அகில இந்திய அளவில் தரமான பொழுதுபோக்குப் படங்களைத் தயாரித்துவரும் நிறுவனம் ‘யூடிவி’. இதன் தென்னிந்திய நிர்வாகத் தலைவராக இருப்பவர் கோ.தனஞ்செயன். வெற்றிகரமான திரைப்படத் தயாரிப்பாளர் என்ற அடையாளத்துக்கு வெளியே தனது துறைசார்ந்த போக்குகளை ஆதாரங்கள், புள்ளி விவரங்கள் ஆகியவற்றோடு பதிவுசெய்யும் எழுத்தாளராகவும் விமர்சகராகவும் கவனம்பெற்றுவருபவர். இவர் எழுதியிருக்கும் ‘ப்ரைட் ஆஃப் தமிழ் சினிமா’என்ற ஆங்கிலப் புத்தகம் இன்று கோவாவில் தொடங்கி வைக்கப்படும் இந்தியன் பனோரமா திரையிடல் நிகழ்வில் மத்திய அரசால் வெளியிடப்படுகிறது.
1954 முதல் 2013 வரை தேசியத் திரைப்பட விருதுகளை வென்ற 163 தமிழ்த் திரைப்படங்கள், தேசியத் திரைப்பட விருது தொடங்கப்படும் காலகட்டத்துக்கு முன்னர் தமிழ் சினிமாவின் கலைப் பெட்டகமாகப் போற்றப்படும் 39 படங்கள் மற்றும் முழு நீளத் திரைப்படங்கள் அல்லாத சிறப்பு வாய்ந்த ஆவணப் படங்களைப் பற்றி விரிவாகவும் சுவையாகவும் பேசுகிறது இந்தப் புத்தகம்.
சினிமாவின் வணிக வெற்றியை அளவுகோலாகக் கொள்ளாமல், கதை மற்றும் கருத்தியல் ரீதியாகக் கவனம் பெற்ற உள்ளடக்கம், உருவாக்கத்தில் கைக்கொள்ளப்பட்ட அழகியல், தேர்ச்சிபெற்ற தொழில்நுட்பத்திறன், காட்சி மொழியைச் செழுமைப்படுத்துதல் ஆகிய அளவுகோல்களின் மூலம் தேசிய விருது என்ற கவுரவத்தை இந்தப் படங்கள் பெறக் காரணமாக இருந்த அனைத்து அம்சங்களையும் இந்த நூலில் அலசியிருக்கிறார் நூலாசிரியர் தனஞ்ஜெயன். இந்தப் புத்தகத்துக்கான உந்துதல் பற்றி தனஞ்ஜெயனிடம் கேட்டபோது, “தமிழ் சினிமா பற்றிய நம்பகமான தகவல்களையும் தரவுகளையும் சர்வதேச அளவில் எடுத்துச்செல்லும் வகையில் 2007-ல் ‘பெஸ்ட் ஆஃப் தமிழ் சினிமா’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டேன். அதற்கு உலகின் பல நாடுகளிலிருந்து எனக்குப் பாராட்டுகளோடு எதிர்வினைகளும் குவிந்தன. அந்தப் புத்தகத்தில் 1930-ல் தொடங்கி 2010வரை வெளியான படங்களிலிருந்து சிறந்த படங்களைப் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டி அளித்திருந்தேன். எந்த அடிப்படையில் படங்களைத் தேர்வு செய்தேன் என்று குறிப்பிட்டிருந்தாலும் நீங்கள் இந்தப் படத்தை விட்டு விட்டீர்கள், அந்தப் படத்தை விட்டுவிட்டீர்கள் என்று பலரும் சுட்டிக்காட்டினார்கள்” என்று கூறும் தனஞ்செயன், மறு பதிப்பில் இந்தக் குறைகளையெல்லாம் சரிசெய்துவிடலாம் என்று நினைத்திருந்தாராம்.
அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டபோது அவருக்கு வேறொரு எண்ணம் உதித்திருக்கிறது. இந்தப் படங்களை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று யாரும் கேள்வி கேட்க முடியாதபடி ஒரு பட்டியலை எடுத்துக்கொண்டால் என்ன என்று தோன்றியிருக்கிறது. அப்போது தேசிய விருதுபெற்ற படங்கள் தன் மனதில் பளிச்சிட்டன என்று நினைவுகூர்கிறார். “தேசிய அளவில் சிறந்த நல்முத்து என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட படங்கள் அத்தனையுமே சினிமாவுக்குக் கவுரவம் சேர்ப்பவைதானே? எனவே அவற்றின் முழுமையான சித்திரத்தை இந்தப் புத்தகத்தில் கொடுப்போம் என்று முடிவுசெய்தேன். அதனால்தான் ‘ப்ரைட் ஆஃப் தமிழ் சினிமா’ என்று தலைப்பு வைத்தேன்” என்கிறார்.
அனைத்துப் படங்களையும் பார்த்து, படத்துடன் சம்பந்தப்பட்டவர்களைத் தேடிப்பிடித்துத் தொடர்புகொண்டு, விவரங்களையும் புகைப்படங்களையும் சேகரித்து இப்புத்தகத்தில் அளித்திருக்கிறார் தனஞ்செயன்.
புத்தகத்தின் முதல் பிரதி தயாரானதும் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தையும் பகிர்ந்துகொள்கிறார். நூலைப் பற்றி மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்துக்குத் தகவல் அனுப்பியிருக்கிறார். உடன் டெல்லியிலிருந்து அழைப்பு வந்தது. ‘தேசிய விருதுபெற்ற அனைத்து மொழிப் படங்களையும் ஆவணப்படுத்தியிருக்கலாமே ஏன், தமிழுக்கு மற்றும் முக்கியத்துவம் கொடுத்தீர்கள்’ என்று கேட்டார் அமைச்சகத்தின் செயலர். நான் தமிழன், தமிழ் சினிமா பற்றிய விரிவான தகவல்கள் உலக அரங்குக்குச் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இதை எழுதினேன் என்று இவர் சொல்லியிருக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு, கோவா திரைப்பட விழாவில் இதை வெளியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். “இது எனக்குக் கிடைத்த கவுரவம் என்பதைவிடத் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த கவுரவமாகவே பார்க்கிறேன்” என்கிறார் தனஞ்ஜெயன்.
படம்: எஸ்.எஸ். குமார்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago