“கத்தியைச் சுழற்றி நிற்கும் என் தலைவனின் ஒரு பார்வை போதும், படம் 100 நாள் ஓட” என்று எம்.ஜி.ஆரின் பரம ரசிகர் அடைந்த பெருமை இந்தத் தலைமுறை ரசிகருக்கு வாய்க்கவில்லை.
கோலிவுட்டின் பெரிய கதாநாயகர்கள் பலரது படங்களும் 2014-ஐ அலங்கரித்திருக்கின்றன. ரஜினிக்கு ‘கோச்சடையான்’, ‘லிங்கா’. விஜய்க்கு ‘ஜில்லா’, ‘கத்தி’ என்று இருவரும் இரட்டைப் பட்டாசுகளை வெடித்த ஆண்டும் இதுவே. ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக அமைந்தால் பாக்ஸ் ஆபஸுக்கும் திருவிழாதானே! ஆனால் பெரிய படங்கள் உண்மையில் பெட்டியை நிறைத்ததா என்று பார்க்க வேண்டியது முக்கியம்.
ரஜினி மந்திரம்
அனிமேஷன் படமான ‘கோச்சடையானை’ ரஜினி ரசிகர்கள் கொண்டாடவே செய்தார்கள். படத்தின் வசூல் வழக்கமான லைவ் ஆக்ஷன் ரஜினி படங்களுக்கு இணையாக இல்லையென்றாலும் அனிமேஷன் முதல் முயற்சி என்ற வகையில் பார்க்கும்போது திருப்திதான் என்று சொல்லப்படுகிறது.
‘லிங்கா’, உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்து மீண்டு வந்ததும் ரஜினி நடித்த படம். ரவிகுமாரின் திறமையான இயக்கத்தை மீறி ரஜினி ரசிகர்களைக் கட்டிப்போடும் திரைக்கதை இல்லை என்ற விமர்சனம் எழுந்தது.
மீண்டும் நடிக்க வா தலைவா’ என்று மண் சோறு சாப்பிட்ட ரசிகர்களை ஏமாற்றாமல் ‘லிங்கா’வாகவும் ராஜா லிங்கேஷ்வரனாகவும் காட்சிகொடுத்த இந்தப் படம் வசூல் ரீதியாக எப்படி என்பது பட்டிமன்றங்களுக்கான தலைப்பாக மாறிவிட்டது.
அஜித் – விஜய்
அஜித்தின் ‘வீரம்’. 2014-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே வந்த படம். இந்தப் படம் அவரது ரசிகர்களைத் திருப்திப்படுத்தியதோடு குடும்பப் பார்வையாளர்களுக்கு உண்டான படமாகவும் இருந்தது. அஜித்தை நகரப் பின்னணியில் பார்த்துவந்த ரசிகர்களுக்கு வேட்டி, சட்டையோடு கிராமத்து மனிதராகப் பார்த்தது உற்சாகம் தந்தது. அஜித்தின் கெட்டப்பைத் தவிரக் கதையில் புதிதாக எதுவும் இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. ‘வீரம்’ பெரிய வெற்றி இல்லையென்றாலும் வசூலில் சோடைபோகவில்லை என்று சொல்லப்பட்டது.
வீரம் வெளியான அதே நாளில் வெளியான விஜயின் ‘ஜில்லா’ எதிர்பார்த்த அளவில் போகாததற்கு முக்கியக் காரணம் சொதப்பலான திரைக்கதை. விஜயோடு மோகன்லால் போன்ற பெரிய நடிகர் அமைந்தும் எடுபடாமல் போனது. நல்ல தொடக்க வசூல் இருந்தும் நீண்டு கொண்டே போகும் கதை இதெல்லாம் ‘ஜில்லா’வை வீழ்த்தின.
‘ஜில்லா’வில் விட்டதை ‘கத்தி’யில் பிடித்தார் விஜய். சமூகப் பிரச்சினையை ஒரு பெரிய ஹீரோ கையில் எடுக்கும்போது மிகவும் கவனத்தோடு கையாள்வார்கள். அதை நேர்த்தியாகச் செய்த படம் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வந்த ‘கத்தி’, நாயக வழிபாட்டு கதையில் ஆதாரமான பிரச்சினைக்கான இடத்தையும் சரியாகச் சமன் செய்திருந்ததில் இந்தப் படம் வெற்றி அடைந்தது.
விஷால்
விஷாலுக்கு ‘நான் சிகப்பு மனிதன்’, ‘பூஜை’ ஆகிய இரண்டு படங்கள். இரண்டுமே பிரமாதப்படுத்தவில்லை என்றாலும் வசூலில் சோடைபோகவும் இல்லை. நான் சிகப்பு மனிதன் புதிய விஷயத்தைக் கையாண்டு ஈர்த்தது. ‘பூஜை’ அசலான ஹரி பாணி படம். மசாலா கலவை சரியாக அமைந்ததால் வென்றது.
சூர்யா, கார்த்தி
லிங்குசாமி – சூர்யா கூட்டணியில் பெருத்த எதிர்பார்ப்புடன் வெளியான ‘அஞ்சான்’ ரசிகர்களை ஏமாற்றி வசூலில் சறுக்கியது. ஜனரஞ்சகமான படத்துக்கு வேண்டிய பல அம்சங்களும் அதில் இருந்தாலும் எதிர்பாராத அம்சம் என்று எதுவுமே இல்லாதது பெரிய குறையாக இருந்தது.
வடசென்னையின் விளிம்பு நிலை மக்களின் கொண்டாட்டங்களையும் நெருக்கடிகளையும் சொன்ன படம் கார்த்தி நடிப்பில் வந்த ‘மெட்ராஸ்’ பா. ரஞ்சித் இயக்கிய இந்தப் படம் விமர்சகர்களையும், ரசிகர்களையும் திருப்திப்படுத்தியது. இந்த ஆண்டின் வெற்றிப் படங்களில் ஒன்றாகவும் அமைந்தது.
தனுஷ், ஆர்யா
‘வேலையில்லா பட்டதாரி’ வழக்கமான நாயக ஆளுமை கொண்ட மசாலா கலவையில் தொடங்கி நடப்பு பிரச்சினையைத் தொட்டுச் சென்ற படம். பொறியியல் பட்டதாரிகளின் நிலையையும் கட்டுமானத் துறையின் பிரச்சினையையும் மையமாக வைத்து, தனுஷ் என்னும் நட்சத்திரத்தைச் சரியாக அதில் பொருத்தி யிருந்தது படத்தை வெற்றிபெற வைத்தது. இந்த ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்று.
ஆண்டின் கடைசி வாரத்தில் வந்து ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்த படம் ஆர்யாவின் ‘மீகாமன்’. த்ரில்லர் வகைக்கதையை கச்சிதமாகத் தந்த இயக்குநர் மகிழ்திருமேனியின் இந்த முயற்சி, பாராட்டையும் வசூலையும் அள்ளியது.
ஜீவா, ஜெயம் ரவி
ஜீவா நடித்த ‘யான்’ எல்லா விதங்களிலும் அடி வாங்கியது. படத்தை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்கக்கூடிய நாயகன், பெரிய இசையமைப்பாளர் ஆகியோர் இருந்தும் படம் தோல்வியைத் தழுவியது.
‘இந்தியன்’, ‘ரமணா’ பாணியில் சமுத்திரக்கனி தந்த ‘நிமிர்ந்து நில்’ படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பை அந்தப் படம் பூர்த்திசெய்யவில்லை. நன்றாகத் தொடங்கி வலுவாக முறுக்கேறிய திரைக்கதை இரண்டாம் பாதியில் நீர்த்துப்போனதால் ரசிகர்கள் உற்சாகமிழந்தார்கள்.
2014 சொல்லும் சேதி என்ன?
இந்தப் படங்களில் எல்லாமே மக்களிடம் வரவேற்பும் வசீகரமும் கொண்ட நாயகர்கள், இயக்குநர்கள் சம்பந்தப்பட்ட படங்கள். வணிக மொழியில் சொன்னால் ‘பெரிய படங்கள்’. இதுபோன்ற படங்களுக்குள்ள மிகப் பெரிய சாதகம் படத்திற்கான தொடக்கக் கட்ட வரவேற்பு உத்தரவாதமானது. அதாவது முதல் மூன்று நாட்களுக்கான ‘தொடக்க வசூல்’. இன்று பல படங்கள் ஒரே வாரத்தில் திரையரங்கை விட்டு வெளியேறும் நிலையில் இந்தப் பெரிய நட்சத்திரங்களால் கிடைக்கும் இந்த வசூல் மிகவும் முக்கியமானதாகிறது.
அதேசமயம் பெரிய நட்சத்திரங்கள் என்பதால் பெரிய பட்ஜெட்டும் இருக்கும் என்பதால் தொடக்க வசூல் மட்டுமே லாபம் ஈட்டப் போதுமானதல்ல. ஓரிரு வாரங்களாவது படம் ஓட வேண்டும். அதற்கு நட்சத்திர வசீகரம் மட்டும் போதாது; வலுவான கதையும் திரைக்கதையும் வேண்டும் என்பதை ஆண்டாண்டுக் காலமாகப் பல படங்கள் நிரூபித்துவருகின்றன.
எவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் இதுதான் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை 2014-ம் ஆண்டும் நிரூபித்துவிட்டது. கனவுலக நாயகர்களும் இயக்குநர்களும் இந்த ஆண்டிலாவது இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு செயல்படுவார்களா?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago