கிரேசியைக் கேளுங்கள் 17 - எமதர்மனுக்கு செலெக்டிவ் அம்னீஷியா

By கிரேசி மோகன்

பத்மா மணாளன், கோயம்புத்தூர்-4.

உங்களைக் கொண்டாடிய பெரிய மனிதர்களில் உங்களால் மறக்க முடியாத மனிதர் யார்? ஏன்?

என்னைக் கொண்டாடியவர்களின் லிஸ்ட் பெரிசு. அதில் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் முக்கியமானவர். குமுதம் இதழில் வரும் ‘அரசு பதில்’ புகழ் அரசுவின் (அண்ணாமலை, ரங்கராஜன், சுந்தரேசன்) மூவர் அணியில் இடையினரான ரா.கி.ரங்கராஜன், தன்னுடைய ஹாஸ்ய கதைகளுக்கு என்னை முன்னுரை எழுதித் தருமாறு கேட்டார்.

வழக்கம் போல் சுறுசுறுப்பாக ‘ஓ.கே சார்’ என்று சொல்லி, பழக்கம் போல் சோம்பேறித்தனத்தில் மறந்து போனேன். ‘‘மாப்பிளே… உன்னால முடியலேன்னா சொல்லு. நானே முன்னுரையை எழுதிட்டு உன் பெயரைப் போட்டுடறேன்’’ என்று நாசூக்காக மிரட்டினார். குமுதம் பதிப்பாளர் பி.வி.பார்த்தசாரதியின் தங்கை மகளை அடியேன் மணந்ததால், ரா.கி.ர என்னை ‘மாப்பிளே’ என்று தான் அழைப்பார்.

எனக்குத் திருமணம் நிச்சயமான சமயத்தில், சுந்தரம் - கிளேட்டனில் பணிபுரிந்து கொண்டி ருந்த என்னை போனில் கூப்பிட்டு, குமுதத்துக்குக் கதை எழுத கட்டாயப்படுத்தியவர். சிறுகதை எழுதுவது எப்படி என்று ‘கம்பல்ஸரி எஜுகேஷன்’போல எனக்குப் புகட்டியவர் ரா.கி.ர. நான் எழுதித் தந்த முன்னுரையைப் படித்துவிட்டு ரொம்பவும் பாராட்டினார்.

எழுத்தாளர்களில் ரா.கி.ரங்கராஜன் ‘ஒரு ஆயிரங்காலத்துப் பயிர்’. நானோ நேற்று முளைத்த ஹாஸ்யக் காளான். தன்னுடைய ‘ஹாஸ்ய கதைகளுக்கு’ என்னை அவர் முன்னுரை எழுதச் சொன்னபோது, எனக்கு அதுவே ஒரு மிகப் பெரிய ஹாஸ்யமாகப்பட்டது.

குமுதம் ஆசிரியர் குழுவில் இருந்து கொண்டு, பத்திரிகையையும் பார்த்துக் கொண்டு, நாவல், சிறுகதைகளை எழுதிக்கொண்டு, இவ்வளவு ‘கொண்டு’ களுக்கு இடையே, BUSY-NESSசாக இருந்தவர். அந்த ஒரு பானை சோற்றில் ஒரு சோறுதான் இந்தத் தொகுப்பு. நகைச்சுவையை விட அதைத் தூண்டி விடும் சம்பவங்களை தோற்றுவிப்பதில்தான், ஹாஸ்ய எழுத்தாளர்கள் சமர்த்தர்களாக இருக்க வேண்டும். சிரிப்பை உந்திவிடும் சம்பவங்களை உற்பத்தி செய்வதில் ரா.கி.ர ‘சமர்த்த HUMOUR தாஸர்’.

‘எப்படி கதை எழுதுவது' என்று ரா.கி.ர முன்பு குமுதத்தில் எழுதினார். என்னைக் கேட்டால் அவர் ‘எப்படி காமெடி எழுதுவது' என்று ஒரு தொடர் எழுதியிருக்கலாம். என் போன்ற ஏகலைவர்களுக்காக அந்த துரோணாச்சாரி அவசியம் இதைச் செய்திருக்க வேண்டும்.

எழுத்துக்கு ‘குளியல் அதிர்ஷ்டம்’ (ஸ்நான ப்ராப்தி) இல்லாத குடும்பத்தில் பிறந்த எனக்கு, எப்படி நகைச்சுவை எழுத்து வந்தது என்பது எனக்கே புரியாதப் புதிர். இந்த முன்னுரை எழுதும்போது என் தந்தை சொன்னார், ‘ஆதி நாளில் ரா.கி.ர-வும் அவரும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்களாம். குழந்தையாக இருந்த என்னை ரா.கி.ர தூக்கி வைத்துக்கொள்வாராம். அப்போது விஷமம் செய்த என்னை அவர் தனது மோதிரக் கையால் குட்டியிருக்கலாம். அதனால் ஹாஸ்யம் அடியேன் தலைக்குள் நுழைந்ததோ என்னவோ!

பழ.வள்ளியப்பன், காரைக்குடி.

ஒரு குட்டி கதை ப்ளீஸ்?

‘பசு நாக்கால் நக்க பாழும் வழுக்கை போய் - புசுபுசு முடி வளருமாமே' என்ற ’வெறுந்தலை சீத்தனார்’ செய்யுளைப் படித்தான் கதாநாயகன் வைத்தி. உடனே தன் வீட்டுக்கு பால் ஊத்துபவரிடம் பசு மாட்டை 10 நாள் வாடகைக்கு எடுத்து, தன் தலை வழுக்கையை நக்க சொன்னான்.

10-வது நாள் பால்காரர் போலீஸுடன் வந்து வைத்தியை கெட்ட வார்த்தையில் திட்டி, பசுவை வாய் திறக்கச் சொன்னார். பசு நாக்கில் புசுபுசு என்று முடி! வைத்தி கைதியானான்.

சி.மணி, தஞ்சாவூர்.

எமதர்மனுக்கு செலெக்டிவ் அம்னீஷியா (தற்காலிக ஞாபக மறதி) வந்தால் ?

எமதர்மன் மக்கு மாதிரி பேரம் பேசி, விலை கொடுத்து உயிரை வாங்கி… ஏமாந்த தர்மனாவான்!

பிரபாவதி, திருச்சி-20.

லட்சுமணக் கோடு, பென்சில் கோடு, சாக்பீஸ் கோடு, கரிக் கோடு, சாலையின் வெள்ளைக் கோடு… உங்களுக்கு எந்தக் கோடு பிடிக்கும் சார்?

லட்சுமணக் கோடு ராமாயணக் கோடு. என் பின் கோடு டிராமயணக் கோடு. லட்சுமணன் மாதிரி ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’. மாது பாலாஜி மாதிரி தம்பி உடையான் மேடைக்கு அஞ்சான். அவன் கிழித்த கோட்டை (அது ரெயின் கோட் ஆக இருந்தாலும்) நான் தாண்ட மாட்டேன். தாண்டினால் இந்தக் கிரேசி கிழிந்து கந்தலாகிடும்.

மோகன ரூபன், ராமநாதபுரம்.

தமிழில் பிடித்த நகைச்சுவை எழுத்தாளர் களைப் பட்டியல் போடுங்களேன்?

என்.எஸ்.கிருஷ்ணன் நெல்லுக்கு இறைத்த நகைச்சுவை நீர் நாகேஷ் வாய்க்கால் வழியோடி, இன்று நம் ‘புள்ளைகளுக்கும் பாய்கிறது.

நகைச்சுவை எழுத்தில் ரா.கி.ர. தனி ரகம். கல்கி, தேவன், சிட்டி, சாவி, நாடோடி, எஸ்.வி.வி, பாக்கியம் ராமசாமி என்று ஒரு பட்டாளமே இருக்கிறது. என் ஃபேவரைட்-அமரர் தேவன். இவரை தமிழகத்து பி.ஜி.வுட் ஹவுஸ் என்பார்கள். என்னைக் கேட்டால் பி.ஜி.வுட்ஹவுஸ்தான் ‘இங்கிலாந்து தேவன்’ என்பேன்.

எஸ்.ரவி, வேலூர்.

பழைய டிரான்சிஸ்டர் என்றதும் உங்கள் நினைவில் வருவது?

என் சிஸ்டர் ஒரு பழைய டிரான் சிஸ்டர் வைத்திருந் தாள். என்னமோ தெரியவில்லை, நான் மட்டும் அதை ஆன் செய்தால் ‘தென்னங் கீற்று சோலையிலே… சிட்டுக் குருவி பாடுது’என்று ஒரு வரி பாட்டு... அப்புறம் ஒரு மயான இடைவெளியைத் தொடர்ந்து ‘தன் பெட்டைத் துணையைத் தேடுது’ என்று ஒலிக்கும்.

தாராசிங் போன்று ஆஜானுபாகுவான ஒருவனுக்கு அமிர்தாஞ்சன் மற்றும் விக்ஸ் ஆகியவற்றைத் தடவிவிட்டு, ஆறிப்போன ஹார்லிக்ஸைக் குடிக்க வைத்து, தலையில் மப்ளரைச் சுற்றி, உடம்புக்கு ஸ்வெட்டரைப் போட்டுவிட்டு, என் சிஸ்டரின் திக்குவாய் டிரான்சிஸ்டரில் ‘மேற்படி’ பாட்டை கேட்க வைத்தால்... ஆசாமி ‘104 டிகிரி ஜுரம்’ வந்து சாய்வது சத்தியமாக உறுதி!

- இன்னும் கேட்கலாம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்