திரை விமர்சனம்: பீகே

By இந்து டாக்கீஸ் குழு

வேற்றுலகவாசி ஒருவர் பூமியைப் பற்றி அறிந்துகொள்ள பூமிக்கு வருகிறார். வந்த சில நிமிடங்களில் அவரது ரிமோட் திருட்டுபோகிறது. அந்த ரிமோட் இல்லாமல் அவரால் தன் உலகத்துக்குத் திரும்பிச் செல்லமுடியாது. அவர் ரிமோட்டை கண்டுபிடித்து மறுபடி தன் உலகத்துக்கு திரும்பிச் சென்றாரா, இல்லையா என்பதுதான் ‘பீகே’.

இப்படத்தின் இயக்குநரான ராஜ்குமார் ஹிரானி, முன்னாபாய் எம்.பி.பி.எஸ், லகே ரஹோ முன்னாபாய், 3 இடியட்ஸ் போன்ற அழுத்தமான செய்தி சொல்லும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில், ‘பீகே’வையும் இணைத்திருக்கிறார். கடவுள் என்ற கருத்தை வைத்துக்கொண்டு சாமியார்கள் தொடர்ந்து மக்களை ஏமாற்றுகின்றனர் என்பதுதான் ராஜ்குமார் ஹிரானி இந்த முறை சொல்லியிருக்கும் செய்தி. கடவுளைப் பற்றி வேற்றுலகவாசியைக் கொண்டு கேள்வி கேட்கவைத்து படத்தை சுவாரஸ்யமாக்கி இருக்கிறார்.

வேற்றுலகவாசி (ஆமிர் கான்) பூமிக்கு வந்ததும், பறிபோன ரிமோட்டை தேடிப் பயணிக்கிறார். பூலோகவாசிகளின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் பற்றி எதுவுமே தெரியாததால், ஒருவித குழப்பத்திலேயே இருக்கிறார். போதையில் இருப்பதுபோல நடந்துகொள்வதால் அவரை ‘பீகே’ என்கிறார்கள் மக்கள். அதுவே அவரது பெயர் ஆகிவிடுகிறது. ரிமோட்டை தேடிச் செல்லும் பீகேவிடம், ‘ரிமோட் கிடைக்க கடவுள்தான் உதவிசெய்ய முடியும்’ என்று எல்லோரும் ஒரேமாதிரி சொல்கிறார்கள். அவரும் அதை நம்பி, தொடர்ந்து கடவுளைத் தேடிச் செல்கிறார். எந்த கடவுளிடம் கேட்பது என குழம்புகிறார். ஒரு கட்டத்தில், தொலைக்காட்சி நிருபர் ஜக்கு எனப்படும் ஜகத் ஜனனியை (அனுஷ்கா ஷர்மா) சந்திக்கிறார். பீகேவை பின்தொடர்ந்தால் தன் தொலைக்காட்சிக்கு நல்ல ஸ்டோரி கிடைக்கும் என்று கருதி அவர் பின்னால் செல்கிறார் ஜக்கு.

பூமியில் தனது அனுபவத்தை ஜக்குவிடம் ஒன்றுவிடாமல் சொல்லும் பீகே, நாட்டின் பெரிய சாமியாரான தபஸ்வி ஜியிடம்தான் (சவுரப் சுக்லா) அந்த ரிமோட் இருக்கிறது என்பதையும் சொல்கிறார். பீகேவின் ரிமோட் திரும்பக் கிடைக்க ஜக்கு எப்படி உதவுகிறார்? ஜக்கு தன் பாகிஸ்தான் காதலர் சர்ஃபரோஸுடன் (சுஷாந்த் சிங் ராஜ்புத்) இணைந்தாரா? பீகேவுக்கு ஜக்கு மீது வரும் காதல் என்ன ஆகிறது? பீகே பூமிக்கு வந்ததில் என்ன கற்றுக்கொள்கிறார்? மனிதர்களுக்கு என்ன கற்றுக்கொடுக்கிறார்? தன் உலகத்துக்குத் திரும்பினாரா என்பது மீதிக்கதை.

இந்தியில் ஏற்கெனவே வந்த ‘ஓ மை காட்’ படத்தில் வருகிற கடவுள் ஜோடனையையும், நிகோலஸ் ஃபிஸ்க்கின் ‘க்யூட்டி பை’ வேற்றுக்கிரக குழந்தை பூமியில் ரிமோட்டை தொலைத்துவிட்டு தேடுகிற கதையையும் கலந்திருந்தாலும், கையாண்ட பாணி புதுமை.

வேற்றுலகவாசி பற்றிய படம் என்று ஒரு ‘அறிவியல் புனைகதை’யை (Science Fiction) எதிர்பார்த்துச் சென்றால் ஏமாற நேரிடும். கடவுள் பற்றி மனிதனைக் கேள்வி கேட்கவைக்காமல், வேற்றுலகவாசி மூலம் கேள்வி கேட்கவைத்து, தேவையற்ற சர்ச்சை களை தவிர்த்துவிடுவதில் இயக்குநரின் சாமர்த்தியம் தெரிகிறது. மக்களின் பயங்களை சாமியார்கள் எப்படி தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை அழகாகவும், அர்த்தத்துடனும் காட்சிப்படுத்தியிருக்கிறார். திரைக்கதையில் அடுத்தடுத்து நடப்பதெல்லாமே யூகிக்கக் கூடியதாக இருப்பினும், நகைச்சுவையால் அதை ஈடுகட்டிவிடுகிறார்.

படத்தின் முதல் பாதி திரைக்கதையில் காணப்படும் விறுவிறுப்பு, இரண்டாம் பாதியில் சற்று குறைகிறது. கோயிலில் செருப்புக்கு பூட்டுப் போடுவது, சாமி ஸ்டிக்கர்களை முகத்தில் ஒட்டிக்கொண்டு ‘செல்ஃப் டிஃபன்ஸ்’ என்று சொல்வது, கடவுளை ‘ராங் நம்பரில்’ அழைக்கிறோம் என்று சொல்வது என படத்தில் பீகேவின் பாத்திரச் சித்தரிப்பும், வசனங்களும் ரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.

படத்தில் ஜக்குவின் காதலர் சர்ஃபரோஸ் (சுஷாந்த் சிங் ராஜ்புத்), பீகேவின் நண்பர் பைரோன் சிங் (சஞ்சய் தத்), செய்தி தொலைக்காட்சி ஆசிரியர் (பொம்மன் இரானி), தபஸ்வி ஜி (சவுரப் சுக்லா) என அனைத்துப் பாத்திரங்களின் தேர்வும் படத்துக்கு பலம். குறைவான நேரமே வந்தாலும் மனதில் நிற்கின்றனர். வேற்றுலகவாசியாக ஆமிர் கான் அடிக்கும் லூட்டியில் திரையரங்கமே சிரிப்பலையில் அதிர்கிறது. அனுஷ்காவின் இயல்பான நடிப்பு, படத்துக்கு வலுசேர்க்கிறது.

படத்தொகுப்பும் ராஜ்குமார் ஹிரானியே தான். அதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ராஜஸ்தான், பெல்ஜியம், டெல்லி என அழகாகப் பயணிக்கிறது சி.கே.முரளிதரனின் கேமரா. ‘லவ் இஸ் எ வேஸ்ட் ஆஃப் டைம்’, ‘தர்கி சோக்ரோ’, ‘நங்கா புங்கா தோஸ்த்’ போன்ற ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள் இசை அமைப்பாளர் கள் சாந்தனு முய்த்ரா அஜய் அதுல்.

கடவுளை யாரும் காப்பாற்ற வேண்டாம். அவரை அவரே காப்பாற்றிக்கொள்வார் என்ற செய்தியை நகைச்சுவை கலந்து கொடுத்திருப்பதில் பீகே வெற்றியடைந் திருக்கிறது என்றே சொல்லலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்