தமிழக அரசு தாமதமாக அறிவித்திருக்கும் திரைப்பட விருதுகளில், இயக்குநர் ஜெயபாரதியின் ‘புத்திரன்’ படத்துக்கு சிறந்த படம், சிறந்த நடிகர் – சிறப்புப் பரிசு (ஒய்.ஜி.மகேந்திரன்), சிறந்த நடிகை – சிறப்புப் பரிசு (சங்கீதா) என்று மூன்று விருதுகள் கிடைத்திருக்கின்றன. ‘நண்பா நண்பா’ (2002) படத்தின் மூலம் சமகாலத் திரை ரசிகர்களால் அறியப்பட்ட ஜெயபாரதி ‘குடிசை’(1979) படத்தின் மூலம் தமிழில் மாற்று சினிமாவுக்கான விதையைப் பதித்தவர்.
வணிகத் திரைப்படங்களின் ஆரவாரத்தில் ஒதுக்கப்பட்டாலும், மாற்று சினிமா முயற்சிகளுக்கான களங்களாக அவரது படங்கள் இருக்கின்றன. பரீட்சார்த்த முயற்சிகளுக்கான பக்க விளைவாக அவர் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள் தனி. அவருடன் ஒரு பேட்டி:
தமிழில் மாற்று சினிமாவுக்கான முன்னோடி நீங்கள். அப்படியொரு பரீட்சார்த்த முயற்சிக்கு உங்களைத் தூண்டியது எது?
1976 முதல் மாற்று சினிமாவுக்கான முயற்சியில் ஈடுபட்டேன். நண்பர்கள் உதவியுடன் ‘குடிசை’ படத்தைத் தொடங்கினேன். மிகப் பெரிய போராட்டத்துக்குப் பின்னர் 1979 மார்ச்சில் படம் வெளியானது. இதன் பின்னால் சுவாரஸ்யமான சங்கதிகளும், சங்கடங்களும் உண்டு. திரைத் துறைக்கு வருவதற்கு முன்னால் பத்திரிகையாளனாகப் பணிபுரிந்தேன். தினமணியில் உதவி ஆசிரியர் பணி. சிறுகதைகளுடன் சினிமா விமர்சனமும் எழுதுவேன். அப்போது காரசாரமான சினிமா விமர்சகர்கள் மூவரில் நானும் ஒருவன். மற்றவர்கள் சுஜாதா, புஷ்பா தங்கதுரை. இந்தி, ஆங்கிலம், தமிழ்ப் படங்களுக்கு விமர்சனம் எழுதுவேன். அப்படித்தான் என் சினிமா வாழ்க்கை தொடங்கியது.
இயக்குநர் பாலசந்தர் உங்கள் விமர்சனங்களைப் படித்துவிட்டு உங்களைக் கடிந்துகொண்டதாகவும் அதன் தொடர்ச்சியாக நீங்களே படம் எடுக்கத் தொடங்கியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா?
என் விமர்சனங்களைப் பார்த்துவிட்டு என்னைப் பற்றி அனந்துவிடம் விசாரித்திருக்கிறார் இயக்குநர் கே.பாலசந்தர். “ஏ.ஜி. ஆபீஸில் பணிபுரியும் எழுத்தாளர் து.ராமமூர்த்தியின் மகன்தான் ஜெயபாரதி” என்றிருக்கிறார் அனந்து. பாலசந்தரும் ஏ.ஜி. அலுவலகத்தில் பணிபுரிந்தவர்தான். ஒரு நாள் அனந்து என்னை தினமணி அலுவலகத்தில் வந்து பார்த்தார். “பாலசந்தர் உன்னைப் பார்க்கணும்ன்னு சொல்றார். கார் கொண்டுவந்திருக்கிறேன். வா” என்றார்.
“பாலசந்தர் கார் அனுப்பி என்னை அழைக்கிறார் என்றால், அது பலருக்குக் காழ்ப்புணர்ச்சி வந்துவிடும். என் உத்தியோகத்துத்தான் ஆபத்து. நான் பஸ்ஸிலேயே வந்துவிடுகிறேன்” என்றேன். மதியம் மூன்று மணிக்கு பஸ் பிடித்து சர்.சி.வி.ராமன் சாலையில் இருந்த பாலசந்தர் அலுவலகத்துக்குச் சென்றேன்.
பாலசந்தர் உட்பட மொத்த அலுவலகமும் எனக்காகக் காத்திருந்தது. “வாய்யா உக்காரு. திமிர் பிடிச்சவனே” என்றுதான் வரவேற்றார் பாலசந்தர். “நீ யாரோட புள்ளைன்னு கேள்விப்பட்டேன். அது என்னய்யா சகட்டுமேனிக்கு எல்லாப் படத்தையும் விமர்சனம் பண்றே?” என்றார். “நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு எழுதறேன். இல்லைன்னா நல்லால்லேன்னு எழுதறேன். இதுல என்ன சார் தப்பு” என்றேன். “எதுதான் நல்ல சினிமா?” என்றார். “அது வேற சார். நான் எடுத்துக் காட்டுறேன்” என்றேன்.
அப்போது உங்களுக்கு திரைத் துறையில் பின்னணி ஏதேனும் இருந்ததா?
இப்போது வரை எனக்கு திரைத் துறையில் எந்தப் பின்னணியும் இல்லை. உண்மையில் பலரும் நான் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பிற இயக்குநர்களிடம் பணிபுரிந்த அனுபவம் கூட இல்லை எனக்கு. என் பட படப்பிடிப்பில்தான் சினிமா கேமராவையே பார்த்தேன்! திரைத் துறை சார்ந்த புத்தகங்களை வாசித்து, சுயமாகவே சினிமாவைக் கற்றுக்கொண்டவன் நான். தவறுகளிலிருந்து பாடம் கற்றபடி சினிமா ஊடகத்தைக் கற்றுக்கொண்டேன்.
அந்தக் காலகட்டத்திலேயே சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. இல்லையா?
ஆமாம். பாலசந்தர் என்னை நடிக்க வைக்க விரும்பினார். வழக்கமாக, உட்லேண்ட்ஸ் ஓட்டலில் எனக்கு சிற்றுண்டி வாங்கித் தருவார். ஒருமுறை “உன்னோட கண்கள் தீர்க்கமானவை. நீ ஏன் என் படத்தில் நடிக்கக் கூடாது? ரெண்டு ஸ்டில்ஸ் எடுத்துட்டுவா” என்றார். “சார், விளையாடாதீங்க. டிபன் வாங்கித் தாங்க. சாப்பிட்டுட்டு கெளம்புறேன்” என்றேன்.
அதுபற்றிக் கேள்விப்பட்ட (ராபர்ட்) ராஜசேகர் “எவ்ளோ பெரிய வாய்ப்பு! ஒரு பெரிய டைரக்டர் உன்னை ஹீரோவாக்கணும்னு சொல்றார். நான் புகைப்படம் எடுத்துத் தர்றேன்” என்று என்னிடம் சொன்னார். இரண்டு ’ஸ்டில்’களை எடுத்துக்கொண்டு பாலசந்தரிடம் ராஜசேகரே சென்று கொடுத்துவிட்டார். அது பாலசந்தருக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. “என்னிக்கு வேணாலும் கார் அனுப்புவேன். தயாரா இரு. நீ ஹீரோ” என்றார் என்னிடம்.
எந்த வருடம் அது?
1976. ‘மூன்று முடிச்சு’ படத்தில் ரஜினி நடித்த வேடத்தில் முதலில் என்னைத்தான் நடிக்கவைக்க நினைத்திருந்தார் பாலசந்தர். அவர் கூப்பிட்டபோது, “சார், நான் படம் இயக்கலாம்ன்னு இருக்கேன். நடிகனாக்கி, என்னைத் திசைதிருப்பப் பாக்குறீங்களா?” என்றேன். “யோவ், நீ படம் எடுத்தா எனக்கு என்னய்யா?” என்றார். “நான் உங்களுக்குப் போட்டியில்லை. நான் நல்ல படம் எடுப்பேன். தனியா நிப்பேன்” என்றேன் விடாப்பிடியாக.
“பார்க்கலாம், பார்க்கலாம். நான் கூப்பிடுறேன். வா” என்றார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் அனந்துவிடம், “எங்கேய்யா அவன்?” என்று கேட்டிருக்கிறார். “ஜெயபாரதி படம் எடுக்க ஆரம்பிச்சாச்சு. டைரக்டர் ஆய்ட்டார் சார்!” என்றிருக்கிறார் அனந்து. “என்னய்யா இது அவனை ஹீரோவாக்கணும்னு நினைச்சேன். டைரக்டராய்ட்டானே!” என்று சலித்துக்கொண்டாராம் பாலசந்தர்.
ஏன் அத்தனைப் பெரிய வாய்ப்பைத் தவறவிட்டீர்கள்?
கல்லூரிக் காலங்களில் நாடகங்களில் நடித்திருக்கிறேன். பரீக்ஷா ஞாநியின் நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், என்னுடைய இலக்கு நடிப்பு அல்ல. இயக்கம்தான்! ஆனால், நல்ல வாய்ப்பைத் தவற விட்டுவிட்டீர்களே என்று இன்னமும் பலர் சொல்வதுண்டு.
கமல் உங்கள் படத்தில் நடிக்க விரும்பினாராமே? அவரது தொடர்பு எப்படிக் கிடைத்தது?
கமல் என்னுடைய நெருங்கிய நண்பர். அவரும் என் விமர்சனங்கள் படித்துவிட்டு என்னை அழைத்தவர்தான். அப்படித்தான் அவருடன் நட்பு உருவானது. ‘தினமணி’யில் பணிபுரிந்த காலகட்டத்தில் வாரத்துக்கு ஒருமுறையாவது அவரைப் பார்த்தாக வேண்டும். அவரது அலுவலகத்துக்குச் செல்லவில்லையென்றால் ஏன் வரவில்லை என்று கேட்பார்.
இதில் சுவாரஸ்யமான சங்கதி ஒன்று உண்டு. சாருஹாசனின் மனைவிக்கு என் சிறுகதைகள் மிகவும் பிடிக்கும். என் எழுத்துக்குத் தீவிர வாசகி. பெயரைவைத்து நான் ஒரு பெண் என்றே நினைத்திருக்கிறார். ஒருமுறை, கமலைப் பார்க்க அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். வரவேற்பரையில் காத்திருந்தபோது சாருஹாசன் “யாரைப் பார்க்கணும்” என்று கேட்டார். “கமல் வரச் சொல்லியிருந்தார்” என்றேன்.
சற்று நேரம் கழித்து, “என்ன வேலை பார்க்கிறீங்க?” என்றார். சொன்னேன். “என்ன பெயரில் எழுதுறீங்க?” என்று கேட்டார். “ஜெயபாரதி” என்றேன். அவருக்கு ஆச்சரியம். “கொஞ்சம் இருங்க!” என்றவர் அவரது மனைவியை அழைத்து, “வாரவாரம் செவ்வாய்க் கிழமை தினமணிக் கதிர்ல ஜெயபாரதி கதைக்காக வெயிட் பண்ணுவியே. அந்தப் ‘பொண்ணு’ இதுதான்” என்றார். அவரது மனைவிக்கு அதிர்ச்சி. “நான் பொண்ணுன்னில்லே நினைச்சுண்டிருந்தேன்” என்றார் சிரித்தபடி!
மாற்று சினிமா தொடர்பான உங்கள் முயற்சிகள் பற்றிச் சொல்லுங்கள்…
மாம்பலம் கிருஷ்ணவேணி திரையரங்கத்தின் காலைக் காட்சிகளில் அனுமதி வாங்கி சத்யஜித் ராய், மிருணாள் சென் போன்ற இயக்குநர்களின் படங்களைத் திரையிட்டிருக்கிறேன். மகேந்திரன், பாலுமகேந்திரா போன்ற பலர் வந்து பார்த்திருக்கிறார்கள். பொருளாதாரரீதியாக நஷ்டம்தான். ஆனால், என்னளவுக்கு நல்ல படங்களைத் திரையிடும் முயற்சி என்பதால் அதைச் செய்தேன்.
ஒருகட்டத்தில் எழுத்தாளர் இந்துமதி பரிந்துரையுடன் மனோபாலா என்னிடம் வந்துசேர்ந்தார். ஓவியக் கல்லூரியில் படித்தவர் அவர். அதாவது மாற்று சினிமா தொடர்பான எனது முயற்சிகளில் அவரும் சேர்ந்துகொண்டார். எங்கள் முயற்சிகளை எல்லோரும் கிண்டல் செய்வார்கள். “என்னய்யா லோ பட்ஜெட் படம். நீங்க படம் எடுக்கும் செலவு எங்க ஒரு டிஸ்கஷனுக்கே பத்தாது” என்று சிரிப்பார்கள். மனோபாலா அருமையான வடிவமைப்பாளர்.
கமலுக்கு ‘லெட்டர் பேடு’ வடிவமைத்துத் தந்தார். அதைப் பார்த்து பாலசந்தரும் தனக்கு லெட்டர் பேடு வடிவமைக்கச் சொல்லி அவரிடம் கேட்டார். அதுவிஷயமாக பார்க்கப் போனபோது, “என்ன செய்றீங்க?” என்று மனோபாலாவிடம் கேட்டிருக்கிறார் பாலசந்தர். என்னுடன் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் மனோபாலா.
“அந்தக் கிறுக்கன் கூடயா? நாங்க எடுக்குறதெல்லாம் நல்ல படம் இல்லையாம். அவன் ஏதோ படம் எடுக்கப் போறானாம், அதுதான் நல்ல படமாம். பைத்தியக்காரன்! சினிமா எடுக்குறது என்ன சாதாரணமான விஷயமா? பணம் இருந்தாத்தான் படம் எடுக்க முடியும்?” என்று பாலசந்தர் சொன்னாராம்.
இதன் பிறகுதான் குடிசை தொடங்கியதா?
ஆம். இதை எங்களிடம் மனோபாலா சொன்னபோது நாங்கள் உஸ்மான் சாலையில் ஒரு கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தோம். ராபர்ட், ராஜசேகர் இருவரும் உடன் இருந்தார்கள். ராபர்ட் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவுத் துறையில் ஆசிரியராக இருந்தார். ராஜசேகர் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். ராபர்ட்டுக்கும் எனக்கும்தான் வருமானம் வந்துகொண்டிருந்தது. நான் யோசிக்காமல், “நாம் நாளைக்கே படம் தொடங்குறோம். பத்தாவது நாள் ஷூட்டிங்” என்றேன். எல்லோரும் சிரித்தார்கள். அப்போது எங்களிடம் கையில் மொத்தமே 21 ரூபாய்தான் இருந்தது.
பிறகு எப்படி சாத்தியமானது?
கிரவுட் ஃபண்டிங்! ‘நெகட்டிவ்’ பிலிம் சுருளுக்கு நன்கொடை வசூலிக்கிறேன் என்றேன். அப்போதெல்லாம், 1,000 அடி பிலிம் சுருள் ஐநூறு ரூபாய்! “பத்துப் பேரிடம் ஆளுக்கு ஐநூறு ரூபாய் வசூல் செய்ய முடியும். எனக்காகத் தருவாங்க” என்றேன். என் தரப்பில் 10,000 அடிக்கு பிலிம் சுருள்! “எனக்கு ஒரு அவுட்டோர் யூனிட் தெரியும். பணமே இல்லாம கேமரா, லைட்ஸ் வாடகைக்கு எடுத்துக்கலாம். படம் முடிஞ்சி காசு குடுத்துக்கலாம்” என்றார் ராபர்ட்.
“பாடிக்குப்பம் பகுதியில் (அப்போது அது ஒரு கிராமம்) ஒரு பண்ணையாரைத் தெரியும். அவர் நமக்குச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்வார், இலவசமா!” என்றார். மறுநாள் பத்து பேருக்கு போன் செய்து பணம் கேட்டேன். மாலைக்குள் 10,000 ரூபாய் வசூலாகிவிட்டது. பத்திரிகையாளர் பிரபு சங்கர்தான் முதலில் கொடுத்தார். அடுத்து இந்துமதி! என் மீது நம்பிக்கை வைத்து எந்தக் கேள்வியும் இல்லாமல் பணம் கொடுத்தார்கள் பத்து பேரும்! இந்தியாவில் ‘கிரவுட் ஃபண்டிங்’ எனும் முறையை நான் தான் தொடங்கிவைத்தேன்!
தயாரிப்புச் செலவுக்கு வேறு ஏற்பாடுகள்?
அது தனி சவால். ‘கோட்டா’ இருந்தால்தான் பிலிம் சுருள் வாங்க முடியும். பேனர் பெயரை பிலிம் சேம்பரில் பதிவுசெய்ய வேண்டும். அப்போது சித்ரமகால் கிருஷ்ணமூர்த்திதான் அதன் தலைவர். எங்கள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. பதிவுசெய்ய முடியாது என்றார். “பாண்டிபஜார் கள்ளச்சந்தையில் பிலிம் சுருள் விற்கிறது. வாங்கிக் காட்டட்டுமா?” என்றேன். “இவர் விவகாரமானவர்போல” என்று சொல்லிப் பதிவுசெய்தார். ஜுவாலா என்று பேனருக்குப் பெயர் வைத்தோம். வண்ணநிலவன்தான் அந்தப் பெயரைப் பரிந்துரைத்தார்.
படம் அவ்வப்போது நின்று நின்று வளர்ந்தது. ‘குடிசை’ என்று ஒரு கலைப் படம் தயாரிக்கிறோம் என்று அறிவித்து, கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள், மாயாஜால நிகழ்ச்சிகள் நடத்தி நன்கொடை வசூலித்தேன். ராபர்ட், ராஜசேகருக்குக் கூட இதில் நம்பிக்கை இல்லை. எனவே, தனியாகத்தான் அதைச் செய்து பணம் வசூலித்தேன். பாடகர், நடிகர் சிலோன் மனோகரும் நிகழ்ச்சி நடத்தி நன்கொடை வசூலித்துத் தந்தார். ‘குடிசை’ படம் தயாரிப்பில் இருக்கும் தகவல்கள் இலங்கை பத்திரிகைகளில் கூட வெளியாகின. அதை அவர் பார்த்திருக்கிறார். நிகழ்ச்சி முடிந்து பணம் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். அப்படித்தான் அந்தப் படம் வளர்ந்தது.
படத்தில் அனைவருமே புதுமுகங்கள். அதுபற்றிச் சொல்லுங்கள்…
டெல்லி கணேஷ், கமலா காமேஷ் இருவரும் அந்தப் படத்தில் அறிமுகமானார்கள். முக்கியப் பாத்திரத்தில் நடித்த தண்டாயுதபாணி நாடகங்களில் நடித்தவர். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். ராஜி எனும் பெண் மட்டும்தான் சில படங்களில் நடித்திருந்தார். தொழில்நுட்பக் கலைஞர்களும் புதிது. தமிழில் கடைசி கறுப்பு வெள்ளைப் படம் அது!
குடும்பத்தில் என்ன மாதிரியான ஆதரவு கிடைத்தது?
கணையாழி இதழில் அப்பா எழுதிய ‘குடிசை’ நாவல்தான் படத்தின் கதை. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடக்ஷனுக்கு நிற்கிறது. இன்னும் 25,000 ரூபாய் தேவை. அப்பாவிடம் அதைச் சொன்னபோது வீட்டுப் பத்திரத்தை எடுத்துக் கையில் கொடுத்தார். வங்கியில் பணமும் ஏற்பாடாகிவிட்டது. இதற்கிடையே, மிருணாள் சென் சென்னை வந்திருந்தார். பாம்குரோ ஓட்டலில் தங்கியிருந்த அவரைச் சந்தித்தேன்.
அவரிடம் என் படம் பற்றியும், பணம் தேவைப்படுவது பற்றியும் சொன்னேன். பக்கத்து அறையில் இருந்த ஒருவரை அழைத்தார். மிருணாள் சென்னை வைத்துத் தமிழில் படம் எடுக்கத் திட்டமிட்டிருந்திருந்த கேரளத் தயாரிப்பாளர் அவர். அவரிடம் பேசி 25,000 ரூபாயை எனக்குத் தர ஏற்பாடு செய்தார் மிருணாள் சென். ‘குடிசை’ விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தென்னிந்தியாவின் எல்லாத் திரைப்பட விழாக்களிலும் படம் திரையிடப்பட்டது. தகவல் தொழில்நுட்பத் துறையால் அந்தப் படம் பாதுகாக்கப்பட்டுவருவது ஒரு கெளரவம்.
அடுத்தடுத்த படங்கள்…
எனக்குத் தொடர்ந்து படங்கள் இயக்க ஆர்வம் இல்லை. சினிமா போதும் என்று நினைத்தேன். திரையுலகிலிருந்து விலகிக்கொள்கிறேன் என்று பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தேன். இருந்தும், கம்யூனிஸ்ட்டுகள் சிலர் என்னை வற்புறுத்தி, ஒரு படம் இயக்கச் சொன்னார்கள். டி.செல்வராஜ் எழுதிய ‘தேநீர்’ நாவலை அடிப்படையாகக் கொண்ட படம். அது ஒரு கசப்பான அனுபவம். படத்திலிருந்து வெளியேறிவிட்டேன்.
பின்னர், தராசு ஷ்யாம் அந்தப் படத்தை முடித்து, ‘ஊமை ஜனங்கள்’ எனும் பெயரில் பெரிய அளவில் விளம்பரங்களுடன் வெளியிட்டார். இப்படிச் செய்வது ரசிகர்களைத் திசைதிருப்புவதுபோலாகிவிடும் என்று அவரிடம் சொன்னேன். அவர் கேட்கவில்லை. கடைசியில் படம் படு தோல்வி.
அதன் பிறகு நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் ‘ரெண்டும் ரெண்டும் அஞ்சு’(1988) படத்தை இயக்கினேன். அதுவெற்றிப்படம். அதிலும் ஒரு சிக்கல். படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும்போதே போட்ட பணம் வந்துவிட்டது என்று ஒருகட்டத்தில் விளம்பரத்தை நிறுத்திவிட்டார். அது படத்துக்குப் பின்னடைவாகிவிட்டது. அம்பிகா கதாநாயகியாக நடித்த கடைசிப் படம் அது.
என் படங்களுக்குக்கிடையில் நான்கைந்து வருடங்கள் இடைவெளி இருக்கும். இடைப்பட்ட காலங்களில் மீண்டும் பத்திரிகைகளில் வேலை பார்த்தேன். ‘பாரதி’, ’பாண்டவர் பூமி’ போன்றபடங்களைத் த்யாரித்த் ’மீடியா ட்ரீம்ஸ்’ நிறுவனத்தில் கூடவேலைபார்த்திருக்கிறேன். சொற்ப சம்பளம். ‘சர்வைவல்’ என்று ஒன்று இருக்கிறதே! ‘ரெண்டும் ரெண்டும் அஞ்சு’ படம் இயக்கி, மூன்று வருடங்களுக்குப் பிறகு ‘உச்சி வெயில்’ எடுத்தேன். விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற படம். அதுவும் தகவல் ஒலிபரப்புத் துறையால் பாதுகாக்கப்படுகிறது.
மீடியா ட்ரீம்ஸில் எம்.டி. சி.இ.ஓ.வாக இருந்த ராஜா வைத்தியநாதன் எனக்கு நல்ல நண்பர். தற்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் கணவர். அவர் தான், பின்னாட்களில் ‘நண்பா நண்பா’(2002) படத்தைத் தயாரித்தார். என் வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நான் இயக்கிய ஒரே படம். நான் நினைத்ததை என்னால் எடுக்க முடிந்தது. முழு ஒத்துழைப்பு கொடுத்தார் ராஜா வைத்தியநாதன்.
அதன் பின்னர் 2006-ல் சத்யராஜ், ரோஜா நடித்த ’குருஷேத்திரம்’ படம் இயக்கினேன். அந்தப் படத்தின்போதும் பல பிரச்சினைகளை, மிரட்டல்களைச் சந்திக்க நேர்ந்தது. அதுவும் தோல்விப் படம்தான். அந்தப் படத்தில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளையும் இணைத்துவிட்டார் தயாரிப்பாளர்.
முதலில் வடிவேலுவுக்கு என்னைத் தெரியவில்லை. பின்னர்தான் ‘நண்பா நண்பா படத்தில் சந்திரசேகருக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்தவர்’ என்று யாரோ சொன்ன பின்னர், என்னிடம் வந்து ”சந்திரசேகருக்கே அவார்டு வாங்கிக் குடுத்திருக்கீங்க. எனக்கு ஒண்ணு வாங்கிக் குடுங்கண்ணே” என்றார். நடிகர் விவேக் என் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரது நண்பர் ஒருவர் படத்தைத் தயாரிப்பதாகச் சொல்லி, கடைசியில் அதுவும் நடக்காமல்போனது. இப்படிப் பல அனுபவங்கள்.
04chrcj_pudran movie ‘புத்திரன்’ படத்தில்‘புத்திரன்’ படம் எப்படி உருவானது?
குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைகள் மீதான வன்முறை ஆகியவற்றை ஆவணப்படுத்தும் படம் எடுக்க நினைத்திருந்தேன். ஒய்.ஜி.மகேந்திரன் நகைச்சுவை நடிகர் என்றே அறியப்படுவதில் அவரது மனைவிக்கும் மகளுக்கும் வருத்தம். அவரை அந்தப் படத்தில் பிரதான வேடத்தில் நடிக்க வைத்தேன். அவரும் சங்கீதாவும்தான் தெரிந்த நடிகர்கள். மற்ற அனைவரும் புதுமுகங்கள். அந்தப் படத்தை இயக்குவதிலும் பல்வேறு சிரமங்களை அனுபவித்தேன்.
ஒய்.ஜி.மகேந்திரனின் மும்பை நண்பர் ஒருவர் படத்தைத் தயாரிக்க முன்வந்தார். அவ்வப்போது தயாரிப்புச் செலவுக்குப் பணம் அனுப்பினார். 12 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டேன். ஆனால், அதன் பிறகு குடும்பத்தில் பிரச்சினை என்று சொல்லிப் பணம் அனுப்புவதை அவர் நிறுத்திக்கொண்டார். படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி!
மாற்று சினிமா முயற்சிகளுக்கு இப்போது எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது?
அதுபோன்ற படங்களைத் தயாரிக்க எந்தத் தயாரிப்பாளரும் முன்வருவதில்லை. “நான் பத்து ரூபாய் போட்டால் பதினைந்து ரூபாய் கிடைக்கும். டெல்லியிலிருந்து அவார்டு வாங்கி வைத்துவிட்டால் எனக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்ட தயாரிப்பாளர்களை எனக்குத் தெரியும். “ஐந்து வரியில் கதை சொல்ல முடியுமா?” என்று கேட்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அதைத் தவிர வேறு வேலைகள் நிறைய இருக்கின்றன பாருங்கள்!
புதிய தலைமுறை இயக்குநர்கள் பற்றிச் சொல்லுங்கள்…
இயக்குநர்கள் எங்கே இருக்கிறார்கள்? பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்தால் போதும் என்று இருக்கிறார்கள். சினிமா என்பது இயக்குநரின் ஊடகம். நடிகன் என்பவன் ஒரு ‘பப்பெட்’. ஒரு பொம்மை. அவ்வளவுதான்!
இதுபோன்ற படங்களுக்கு அரசு வேறு எந்த மாதிரியான ஆதரவைத் தர முடியும்?
இதுபோன்ற மாற்று முயற்சிகளுக்கு விருதுகள் வழங்குவது வரவேற்கத்தக்கது. இதைத் தாண்டி இன்னும் சில விஷயங்களை அரசு செய்ய முடியும். உதாரணத்துக்கு, மாற்று சினிமா, கலைப் படங்களைத் திரையிடுவதற்கென்றே கொல்கத்தாவில் அரசு சார்பில் ‘ரவீந்திர சதன்’ எனும் மினி திரையரங்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
200 அல்லது 300 இருக்கைகள் இருக்கும். இலவசமாகப் பாருங்கள் என்று சொன்னால், அந்தப் படங்களுக்கு மதிப்பு இருக்காது என்று குறைந்தபட்சக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வங்க மொழிப் படங்கள் மட்டுமல்லாமல் பிற மொழிப் படங்களும் திரையிடப்படுகின்றன. அதுபோன்ற முயற்சியைத் தமிழக அரசும் மேற்கொள்ளலாம். கல்லூரி, பள்ளி மாணவர்கள் என்று அனைத்துத் தரப்பினரிடமும் மேம்பட்ட சினிமா ரசனையை உருவாக்க முடியும்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago