இயக்குநரின் குரல்: ஒரு வீடு ஒரு கொலை ஒரு அதிகாரி

By ஆர்.சி.ஜெயந்தன்

தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ திரைப்படத்தில் “தப்ப.. சரிசெய்யத் தப்பு செஞ்சவன் தான் வரணும்” என உரக்கப்பேசும் ‘ஆட்டோ தோழர்’ உதயனாகத் தனது இயல்பான நடிப் பால் கவர்ந்தவர் பாவெல் நவகீதன். அதன் பிறகு ‘வடசென்னை’ உட்பட பல படங்களில் கவனிக்க வைத்த இவர், தற்போது ‘வி 1’ (V1) என்ற படத்தை எழுதி, இயக்கி முடித்திருக்கிறார். இவர் நடிகரா, இயக்குநரா… அவரிடமே கேட்டோம்.

‘குற்றம் கடிதல்’ படத்தில் நடிகராக அறிமுகமானீர்கள்; இப்போது இயக்குநர் ஆகியிருப்பது எதிர்பாராமல் அமைந்த வாய்ப்பா?

இல்லை. இயக்குநர் ஆகவேண்டும் என்பதுதான் இலக்கு. ‘குற்றம் கடிதல்’ திரைப்படத்தின் திரைக்கதையில் பணிபுரிந்தபோது இயக்குநர் பிரம்மா ‘உதயன்’ கதாபாத்திரத்தில் நானே நடிக்க வேண்டும் என்றார். ஏனென்றால், யதார்த்தத்திலும் எனது கதாபாத்திரம் அதுதான். இயக்குநராக ஆக வேண்டும் என்று வந்தவனுக்கு நல்ல நடிகன் என்ற அடையாளம் கிடைத்ததை எனது உழைப்புக்குக் கிடைத்த பரிசாக நினைக்கிறேன். நடிப்பை விடப்போவதில்லை என்றாலும், எதற்காக சென்னைக்கு வந்தோமோ  அதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முதல் படத்தை இயக்கியிருக்கிறேன்.

உங்கள் பின்னணியைக் கொஞ்சம் கூறுங்கள்?

செங்கல்பட்டுதான் எனது சொந்த ஊர். அப்பா என்னை சென்னைக்கு அழைத்து வந்து லயோலா கல்லூரியில் சமூகவியல் படிப்பில் சேர்த்தார். சமூகவியல் படிப்பு சமூகத்தை நேசிக்கவும் சமூகத்தில் இருக்கும் அழுக்குகளைக் கழுவ நம்மால் முடிந்ததைச் செய்துகொண்டே இருக்கவும் வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்தது. அங்கே படித்துக்கொண்டிருக்கும்போதே ஹேண்டிகேம் கேமராவை வைத்து இருநூறு ரூபாயில் குறும்படம் எடுத்தேன்.

கல்லூரிகளுக்கு இடையிலான குறும்படப் போட்டியில் அது பத்தாயிரம் ரூபாய் பரிசு பெற்றுக்கொடுத்தது. அந்தக் குறும்படத்தைப் பார்த்துவிட்டு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் தங்களுக்கும் பல குறும்படங்களை எடுத்துத் தரக்கேட்டது. அங்கேதான் இயக்குநர் பிரம்மாவை சக ஊழியராகச் சந்தித்தேன். கல்லூரியில் அவர் எனது சீனியார்; பின்னர் அதே நிறுவனம் என்னை ‘கிரியேட்டிவ் டைரக்டராக’ முழுநேரப் பணியில் சேர்த்துக்கொண்டது.

paveljpg

அந்த நிறுவனத்துக்காக நான் எடுத்த ‘ஓரிரவு’, ‘காற்றோடு’ உட்படப் பத்துக்கும் அதிகமான குறும்படங்களை இயக்கினேன். அவற்றில் பல விருதுகளைக் கொண்டுவந்து சேர்த்தன. இருந்தாலும் ஒரே இடத்தில் அடைபட்டு இருக்கப் பிடிக்காமல் வேலையிலிருந்து வெளியேறித் திரைப்படம் இயக்கும் முயற்சிகளைத் தொடங்கிவிட்டேன். முதலில் பிரம்மாவுக்கு வாய்ப்பு அமைந்த போது ‘குற்றம் கடிதல்’ படத்தில் பணிபுரிந்தேன். அதற்குமுன் ‘மெட்ராஸ்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தேன்.

‘வி 1’ படத்தின் கதை என்ன?

பலருக்கும் கூட்டத்தைப் பார்த்தால் பயம். சிலருக்கு அந்தக் கூட்டத்தின் முன் பேச பயம். வேறு சிலருக்குக் கத்தியைப் பார்த்தால் பயம். இன்னும் சிலருக்கு ரத்தத்தைப் பார்த்தால் பயம் எனப் பயத்தில் பலவகை உண்டு. இப்படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு என்றால் பயம். அது ஒருவித உடல்நல, மனநலப் பிரச்சினையும் கூட.

கதைப்படி கதாநாயகன் காவல்துறையில் தடய அறிவியல் துறையில் வேலைபார்க்கும் ஒரு போலீஸ் அதிகாரி. ‘வி 1’ என்ற கதவு எண் கொண்ட வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையைப் பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்துக்குக் கதாநாயகன் ஆளாகிறான். ஆனால், கொலை நடந்த தினத்தில் மழைபெய்து தடங்கள் எல்லாம் அழிந்துவிட்டன.

இப்போது அந்தக் கொலையை அவன் எப்படிப் புலன் விசாரணை செய்தான், அவனது புலன் விசாரணைக்கு அவனிடம் இருக்கும் இருட்டைப் பார்த்துப் பயப்படும் பிரச்சினை எப்படியெல்லாம் பின்னடைவைக் கொண்டுவருகிறது. அதேநேரம் அந்தப் புலன்விசாரனையே அவனது பயத்திலிருந்து அவனை எப்படி மீட்டுக்கொண்டு வருகிறது எனத் திரைக்கதையை எழுதியிருக்கிறேன்.

உங்கள் படக்குழு பற்றிக் கூறுங்கள்?

ஒரு கொலையின் முடிச்சை அவிழ்க்க விரையும் புலன்விசாரனை திரில்லர் இந்தப் படம். கதை, திரைக்கதை, வசனம் எழுதி நான் இயக்கியிருக்கிறேன். பேரடைம் பிக்சர் ஹவுஸ், கலர்புல் பீட்டா முவ்மண்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கின்றன. கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோவும் கதாநாயகியாக விஷ்ணு பிரியாவும் நடித்திருக்கிறார்கள். இவர்களோடு லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா என நிறைய நட்சத்திரங்கள் உண்டு.

டி.எஸ்.கிருஷ்ணாசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘நிமிர்’ படத்தின் மூலம் சிறந்த இசையமைப்பாளராக அறியப்பட்டிருக்கும் ரோனி ரப்ஹெல் இசையமைத்திருக்கிறார். எடிட்டர் லெனினிடம் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்த அனுபவம் கொண்டவரான சி.எஸ்.பிரேம்குமார் படத்தொகுப்பைச் செய்திருக்கிறார். தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

நடிப்பையும் தொடருவீர்களா?

நிச்சயமாக. நல்ல நடிகன் என்ற அங்கீகாரத்தை ரசிகர்களும் திரையுலகமும் கொடுத்திருக்கும்போது அந்த இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஆனால், நான் இயக்கும் படங்களில் ஒரு காட்சியில் கூட நடிப்பதில்லை என்ற தீர்க்கமான முடிவும் எடுத்துவிட்டேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்