த
யாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் பெப்சி சம்மேளனத்துக்கும் பிரச்சினை வெடித்திருக்கிறது. ஆனால், இம்முறை பூதாகரமாக. பட முதலாளிகளான தயாரிப்பாளர்களுக்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்கும் இடையிலான இந்தப் பிரச்சினை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. கடந்த 20 ஆண்டுகளாகவே குணப்படுத்த முடியாத தலைவலிதான். பிரச்சினைக்கான ஒரே காரணம், பெப்சி தொழிலாளர்கள் கேட்கும் சம்பளம் அநியாயமானது என்ற தயாரிப்பாளர்களின் குற்றச்சாட்டுதான்.
சினிமாவில் ஒவ்வொரு வேலை செய்கிறவர்களுக்கும் ஒவ்வொரு சங்கம் இருக்கிறது. உதாரணமாக லைட்மேன்களுக்கு லைட்மேன்கள் சங்கம், ஒப்பனைக் கலைஞர்களுக்கு மேக்கப்மேன்கள் சங்கம், நடனக் கலைஞர்களுக்கு டான்சர்ஸ் யூனியன் எனத் தனித்தனி சங்கங்கள் இயங்குகின்றன. இதுபோன்ற 23 தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்புதான் பெப்சி.
எங்கே தொடங்கியது சிக்கல்?
கடந்த 1997-ல் பெப்சியை எதிர்த்துப் படைப்பாளிகள் –தொழிலாளிகள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுப் பின் சமாதானம் ஏற்பட்டது. புகழ் வெளிச்சம் பாயும் முகங்களை வைத்துத்தான் சினிமா என்பதால், நடிகர்களுக்கான சம்பளம் தயாரிப்பாளர்களால் உடனுக்குடன் முடிவு செய்யப்பட்டுவிடும். ஆனால், திரைப்படத் தொழிலாளர்களுக்கான தினச் சம்பளம் எவ்வளவு என மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தயாரிப்பாளர்களால் பேசி முடிக்கப்பட்டு ஊதிய ஒப்பந்தம் போடப்படும். ஆனால், கடந்த பத்தாண்டுகளாக இந்த சம்பளப் பேச்சுவார்த்தை என்பது தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டே வந்திருக்கிறது.
‘கடந்த முறை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த ‘கலைப்புலி’எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகக் குழு பேசி முடித்து ஒப்புக்கொண்ட சம்பள விகிதத்தை, விஷால் தலைமையிலான புதிய நிர்வாகக் குழு குறைத்து சுற்றறிக்கை அனுப்பியதுதான் தற்போது வேலைநிறுத்தப் பிரச்சினைக்கான தொடக்கம்’ என்கிறார்கள் பெப்சி நிர்வாகிகள்.
யாருடைய சம்பளத்தைக் குறைக்க வேண்டும்?
ஆனால், தாணு நிர்வாகக்குழு ஒப்புக்கொண்டு, நடைமுறையில் இருக்கும் சம்பளத்தையே தர வேண்டும் என்று பெப்சி தொழிலாளர்களில் சிலர் சில படங்களின் படப்பிடிப்பில் தகராறு செய்து படப்பிடிப்பை நிறுத்தியதாகவும் அதன் பிறகே தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், நிர்வாகக் குழுவைக் கூட்டி “ பெப்சி தொழிலாளர்கள் என்றில்லாமல் யாரை வைத்து வேண்டுமானாலும் தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பை நடத்திக்கொள்ளலாம்” என்று அறிவித்தார்.
பெப்சி தொழிலாளர்களை மிகக் கடுமையாகப் பாதிக்கும் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த பெப்சி தொழிலாளர்கள் நிர்வாகக் குழுவைக் கூட்டி “ தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைப்பதற்குப் பதிலாக நடிகர்களின் சம்பளத்தைக் குறைத்தாலே தயாரிப்பாளரின் தயாரிப்புச் செலவு கணிசமாகக் குறைந்துவிடும். எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்” என்று கூறினார்கள். இதற்குப் பதிலடியாக “படப்பிடிப்பை நிறுத்த தயாரிப்பாளரைத் தவிர வேறு யாருக்கும் உரிமையில்லை. நடிகர்கள் யாரும் தங்கள் சம்பளத்தை அதிகாரமாகக் கேட்பதில்லை.
நடிகரின் மார்க்கெட்டை உணர்ந்து தயாரிப்பாளர்கள் கொடுக்கிறார்கள். யார் வயிற்றிலும் அடிப்பது எங்கள் நோக்கமல்ல; ஆனால், தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் சினிமா நன்றாக இருக்கும்” என்றார் விஷால்.
தவறுகளைத் திருத்திக்கொள்ளத் தயார்!
தயாரிப்பாளர் சங்கமும் பெப்சி சம்மேளனமும் கூடிப் பேசுவதை விடுத்துக் கடந்த இரண்டு வாரங்களாக அறிக்கைகள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என இருதரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டே இருந்த நிலையில்தான் 1-ம் தேதிமுதல் பல படங்களின் படப்பிடிப்புகள் தடைபட்டிருக்கின்றன. “இது நாங்கள் அறிவிக்காத வேலைநிறுத்தம் என்று பெப்சியும் பெப்சியில் உள்ள பல சங்கங்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பதால் நாங்கள் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்துவோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கமும் பிடிவாதத்துடன் முரண்டுபிடித்துவருகின்றன.
இதில் தற்போது பெப்சி கொஞ்சம் இறங்கிவந்திருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள் என்று பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் கேட்டபோது “நான் எப்போது அழைத்தாலும் பேசத் தயாராக இருக்கிறேன். கமல், ரஜினி இருவரையுமே சந்தித்து நானும் நிர்வாகிகளும் பேசினோம். அவர்கள் ‘தற்போது சினிமா பல நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. எனவே, இருதரப்பினரும் கொஞ்சம் சமரசம் செய்துகொள்ளுங்கள், இல்லாவிட்டால் இருதரப்புக்குமே நஷ்டம். வேலைநிறுத்தம் பிரச்சினைக்கு தீர்வாக இருக்காது’ என்று அறிவுரை கூறினார்கள்.
அதை நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்கிறோம். 4 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்குச் சலுகை ஊதியத்தில் வேலை செய்ய கடந்த சம்பளப் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டோம். ஆனால், அதைத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடைமுறைப்படுத்தவே இல்லை. தொழிலாளர்களிடம் தவறு இருக்கிறது என்றால் எது எது தவறு என்று தயாரிப்பாளர்கள் கூறினால், அவற்றைத் திருத்திக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நான் தலைவரான பிறகு பெப்சி தொழிலாளர்களுக்கு இன்றைய சினிமாவின் நிலைமையை எடுத்துக்கூறியிருக்கிறேன். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பிரச்சினையைச் சமாதானமாகப் பேசித்தீர்க்க நினைக்கிறோம்.” என்றார்.
சங்கமா கோட்டையா?
பெப்சி சம்மேளனத்தில் 10 முதல் 30 ஆண்டுகள் தொழில் அனுபவம் பெற்ற திரைப்படத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தவிர்த்துவிட்டு சினிமா தயாரிப்பில் இறங்கினால் பாதிப்பு இருக்கவே செய்யும். அதே நேரம் வெளிமாநில சினிமா சங்கங்களில் இருந்தும் ஆட்களை அழைத்துப் பணிபுரிய முடியாது. ஏனென்றால், இந்தியாவில் உள்ள எல்லாத் திரைப்படச் சங்கங்களுக்கும் இந்திய அளவிலான ஒரே சம்மேளனமாக இணைந்துள்ளன. அவர்கள் ஒரு மாநிலத் தொழிலாளியின் வயிற்றில் மற்றவர்கள் அடிக்கக் கூடாது என்பதை ஒரு விதியாகவே வைத்திருக்கிறார்கள்.
ஆனால், தயாரிப்பாளர்கள் தரப்பில் சினிமா அல்லாத மற்ற சங்கங்களைப் போல் பெப்சியிடம் ஏன் ஜனநாயகத்தன்மை இல்லை; அது சங்கமா இல்லை சர்வாதிகாரம் மிக்கக் கோட்டையா என்கிற ரீதியில் கேள்வி எழுப்புகிறார்கள். “சினிமாவில் ஏதாவது ஒரு கலையில் ஒருவர் வேலை செய்ய நினைத்தால், அதற்கு ஏற்ற சங்கத்தில் உறுப்பினராகச் சேராமல் சினிமாவில் சுண்டு விரலைக்கூட அசைக்க முடியாது.
ஒரு படப்பிடிப்பு நடக்கிறதென்றால் யாரை வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும், எத்தனை பேரை வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி, பத்துத் தொழிலாளர்கள் தேவைப்படும் ஒரு படப்பிடிப்புக்கு வலுக்கட்டாயமாக பெப்சி நிர்ணயித்த எண்ணிக்கையில் தொழிலாளர்களை அனுப்புவது, வேலை செய்யாமலேயே அவர்களுக்குச் சம்பளம் கேட்பது எல்லாம் தயாரிப்பாளரின் பாக்கெட்டைக் கொள்ளையடிப்பது இல்லையா?” என்று கேட்கிறார் ஒரு தயாரிப்பாளர்.
மன்சூர் அலிகான் போட்ட விதை
பெப்சி தகவமைத்துக்கொண்டே வந்திருக்கும் இந்த அதிகாரமும் (?), அவர்கள் ஏற்படுத்தும் தேவையில்லாத செலவுகளும் எங்களுக்குக் கடுமையான அதிருப்தியையும் பொருள் இழப்பையும் ஏற்படுத்தி வந்தன. சிறு பட்ஜெட் படமெடுத்தவர்கள் காணாமல் போவதற்கு, படத்தின் தரம், திரையரங்கப் பிரச்சினை ஆகியவற்றைத் தாண்டி பெப்சியின் இந்தப் பிடிவாதம் மிக்க அணுகுமுறையும் முக்கியக் காரணம்.
இதற்கு எதிராகக் கொதித்துப்போன சிறுபடத் தயாரிப்பாளரான நடிகர் மன்சூர் அலிகான் நீதிமன்றம் சென்று பெப்சி தொழிலாளர்கள் அல்லாதவர்களையும் வைத்து வேலை செய்யலாம் என்ற தீர்ப்பைப் பெற்றதும் துணிவுடன் பெப்சியை எதிர்க்கத் தொடங்கியிருப்பதற்கு விதையாக அமைந்துவிட்டது” என்கிறார் மற்றொரு சிறுபடத் தயாரிப்பாளர்.
ஆனால், சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான் “ யாரோ ஒரு தொழிலாளி படப்பிடிப்பை நிறுத்திச் செய்த தவறுக்காக 25,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. அப்படித் தொழிலாளர்கள் என்ற பெயரில் சிலர் செய்த தவறினால்தான் நீதி மன்றத்துக்குச் சென்று நியாயம் பெற்று, டாப்சி என்ற சங்கத்தை ஆரம்பிக்க நேர்ந்தது. எத்தனை குட்டிக் கரணம் போட்டாலும் பெப்ஸி தொழிலாளர் அமைப்புக்கு அது ஈடாகாது. நானே தற்போது அனைத்து பெப்சி தொழிலாளர்கள் கூடத்தான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். நமது கண்ணை நாமே குத்திக்கொள்ளக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.
எந்த நிபந்தனையும் இன்றி தற்போது பெப்சி பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருக்கிறது. இனி அவர்களை அழைத்துப் பேசி இருதரப்பிலும் இருக்கும் குறைகளைக் களைய வேண்டிய கடமை இருதரப்புக்குமே இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago