இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு பின் இத்தாலியில் கடும் வேலை இல்லாத் திண்டாட்டம். ஆயிரக்கணக்கில் முண்டியடித்துக் காத்திருந்தால் ஒரு சிலருக்கு மட்டும்தான் வேலை கிடைக்கிறது. அப்படி ஒரு யோகத் தருணம் அன்டோனியோவிற்கு வாய்க்கிறது. சுவரொட்டி ஒட்டும் வேலை. ஆனால் மிதிவண்டி கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள். ஏணியையும் மைச் சட்டியையும் சுமந்துகொண்டு தெருத் தெருவாகச் செல்ல அது அத்தியாவசியம்.
தன் மிதிவண்டியை அடகு வைத்து தொலைத்தாயிற்று. சைக்கிள் இருக்கிறது என்று சொல்லி வேலைக்கான உத்தரவையும் வாங்கியாயிற்று. என்ன செய்ய? மனைவி மரியா வரதட்சணையாக தான் கொண்டு வந்த விலை உயர்ந்த படுக்கை விரிப்புகளை அடகு வைத்து பணம் தருகிறாள். இந்த வேலை கிடைத்தால் தானே ஜீவனம் நடத்த முடியும்?
புதிய மிதிவண்டி வாங்கி அன்டோனியோ உற்சாகமாக வேலைக்கு கிளம்புகிறான். மகனை மிதிவண்டியில் ஏற்றிச் சென்று பெருமிதத்துடன் பள்ளியில் விட்டுச் செல்கிறான்.
முதல் நாள் வேலை. உற்சாகத்துடன் சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருக்கையில் கீழே நிறுத்தப்பட்டுள்ள மிதிவண்டியை ஒருவன் திருடிச் செல்கிறான். துரத்திப் போயும் பிடிக்க முடியவில்லை. விரக்தியுடன் வீடு திரும்புகிறான். சைக்கிளைத் தேடும் படலம் தொடங்குகிறது. போலீஸ் இவன் புகாரை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நண்பன் ஆலோசனையில் திருடப்படும் மிதிவண்டிகளை பாகம் பிரித்து விற்கும் சந்தைக்கு செல்கிறார்கள் தந்தையும் மகனும். அங்கும் பலனில்லை. யதேச்சையாக, திருடியவன் ஒரு கிழவனுடன் பேசுவதைப் பார்த்து மீண்டும் துரத்துகிறார்கள். திருடன் கிடைக்கவில்லை. கிழவன் தேவாலயத்திற்குள் நுழைகிறான். கிழவனை மிரட்டியதில் திருடன் இருப்பிடம் தெரிய வருகிறது. இடையில் மகனை கடிந்து கொண்டதில் அவன் கோபித்துக் கொள்கிறான். ஆற்றில் விழுந்த சிறுவன், தன் மகன் இல்லை என்ற நிவாரண உணர்வில் அவனை உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்துகிறான்.
திருடன் இடம் தேடிச் சென்றுப் பிடிக்கிறான். அவன் ஒரு விபச்சார விடுதிக்குள் ஒளிகிறான். அவனை சிரமப்பட்டு பிடிக்கையில் அவன் வலிப்பு வந்தது போல நடித்து சுற்றத்தார் கவனம் பெறுகிறான். போலீஸ் வந்து வீட்டில் தேடி எதுவும் இல்லை என்கிறது. மிகுந்த விரக்தியுடன் மகனுடன் வெளியேறுகிறான்.
கால்பந்தாட்ட மைதானம் வெளியே நூற்றுக்கணக்கானோர் மிதிவண்டிகளில் வந்து போகிறார்கள். இது மிதிவண்டிகள் வைத்திருப்போருக்கான உலகம் என்று தோன்றுகிறது அவனுக்கு. யாரும் கவனிப்பாரற்று நிற்கும் ஒரு மிதிவண்டியை கட்டடம் ஒன்றின் முன்பு காண்கிறான். மகனை டிராம் பிடித்து வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டு அந்த மிதிவண்டியை நோக்கிச் செல்கிறான்.
மிகுந்த மனப் போராட்டத்திற்கு பிறகு அதை களவாட நினைக்கிறான். அவன் அதை எடுத்து ஓட்டத் தொடங்குகையிலேயே பிடிபடுகிறான். டிராமை தவறவிட்ட மகன் கூட்டத்தினரால் தந்தை அடிபடுவதைப் பார்த்து ஓடிவருகிறான்.
சிறுவனைக் கண்ட மிதிவண்டியின் சொந்தக்காரன் மனம் நெகிழ்ந்து போலீசுக்கு போகாமல் அவனை விடுவிக்கிறார். “உன் நல்ல நேரம். பிழைத்துப் போ!” என்கிறது கூட்டம். “நல்ல அப்பா. பையனுக்கும் இதைக் கற்றுக் கொடு!” என்று எக்காளமிடுகிறது. மகன் முன் அவமானப்பட்டதால் தந்தை வெட்கி கண்ணீர் வடிக்க, மகன் ஆதரவாய் கையைப் பிடிக்கிறான். இருவரும் கூட்டத்தில் கலைந்து செல்கிறார்கள்.
விட்டோரியோ டி சிகா 1948ல் இயக்கி வெளியிட்ட படம். உலகின் மிகச் சிறந்த பத்து படங்களில் ஒன்று என இந்தப் படத்தை தேர்வு செய்கிறார்கள் விமர்சகர்கள். பின்நவீனத்துவக் கோட்பாட்டில் படைக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் தாக்கம் உலகின் முன்னணி இயக்குநர்கள் பலருக்கு உள்ளதாகச் சொல்கிறார்கள். குறிப்பாக இரானிய இயக்குநர்களுக்கு டி சிகா பெரிய ஆதர்சம் என்று தெரிகிறது.
இத்தாலி மொழியில் கறுப்பு வெள்ளையில் வந்த மிகப் பழைய படம். ஆனால் இன்று பார்க்கையிலும் முதல் காட்சி தொடங்கி கடைசி காட்சி வரை கட்டிப்போடுகிறது. எந்த நிறமானால் என்ன, எந்த மொழியானால் என்ன? மானுடம் பொது தானே?
அமெரிக்காவில் இதை பைசைக்கிள் தீஃப் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டார்கள். ஆனால் பைசைக்கிள் தீஃப் என்று ஒருமையில் அழைக்கும்போது படத்தின் ஆதாரச் செய்தி குலைகிறது என்பது என் அபிப்பிராயம்.
இது திருடர்களின் படம். திருடர்கள் ஆக்கப்பட்டவர்களின் படம். படம் முழுவதும் திருடனைத் தேடிச் செல்லும் கதாநாயகன் கடைசியில் திருடனாகிறான். நாயகனின் சைக்கிளைத் திருடியவனுக்கும் இப்படி ஒரு கதை இருந்திருக்கலாம். போலீஸ் வீட்டில் சோதனை இடுகையில் திருடனின் தாய் சொல்லும் வசனம் முக்கியமானது: “இவ்வளவு கஷ்டப்பட்டு தேடறதுக்குப் பதிலா அவனுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்யுங்களேன்”
போர், வறுமை, வேலையில்லா திண்டாட்டம் என எல்லாவற்றையும் மக்கள் மீது திணித்து அவர்களிடமிருந்து மகிழ்ச்சி, அமைதி, நாணயம், நம்பிக்கை ஆகிய அடிப்படை விழுமியங்களைத் திருடும் அரசாங்கம்தான் நிஜத் திருடனோ?
குறி சொல்லும் பெண்ணிடம் செல்வதை முதலில் கண்டித்துவிட்டு பின் தானே சென்று குறி கேட்டல், தேவாயத்தில் நல்ல உணவிற்கு காத்திருக்கும் கிழவனைத் தேடுகையில் கதவுகள் மூடப்பட்டு, “உள்ளிருப்பவர் யாரும் வெளியே செல்ல இயலாது” என்று சொல்லும் வசனம் போன்றவை இந்தப் படத்தில் சொல்லும் செய்திகள் ஏராளம்.
பைசைக்கிள் தீவ்ஸின் பாதிப்பில் உருவானதுதான் நம் வெற்றிமாறனின் ’பொல்லாதவன்’ உலகின் உன்னத படைப்புகளை தழுவி நம் மண்ணிற்கு ஏற்ப நாணயமாகத் தருவித்தல் திருட்டல்லவே! அப்படியே அது திருட்டாக இருந்தாலும் அன்டோனியோவின் உள் நோக்கத்தையும் நிர்பந்தங்களையும் புரிந்து ஏற்றுக்கொள்வதைப் போல இவர்களையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளலாம்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago