கிரேசியைக் கேளுங்கள் 16 - யோக்கியமாக’ இருந்தால்... ‘ஆரோக்கியமாக’ இருக்கலாம்.

By கிரேசி மோகன்

எம்.எஸ்.நாகராஜன், பொள்ளாச்சி.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரைப் பற்றிய உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

பாலசந்தர் சார் மறைந்துவிட்டதாக நான் கருதவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ஆத்மா சாந்தியடைதல், ஆத்ம திருப்தி… இரண்டுமே ஒன்றுதான். கே.பி சார் ஆத்ம திருப்திக்காக ஆகாசம் சென்றுள்ளார். அங்கு அவரது ஆத்ம நண்பர் அனந்துவுடன், அடுத்த படத்துக்கான டிஸ்கஷனில் ஈடுபட்டுள்ளார். கதாநாயகனின் கால்ஷீட் பற்றி கவலையே வேண்டாம். அவரது ஆஸ்தான கதா நாயகர் நாகேஷ் சொர்க்கத்தில்தானே இருக்கிறார்.

குபேரன் ஃபைனான்ஸ் செய்ய, கந்தர்வர்கள் இசையமைக்க, மயன் ஆர்ட் டிபார்ட்மென்டைப் பார்த்துக் கொள்ள, இந்திரன் லைட்டிங் பார்க்க, வாயு பகவான் வேகமாக டிராலி தள்ள… வருண பகவான் கிளாப் அடிக்க, ‘சர்வர் சுந்தரம்’ போல ‘சொர்க்க சுந்தரம்’ என்கிற படத்தை இயக்கச் சென்றுள்ளார் கேபி சார்… என்றுதான் நான் நினைத்துக் கொள்கிறேன்.

கண்ணதாசன் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன: ‘அவர் (கே.பி. சார்) நிரந்தரமானவர் அழிவதில்லை. எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லை!’

மகேஷ், துபாய்.

கிரேசி… நீங்கள் எந்தக் கட்சி?

என் கட்சி எப்பவுமே ‘தென்கச்சி’தான்! யாம் அறிந்து இரண்டு கலைவாணிகள் உண்டு. ஒருவர், ஆய கலைகள் அறுபத்தி நான்கினை ஆளும் வாணி. இன்னொருவர், ஹாஸ்ய கலையை மட்டும் அள்ளி வழங்கும் ஆஹாஸ்ய வாணி (ஆகாச வாணி).

இந்த ‘ஆஹாஸ்ய வாணியின்’ ஒரே வாரிசு ஆல் இண்டியா ரேடியோவில் ‘இன்று ஒரு தகவல்’ வழங்கிய தென்கச்சி சுவாமிநாதன். இவர், வாழ்க்கைக்கு பகைச் சுவையான எதிர்க் கட்சிகளை நகைச்சுவையால் ஆளும் தென் கட்சியார். இவரது ‘சிரிப்போம்… சிந்திப்போம்’ என்கிற புத்தகத்துக்கு அணிந் துரை எழுதும் வாய்ப்பு அடியேனுக்குக் கிட்டியது.

தென்கச்சியார் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பழுத்த நகைச்சுவை ஞானப்பழம். நானோ, நேற்று முளைத்த அவ(ச)ரக்காய். ‘கனிக்கு அணிந்துரை வழங்க காய் கவர்ந்தற்று’ என்று நீங்கள் கூறலாம். என்ன செய்வது? என் அதிர்ஷ்டம் இந்தப் பழம் நழுவி ‘என் பால்’ விழுந்துவிட்டது.

படிப்பவர்கள் ரசனை மேம்படும் அளவுக்கு, சிரிப்பின் படம் வரைந்து அதன் பாகங்களைக் காட்டியவர் பேராசிரியர் தென்கச்சியார். ‘Humour is the Salt of the Life’ என்பார்கள். தென்கச்சியாரின் சிரிப்பு என்கிற இந்த உப்பு அதிகமானால்… B.P குறையும். யாரையும் கரிக்காத இவரது சிரி(உ)ப்பு டயாப்டீஸை போக்க வல்ல இனிப்பு.

இன்சுலின் போல… இது ‘இன் சொலின்’. ஜோஸ்யத்தை நம்புவதைவிட தென்கச்சியின் ஹாஸ்யத்தை நம்பலாம். இவரது எழுத்தைப் படிப்பது ‘இம்மை சுகம்’ என்றால்… மேடையில் இவர் பேச்சைக் கேட்பது ‘மறுமை மோட்சம்’. தமிழ் இலக்கணத்தில் ‘உயர்வு நவிற்சி அணி’ என்று ஒன்று உண்டு. தென்கச்சியாருடையது ‘உயர்வு நகைச்சுவை அணி’!

கே.மாதவன், சின்னதாராபுரம்.

ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்… சார்?

உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. ‘யோக்கியமாக’ இருந்தால்… ‘ஆரோக்கியமாக’ இருக்கலாம். வெகுநாள் வாழ வைக்கும் வீட்டு சாப்பாடே என் ஸ்பெஷல். வெண்பா போல உண்பா(ய்). பிறகு பார் ஆரோக்கியம் ‘ஹச்’ டாக் போல உன்னைத் தொடரும்.

‘பாயில்டு வெஜிடபிள்ஸ் பச்சரிசி சாதத்தில்

ஆயில்டு சாம்பார் அடிக்கரைசல் - சாயில்டு

சாத்தமுது(ரஸம்) சாதம் சுவையா னநீர்மோர்

ஆத்தமுதே என்ஸ்பெஷல் ஆம்’

திருமலை, பஹரைன்.

ஜீனியஸுக்கும் சாம்பியனுக்கும் என்ன வித்தியாசம்?

ஜீனியஸ் பிறக்கிறார்கள். சாம்பியன்கள் உருவாக்கப்படுகிறார்கள். ‘ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதைப் போல…’ ஒரு சாம்பியனுக்குப் பின்புலனாக ஒரு ஜீனியஸ் ஆணோ, பெண்ணோ இருக்க வேண்டும்.

‘உன் பையன்

மண்ணைத் தின்றால் வையாதே

வாய்க்குள் பார்…

வையம் தெரியாவிட்டால்

ஐயமே இல்லை - நீ

யசோதை அல்ல’

நாம் யசோதையாக இருந்தால் எந்தச் சோட்டா கிருஷ்ணனும் சாம்பியன் கிருஷ்ணன் ஆகும் சாத்தியம் உண்டு. என்.எஸ். கிருஷ்ணனில் இருந்து டென்னிஸ் கிருஷ்ணன் வரைக்கும் இது பொருந்தும். சாம்பியன் கிருஷ்ணன்தான் பின்னாளில் ஜீனியஸ் கிருஷ்ணனாகி… கீதை சொல்லி அர்ச்சுனனை சாம்பியன் ஆக்கினார்.

‘பிறந்த குழந்தையைத் தண்ணீரில் தூக்கிப் போட்டால் அது முழுகாது, நீந்தும்’ என்பார்கள் சிலர். ‘தண்ணிக்கிட்டே போகாதே… பீச் அலையில் நிக்காதே’ என்று சொல்லிச் சொல்லியே ‘குற்றாலீஸ்வரன்’ ஆகக் கூடிய நீச்சல் சாம்பியன்களை, பாத்ரூம் ஷவரில் குளிக்கப் பயப்படும் கோமாளியாக்கிவிடுகிறோம். சாம்பியனை இனம் கண்டு கொள்ள ஒரு ஜீனியஸ் அவசியம் தேவை.

கமல், ரஜினி போன்ற சாம்பியன்ஸை உருவாக்கியது கே.பாலசந்தர் என்ற ஜீனியஸ். இதில் உல்டாவும் உண்டு. கணித மேதை ராமானுஜம் என்ற ஜீனியஸைக் கண்டுபிடித்து, அவரது திறமையை உலகுக்குக் காட்டிய சாம்பியன் ஹார்டி. ஜீனியஸ் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக சாம்பியனானால், அது நிலைத்து நிற்காது.

கற்றதற்கு ஏற்ப கசடற நிற்பதற்கு ஜீனியஸ் என்ற ஊன்றுகோல் அவசியம்!

சி.மோகன், தூத்துக்குடி.

ஒரு ஜோக் ப்ளீஸ்...

நான் எழுதி, காத்தாடி ராமமூர்த்தியின் வசன உச்சரிப்பால் பிரபலமான ‘அய்யா அம்மா அம்மம்மா’ நாடகத்தில் இருந்து...

காத்தாடி: ஜானகி… பேன்ட் லூஸா இருக்கு. சணல் கயிறு இருந்தா தா!

ஜானகி: ஏன் பேன்ட்டை இவ்வளவு லூஸா தெச்சுண்டீங்க?

காத்தாடி: அடியே லூஸு! மொதல்ல ரொம்ப டைட்டா இருந்தது. நம்ம டெய்லர்தான் ஆல்டர் பண்ணறதுல ஆஸ்கர் வாங்கினவனாச்சே. சரின்னு பேன்ட்டை கொஞ்சம் லூஸ் வெச்சு தரச் சொன்னேன். அந்தப் படுபாவி பயங்கர லூஸு வெச்சுட்டான். ஹோட்டல்ல போய் சாப்பிட்டுட்டு நான் எழுந்துட்டேன். ஆனா, பேன்ட் எழுந்துக்கல...’’

- இன்னும் கேட்கலாம்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்