எந்தச் சவாலுக்கும் தயார்! - நடிகை ஸ்ரேயா ரெட்டி பேட்டி

By ஆர்.சி.ஜெயந்தன்

துள்ளலான தொலைக்காட்சித் தொகுப்பாளராகத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஸ்ரேயா ரெட்டி, ‘திமிரு’ படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தார். விக்ரம் கிருஷ்ணாவைக் காதல் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே 25 வயது இளமையோடு திரும்பவந்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். இம்முறை ‘அண்டாவைக் காணோம்’ படத்தில் கதையின் நாயகி... கேள்விகளுக்குச் சுளீர் சுளீரென்று பதில் சொல்கிறார் அதே சுறுசுறுப்புடன்...

வெயில் படத்தில் மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்தீர்கள். ‘காஞ்சிவரம்’, ‘திமிரு’ என்று கவனிக்க வைத்தீர்கள். அதன்பிறகு எங்கே போய்விட்டீர்கள்?

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான் விரும்பி ஏற்று நடிக்கும் அளவுக்கு எனக்குக் கதாபாத்திரங்கள் வரவில்லை. எனது நடிப்பை விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டித் தீர்த்தார்கள். ஆனால் இயக்குநர்கள் என் நடிப்புத் திறமைக்குத் தீனி போட முன்வரவில்லை. கிட்டத்தட்டக் கைவிட்டுவிட்டார்கள். இதைச்சொல்ல எனக்குப் பயமில்லை. அந்த அளவுக்கு அப்போது கதாபாத்திர வறட்சி நிலவியது.

இப்போது நிலமை மாறியிருக்கிறது. நான் நடித்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டாலும் ’ அண்டாவைக் காணோம்’ படத்தின் கதையில் நான் நடித்தால்தான் சரியாக இருக்கும் என்று அறிமுக இயக்குநர் வேல் என்னைத் தேடி வந்து கதை சொன்னார். அதுதான் தரமான நடிகையாக என்னுடைய வெற்றி. கதையைக் கேட்டதுமே பிடித்துவிட்டது.

அப்படி என்ன கதை அது?

எனக்கு நடிக்கப் பெரிய ஸ்கோப் இருக்கிறது. தேனி அருகேயுள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் சாந்தி என்ற பெண்ணாக நடிக்கிறேன். விலை மதிக்க முடியாத பொருளாக அவள் போற்றிப் பாதுகாக்கும் ஒன்றை அவள் இழக்கும்போது அவளுக்கு ஏற்படும் உணர்வுகளும் கோபமும்தான் இந்தப் படம். அது என்ன பொருள், அதற்கு ஏன் அத்தனை முக்கியம் கொடுக்கிறாள், அந்தப் பொருளை அவளால் மீட்க முடிந்ததா என்பதுதான் கதை. இதை நிஜமான பிளாக் காமெடி படம் என்று சொல்லுவேன். இன்றைய டிரெண்டுக்கு ஏற்றமாதிரி படம் இருக்காது. புதிய டிரெண்டை இந்தப் படம் உருவாக்குகிறதோ இல்லையோ, ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்பதற்கு நான் கேரண்டி.

உங்களுக்குக் கோபம் வரும். காமெடி வருமா?

எனக்கும் கதை கேட்கும்போது அந்தச் சந்தேகம் வந்தது. ஆனால் என் கணவர் விக்ரம் கிருஷ்ணாவும், அவருடைய தம்பி விஷாலும் வீட்டில் அடிக்கும் நான் ஸ்டாப் காமெடி லூட்டிக்கு நடுவேதான் கடந்த ஐந்தாண்டுகளைக் கடந்து வந்திருக்கிறேன். இந்த அனுபவம் படப்பிடிப்பில் எனக்கு அபாரமாகக் கைகொடுத்துவிட்டது.

சென்னையில் பிறந்து வளர்ந்த மாடர்ன் பெண் நீங்கள். ஆனால் கிராமத்துப் பெண் கதாபாத்திரங்களில் கிராமத்துப் பெண்ணாகவே மாறிவிடுகிறீர்களே?

எனது ரத்தத்திலேயே நடிப்பும், டெடிகேஷனும் இருக்கிறது என்று என்னால் கொஞ்சம் திமிருடன் சொல்ல முடியும். திமிரு படத்தில் மதுரைப் பேச்சு வழக்கில் பேசி நடித்தேன். ஆனால் எனது குரல் இனிமையாக இருக்கிறது என்று நானே குரல் கொடுக்க வாய்ப்பு அமையவில்லை. அதேபோல எனக்கு வசனங்களைப் பின்னால் இருந்து வாசிக்கும் புராம்டிங் செய்தாலும் பிடிக்காது. நடிப்பை நேசித்தால் எந்தக் கதாபாத்திரத்திலும் நம்மை நினைவுகூரும்படி செய்துவிடலாம். நான் மாடர்ன் பெண்ணாக நடிக்க மாட்டேன் என்ற முடிவுக்கு வருவதும், என்னை டைப்கேஸ்ட் செய்வதையும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.

உடலை எப்படி இத்தனை ஃபிட்டாக வைத்திருக்கிறீர்கள். ஆக்‌ஷன் கதாபாத்திரங்கள் பண்ண விருப்பம் இருக்கிறதா?

மிக ஆவலாக இருக்கிறேன். எனது பிட்டான உடலைப் பார்த்துவிட்டு மலையாளப் பட உலகில் ' பரத்சந்திரன் ஐபிஎஸ்’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க அழைத்தார்கள். ஆனால் ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல் செய்துவிட்டார்கள். ’ கில் பில்’ போல ஒரு கதாபாத்திரம் கிடைத்தால் ஊதித் தள்ளுவேன். என்னைப் போன்று முழுமையான உடல் தகுதியுடன் இருப்பவர்கள்தான் ஆக்‌ஷன் ரோல்ஸ் பண்ண முடியும். அப்பா பரத் ரெட்டி ஒரு கிரிக்கெட்டர். அதனால் ஐந்து வயதில் இருந்தே ஃபிட்னெஸ் எனது வீட்டில் ஒரு அங்கமாகிவிட்டது.

பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் எல்லோரும் விளையாடச் செல்வார்கள். நானோ ஒர்க் அவுட் செய்யச் சென்றுவிடுவேன். என் வீடு போயஸ் கார்டனில் இருக்கிறது. அதிகாலை ஐந்து மணிக்குத் தனியாகக் கிளம்பி ராதா கிருஷ்ணன் சாலையில் மெல்ல ஓட ஆரம்பிப்பேன். மெரினா சென்று சிறிது நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டுத் திரும்பவும் வீட்டுக்கு மெல்லோட்டமாக வந்து சேர்வேன்.

ஒரு சினிமா நட்சத்திரமாக இருந்து கொண்டு, தனியாக அதிகாலை ஐந்து மணிக்குச் செல்வதில் உங்களுக்குப் பாதுகாப்பு பிரச்சினைகள் கிடையாதா?

யாரும் என்னை நெருங்க முடியாது. மீறி நெருங்கினால் நான் தரும் உதைகளையும் பஞ்ச்களையும் தாங்க வேண்டுமே? விக்ரமும் விஷாலும் மார்ஷியல் ஆர்ட்டில் கிரேடு வாங்கியவர்கள். அவர்கள் வீட்டுப் பெண்ணான நான் மட்டும் சப்பையாக இருக்க முடியுமா? அண்டாவைக் காணோம் படத்தில் எனக்கு ஒரு சண்டை இருக்கிறது. ஆனால் யதார்த்தமான சண்டை.,

இதில் ஐந்தடி உயரத்துக்கு நிஜமாகவே காற்றில் தாவிக் குதித்துச் சண்டை போட்டிருக்கிறேன். எந்த டிரிக்கையும் நான் நம்பாமல் ஒரிஜினலாகச் செய்திருக்கிறேன். விஷாலின் அண்ணியாக இருந்துகொண்டு நான் தலைமுடியைப் பிடித்துச் சண்டைபோட முடியுமா?

விஷாலுடன் திமிரு படத்தில் ஈஸ்வரியாக மோதியதை ரசிகர்கள் கொண்டாடினார்கள். திமிரு இரண்டாம் பாகம் உருவானால் மீண்டும் விஷாலுடன் மோதுவீர்களா?

வாசகர்கள் உங்கள் கேள்வியைத் தவறாகப் புரிந்துகொள்ளப்போகிறார்கள். விஷால் எனக்குக் குழந்தை மாதிரி. அவரது வளர்ச்சியைப் பார்த்து எனக்கு ஆச்சரியமில்லை. அத்தனை திறமைகள் அவரிடம் உண்டு. இன்னும் பெரிய உயரங்களை விஷால் எட்டுவார். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்றால் என்னை அந்தக் கதாபாத்திரம் கவர வேண்டும். திமிரு ஈஸ்வரியைப் பொறுத்தவரை அந்தக் கதாபாத்திரத்தின் வீச்சு ஒருமுறைதான் சாத்தியம்.

படையப்பா நீலாம்பரி எப்படியோ அதுபோலத்தான் ஈஸ்வரி. ஆனால் கில் பில் படத்தின் உமா துர்மன் கதாபாத்திரத்தின் பரிமாணம் வளர்ந்துகொண்டே செல்லக்கூடியது. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் அமைந்தால் திரும்பத் திரும்ப தோன்றலாம். ஆனால் திமிரு ஈஸ்வரி ஒற்றைப் பரிமாணத்துடன் முடிந்துவிட்ட கதாபாத்திரம். அதைவிடப் பல மடங்கு சவாலான கதாபாத்திரத்தை எனக்குத் தாருங்கள். எந்த நடிப்புச் சவாலுக்கும் நான் தயார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்