2014 : கவனம் ஈர்த்த படங்கள்

By செய்திப்பிரிவு

ஜீவா - பேசாப் பொருளைப் பேசிய படம்

கிரிக்கெட் பற்றிய படங்கள் நாட்டுப்பற்றையும், கிரிக்கெட் வெற்றியையும் ரசிகர்களுக்கு நிறையவே சொல்லியிருக்கின்றன. ஆனால், கிரிக்கெட் கனவோடும் மட்டையுடனும் வீதிக்கு வீதி, ஊருக்கு ஊர் சுற்றும் வாலிபர்களின் எதிர்காலத்தைக் கிரிக்கெட்டில் நிறைந்திருக்கும் சாதி எப்படிப் பாழாக்குகிறது என்னும் புதிய கோணத்தை யதார்த்தமாகக் காட்டியிருக்கும் படம் இது.

கிரிக்கெட்டில் பதிலி வீரராக அறிமுகமாகி அப்படியே காலாவதியாகிவிடும் வீரர்களின் நிலையை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு உண்மைக்கு நெருக்கமாகச் சித்திரித்த இயக்குநர் சுசீந்திரனின் துணிச்சல் பாராட்டுக்குரியது. ஆடுகள நாடகங்களுக்கு இணையான அழுத்தத்தைக் காதலுக்குத் தந்ததன் மூலம் சுவாரஸ்யமான ஆட்டத்தின் நடுவில் மழைபெய்த உணர்வை ஏற்படுத்துகிறார்.

விளையாட்டில் ஜெயிக்கப் போராடலாம். விளையாட வாய்ப்பு கிடைக்கவும் போராடலாம். ஆனால் அந்தப் போராட்டம் ஆட்டத்துக்கு அப்பாற்பட்ட காரணங்களால் முடக்கப்பட்டால் என்ன செய்வது என்னும் கேள்வியை அழுத்தமாக முன்வைப்பதன் மூலம் உள்ளடக்க ஜீவனுள்ள படமாகிறது ஜீவா.

- டி. கார்த்தி

கோலிசோடா - விளிம்பு நிலை வாழ்வு

வளர் இளம் பருவத்தினரைப் பற்றிய படங்கள் பெரும்பாலும் மாணவர்களைப் பற்றியதாக இருக்கும் நிலையில் இந்தப் படம் படிப்போ கௌரவமான வாழ்வாதாரமோ இல்லாத விளிம்பு நிலைச் சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக் கோயம்பேடு சந்தையில் வாழ்க்கையை ஓட்டிவரும் நான்கு சிறுவர்களின் வாழ்க்கையை அதன் வண்ணங்களுடனும் வலிகளுடனும் யதார்த்தமாகப் பதிவுசெய்வதன் மூலம் இயக்குநர் விஜய் மில்டன் கவனத்தை ஈர்த்தார். சந்தையில் உள்ள பிற பாத்திரங்களின் சித்திரிப்பும் யதார்த்தத்தின் வலுவைக் கொண்டிருந்தது.

படத்தின் பின் பாதியில் குழந்தைகளை வன்முறையாளர்களாகச் சித்திரித்திருப்பதையும் அதை வழக்கமான நாயக வழிபாட்டுப் படங்களின் பாணியில் செய்திருப்பதையும் தவிர்த்திருந்தால் தமிழின் முக்கியமான படங்களில் ஒன்றாக இது மாறியிருக்கும்.

- அரவிந்தன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - கரிசனமும் விமர்சனமும்

சினிமா எடுக்கும் கனவில் கோடம்பாக்கத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் உதவி இயக்குநர் ஒருவரின் போராட்டத்தை மையமாகக் கொண்டது. இளம் இயக்குநர்களால் நிறைந்த கோடம்பாக்கத்தின் தலைமுறைக்கு ஏற்றபடி தன்னைப் புதுப்பித்துக்கொண்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் பார்த்திபன். இவர் படங்களில் இருக்கும் ‘கருத்து சொல்லி’ கதாபாத்திரங்கள் இதில் சற்றுக் குறைவாக இருந்தனர்.

முக்கியக் கதாபாத்திரங்களில் அகிலா, சந்தோஷ், விஜய் ராம் போன்ற புதுமுகங்கள் நடித்திருந்தது படத்திற்குப் புத்துணர்ச்சியை அளித்திருந்தது. வசனங்கள் இளைஞர்களைக் குறிவைத்து எழுதப்பட்டிருந்ததும் படத்திற்கு வலுச் சேர்த்தது. சினிமாவுக்கான கதையைத் தேடித் திரியும் இளைஞர்களையும் சினிமா குறித்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் துறைக்கு வரும் சில தயாரிப்பாளர்களையும் எள்ளல் கலந்த யதார்த்தத்துடன் பதிவு செய்திருந்ததில் பார்த்திபன் படைப்பூக்கம் மிக்க இயக்குநராகத் தனது மறுவரவை உறுதிசெய்தார்.

- என்.கௌரி

ஜிகர்தண்டா - கொண்டாட்டம்

தமிழ் மக்களின் சினிமா மோகத்தை அசாத்தியமாகப் பிரதிபலித்த படம். வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துக் கொண்டே பிடரியில் தட்டியது. அப்படித் தட்டிக்கொண்டே, பார்வையாளர்கள் கூடவே உட்கார்ந்து அதுவும் சேர்ந்து சிரித்தது. படம் எடுக்க வேண்டும் என்று தவிக்கும் இளைஞனின் கதையாகத் தொடங்கி, படமாக எடுக்கப்படும் ரவுடியின் கதையாக விரிந்து, படம் எடுக்கப்பட்ட கதையே முதன்மைக் கதையாக மாறுவதுதான் திரைக்கதையின் ஆச்சரியம்.

மையப் பாத்திரம் என்ற ஒன்று இல்லாமல் நிகழ்வுகளை வைத்தே கதையை நகர்த்திக்கொண்டு போன அணுகுமுறையின் மூலம் வித்தியாசப்படுகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். தமிழ் சினிமாவின் ஆகிவந்த படிமங்கள் உடைகின்றன. பீடங்கள் சரிகின்றன. எல்லாப் பாத்திரங்களும் ஏதோ ஒரு விதத்தில் பகடி செய்யப்படுகின்றன. பல காட்சிகளை மிக நுட்பமாகக் கையாண்டிருக்கிறார்.

குறும்படம் வழியே திரைநுழைவில் தொடர் வெற்றி கண்டு வரும் இளம் இயக்குநர்களில் நம்பிக்கைக்குரியவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். நெடுநாட்களுக்குப் பிறகு திரையரங்குகளில் அனைத்துத் தரப்பினரும் கொண்டாடிய படம்.

- திரைபாரதி

சதுரங்க வேட்டை - சமகாலப் பிரச்சினை

சமகாலப் பிரச்சினையை மையமாகக்கொண்டு வந்த படம். மண்ணுளிப் பாம்பு, மல்டி லெவல் மார்க்கெட்டிங் ஆகியவற்றை வைத்து நடந்த மோசடிகளைப் படம் சரியாகச் சித்திரிக்கிறது. மலையாளத்தில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் பற்றி படங்கள் வந்துள்ளன. இந்த மோசடிகள் தமிழகத்தில்தான் அதிகப் பாதிப்புகளை விளைவித்துள்ளது. ஆனால் தமிழ்ப் படங்கள் அவற்றைச் சித்திரிக்கவில்லை.

இயக்குநர் வினோத் அசலான சம்பவங்களை அழுத்தமாகத் தொகுத்துள்ளார். நட்ராஜ் மிக இயல்பாக நடித்துள்ளார். காட்சிகள் மோசடிகளைப் பகடி கலந்த நகைச்சுவை ரசமாக மாற்றிவிட்டன.

படம் சம்பவங்களின் தொகுப்பாக இருக்கிறது. தனித் தனிக் காட்சிகளாகச் சுவராஸ்யம் தந்தாலும் அவை திரைப்படம் என்னும் முழுமைக்குள் இல்லாமல் இருக்கின்றன. காட்சிகளை ஒரே நாரில் இணைப்பதற்கான வலுவான கதையை இயக்குநர் தேர்ந்தெடுக்கவில்லை. என்றாலும் சமூகப் பிரச்சினையைச் சொன்ன வகையில் இப்படத்தை முக்கியமாகக் கருதலாம்.

- ஜெய்

கோச்சடையான் - புதிய களம்

மிகப் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இந்த ஆண்டு வெளியான ‘கோச்சடையான்’ ரசிகர்களை ஏமாற்றவில்லை. ஃபெர்ஃபாமென்ஸ் கேப்சரிங் முறையில் முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம், உலகத் தரத்துடன் போட்டி போட முடியாது என்றாலும் இந்திய அளவில் குறிப்பிடத்தக்க முயற்சியே.

கோச்சடையான் ரணதீரன் என்ற பாண்டிய மன்னனின் பெயரைத் தலைப்பாகக் கொண்டிருந்தாலும், படத்தில் வரலாற்றுப் பின்புலம் ஏதும் இல்லை. எனினும், ஹாலிவுட் அனிமேஷன் படங்களைத் தழுவிய திரைக்கதை ரசிக்க வைத்தது. படத்தின் குறைகளை ரஜினியின் நட்சத்திர மதிப்பு சரிசெய்துவிட்டது. ரஜினியின் குரலில் இருந்த கம்பீரம், ‘பொம்மை’ உருவத்துக்கு வலுச்சேர்த்தது.

எனினும், தீபிகா படுகோன், சரத்குமார் போன்றவர்களின் அனிமேஷன் உருவங்கள் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டன. நாகேஷின் குரல் கேட்டது. ரஹ்மானின் பின்னணி இசை பிரம்மாண்டம் என்ற பெயரில் பெரும் இரைச்சலாக இருந்தது ஒரு குறை. எனினும் இது தமிழ்த் திரைக்குப் புதிய களம்.

- சந்தனார்

முண்டாசுப்பட்டி - இன்றைய இயக்குநர்

இயக்குநர் ராம்குமார் 2011-ல் ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்காக இந்தக் கதையைக் குறும்படமாக எடுத்திருந்தார். அதற்குக் கிடைத்த வரவேற்புதான் இது வெள்ளித்திரைக்கு வரக் காரணம். குறும்படங்கள் வெள்ளித்திரையிலும் வெற்றியடையும் என்பதை நிரூபித்த படங்களின் வரிசையில் ‘முண்டாசுப்பட்டி’யும் சேர்ந்திருக்கிறது.

80களின் காலகட்டத்தில் புகைப்படம் எடுத்துக்கொள்ளப் பயப்படும் ஒரு கற்பனை கிராமத்தை உருவாக்கி, அதன் பின்னணியில் காதலும் நகைச்சுவையும் கலந்த திரைக்கதையை அமைத்திருந்தது படத்தின் பெரிய பலம். விஷ்ணு, காளிவெங்கட், முனீஸாக நடித்த ராமதாஸ் போன்றோரின் பாத்திரச் சித்திரிப்பும் நடிப்பும் படத்திற்குக் கூடுதல் வலுச்சேர்த்திருந்தது.

ஒரு மூட நம்பிக்கையை வைத்து முழுநீள நகைச்சுவை பொழுதுபோக்குப் படத்தைக் கொடுத்திருப்பதில் இயக்குநர் வெற்றியடைந்திருக்கிறார். நகைச்சுவையிலும், திரைக்கதையிலும் இப்படம் கவந்த்தை ஈர்த்தது.

- என்.கௌரி

காவியத் தலைவன் - நாடக மேடைக்கு நவீன ஒப்பனை

வரலாற்றைத் திரைப்படமாக மாற்றும் முயற்சிகள் தமிழ் சினிமாவில் அபூர்வமாக நடப்பதுண்டு. எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள் போன்ற ஆரம்பக் காலத் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களையும், சுதந்திரப் போராட்டம் என்ற இந்திய அரசியல் வரலாற்றையும் இணைத்துத் திரைக் காவியமாகப் படைக்க முயற்சித்த படம்தான் காவியத் தலைவன்.

ஜெயமோகனின் வசனங்கள், டி. சந்தானத்தின் கலை இயக்கம், ஏ.ஆர். ரஹ்மானின் இசை, பிருத்விராஜ், சித்தார்த், நாசர், வேதிகா ஆகியோரின் நடிப்பு ஆகியவை இப்படம் நம் மனதில் இடம்பிடிக்கக் காரணமாக உள்ளன. ஆனால் இயக்குநர் வசந்தப் பாலன் தான் தேர்ந்தெடுத்த அற்புதமான கதைப் பின்புலத்தைச் சிறப்பான திரைக்கதையாக உருவாக்கத் தவறிவிட்டார்.

மேடை நாடகம் கோலோச்சிய காலகட்டத்தையும், சுதந்திரப் போராட்டத்தின் தீவிரத்தையும் தமிழ் ரசிகர்களுக்கு வலுவான திரைக்கதை மூலம் காட்டியிருந்தால் காவியத் தலைவன் காலத்தை வென்ற படமாக மாறியிருக்கும்.

எடுத்துக்கொண்ட கதைக் களமும், ஓரளவேனும் அந்தக் காலகட்டத்தை உணர்த்திய முயற்சியும், கலை இயக்கம் முதலான அம்சங்களும் இந்தப் படத்தைக் கவனத்துக்குரியதாக ஆக்குகின்றன.

- ம.சுசித்ரா

பூவரசம் பீப்பி - மாற்று சினிமா

குழந்தைகளை மையமாகக் கொண்ட தமிழ்ப் படங்களில் ‘பூவரசம் பீப்பி’ தனித்துத் தெரியக் காரணம் பகுத்தறிவுடன் செயல்படும் குழந்தைக் கதாபாத்திரங்கள். ஊரின் அழுக்குகளை அகற்றும் பெண் ஒருவர், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிக் கொலைசெய்யப்படுகிறார்.

பெரியவர்கள் எல்லோரும் இதைக் கடவுள் தண்டனை என நம்பும்போது அந்தக் கிராமத்தின் குழந்தைகளில் சிலர் உண்மைக் காரணத்தைக் கண்டறிகிறார்கள். தாங்கள் கற்ற கல்வியைச் சமூகக் குற்றத்துக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள். இது ஆரோக்கியமான செய்தி.

வறட்டுத் தனமான கல்வியை மாணவர்களுக்கு வழங்குகிறோம் என்னும் குரல்கள் வலுவாக எழுந்துள்ள நிலையில், கல்வியை எப்படிச் சமூக மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம் என்னும் உத்தியையும் கையாண்டுள்ளதால் இதை முக்கியப் படமாகக் கருதவேண்டியுள்ளது. சதிச்செயலில் ஈடுபடும் பெரியவர்களுக்கும் அதைத் தடுக்க முயலும் அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்குமான போராட்டமாக இப்படத்தைக் காணலாம்.

பெரிய நட்சத்திரங்களோ தொழில்நுட்பக் கலைஞர்களோ இல்லாமல் சுதந்திரமான மனப்போக்கு கொண்டவர்களால் உருவான மாற்று சினிமா என்றும் ஹலிதா ஷமீம் இயக்கிய இந்தப் படத்தை நாம் அடையாளப்படுத்தலாம்.

- என். செல்லப்பா

மெட்ராஸ் - யதார்த்தத்துக்கு அருகில்

காலங்காலமாகப் புறமொதுக்கப்பட்டுவரும் வடசென்னையை, அங்கிருக்கும் நெருக்கடிகள் மிகுந்த குடியிருப்பை, அது சார்ந்த அரசியல் மோதலை மையப்படுத்திய வகையில் முக்கியமான படமாகிறது பா. ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ்.

தேவைக்குப் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியப்படும் பொருளைப் போலவே தலித் மக்கள் தேர்தலிலும் அரசியலிலும் கையாளப்படுகிறார்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்கிறது இப்படம். கதாபாத்திரங்களின் பேச்சு மொழி, நிஜத்துக்கு நெருக்கமான கதாபாத்திரங்கள், காதலிலும் அது வெளிப்படும் தருணங்களிலும் உள்ள இயல்பு, இடம் சார்ந்த சித்திரிப்பு எனப் பல வகைகளில் யதார்த்தத்துக்கு நெருக்கமாக உள்ளது இப்படம்.

பிற்பகுதியின் ஹீரோயிசக் காட்சிகள், காதல் பகுதி போன்றவை மீது வைக்கப்படும் விமர்சனங்களைத் தாண்டி மேற்கண்ட அம்சங்கள் இப்படத்தைப் பேச வைத்துள்ளன.

மெட்ராஸுக்கு அட்ரஸ் தந்தவர்கள், தந்து வருபவர்கள் இப்படத்தில் காட்டப்படும் மக்கள்தான். காலங்காலமாக அவர்கள் எப்படி வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதற்கான தீர்வை கோடிட்டுக் காட்டிய வகையிலும் இது தவிர்க்க இயலாத படைப்பாகிறது.

ஒரு சாதாரண ரசிகனும் இப்படத்தை ரசிக்க முடியும், அரசியல் உணர்வுடனும் இப்படத்தை வாசிக்க முடியும் என்ற தன்மை இப்படத்துக்குக் கூடுதல் பலம்.

- ஆதி

பிசாசு - நெகிழ வைத்த தேவதை

காட்சி ஊடகத்தின் வலிமையைப் புரிந்துகொண்டு செயல்படும் படைப்பளிகளில் ஒருவரான மிஷ்கின் இந்த ஆண்டும் செறிவான காட்சி அனுபவத்தைத் தந்துள்ளார்.பார்வையாளர்களை அச்சுறுத்துவதற்கே பயன்படுத்தப்பட்டு வரும் பிசாசு, பார்வையாளார்களை நெகிழச் செய்யும் அனுபவம் புதுமை.

காட்சியின் தமைக்கேற்ற அழகியலுடன் உருப்பெறும் காட்சிப் படிமங்கள், அதற்குத் துணை செய்யும் பொருத்தமான இசைக் கோலங்கள் ஆகியவை இதன் பலம். அர்த்தமற்ற அழுத்தஙகளும் கோணங்களும் கொண்ட காட்சிப் படிமங்களும், கூறியது கூறலாகும் காட்சித் துணுக்குகளும், தர்க்கப் பிழைகளும் இதன் பலவீனம்.

வித்தியாசமான அணுகுமுறையும், அழகியல் நேர்த்தியும் இந்தப் படத்தைக் கவனிக்க வைக்கின்றன.

- அரவிந்தன்

கவனம் பெற்ற இதர படங்கள்

பண்ணையாரும் பத்மினியும்

உயிரற்ற ஒரு வாகனத்துக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள உயிரோட்டமான உறவை அழகாகச் சித்திரித்த படம். கூடவே மனித உறவுகளின் ஈரத்தையும் சொன்னது. கதையம்சத்தில் கவனம் செலுத்தியிருந்தால் சிறந்த படமாக ஆகியிருக்கும்.

மீகாமன்

எந்த பாவனைகளும் போலி கோஷங்களும் நாயகத் துதிபாடல்களும் அற்ற அசல் க்ரைம் த்ரில்லர். கதை, திரைக்கதையை நம்பி எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனி இரண்டாம் பாதியில் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

குக்கூ

இதழியலாளர் ராஜு முருகன் இயக்கிய முதல் படம். மென்மையான காதலின் பின்புலத்தில் பார்வையற்றவர்களின் வாழ்வைச் சொன்ன படம். ஆகிவந்த படிமங்களையும் யூகிக்கக்கூடிய திருப்பங்களையும் தவிர்த்திருக்கலாம்.

வேலையில்லா பட்டதாரி

தனுஷின் நடிப்புத் திறன், நட்சத்திர வசீகரம் இரண்டையும் சரியான விகிதத்தில் பயன்படுத்திய படம். இரண்டாம் பாதியில் எடுத்துக்கொண்ட பிரச்சினையின் சித்திரிப்பில் தீவிரம் கூடியிருந்தால் முக்கியமான படமாக ஆகியிருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்