பிரமிக்கவைக்கிறார் ப்ரியதர்ஷன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி

By கா.இசக்கி முத்து

"'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் முதன்முறையாகக் கிராமத்து இளைஞனாக நடித்துள்ளேன். பொன்.ராம் சாரோடு பணியாற்றியவர் தளபதி என்பதால் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மற்றும் 'ரஜினி முருகன்' பாணியில் இருக்கும். டைகர் பாண்டியாக சூரி படத்தில் அனைவரையும் பயங்கரமாகக் கலாய்த்திருக்கிறார்" என்று தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின். ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னை திரும்பியுள்ளவரிடம் பேசியதிலிருந்து..

புதுமுக இயக்குநர் தளபதியோடு எப்படி 'பொதுவாக எம்மனசு தங்கம்' உருவானது...

ஒளிப்பதிவாளர் பாலு சார் தான் இக்கதையை என்னிடம் கொண்டு வந்தார். இடைவேளை வரை கதையைக் கேட்டவுடனே, இப்படம் செய்ய வேண்டும் என முடிவு எடுத்துவிட்டேன். சமூகக் கருத்தோடு ஒரு ஜனரஞ்சகமான படம். இதுவரை நகரம் சார்ந்த படங்கள் தான் செய்துள்ளேன். அதுமட்டுமன்றி, வெளித்தயாரிப்பில் ஒப்புக் கொண்ட முதல் படம். வெளிதயாரிப்பு என்பதால் எந்தவிதக் கஷ்டமும் வந்துவிடக் கூடாது என்று  நிறையக் கதைகள் கேட்டு இதைத் தேர்வு செய்தேன். இயக்குநர் தளபதியும் கதையில் என்ன எழுதியிருந்தாரோ, அதை அப்படியே எடுத்துள்ளார்.

இயக்குநர் தளபதி வசனங்களில் வலுவானவர். நமக்குக் கொடுத்த பொருட்செலவுக்குள் செய்துவிட வேண்டும் என்று அவருடைய திட்டமிடல் ரொம்ப சரியாக இருந்தது. இப்படம் முடிவானதிலிருந்து தற்போது வரை பொன்.ராம் சார் நிறைய ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

முதன் முறையாகப் பார்த்திபனோடு நடித்த அனுபவம்?

'ஊத்துக்காட்டான்' என்ற கதாபாத்திரம் அவருக்காக எழுதியது மாதிரி இருந்தது. விளம்பரத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடிய ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் அவரும் மயில்சாமியும் ஒரு அணி, நானும் சூரியும் ஒரு அணி. எங்கள் நால்வருக்குள் நிறையக் காட்சிகள் இருக்கிறது. பார்த்திபன் சாருக்கு உரித்தான நக்கல், நையாண்டியோடு செய்திருக்கிறார். அவரும், சூரியும் மாற்றி மாற்றி அடிக்கும் கவுண்ட்டர் வசனங்கள் கண்டிப்பாக ரசிக்கும்படி இருக்கும். முதல் நாள் மட்டும் அவரோடு நடிக்கப் பயந்தது உண்மை தான். ஏனென்றால் அவரோடு நடிக்கும் போது என்ன நக்கல் செய்யப் போகிறார் என நினைத்தேன்.

'சரவணன் இருக்கப் பயமேன்' மற்றும் 'பொதுவாக எம்மனசு தங்கம்' இரண்டுமே பி மற்றும் சி சென்டர் படம் என்கிறீர்கள். தொடர்ச்சியாகப் பி மற்றும் சி சென்டர் படம் செய்ய எண்ணம் வந்துவிட்டதா?

'சரவணன் இருக்கப் பயமேன்' ஒரு காமெடி படம். ஆனால் 'பொதுவாக எம்மனசு' படத்தில் அழுத்தமான கதையோடு கூட ஒரு சமூகக் கருத்தும் இருக்ககிறது. 'சரவணன் இருக்க பயமேன்' சரியில்லை என்று பல விமர்சனங்கள் வந்தன. ஆனால், வசூலில் எந்தவொரு குறையுமே இல்லை. 'சரவணன் இருக்கப் பயமேன்' படத்தோடு இப்படத்தை ஓப்பிட வேண்டாம். அதில் பேய் இருந்தது, இதில் சாமி இருக்கிறது. அவ்வளவு தான்.

அப்படியென்றால் படத்தின் விமர்சனத்துக்கும், வசூலுக்கும் சம்பந்தமில்லை என்கிறீர்களா?

சிறுபடங்களுக்கு விமர்சனம் ரொம்ப உதவியாக இருக்கும். பெரிய நாயகர்களின் படங்களுக்கு உதவியாக இருக்குமா எனத் தெரியவில்லை. ஒரு படத்தைப் பார்க்க வேண்டுமா? இல்லையா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள். 'மனிதன்' மற்றும் 'சரவணன் இருக்கப் பயமேன்' ஆகிய இருபடங்களின் விமர்சனத்துக்கும், வசூலுக்கும் சம்பந்தமே இல்லை. மற்றப் படங்களின் விமர்சனம் மற்றும் வசூலைப் பற்றி பேச விரும்பவில்லை. ஒரு சில படங்களுக்கு மட்டுமே விமர்சனங்கள் பெரும் உதவியாக இருந்திருக்கிறது.

தமிழ் திரையுலகில் உங்கள் நண்பர் விஷால் தொடர் நடவடிக்கைகள் குறித்து...

40 வருடங்களாகச் சில விஷயங்களைப் பெப்சியில் பழக்கப்படுத்திவிட்டார்கள். அதை 4 மாதத்தில் மாற்ற வேண்டும் என நினைக்கிறார் விஷால் ஆனால், வரவிருக்கும் காலங்களுக்குத் தயாரிப்பாளராக நல்ல விஷயம். அதைப் பொறுமையாகச் செய்திருக்கலாம் என நினைக்கிறேன். 'காலா' படப்பிடிப்பு நின்றுவிட்டது. நான் நடித்துவரும் ப்ரியதர்ஷன் சார் படத்தையும்  தொடர முடியாமல் நிறுத்திவிட்டோம். என்ன பிரச்சினைகள் வருமோ அதை எப்படிச் சரி செய்யலாம் என்று தீர்மானித்துவிட்டு, இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

தற்போது சினிமா இருக்கும் சூழலுக்கு விஷால் எடுக்கும் முடிவு சரி தான். அதே போல நாயகன், நாயகி, தொழில்நுட்பச் சம்பளத்தையும் குறைக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் இரண்டிலுமே விஷால் எடுக்கும் முயற்சிகள் திருப்திகரமாகவே உள்ளது.  அவர் எடுக்கு முடிவுகள் ஆரம்பத்தில் தடங்கலாக இருந்தாலும், நீண்டகால திட்டத்துக்கு ஒரு முடிவாக இருக்கும் என நம்புகிறேன்.

'முரசொலி' விழாவுக்குக் கமல்ஹாசன் வருவது சர்ச்சையாகியுள்ளது.. (கேள்வியை முடிக்கும் முன்பே)

நான் அப்பத்திரிகையின் தலைமை நிர்வாகி. சிலரை அந்நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டும் என நினைத்தேன். நடுநிலையாகச் சில பத்திரிகையாளர்கள், திரையுலகப் பிரபலங்களை அழைக்க எண்ணினேன். அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சினிமாவிலிருந்து தலைவரின் திராவிடக் கொள்கைகளோடு சுயமரியாதை விஷயத்தில் கமல் சாருடைய பார்வை ரொம்ப பிடிக்கும். அவரும் ரஜினி சாரும் வந்தால் நன்றாக இருக்கும் என விரும்பினேன்.

அப்பாவிடம் கேட்ட போது, "நீ கேள். வந்தால் நன்றாக இருக்கும்" என்று சொன்னார். தலைவரோடு நெருங்கிய பழக்கம் உடையவர் கமல் சார். தயக்கத்துடன் போய்க் கேட்ட அடுத்த நொடியே கண்டிப்பாக வருகிறேன் என்றார் கமல் சார்.  அது முரசொலி பத்திரிகைக் குடும்பத்துக்குக் கிடைத்த பெருமையாகப் பார்க்கிறேன். இதற்கு ஏன் அரசியல் சாயம் பூசுகிறார்கள் எனத் தெரியவில்லை. அனைத்துப் பத்திரிகையாளர்களும் வருகிறார்கள், அவர்கள் அனைவரின் மீதும் எப்படி அரசியல் சாயும் பூச முடியும். அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. அதற்குக் கமல் சாரை அழைக்கவில்லையே.

முதன்முறையாக உங்களது திரையுலக வாழ்வில் பெரிய இயக்குநராகப் ப்ரியதர்ஷனோடு பணிபுரிந்து வருவது குறித்து...

பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டு கல்லூரிக்குப் போய்ப் படிப்பார்கள். அதே போலத் தான் ப்ரியதர்ஷன் சார் படப்பிடிப்பு இருந்தது. அவருடன் பணிபுரிவது பிரமிப்பாக இருக்கிறது. ஆனால், எதையுமே மனதில் வைத்துக் கொள்ளாமல் ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்து அழகாக வேலை வாங்குகிறார். 12 நாட்கள் படப்பிடிப்பில் சுமார் 25 சதவீதப் படப்பிடிப்பை முடித்துவிட்டார். இவ்வளவு பெரிய இயக்குநரோடு இதுவரை பணிபுரிந்ததில்லை. எனது திரையுலக வாழ்க்கையில் ப்ரியதர்ஷன் சார் படம் ஒரு மிகப்பெரிய பாடம் தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்