கோமதி நமச்சிவாயம், திருநெல்வேலி
படைக்கும் கடவுள் பிரம்மாவுக்கு நான்கு முகங்கள். ஆனால், அவர் படைக்கும் மனுஷனுக்கு மட்டும் ஏன் ஒரே முகம்?
நாலு பேர் நாலு விதமா தன் படைப்பைப் பத்தி எங்கே பேசிடுவாங்களோ என்கிற பயத்தில் ஒரு முகத்தோடு படைச்சிருக்கலாம். மனுசனோட மூஞ்சிக்கு இது போதும்னு ஒரே முகத்தோடு படைத்திருக்கலாம்!
லதா ரகுநாதன், சென்னை.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நேரத்தில் தங்களின் கிரிக்கெட் அனுபவத்தைக் கூறுங்களேன்?
70-களில் மந்தைவெளியில் எங்கள் காலனியில் சுவரில் கரித் துண்டால் ஸ்டம்ப்ஸ் வரைந்து, ஆறிப் போன பூரியைப் போல இருக்கும் லப்பர் பாலில் அண்டராம்ஸ் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் ‘மினிமேக்ஸ்’என்ற கிரிக்கெட் குழுவை ஆரம்பித்தான் ‘பெரியப்பா’என்று நாங் கள் மரியாதையாக அழைக்கும் எஸ்.வி!
‘பெரியப்பா’ அவ்வப்போது எங்களுக்குக் கணக்கு சொல்லித் தருவான். நவராத்திரி கொலு சமயத்தில் படுதா கட்டி ‘காளிதாஸன்’ நாடகம் போடுவான். அவனுக்கு வளர்த்தி ஜாஸ்தி. பதினோரு வயதிலேயே எதிர் போட்டு ஷேவ் செய்துகொள்ளும் அளவுக்குக் கன்னம் சொரசொரவென்று இருக்கும்.
எனது பால்ய அறிவுஜீவி காம்ரேட் எஸ்.வி, ‘மினிமேக்ஸ் என்கிற பேர் எப்படி இருக்கு?’ என்றான். ‘‘போடப் போறது என்னமோ சமஸ்கிருத டிராமா. எதுக்குடா இங்லீஷ்ல பேரு?’’ என்றேன்.
‘‘முட்டாள்... அதான் உனக்குக் கணக்கு சரியா வர மாட்டேங்குது. டிராமா இல்லடா கிரிக்கெட் டீம்’’ என்று என் தலையில் ஓங்கி உலகளந்து குட்டினான். அவன் குட்டிக் குட்டியே இன்றும் என் தலை பத்தாங்குத்து பாறாங்கல் பம்பரம் போல மேடு பள்ளமாயிருக்கும்.
‘‘அது என்னடா பெரிப்பா ‘மினிமேக்ஸ்’? ஏதோ ஐஸ்கிரீம் பேரு மாதிரி இருக்கு?’’ என்றான் மூணு பிட்ச் முரளி. அவன் எங்கள் குழுவின் ஸ்பின் பவுலர். மூணு தபா பிட்ச் ஆகித்தான் பந்து பேட்ஸ்மேனை வந்து சேரும்.
முதல் பிட்ச்சில் ‘ஃஹாப் பிரேக்’ ஆகி, இரண்டாவது பிட்ச்சில் ‘லெக் பிரேக்’ ஆகி, மூன்றாவது பிட்ச் ஆனதும் வீரியம் குறைந்து… நிறைமாதக் கர்ப்பிணியைப் போல ‘என்னை யாராவது சிக்ஸர் அடியுங்களேன்…’ என்று கெஞ்சும் பாவனையில் நிதானமாக பந்து வரும்.
‘‘டேய் முரளி... இப்படிக் கேள்வி கேக்கறதாலதான் உனக்குக் கணக்கு சரியாவே வரலை’’ என்றான் எஸ்.வி. எங்கள் எல்லா குறைகளுக்கும் கணக்கைக் காரணம் காட்டி, எங்கள் வாயை அடைப்பான்.
‘‘நம்ப டீம்ல நான்தான் பெரியவன். கணக்குத் தெரிஞ்சவன். நீங்கள்லாம் சின்னப் பசங்க, அதான் மினி மேக்ஸ்” என்று கோனார் நோட்ஸ் போட் டான்.
ஒரு வாரம் பிராக்டீஸ். தான்தான் ஓப்பனிங் பவுலர் என்று எதேச்சதிகாரமாக சாயங்காலம் வரை லப்பர் பந்தை பெரியப்பா எங்கள் கண்ணிலேயே காட்டவில்லை. பெரியப்பாக்கு மட்டும் ஒரு ஓவருக்கு 60 பால். ஓப்பனிங் பேட்ஸ்மேனும் அவன்தான். போடும் பந்தை எல்லாம் மார்பால் தடுத்து ‘மார்பிடபுள்யு’ ரூல்ஸ் பிரகாரம் ‘கிடையாது’ என்று அழுகுனி ஆட்டம் ஆடுவான்.
திருவள்ளூர் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கம்பெனி குழுவோடு மோத, நாங்கள் அவர்கள் அனுப்பிய பஸ்ஸில் போனோம். அந்த டீமில் 11 பேரும் ‘நிர்மா வாஷிங்’ வொய்ட் அண்ட் வொய்ட்டில் கிறிஸ் கெய்ல் ஜாடையில் வாட்டசாட்டமாக இருந்தார்கள். ‘‘பயமா இருக்குடா மோகன். படாத இடத்துல கட்டபால் பட்டுவெச்சுதுன்னா நாளைக்கு பாத்ரூம் கூட சரியா போக முடியாது’’ என்றான் பத்து.
‘‘பத்து… நீதான் பதினொண்ணுல இல்லையே டுவெல்த் மேன்தானே…’’ என்று நான் அவனை சமாதானப்படுத்த, ‘‘இல்ல... பத்து டீம்ல இருக்கான். என்னோட ஓபனிங் அவன்தான். ஏன்னா… பத்துக்குக் கணக்கு நல்லா வரும்’’ என்று சொல்லி பத்துவின் பயந்த வயிற்றில் சுடச்சுட காச்சின பாலை வார்த்தான் பெரியப்பா.
கணக்குக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன அப்படி ‘பம்மல் கே சம்பந்தம்’னு இன்று வரை எனக்குப் புரியவில்லை.
டாஸ் போட அழைத்தார்கள். பெரியப்பா இரண்டு பக்கமும் ‘தலை’ இருப்பது போல, தான் தயாரித்து வைத் திருந்த 10 பைசா நாணயத்தைச் சுண்டி எறிந்து ‘தலை’ என்றான். பூவா- தலையாவில் ஜெயித்த பெரியப்பா, ‘பவுலிங்’ என்கிற முடிவை எடுத்து எங்கள் வயிற்றில் புளியைக் கரைத்தான்.
‘‘ஏண்டா எஸ்.வி (ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வளாகத்துக்குள் யாராவது தன்னை ‘பெரியப்பா’ என்று விளித்தால் டீமைவிட்டு விலக்கிவிடுவதாக எஸ்.வி எச்சரித்திருந்தான்) பவுலிங் செலெக்ட் செஞ்சே …’’ என்று நடராஜர் காலடியில் நசுங்கிக் கொண்டிருக்கும் குள்ள ராட்சஸன் ‘முயலகன்’ ஜாடையில் இருந்த முனுசாமி கேட்க, பெரியப்பா வழக்கம்போல ‘‘இப்ப புரியுதா முனுசாமி... உனக்கு ஏன் கணக்கு வரலேன்னு’’ என்று, தனது அரித்மெடிக் அஸ்திரத்தை வீச, கணக்கில் நூத்துக்கு ‘மூணு’சாமியான முனுசாமி கப்சிப் ஆனான்.
அப்புறம் என்ன? முதலில் விளை யாடிய ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் டீம் ஆயிரத்து சொச்சம் ரன்கள் குவித்தனர். பேட்ஸ்மெனுக்கு வெகு அருகில் ஷார்ட்-லெக்கில் கேட்ச் பிடிக்க குப்புசாமி நின்றபோது கேப்டன் எஸ்.வி அவனைத் தள்ளி நிற்கச் சொன்னான். ‘‘இல்லடா எஸ்.வி இங்கேதான் பால் வரும்…’’ என்று முனுசாமி சொல்ல ‘‘மூதேவி… அதனாலதான் சொன்னேன்.
பால் பேட்லேர்ந்து வேகமா வரும். உனக்கு அடிகிடி பட்டு வெச்சுதுன்னா உங்க அப்பன், ஆயிக்கு எவன் பதில் சொல் றது?’’ என்று சொல்லி ஷார்ட் லெக்கை பவுண்ட்ரி-லைன் அருகில் மாற்றினான். ஒரு ரன்னையெல்லாம் லப்பர் பால் ஃபீல்டு செய்தே பழகிய நண்டுபிடி நாக ராஜன் கட்ட பாலை ‘கவட்டை’ வழியாக நழுவவிட்டு ஃபோர் ஆக்கினான்.
மூணு பிட்ச் முரளியின் ஸ்பின்னை ஸ்பின்னி எடுத்தார்கள் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஹேய்டன்களும் கில்க்ரிஸ்ட்டுகளும். அவர்கள் அடித்த ஆயிரத்து சொச்சத்துக்கு பதிலாக ‘மினிமேக்ஸ்’ சொச்சம் கூட அடிக்க வில்லை.
‘‘ஏண்டா… பெரிப்பா... முதல்ல ஏன் பவுலிங் எடுத்தே? எப்படியும் தோத்திருப்போம். நாம முதலில் விளையாடியிருந்தா மேட்ச்சாவது சீக்கிரம் முடிஞ்சிருக்குமே…’’ திரும்பிப் போகும்போது பெரிப்பாவைக் கேட் டேன். ‘‘முண்டம்… அவங்க மொதல்ல விளையாடியதாலதான் மேட்ச் ‘லஞ்ச்’வரை போச்சு. அதனாலதான் நமக்கும் பிரியாணி, புலவு ரைஸ் கிட்டைச்சுது’’ என்ற பெரியப்பா என்னைப் பார்த்து விஷமமாக சிரித்தபடி ‘‘இப்ப புரிஞ்சுதா மோகன்… உனக்கு ஏன் கணக்கு சரியா வர மாட்டேங்குதுன்னு’’ என்று கூறி பிரியாணி ஏப்பம் விட்டான்!
சீதா ஷங்கர், தளவாய்புரம்.
கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணின் கற்பனை பாத்திரம் ’மிஸ்டர் பொதுஜனம்’. கிரேசி உருவாக்கும் கற்பனை மனிதரின் பெயர் என்ன?
‘மிஸ்டர் பிரயோஜனம்!’
- இன்னும் கேட்கலாம்...
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago