தரைக்கு வந்த தாரகை 20: பல்லக்கின் உள்ளே இல்லை இளவரசி!

By தஞ்சாவூர் கவிராயர்

ஆஹா… நம் ஆசை நிறைவேறுமா…

அலையப் போல மறந்துபோக நேருமோ?

அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா – கொடி

அசைந்தாட பந்தல் இன்றி போகுமா?

படம்: தாய்க்குப் பின் தாரம்

பானுமதி சிலநேரம் பலத்த பீடிகையோடு ஒரு விஷயத்தைச் சொல்லத் தொடங்குவார். எதற்காகச் சொல்கிறார் என்று ஊகிப்பது கஷ்டம். அன்றைக்கும் அப்படித்தான். “நீங்கள் காண்டேகர் கதைகளைப் படிப்பதுண்டா?” என்று கேட்டார். பானுமதி அம்மையாரின் வாழ்க்கைக் கதையை சுவாரசியமாகச் சொல்லிவரும் வேளையில் காண்டேகர் கதை பற்றிக் கேட்பானேன்?

தமிழில் காண்டேகர் கதைகள் பிரபலம். இதற்குக் காரணம் அவற்றை அழகாக மொழிபெயர்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. எனவே, அவர் கேட்ட அடுத்த அரைநொடியில் ‘காண்டேகர் கதைகளை விரும்பிப் படிக்கும் ஆயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன்’ என்றேன். புருவம் உயர்த்தி என்னைப் பார்த்துவிட்டுப் பேசத் தொடங்கினார்.

“பெண்களின் மனதைப் பற்றி காண்டேகர் மாதிரி எழுதுவது அபூர்வம். அவருடைய கதை ஒன்றில் வெகுளிப் பெண் ஒருத்தி வருவாள். அப்பா அம்மாவுக்குப் பணிவிடை செய்வாள். கோயில், குளம் என்று சுற்றிவருவாள். பக்தி சிரத்தையோடு பூஜை புனஸ்காரத்தில் ஈடுபடுவாள். அவள் வாழ்க்கையில் காதல் குறுக்கிடும். அதுவரை பெற்றோருக்கு எதிரே நின்று ஒரு வார்த்தை பேசாத அவளை, பெற்றோரையே எதிர்த்துப் பேச வைத்துவிடும்.

அப்பாவை எதிர்த்துக் காதலுக்காகத் தைரியமாகப் பேசிய அந்தக் கதாபாத்திரத்தை வைத்து நாமும் ஒரு கதை எழுதலாம் போலிருக்கே என்று நினைத்துக்கொண்டேன். ஆனால், அப்படி ஒரு கதாபாத்திரமாக நிஜ வாழ்க்கையில் நானே மாறுவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று இரண்டு விநாடிகள் மௌனம் காத்தார்.

‘இது நல்லா இருக்கே!’ என்றேன் நான்.

“அப்பாவை எதிர்த்து என்னவெல்லாம் பேசிட்டேன் தெரியுமா?” என்று பெருமூச்செறிந்துவிட்டு பானுமதி தொடர்ந்தார். “என் முடிவை மாத்திக்கவே முடியாது. என் மனசால் அவரைக் கணவராக வரித்து விட்டேன். வேறு யாரையும் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன். என் ஆன்மாவுக்கு நான் துரோகம் செய்ய முடியாது. என்னைப் பெத்தவங்க என்கிற முறையில் நீங்க பேசறதும் சரிதான். ஆனா என் முடிவில் மாற்றமில்லை என்று தடாலடியாகச் சொல்லிவிட்டு நான் என் அறைக்குள் போய்விட்டேன்.

என் பெற்றோர் கல்லாய்ச் சமைந்துவிட்டார்கள். அப்பாவுக்கு என்னை ஏறிட்டுப் பார்க்கும் தைரியமில்லை. அப்பாவோடு பேசுவதை நிறுத்திவிட்டேன். ஆனால் அவரோடு பேசாமல் என்னால் இருக்க முடியாது. என் பாட்டைக் கேட்காமல் அவராலும் இருக்க முடியாது. அழுதேன்.. அழுது அழுது அப்படியே கரைந்து காணாமல் போயிடணும்னு அழுதேன்.

ரிக்‌ஷாவில் திருட்டுப் பயணம்

சாப்பிட முடியாதுன்னும் சொல்லிவிட்டேன். அப்பாவும் சாப்பிடவில்லை. அம்மாவும் சாப்பிடவில்லை. அவர்களின் அவஸ்தையைப் பார்க்க பாவமாக இருந்தது. அப்பாவுக்காக இரண்டு கவளம் சாப்பிட்டேன்.

ஒரு நாள் ஷோபனாச்சல ஸ்டுடியோவிலிருந்து என் தங்கைக்கு ஃபோன் வந்தது, ராமகிருஷ்ணா பேசினார். என்னிடம் என் தங்கை ரகசியமாகச் சொன்னது இதுதான். ராமகிருஷ்ணாவின் வளர்ப்புத் தாயார் ஸ்தானத்தில் இருப்பவரான கமலம்மா என்னைப் பார்க்க விரும்புகிறார். அவர் வெளியூர் போவதால் என்னை உடனே பார்க்க வேண்டுமாம்.

அப்பாவுக்குத் தெரியாமல் எப்படிப் போவது? என் தங்கை எப்படித்தான் சமாளித்தாளோ! படப்பிடிப்பு இடைவேளையில் ஒரு ரிக்ஷாவில் என்னை ஏற்றி ‘உடனே திரும்பிடு’ என எச்சரித்து அனுப்பிவைத்தாள். அவர்கள் வீடு தி.நகர் மகாலட்சுமி தெருவில் இருந்தது. அங்கே போனதும் கமலம்மா என்னைத் தீர்க்கமாக ஒரு முறை பார்த்தார். அங்கே ராமகிருஷ்ணாவின் நண்பர்கள் இன்னும் சில பெரியவர்கள் எல்லாம் இருந்தார்கள். கமலம்மா சொன்னார்.

‘ராமு! நீ அதிஷ்டக்காரன்தாண்டா! இந்தப் பெண் மகாலட்சுமியேதான்! இப்படிச் சொல்லிவிட்டு என் முதுகைத் தடவிக் கொடுத்தார். என்னிடம் என்னவோ கேட்டார். என்னவோ சொன்னேன். மணி ஒன்றாகிவிட்டது. அப்பா சாப்பிட வந்திருப்பார் எனக்காகக் காத்திருப்பார்! என் படபடப்பைப் பார்த்துவிட்டு கமலம்மா சொன்னார்.

‘ராமு! இவளோட அப்பாவிடம் மறுபடி பேசேண்டா.. பார்.. இந்தப் பெண் எவ்வளவு அவஸ்தைப்படுகிறது’ ஆர்.கே. என்னைப் பார்த்தார். ‘அம்மா பொண்ணைப் பார்க்கணும்னு சொன்னீங்க. பாத்தாச்சு அவ்வளவுதான்.

அவங்க அப்பா எவ்வளவு கோபக்காரர் தெரியுமா! உடனே அவளை அனுப்பிவிடுங்க’ என்று பதற்றப்பட்டார். அதேநேரம் வேகமாக வந்த ரிக் ஷாவில் இருந்து என் தங்கை இறங்கினாள். ‘இவ்வளவு நேரம் இங்கே என்ன பண்றே? அப்பா உன்னைத் தனியே அனுப்பினதுக்கு என்னைத் திட்டுகிறார்.

கூட நான் வந்திருக்கணுமாம்... உடனே புறப்படு என்றாள்’. உடனே ஆர்.கே. ‘நான் சொன்னேன் இல்லையா? அவர் ரொம்ப கோபக்காரர்’ என்றவர் என்னைப் பார்த்து... “அம்மாயி நீ உடனே புறப்படு...” என்றார். ஆனால், கமலம்மா கணீரென்ற குரலில் தீர்க்கமாகச் சொன்னார். ‘குழந்தாய் இதோ பாரம்மா. நீ வீட்டுக்குப் போக வேண்டாம். உன்னைப் போக விடமாட்டேன்’ அங்கிருந்த எல்லோரும் திகைத்துப் போனார்கள்.

‘ஆமாண்டா ராமு. இந்தக் கல்யாணத்தை நானே நடத்திவைப்பேன்’. ஆர்.கே. பதற்றத்துடன் ‘அம்மா உங்களுக்கு என்ன பைத்தியமா? ரொம்ப அவசரப்படுறீங்க! பெற்றோர் சம்மதமின்றி அவளைக் கல்யாணம் பண்ண எனக்கு இஷ்டமில்லை. அவளை வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்.

திருட்டுக் கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க மாட்டேன்’ என்றார் கண்டிப்புடன். ஆனால், ஆர்.கே.யின் உறவினர் ஒருவர் குறுக்கிட்டு ‘அம்மா சொல்றதுதான் சரி. நேரம் போய்க்கிட்டே இருக்கு. இவங்க அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சா நாம் எல்லோரும் ஜெயிலுக்குத்தான் போகணும்’ என்றார். எனக்கு உடல் மெல்ல நடுங்கியது. கண்ணீர் பெருகியது.

விதியின் விளையாட்டு

கமலம்மா சொன்னாள். ‘ராமு நான் சொல்வதைக் கேள். இவள் அப்பாவை நான் பார்த்துக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் உனக்குக் கல்யாணமே நடக்காது’ என்றவர், பிறகு என்னைப் பார்த்து ‘குழந்தாய் உன் அம்மா ஸ்தானத்தில் நான் இருக்கிறேன் கவலைப்படாதே. இந்தக் கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன். ஏன் இப்படி அழறே?’ என்று சொல்லிவிட்டு என்னை அணைத்துக்கொண்டார்.

விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது பாருங்கள். கமலம்மா என்னைப் பார்க்கத்தான் விரும்பினாங்க. ஆனா நிமிடத்தில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள், எடுத்த முடிவுகள், இன்னிக்கு வரைக்கும் ஆச்சரியம்தான்.

கமலம்மாவின் திட்டம் இதுதான். முதலில் பெண்ணை அழைத்துக்கொண்டு மயிலை ரங்கநாதன் தெருவில் ஸ்ரீமதி வெங்கடசாமி வீட்டுக்கு போகவேண்டியது. அங்கிருந்து மங்கேஷ் தெருவிலிருக்கும் சீதம்மா வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்து திருவல்லிக்கேணியில் இருக்கும் சீதம்மாவின் சிநேகிதி வீட்டுக்குப் போகவேண்டியது. அன்றிரவு அங்கு தங்கியபின் கோடவுன் தெருவிலிருக்கும் புரொபஸர் ராமானுஜ ராவ் வீட்டுக்குப் போய் விடவேண்டும். என் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருப்பதுதான் இவர்கள் நோக்கம்.

எனக்கு முன்பின் அறிமுகமில்லாத இவர்களுடன் போவதற்கு நான் எப்படித் துணிந்தேன். ‘ஐயோ அப்பா எந்த நிமிஷமும் வந்திடுவாரே!’ ஆர்.கே. தொடை நடுங்கிப் புலம்பலானார். வம்பில் மாட்டப் போகிறீர்கள். இவளின் அப்பா போலீஸில் புகார் கொடுத்தால் நீங்க மாட்டிப்பீங்க.. என் கல்யாணத்துக்காக நீங்க பிரச்சினையில் சிக்கணுமா? இப்பவாவது என் பேச்சைக் கேளுங்க.வீட்டுக்கு அனுப்பிடுங்க’ என்று பதறினார்.

ஆனால் கமலாம்மா விடுவதாக இல்லை ‘டேய் அசடு.. நீ சும்மா இரு. நாங்க இருக்கோம். எது வந்தாலும் சமாளிப்போம்’ என்று அங்கே என்னைப் பார்க்க வந்திருந்த அவரது குடும்ப நண்பர்கள் சொன்னார்கள். அதேநேரம் வீட்டுக்கு வெளியே ஒரு ரிக் ஷா வந்து நின்றது.

உள்ளே இருப்பவரைப் பார்க்க முடியாதபடி ரிக் ஷாவின் வெளியேயும் உள்ளேயும் திரைகள் தொங்கின. ரிக் ஷாக்காரரால் கூடப் பயணம் செய்பவரைப் பார்க்க முடியாது. ரிக் ஷாவைப் பார்த்தால் ஏதோ மன்னர் காலத்து மூடு பல்லக்கு மாதிரி இருந்தது. உள்ளே இளவரசி இல்லை. அதற்குப் பதிலாக நான் உட்கார்ந்திருந்தேன். மூடு பல்லக்கு மெல்ல நகர்ந்தது. எனக்கு இப்போது புன்சிரிப்பு பொங்கியது.

(தாரகை ஒளிரும்)

தொடர்புக்கு:-thanjavurkavirayar@gmail.com

படம் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்