அது 1985. அப்போது தனியார் தொலைக்காட்சிகள் இல்லை. தூர்தர்ஷனே சூப்பர் ஸ்டார். ஞாயிறு காலையில் பதின்மூன்று எபிசோடுகளாக விரியும் தொடர்களுக்காக நேயர்கள் தவமிருப்பர். தொடர் தருவதற்குத் தயாரிப்பாளர்களிடம் பெரும் போட்டி நிலவும். இது பின்னணி.
அதே காலகட்டத்தில், திரைத்துறையில் பி.சி. ஸ்ரீராம் கேமரா மூலம் புரட்சி செய்துகொண்டிருந்தார். அவரிடமிருந்து ஒரு நாள் அழைப்பு வந்தது. மூத்த எழுத்தாளர் அகஸ்தியன் மூலம் கேள்விப்பட்டதாகச் சொல்லி, நண்பர் ஜெயேந்திராவுடன் பி.சி. எங்களைச் சந்தித்தார்.
தூர்தர்ஷனில் ஞாயிறு தொடரை விஷுவல் விருந்தாக வழங்க அவரை அணுகியிருந்தனர். பதின்மூன்று சிறுகதைகளை வாரம் ஒன்றாக வெவ்வேறு விஷுவல் வித்தைகளுடன் காட்டத் திட்டமிட்டு, “சிறுகதைகள் தர முடியுமா?” என்று கேட்டார்.
‘கொஞ்சம் சர்க்கரை போடட்டுமா’ என்று எறும்புகளிடம் கேட்டால்..? உடனே சம்மதித்தோம். எழுதியதில் 13 சிறுகதைகளைத் தேர்வுசெய்து, மீண்டும் சந்தித்தோம்.
‘இந்த நிலவுக்குக் களங்கமில்லை’ என்று அமுதசுரபியில் வெளிவந்த கதையை முதலில் சொன்னோம். கண்களை மூடியபடி கேட்டார்.
“அடுத்த கதை” என்று ஆரம்பித்ததும், கையை உயர்த்தி நிறுத்தச் சொன்னார். முதல் வெடியே புஸ்ஸா.. என்று எங்களுக்குக் கலக்கம்.
அதே கதையை பி.சி. ஸ்ரீராம், தன் பாணியில், ஷாட் ஷாட்டாக விஷுவலாகச் சொல்ல ஆரம்பித்ததும், எங்கள் பிரமிப்பு உச்சத்துக்குப் போனது. அதற்குள் எங்கள் கதை அவர் மூளையில் காட்சி வடிவம் பெறத் தொடங்கியிருந்தது. இந்த ரீதியில் பதின்மூன்று கதைகளும் முடிவாகி, தூர்தர்ஷனில் முறைப்படி சமர்ப்பிக்கப்பட்டன.
திடீரென்று ஒரு நாள் பி.சி. எங்களை அழைத்தார். முகத்தில் நிழலாய் ஒரு கோபம்! “தூர்தர்ஷனுக்கு என்னால கொடுக்க முடியாது. ஸாரி, உங்க நேரத்தை வீணடிச்சிட்டேன்..” என்றார்.
என்ன நடந்தது என்று பின்னர் அறிந்து கொண்டோம். பி.சி. ஸ்ரீராமின் அசைக்க முடியாத நேர்மை, சில அரசு அதிகாரிகளுக்குச் சகிக்க முடியாததாக இருந்திருக்கிறது. அவருடைய ‘ நோ நான்சென்ஸ்’ அணுகுமுறை அவர்களுடைய பேராசைகளைப் பொசுக்குவதாயிருந்திருக்கிறது. அப்படிப் பட்டவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கவே அவர் விரும்பினார்.
பி.சி. ஸ்ரீராம் என்ற நிலவு களங்கப்பட மறுத்துவிட்டது!
இருபது வருடங்கள் கழித்து, ஜெயேந்திராவுடன் ‘180 டிகிரி’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பி.சி. ஸ்ரீராமுடன் பணியாற்ற மேலும் பத்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஷங்கரின் ‘ஐ’ படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு. கேமரா கோணத்தை முடிவுசெய்துவிட்டு, பி.சி. நிமிர்ந்தார். “எப்பவோ சேர்ந்து வொர்க் பண்ணிருக்கணும்..” என்று புன்னகையுடன் எங்களுக்குக் கை கொடுத்தார்.
தவறவிட்ட வண்ணத்துப் பூச்சி தோளில் வந்து அமர்ந்தது போலிருந்தது.
‘ஐ’ பட டிஸ்கஷனில் இயக்குநர் ஷங்கர் எங்களிடம் பகிர்ந்துகொண்ட ஒரு விஷயம்:
ஜென்டில்மேன், காதலன் என்று இரு வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்த ஷங்கர், உலக நாயகன் கமல் ஹாசனுடன் ‘இந்தியன்’ திரைப்படத்துக்காக இணையும் நேரம். மாபெரும் படம், இரு காலகட்டங்களைக் காட்டவிருந்த கதை என்பதால், பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்தால் சிறப்பாயிருக்கும் என்று ஷங்கர் அவரிடம் கேட்டார்.
“அடடா, நீங்கள் சொல்லும் தேதிகளில் ஏற்கெனவே ஒரு இந்திப் படத்துக்கு ஒத்துக்கொண்டு விட்டேனே..!” என்று பி.சி. சொல்லிவிட்டார். ஷங்கருக்குப் பெரும் ஏமாற்றம். தனது முந்தைய படங்களின் ஒளிப்பதிவாளர் ஜீவாவையே இந்தியனுக்கும் புக் செய்தார்.
‘இந்தியன்’ மாபெரும் வெற்றி பெற்றது ஒரு பக்கம் இருக்க... பி.சி. தன்னிடம் சொன்னபடி எந்த இந்திப் படத்தையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை அறிந்தார் ஷங்கர். தன்னுடன் பணியாற்ற பி.சி. விரும்பாமல் தவிர்த்துவிட்டார் என்பதால் ஷங்கருக்கு அவர் மீது வருத்தம்.
ஷங்கரின் நான்காவது படம் ஜீன்ஸ். ஒளிப்பதிவு: அசோக்குமார். ஜீன்ஸ் வெளியான பிறகு, ஷங்கரும் பி.சி.யும் ஏதோ விழாவில் சந்தித்தார்கள்.
“ஷங்கர், வாய்ப்பு வந்தால் சொல்லுங்கள்.. சேர்ந்து பணியாற்றலாம்..” என்றார், பி.சி.
ஒரு பக்கம் ஷங்கருக்கு மகிழ்ச்சி. ஆனாலும், மனதில் உறுத்திக்கொண்டிருந்ததை வெளிப்படையாகக் கேட்டுவிட்டார். “ஏன் வேண்டுமென்றே இந்தியன் படத்தைத் தவிர்த்தீர்கள்?”
“ஷங்கர், உங்கள் முதல் இரண்டு படங்களிலும் பணியாற்றிய ஜீவா என் சிஷ்யன். ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் கமல் ஹாசனுடன் வேலை செய்ய அவனுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்பை நானே குறுக்கில் புகுந்து எப்படித் தட்டிப் பறிப்பேன்?
நான் மறுத்ததால்தானே, அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது? ஜீன்ஸில் என் சிஷ்யனை விட்டுவிட்டு, வேறு ஒளிப்பதிவாளரைத் தேடிப் போய்விட்டீர்கள். இனி அவனுக்குப் போட்டியாக வந்துவிட்டதாக எனக்கு உறுத்தல் இருக்காது... தாராளமாக நாம் இணையலாம்..”
தன் சீடனின் மன உணர்வுக்கு எந்த அளவு பி.சி. மதிப்பளித்திருக்கிறார் என்பதை அறிந்து ஷங்கர் நெகிழ்ந்துவிட்டார்.
உண்மையான காரணத்தை முதலிலேயே சொல்லியிருந்தால், தனக்கு ஆட்சேபம் இல்லை என்று ஜீவாவே பி.சி.யிடம் தூது வந்திருக்கலாம். அதைத் தவிர்க்கவே இந்திப் படம் என்று சொல்லிவிட்டார்.
ஒளிப்பதிவாளர் ஜீவா அகால மரணமடைந்தபோது, சிஷ்யன் இயக்கிய அந்தப் படத்தின் இறுதிக்கட்ட ஒளிப்பதிவைத் தானாக ஏற்று முடித்துக்கொடுத்தவர் பி.சி. தனக்கு வந்த பல பெரிய படங்களின் வாய்ப்புகளைத் தன் சிஷ்யர்களுக்குத் திசை திருப்பிவிட்டு, அவர்களை வளர்த்தவர்.
இந்தியத் திரையுலகில் பேராட்சி புரிந்த ஜீவா, கோலோச்சிக் கொண்டிருக்கும் ‘திரு’ (திருநாவுக்கரசு), எம்.எஸ்.பிரபு, கே.வி.ஆனந்த், பாலமுருகன், ராம்ஜி மற்றும் பாலசுப்ரமணியம் எல்லோரும் அவருடைய பெருமைமிகு சீடர்கள்.
பெருந்தன்மையின் வாழ்பொருள் பி.சி. ஸ்ரீராம். தன் 59வது பிறந்த நாளை ஜனவரி 26 அன்று கொண்டாடிய அவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து தமிழ்த் திரைக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழரின் ஆசை.
தொடர்புக்கு: dsuresh.subha@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago