ஃப்ளாஷ் பேக் - இயக்குநர் பாண்டிராஜ் எழுதும் தொடர்: 622412

By இயக்குநர் பாண்டிராஜ்

குறுஞ்செய்தி, மின்னஞ்சல், முகப்புத்தகம், ட்விட்டர், வாட்ஸ்அப், என எத்தனை வந்தால் என்ன? அஞ்சலகம் தொட்டு வந்து, நம் நெஞ்சகத்தில் நீங்கா இடம் பிடித்த கடிதங்களுக்கு ஈடாகுமா?

செல்போன்களின் வருகைக்கு பிறகு எந்த எண்ணையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதேயில்லை. ஆனால் இன்றும் ஒரு ஆறிலக்க எண், சட்டென்று நினைவுக்கு வருகிறதென்றால் அது எங்கள் திருமயம் தாலுக்காவின் பின்கோடான 622412, மட்டும்தான். போஸ்ட் ஆபீசே ஒரு வீடு மாதிரிதான் இருக்கும். அதையொட்டி ஒரு தண்ணீர்பந்தல், அதற்கடுத்தது எங்களின் பள்ளிக்கூடம்.

போஸ்ட் ஆபீசில் இருக்கும் தொலைபேசிக்கு ட்ரங்க் கால் அழைப்புகள் வரும். போஸ்ட் மாஸ்டர் போனை எடுத்து, “ஆங்... சொல்லுங்க... விராச்சிலை போஸ்ட் ஆபீஸ்தான்” என்றதும், அங்கிருந்து சாகவாசமாய் பதில் வரும். மறு படியும் சுதாரித்துக்கொண்டு, இவர் இங்கிருந்து பேசுவார். இந்த ட்ரங்க் காலை வேடிக்கை பார்ப்பதற்கே எங்களிடையில் போட்டி நடக்கும். “எவ்ளோ நேரந்தான் பார்ப்ப, நான் பார்க்க வேண்டாமா” என்று ட்ரங்க் கால் பேசுவதையே உலக அதிசயமாய் பார்த்த அந்த வெள்ளந்தி மனது நாட்களை எப்படி மறப்பது !!! தந்தி கம்பத்தில் காதை வைத்துக் கேட்டால், தொலை பேசியில் பேசுவது கேட்கும் என்ற வதந்தி பரவியிருந்தது. அதில் ஒன்றுமே கேட்காது என்றாலும், “அய்ய்ய்... எனக்கு கேட்டிடுச்சே... கேட்டிடுச்சே”, என்று கடுப்பேற்றுவோம். நம்மை வெறுப்பேற்ற, நண்பர்களும், “போடி.. போ...எங்களுக்கு பொம்பள குரலே கேட்டுச்சு”, என்று அதே பொய்யை தொடருவார்கள்.

அப்போது போஸ்ட் ஆபீசில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ரெங்கன் பெரியப்பா எனக்கு சொந்தக்காரர். பள்ளிக்கு வரும் தபால்களை, என்னிடம் தான் கொடுத்துவிடுவார். சத்தமில்லாமல் அதில் ஒட்டியிருக்கும் ஸ்டாம்பு களை பிய்த்து, நோட்டு போட்டு ஒட்டி வைத்துக்கொள்வதில் ஒரு பெருமை. அதேபோல, யார் வீட்டுக் கெல்லாம் வெளிநாட்டில் இருந்து, கடிதம் வருகிறது என்ற தகவலை வாங்கி, ஃபாரின் ஸ்டாம்புகளை சேகரிப்பதில் பள்ளிக்கூடத்தில் ஒரு போட்டியே நடக்கும்.

‘சஞ்சாயிகா’ அஞ்சலக சேமிப்பு திட்டம் மூலம் இருபது ருபாய் சேர்ந்துவிட்டால் போதும், “ஏய்.. எனக்கு போஸ்ட் ஆபீஸ்ல.. இருபது ரூபா இருக்கு.. தெரியும்ல..” என்று ஊரையே விலைக்கு வாங்கப்போகும் தொனியில் பேசிக் கொண்டு திரிவோம். தங்களுக்கு மட்டும் கடிதமே வரவில்லையென்ற ஏக்கத்தில், பசங்க சிலபேர் போஸ்ட் பாக்சுக்குள் கல், கரட்டானை யெல்லாம் அடித்து போட்டுவிடு வார்கள். ஒரு கட்டத்தில் பசங்களின் சேட்டை அதிகமானதும், “எவனா வது போஸ்ட் ஆபீஸ் பக்கம் போனாலே டீசி கொடுத்திடுவோம்”, என்று தலைமை ஆசிரியர் எச்சரித்தார். அதற்கு பிறகு, தண்ணீர் குடிக்க கூட அந்தப்பக்கம் ஒதுங்க தயங்கு வோம்.

தபால்காரரை எதிர்பார்த்து ஊரில் பலபேர் காத்திருப்பார்கள். பெண் பார்த்துவிட்டு போகிறவர் கள் அனுப்பும் பதில் கடிதத்தின் நான்கு முனையிலும் மஞ்சள் தடவியிருந்தாலே, காரியம் ‘சுபம்’ என தெரிந்து கொள்ளலாம். லெட்டரை சோற்றுப் பருக்கை, எச்சில், கோந்து, கூழ் என கிடைப்பதை வைத்து ஒட்டி அனுப்புவார்கள். குடும்பங்களை எளிதில் பிரிப் பவர்களால் கூட, இன்லேன்ட் லெட்டரை அவ்வளவு எளிதில் பிரிக்க முடியாது. எப்படி பிரித்தாலும் ஒரு பக்கம் கிழிந்து இன்னொரு பக்கம் பிட்டு பேப்பராக நிற்கும். எங்கள் வீட்டுக்கு அண்ணனுடைய கடிதங்கள் திருச்சியில் இருந்து வரும். “அன்பும், பண்பும், நேசமும், பாசமும் நிறைந்த அப்பாவுக்கு”, என தொடங்கி அவர் எழுதிய கடிதங்கள் இன்றும் என்னிடம் பத்திரமாய் இருக்கிறது. அதுபோல, கரும்பில்லாமல் கூட பொங்கல் கொண்டாடு வோம், பொங்கல் வாழ்த்து அனுப்பாமல் கொண்டாடவே மாட்டோம். ஒரு ரூபாய் வாழ்த்தட்டைக்கு ஸ்டாம்பு ஒட்டாமல் அனுப்பி, நண்பனை ஐந்து ருபாய் அபராதம் கட்ட வைத்திருக்கிறோம். வாழ்த்து அட்டைகளுக்கு பதில் பதினைந்து பைசா தபால் கார்டில் பொங்கல் பானையை ஸ்கெட்ச்சில் வரைந்து அனுப்பி சிலர் காசை மிச்சப்படுத்துவார்கள்.

நமக்கு பிடித்த பெண்ணுக்கு, நாம் யாரென மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாதபடி, இடது கையால் காதல் கடிதம் எழுதி பக்கத்து ஊர் போஸ்ட் பாக்ஸில் போட்டுவிடுவோம். எந்த பெண்ணுக்கு அந்த கடிதம் எழுதப்பட்டதோ, அவளுக்கு மட்டும் தெரியும் அது யார் எழுதியதென்று! இப்படி மாணவிகளுக்கு மட்டும் அதிகமாக கடிதம் வரத் தொடங்கவே, மாணவிகளின் பெயரில் பள்ளிக்கு கடிதம் வந்தால், கண்டிப்பாக பிரித்து படித்துவிட்டுதான் கொடுப்பார்கள். அந்த செக் போஸ்டையும் அனாயசமாக கடக்க புதுவழி கண்டுபிடித்தான் செல்லபாண்டி. எந்த பெண்ணுக்கு காதல் கடிதம் அனுப்புகிறானோ அந்த பெண்ணின் பெயரை முகவரியில் எழுதி, நேரே போஸ்ட் ஆபீக்கு போய் கெஞ்சி சீல் போட்டு கொண்டுபோய், “நித்யா, உனக்கு லெட்டர் வந்திருக்கு” என கையிலேயே கொடுத்துவிட்டு வந்துவிடுவான். காதலி எழுதிய கடிதத்தையும், காதலிக்கு எழுதிய கடிதத்தையும் திரும்ப திரும்ப ஐம்பது முறை, நூறு முறை படித்து, பின் மடித்து, திரும்ப எடுத்து, என அந்த கடிதம் கடைசியில் இத்துப்போய் கிழிந்த காட்சிகளை எல்லாம் பார்த்திருக்கிறேன். இந்த சுவாரசியமெல்லாம், ஃபேஸ்புக் கால சேட்டிங்-டேட்டிங் காதலில் கண்டிப்பாய் இருக்காது.

நமக்கு பிடித்த பெண்ணுக்கு, நாம் யாரென மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாதபடி, இடது கையால் காதல் கடிதம் எழுதி பக்கத்து ஊர் போஸ்ட் பாக்ஸில் போட்டுவிடுவோம். எந்த பெண்ணுக்கு அந்த கடிதம் எழுதப்பட்டதோ, அவளுக்கு மட்டும் தெரியும் அது யார் எழுதியதென்று! இப்படி மாணவிகளுக்கு மட்டும் அதிகமாக கடிதம் வரத் தொடங்கவே, மாணவிகளின் பெயரில் பள்ளிக்கு கடிதம் வந்தால், கண்டிப்பாக பிரித்து படித்துவிட்டுதான் கொடுப்பார்கள். அந்த செக் போஸ்டையும் அனாயசமாக கடக்க புதுவழி கண்டுபிடித்தான் செல்லபாண்டி. எந்த பெண்ணுக்கு காதல் கடிதம் அனுப்புகிறானோ அந்த பெண்ணின் பெயரை முகவரியில் எழுதி, நேரே போஸ்ட் ஆபீக்கு போய் கெஞ்சி சீல் போட்டு கொண்டுபோய், “நித்யா, உனக்கு லெட்டர் வந்திருக்கு” என கையிலேயே கொடுத்துவிட்டு வந்துவிடுவான். காதலி எழுதிய கடிதத்தையும், காதலிக்கு எழுதிய கடிதத்தையும் திரும்ப திரும்ப ஐம்பது முறை, நூறு முறை படித்து, பின் மடித்து, திரும்ப எடுத்து, என அந்த கடிதம் கடைசியில் இத்துப்போய் கிழிந்த காட்சிகளை எல்லாம் பார்த்திருக்கிறேன். இந்த சுவாரசியமெல்லாம், ஃபேஸ்புக் கால சேட்டிங்-டேட்டிங் காதலில் கண்டிப்பாய் இருக்காது.

முழுபரீட்சைக்கு முன்னதாக நமது முகவரி எழுதப்பட்ட போஸ்ட் கார்டை பள்ளிக்கூடத்தில் கொடுக்கவேண்டும். அந்த ரிசல்ட் கடிதம் வரும்வரை தபால்காரர் செத்தார். தினமும், “எனக்கு எதாச்சும் லெட்டர் வந்துச்சா.?” என்று கேட்டே அவரை கொலை யாய் கொல்லுவோம். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை யிழந்து, “நீ ஃபெயில் போடா”னு, சாபம் விட்டபடி வடக்கே போக வேண்டியவர் தெற்கே தெறித் திருப்பார்.

பொங்கல் சீர்வரிசை பணம், தங்கை திருமணத்திற்கு அண் ணனின் சேமிப்பு என பலமுகம் கொண்ட மணி ஆர்டர், திடீர் இரங்கல் செய்திகளை சுமந்துவரும் தந்தி என கடிதங்கள் தாண்டி போஸ்ட் ஆபீசின் சேவைகள் அதிகம். ஒத்த பிள்ளையை சவுதிக்கோ, சிங்கப்பூருக்கோ அனுப்பிவிட்டு கடிதத்துக்காக காத்திருக்கும் அம்மாக்கள், திருமணம் முடிந்து ரெண்டாவது வாரமே வெளிநாட்டிற்கு பயண மான கணவனின் கடிதத்துக்கு காத்திருக்கும் அக்காக்கள், ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரமும், போஸ்ட் ஆபீஸ் முன், கையில் மஞ்சப்பையோடு அரசாங்கம் வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தை கொண்டு அரிசி வாங்க காத்திருக்கும் பாட்டிகள் என போஸ்ட் ஆபீசும், கடிதங்களும் காத்திருப்பின் குறியீடாகவே மனதில் பதிந்திருக்கிறது.

இப்போது எங்களூர் போஸ்ட் ஆபீசில், வெள்ளைச்சாமி அண் ணனும், போஸ் அண்ணனும் வேலை பார்க்கிறார்கள். அந்த பழைய போஸ்ட் ஆபீஸ் இப்போது இல்லை. அதை இடித்துவிட்டதால், கடைவீதியில் இப்போது இயங்கி வருகிறது. எங்களூரில் என்றில்லை எல்லா ஊரிலும் யாருக்கும் அதிகமாக லெட்டர் வராததால், “சார், போஸ்ட்” என்ற குரலே காணாமல் போய், போஸ்ட் ஆபீஸ்கள் எல்லாம் களையிழந்து விட்டதாய் கேள்விப்படும் போதெல் லாம் இப்படி எத்தனையோ நினைவுகள் மனதை கனமாக்கும்.

நாம் நினைப்பதையெல்லாம் அடுத்த நொடியே தெரியப்படுத்த, இன்று ஆயிரம் தொலைதொடர்பு சாதனங்கள் வந்துவிட்டாலும், ஏதோ ஒரு மூலையில் எழுதப்பட்டு, தபால் பெட்டிக்குள் விழுந்து, முத்திரை குத்தி, சாக்கு மூட்டைக்குள் ரயிலில் பயணித்து, சில நாட்கள் கழித்து நம்மூர் சேர்ந்து, அந்த காத்திருப்புக்கு பின் கடைசியில் கைக்கு வந்தடையும் கடிதமும், அதை பிரிக்கும்போது உணரும் பரவசமும் அலாதியானது. அதை உணரவேண்டுமானால், உங்கள் அன்பானவர்களுக்கு ஒரு கடிதம் எழுதிப்பாருங்கள். அப்போது புரியும்!

தொடர்புக்கு: pandirajfb@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்