நான் ரஜினி ஆக விரும்பவில்லை! - சிம்பு சிறப்புப் பேட்டி

By கா.இசக்கி முத்து

“பொறந்து 30 வருஷமாயிடுச்சு. சினிமாவில் நுழைஞ்சப்ப நிறைய பண்ணனும்னு ஆசை இருந்தது. இப்போ எதுக்காகப் பொறந்தோம்னு ஒரு ஆன்மிகத் தேடல்தான் மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு. மனசுக்குள்ள ஒரு தெளிவு இருக்கு. சினிமாவில் எல்லாத்தையும் பார்த்திருக்கேன். கடைசி ரெண்டு வருஷத்தில் எதுவுமே இல்லாமல் இருந்த இன்னொரு பக்கத்தையும் பார்த்திருக்கேன். அதனால, இந்த வருடப் பொறந்த நாளை ரொம்ப நிம்மதியா கொண்டாடினேன்!” - இரவு 11 மணி சந்திப்பிலும் அதிகாலை மனிதரைப் போல் உற்சாகமாகச் சிரிக்கிறார் சிம்பு. வார்த்தைக்கு வார்த்தை வழிகிறது வாழ்க்கை. காதலர் தின சிறப்பு பேட்டிக்கு சிம்புவைத் தவிர, வேறு யாரை யோசிக்க முடியும்? இனி சிம்புவுடன்...

உங்கள் பிறந்தநாள் விருந்தில் நயன்தாரா கலந்துகொண்டது பரபரப்பாகி இருக்கிறதே?

ஏன் அவங்க வரக் கூடாது? என்னோட நடிக்க தினசரி படப்பிடிப்புக்கு வர்றவங்க, என்னோட பார்ட்டிக்கு வந்ததில் என்ன பரபரப்பு? நயன் மட்டுமில்ல, நிறைய பேர் அந்த பார்ட்டிக்கு வந்தாங்க. தனுஷ், நயன்தாரான்னு எல்லாரோடவும் நெருக்கமாத்தான் பழகுறேன்.

ஹன்சிகா, நயன்தாரா இருவருடனும் காதல் பிரிவிற்கு பிறகு நடித்திருக்கிறீர்கள். காதலிக்கும்போது இருந்த மனநிலை என்ன? நடிக்கும் போது இருந்த மனநிலை என்ன?

பாகவதர் காலத்தில் இருந்தது போலவே இப்பவும் நாம இருக்க முடியாது. வாழ்க்கைங்கிறது ஒரு சிலரோட மட்டும் முடியுற பொழப்பு இல்ல. இப்படி நடந்திடுச்சேன்னு நினைச்சுக்கிட்டே இருந்தால் வாழ்க்கை நகராது. இந்தப் புரிதல் என் மனசில் தெளிவா இருக்கிறதாலதான் நயன், ஹன்சிகாவோட எதையும் பார்க்காமல் நடிக்க முடியுது. நிகழ்காலம், வருங்காலம்னு நினைக்கிறது முட்டாள்தனம். இப்போ நகரும் மணித்துளிகள் மட்டுமே உண்மை.

காதல்... உங்க பார்வையில் சொல்லுங்களேன்?

இப்போதைய காலகட்டத்தில் காதல் ஒரு ப்ளஸ்... ஒரு மைனஸ். முன்பு காதலில் தோல்வியடைந்தால் உடனே அந்தப் பெண் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு கோபம் இருந்தது. காதலில் அவ்வளவு பைத்தியமாக இருந்தோம். இப்போது அது கம்மி. இப்போது காதலில் தோல்வியடைந்தால்கூட, 'இதுவும் கடந்து போகும்'னு அடுத்த வேலையைப் பார்க்க போய்விடுகிறோம். இரண்டு காதல் தோல்வி என்றால்கூட, கல்யாணம் பண்ணிக்கொண்டு வாழ்க்கையை கவனிக்கப் போய்விடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறோம். அது ஒரு விதத்தில் நல்ல விஷயம்தான். மைனஸ் என்னவென்றால் சும்மா ஜாலியாக இஷ்டத்திற்கு காதலித்துக்கொண்டிருக்கிறார்கள். அதைக் காதல் என்று தப்பாகவும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் காதலிக்கும்போது பண்ணிய வேடிக்கையான விஷயம் என்ன?

நான் காதல் பண்றதே க்ரேஸியான விஷயம்தான். என்னை மாதிரி ஒருத்தன் காதலிக்கவே முடியாது. மூன்று காதலைத் தாண்டி வந்திருக்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

காதலில் தோல்வியுற்றவர்களுக்கும், காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

காதலில் தோல்வியுற்றால் சோகமாக உட்கார்ந்து அழுவதால் எந்த பிரயோஜனமும் கிடையாது. என்ன நடக்குமோ, அதுதான் நடக்கப் போகிறது. நடந்தது நன்மைக்கே, அப்படினு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு போக வேண்டும்.

ரெண்டு பேரும் தனித்தனி என்று நினைத்தால்தான் பிரச்சினையே. ஒருத்தரின் தேவையை மற்றொருவர் புரிந்துகொண்டால் நல்லாயிருக்கும்.

2015-ல் திருமணத் திட்டம்?

எதுக்கு நான் கல்யாணம் பண்ணிக்கணும்? நான் கல்யாணத்திற்கு எதிரானவன் இல்லை. கல்யாணம்கிறது நல்ல புரிதல் கொண்ட ஆணும், பெண்ணும் பண்ணிக்கொள்வது. கல்யாணம் நடக்கிற அளவுக்கு இப்போ விவாகரத்தும் நடக்கத் தொடங்கிடுச்சு. கல்யாணம் பண்ணி விவாகரத்தாகி, அப்புறம் புரிதல் உண்டாகி, அதுக்கப்புறம்தான் கல்யாணம் சரியா அமையுது. ஒவ்வொரு பத்து வருடத்துக்கும் நம்முடைய கலாசாரமும், சமூகமும் மாறிக்கிட்டேதான் இருக்கு. அதுக்கு ஏற்பத்தான் நாம வாழணும். அதை விட்டுட்டு, பின்னோக்கிப்போய் நான் இப்படித்தான் இருப்பேன்னு சொல்ல முடியாது. சூழ்நிலைகளுக்கு ஏற்ற மாதிரி தன்னை மாத்திக்கிறவன்தான் இந்த சிம்பு. ஏதோ ஒரு பெண் பார்த்து, பேசி முடிச்சு, தாலி கட்டி வாழ்ந்துட முடியாது. 'இவகிட்ட சாகுற வரைக்கும் தோற்கலாம்'கிற அளவுக்கு மனசைப் பொளக்குற பொண்ணு கிடைக்கட்டும்.

உங்கள் படங்கள் வெளியாக மூன்று வருட இடைவெளி விழுந்துடுச்சே?

இனிமேல் இந்தப் பிரச்சினை இருக்காதுன்னு நினைக்கிறேன். அதனாலதான் ‘இது நம்ம ஆளு' படத்தை நானே தயாரிக்கிறேன். அதற்குப் பிறகு வரக்கூடிய படங்கள் எல்லாமே தேர்ந்தெடுத்து சரியாத்தான் பண்ணுவேன். கெளதம் மேனன் படத்தை முடிச்சிட்டு, செல்வராகவன் இயக்கும் படத்துக்கு டேட் கொடுத்திருக்கேன்.

திரையுலகில் உங்களின் சாதனை என்று எதை நினைக்கிறீர்கள்?

எதுவும் பண்ணினதா நினைக்கல. சினிமாவிலும் வாழ்க்கையிலும் என்னைத் தகுதிப்படுத்தி நிற்கவைக்க பெருசா கஷ்டப்பட்டது என்னோட அப்பாதான். ரோபோவுக்கு கீ கொடுக்கிற மாதிரி, என் அப்பா என்னை இயக்கினார். அவர் சொல்லிக் கொடுத்ததை மட்டும்தான் பண்ணியிருக்கேன். அடுத்த 30 வருடங்கள் நான் சினிமாவிற்கு பண்ணப்போகும் காலமா இருக்கும்னு நினைக்கிறேன். எனக்கு மேல இருந்தவர்கள் கீழே போய்ட்டாங்கன்னு எனக்குத் திமிரோ, சந்தோஷமோ இல்லை. எனக்கு அப்புறம் வந்தவர்கள் என்னைவிட மேலே போய்ட்டாங்கன்னு பொறாமையோ, வருத்தமோ இல்ல. தனியாக நிரூபிக்க எதுவுமே இல்லைங்கிறதுதான் என் மனநிலை. எதுவுமே இல்லாத ஜீரோதான் நான்!

‘வானம்', ‘விண்ணைத் தாண்டி வருவாயா' மாதிரியான படங்களில் மீண்டும் சிம்புவை எப்போது பார்ப்பது?

அடுத்து நான் பண்ணியிருக்கிற படம் எந்த மாதிரியான படம்னே தெரியாமல் இப்படி கேட்டா எப்படி? நான் பண்ணியிருக்கும் படங்கள் எதுவுமே ஒரே மாதிரி கிடையாது. ஒரு காலகட்டத்தில் எனக்கு ரஜினி சார் மாதிரி பெரிய ஸ்டாராக ஆசை. ஆனால், இப்போ அப்படியெல்லாம் ஆசை இல்லை. என்னை யாருக்குப் பிடிக்குமோ, அவங்க ரசிக்கிற மாதிரி பண்ணினால் போதும். நான் படம் பண்ணி மூன்று வருடங்கள் ஆச்சு. ஆனாலும், ‘எப்போ சார் படம் வரும்'னு எனக்காக காத்திருக்காங்க பல பேர். அவங்களை சந்தோஷப்படுத்தினால் எனக்குப் போதும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்