கிடைப்பதாக ஒரு காட்சியே வருகிறது. அப்படி இருக்க, மெனக்கெட்டு ஏன் அனுஷ்கா பின்னாடியே அலைகிறார்கள் என்பதற்கான காரணம் பலவீனமாக உள்ளது. அதிலும், படை படையாக போலீஸார் கிளம்பி வந்து துரத்தும்போதும் விடாப்பிடியாக வில்லத்தனம் பண்ணுகிற அளவுக்கு அருண் விஜய்க்கு அப்படி ஒன்றும் அசாத்தியமான பின்னணி பலம் இருப்பதாகத் தெரியவில்லை.
கையில் துப்பாக்கியுடன் அத்தனை போலீஸ் வளைத்த பிறகும், “சொல்லு விக்டர்... இப்பவே இவனை போட்டுரட்டுமா?” என்று அடியாள் வில்லன் செல்பேசியில் ஜபர்தஸ்து காட்டுகிறார். அத்தனை கிள்ளுகீரையா தமிழ்நாடு போலீஸ்?!
இத்தனையும் தாண்டி, சின்ன சின்ன உணர்வுகளைக்கூட அழகாக அஜீத்திட மிருந்து வரவழைத்து அசத்தியிருக்கிறார் கெளதம். வெவ்வேறு காலகட்டங்களில் இயல்பாக மாறும் தோற்றம், அசரடிக்கும் கம்பீரம், அலட்டிக்கொள்ளாத வேகம் என்று அஜீத்தை ஒரு நல்ல நடிகராக நன்றாகவே தூக்கி நிறுத்தி இருக்கிறார்.
கதைக்காக ஏகத்துக்கும் அடிவாங்கும் சில காட்சிகளில் துளிகூட தயங்காமல் ஒத்துழைத்திருப்பதன் மூலம், மற்ற பல நடிகர்களின் ‘மாஸ் ஹீரோ’ ஃபார்முலா வையே கடகடந்துப் போகச் செய்திருக்கிறார் அஜீத்.
இரண்டு நாயகிகளுமே அஜீத்தின் நிழலில் மறைந்துவிடுகிறார்கள். என்றா லும் த்ரிஷா, அனுஷ்கா இருவரும் கொடுக்கப்பட்ட வேலையை நன்றாகவே செய்திருக்கிறார்கள். கண்களாலேயே காதலைப் பொழியும் த்ரிஷாவின் நடிப்பு அழகு என்றால் அதிரடியாகக் காதலைச் சொல்லும் அனுஷ்காவும் ஓகேதான்!
வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் ஜொலிக்கிறார். அவரது உடலும் முகமும் வசன உச்சரிப்பும் பிரமாதமாக வில்லத்தனம் காட்டுகிறது. பேபி அனிகா மனதில் நிற்கிறார்.
கௌதம் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணிக்கான எதிர்பார்ப்பு முழுசாகப் பூர்த்தி ஆகவில்லை. என்றாலும், ‘அதாரு உதாரு’ பாடல் ரகளை... ‘உனக்கென்ன வேணும்’ இனிமை. ஒளிப்பதிவில் டான் மெக் ஆர்தரின் கடும் உழைப்பு கண் ணாரத் தெரிகிறது. ஆண்டனியின் படத்தொகுப்பு பல காட்சிகளில் பரபரக்க வைக்கிறது.
தன் வழக்கமான ‘போலீஸ் பீட்ஸா’வை ‘அஜீத் டாப்பிங்’ போட்டு கொடுத்திருக் கிறார் கௌதம். இதுவும் சுவைக்கத்தான் செய்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago