‘நான்’ படத்தின் மூலம் இயல்பாகத் தன்னால் நடிக்கவும் முடியும் வெற்றிப்படங்களைத் தயாரிக்கவும் முடியும் என்று காட்டியவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.
இவரது நடிப்பில் ‘இந்தியா - பாகிஸ்தான்’ விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அடுத்து பிச்சைக்காரன், திருடன் ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘தி இந்து’ தமிழுக்காக அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...
மாயூரம் வேதநாயகம் பிள்ளை உங்களது பாட்டனார் என்று படித்ததாக நினைவு. அது நிஜம்தானா?
ஆமாம்! தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எழுதினாரே அவரேதான். அவர் என் தாத்தாவின் அப்பா. எழுத்து மட்டுமல்ல, அவர் பாடல்களை இயற்றி மெட்டமைத்து பாடவும் செய்வார் என்று என் உறவினர்கள் சொன்னபிறகுதான் எனக்குத் தெரியவந்தது. அப்பாவைச் சிறுவயதிலேயே இழந்துவிட்டேன்.
உங்களுக்கு இசையின் மீது எப்போது நாட்டம் வந்தது?
கேள்வி ஞானம்தான் என்னை இசையமைக்கத் தூண்டியது. பள்ளியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது நானாகவே மெட்டமைத்து பாடலையும் எழுதி பாட ஆரம்பித்துவிட்டேன். பிறகு கல்லூரி படிக்கும்போது நண்பர்கள் எல்லோரும் “ஆண்டனி நீ நல்லா மெட்டுப்போடுறேடா!” என்று பாராட்டினார்கள். கல்லூரி இறுதித் தேர்வு எழுதி முடித்த கையோடு இசையமைப்பாளர் ஆகிவிடுவது என்று சென்னைக்குக் கிளம்பி வந்துவிட்டேன்.
சென்னை அனுபவம் எப்படி இருந்தது?
இசையமைப்பாளரின் இடத்தில் கம்ப்யூட்டர் உட்கார்ந்துகொண்டிருந்தது. சீக்குவென்சர், சாம்பிளர்ஸ், புரோகிராமிங் என்று பெரும் குழப்பமாக இருந்தது. இது எதுவுமே நமக்குத் தெரியாதே என்று நினைக்காமல் ஒரு சின்ன கீ போர்ட் வாங்கிக் கொண்டு, அதில் நான் உருவாக்கிய மெட்டுகளை மெல்ல மெல்லத் தட்டி புரோகிராம் செய்ய ஆரம்பித்தேன்.
தோற்றுவிட்டேன் என்று ஒப்புக்கொண்டு ஊருக்குத் திரும்பிப் போக நான் விரும்பவில்லை. அதன்பிறகு கணினியோ, அதன் தொழில்நுட்பமோ என்னிடம் வம்பு பண்ணவில்லை. ஆனால் சிலர் இசையில் எத்தனை கிரேட் தாண்டியிருக்கிறீர்கள் என்று கேட்க ஆரம்பித்தார்கள். இப்படிக் கேட்பவர்களுக்காக டிரினிட்டி காலேஜ் ஆஃப் லண்டனில் இசை தியரியில் ஐந்து கிரேடுகள் படித்தேன். அவ்வளவுதான். இன்றுவரை இசை தெரியாமல்தான் இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்.
இசையிலும் கவர்கிறீர்கள், கதாபாத்திரத்துக்கு நெருக்கமாக நடிக்கவும் செய்கிறீர்கள். நடிப்புக்குப் பயிற்சி எடுத்திருப்பீர்கள் இல்லையா?
இல்லவே இல்லை. இசையோ, நடிப்போ, நீங்கள் விரும்பும் எல்லாம் உங்களிடமிருந்து வெளிப்படுவதுதான். கலை நமக்குள்ளேயே இருக்கிறது. குரு இருந்தால்தான் நான் வெளிப்படுவேன் என்று அது அடம் பிடிப்பதில்லை. நடிப்பு என்று முடிவு செய்தபிறகு பயிற்சி எடுத்துக் கொண்டால் அது என் இயல்பைக் குலைத்துவிடலாம் என்று எனக்குத் தோன்றியது. ஏனென்றால் கதையும் நமக்கு ஒதுக்கப்பட்ட கதாபாத்திரமும்தான் நமது நடிப்பைத் தீர்மானிக்கின்றன.
அதனால் சினிமாவில் நான் நடிப்பதில்லை. திரையில் எனது வெற்றி என்பதை என் கதாபாத்திரங்களின் வெற்றியாகப் பார்க்கிறேன். கதாபாத்திரங்களால்தான் நான் நடிகனாகப் புகழ் வெளிச்சத்தில் வாழ்கிறேன். விஜய் ஆண்டனி எனும் சாமான்ய மனிதனால் அல்ல. நான் இசையமைக்கும் பாடல்களும் அப்படித்தான். ஒரு நல்ல கதை தனக்கான பாடல்களை ஏற்கனவே மெட்டமைத்துக் கொண்டுவிட்டது என்றுதான் நான் கருதிக் கொள்கிறேன். பாடல்களை நான் வலிந்து இதுவரை மெட்டமைத்ததில்லை.
‘டர்ட்டி பிக்ஸர்’ இந்திப் படத்தில் உங்களது நாக்க மூக்க பாடல் பயன்படுத்தப்பட்டது. அதன்மூலம் பாலிவுட்டில் உங்களுக்கான வாயில் திறக்கப்பட்டும் அதை நீங்கள் பயன் படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லையே?
எனக்கு நேரமில்லாததுதான் காரணம். மிகச்சிறந்த கதைகளோடு பல உதவி இயக்குநர்கள் முதல் வாய்ப்பு தேடி அலைகிறார்கள். நீங்கள் என் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்டு என்னிடம் வந்து கதை சொல்லும்போது பல கதைகள் என்னைப் பாதிக்கின்றன. அவர்கள் சொல்வதில் உப்புச் சப்பில்லாத கதை என்று எதுவுமே இல்லை. அப்படிக் கேட்ட ஒரு கதையில் நாமே ஏன் நடிக்கக் கூடாது என்றுதான் இறங்கினேன்.
எனக்கு ஏற்ற கதைகளைத் தொடர்ந்து சரியாகத் தேர்வு செய்ய முடிவதால் கிடைத்துவரும் தொடர் வெற்றி என்னைப் பக்குவப்படுத்திவிட்டது. மேலும் என் படங்களை நானே தயாரிப்பதாலும் எனக்கு பொறுப்பு இன்னும் கூடிவிடுகிறது இதனால் தற்போது நடித்து வரும் ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்துக்குக்கூட என்னால் இசையமைக்க முடியவில்லை.
புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறேன். ஆனால் வெகு விரைவில் பாலிவுட்டில் என்னை நானே ஒரு நடிகனாகவும் இசையமைப்பாளராகவும் அறிமுகப்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன்.
சகமத சகிப்புத் தன்மை அபூர்வமாகி வரும் வேளையில் இஸ்லாமிய அடையாளம் கொண்ட கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து ஆச்சரியப்படுத்துகிறீர்களே?
இதைப் பெருந்தன்மை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். ஒரு சகோதரனாக இது என் கடமை. எனது நண்பர்களில் எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் என்னை கிறிஸ்தவனாகப் பார்த்ததில்லை. அன்பு மட்டுமே சிறந்த மதம் என்பதை இந்த மாநகர வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கிறது. எந்த மதத்தைச் சேர்ந்த சகோதரர்களுக்கும் நெருக்கடி என்றாலும் கைகொடுக்க வேண்டியது நம் கடமை.
இஸ்லாமிய சகோதரர்கள் மீது திணிக்கப்படும் கட்டுக்கதைகளால் சமீபகாலமாக அவர்களது மன அழுத்தத்தை நானும் உணர்ந்தேன். சினிமாவிலும் அவர்கள் மீதான கட்டுக்கதைகள் அதிகமானதைச் சகித்துக் கொள்ள முடியாதவர்களில் நானும் ஒருவன். இதை நான் என் பெருமைக்காகவும் பேருக்காகவும் செய்யவில்லை.
இந்தியா - பாகிஸ்தான் என்ன கதை?
முதல் முறையாக ஒரு முழுநீளக் காதல் கதையில் நடிக்கிறேன். இந்தியா - பாகிஸ்தான் என்றால் எதிரிகள் என்கிறோம். எலியும் பூனையும் என்கிறோம். அப்படிப்பட்ட இரண்டுபேர் காதலிக்கிறார்கள். சண்டைபோடு கிறார்கள். அவர்களால் இணைந்து வாழ முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை. இதில் நாயகன், நாயகி கதாபாத்திரங்களை விட அன்பும் காதலும் முக்கிய கதாபாத்திரங்களாக இடம்பெறுகின்றன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago